Published:Updated:

சித்தத்தை சிவமாக்கும் சிவாலயம் எழும்பட்டும்!

கீழ்சித்தாமூர்
பிரீமியம் ஸ்டோரி
News
கீழ்சித்தாமூர்

ஆலயம் தேடுவோம்

தொண்டை மண்டலத்துக்கும் சோழ மண்டலத்துக்கும் நடுவே இருப்பதால், ‘நடுநாடு’ என்று வழங்கப்பட்டது, இன்றைய விழுப்புரம் மாவட்டம். கடையேழு வள்ளல்களில் `மலையமான் திருமுடிக்காரி' இப்பகுதியை ஆண்ட தால் மலையமானாடு, மலாடு என்றும் பெயர் பெற்று விளங்கியது. சோழர் குலத்துக்கு மிகவும் விசுவாசமாக விளங்கிய `விழுப்பரையர்' எனும் போர்க்குடியினர் இந்த பகுதியில் வாழ்ந்தனர்; அதன் காரணமாகவே இந்தப் பகுதி விழுப்புரம் என்றானது என்ற தகவலும் சொல்லப்படுகிறது.

சித்தீஸ்வரர் கோயில்
சித்தீஸ்வரர் கோயில்
சித்தீஸ்வரர்
சித்தீஸ்வரர்


திருநாவுக்கரசர், சுந்தரர், நரசிங்க முனையரையர் உள்ளிட்ட நாயன்மார்கள் பலர் அவதரித்த சிறப்பும் இந்தப் பகுதிக்கு உண்டு. பாரி மகளிரை மணந்த தெய்வீகன் தொடங்கி, பல்லவ மன்னர்களில் இறுதியானவனான கோப்பெருஞ்சிங்கன் காலம் வரையிலும் இந்தப் பகுதி சிறப்புற்று விளங்கியுள்ளது.

கெடில ஆற்றின் தென் கரையில் உள்ள சேந்த மங்கலத்தைத் தலை நகராகக் கொண்டு கோப்பெருஞ் சிங்கன் ஆண்ட காலத்தில், இந்தப் பகுதிகளில் பல்வேறு சிவாலயங்களை எழுப்பி வழிபட்டதாகக் கல்வெட்டுத் தகவல்கள் கூறுகின்றன. அந்தக் கோயில்களில் ஒன்று திண்டிவனம் வட்டம், கீழ்சித்தாமூர் கிராமத்தில் உள்ளது. பாழ்ப்பட்டு கிடந்த அக்கோயில், தற்போது அடியார்களின் முயற்சியால் புதிதாக எழும்பி வருகிறது என்பதை அறிந்து அங்கு சென்றோம்.

1250-ம் ஆண்டுகளில் எழுப்பப்பட்ட ஆலயம் இது. 850 ஆண்டுகளில் எத்தனையோ இடர்ப்பாடுகளைச் சந்தித்து உருக்குலைந்து நிற்கிறது. பிரமாண்ட ஆலயத்தின் இடிந்து போன தூண்களும் பாறைகளும் ஆங்காங்கே காணப்படுகின்றன. பழைமையான செங்கல் தளி மீது புதிய விமானம் அமைக்கும் பணி முதலான புனரமைப்பு வேலைகள் நடைபெறுகின்றன. ஆலயத்துக்கு முன் தகரக் கொட்டகையில் ஐயனும் அம்பிகையும் வீற்றிருக்கிறார்கள்.

விநாயகர்
விநாயகர்
முருகன்
முருகன்

ஈசனின் திருநாமம் சித்தீஸ்வரர், பிரமாண்டமான லிங்கத் திருமேனி; தொன்மையை விளக்கும் வண்ணம் தழும்புகளும் வழுவழுப்பும் சேரக் காட்சியளிக்கிறார்.

`ஊனாய் உயிர் ஆனாய் போற்றி' என்று கசிந்துருகியது நம் மனம்.

அங்கிருந்த அடியார் ஒருவர் சுவாமியின் பெருமையைப் பகிர்ந்தார். ``இவரோட அருமை பெருமை யாருக்கும் தெரியலீங்க ஐயா. ஆனா இவர் சித்தர்களுக்கு எல்லாம் தலைமையான சித்தர்; யோக-ஞான மார்க்கத் தில் சிறப்பா வரணும்னு நினைக்கிறவங்க இவரைப் பிடிச்சுக்கிட்டா மேலே வந்துட லாம்னு பெரியவங்க சொல்லி இருக்காங்க.

இன்னமும் பௌர்ணமி நாள்களில் இங்கே சித்தர்கள் சூட்சுமமா வந்து இவரை வழிபடுறதா நம்புறோம். அதுக்கு சாட்சியா பல விஷயங்கள் நடந்திருக்கு. மனநிம்மதி இல்லை, வாழ்க்கையே போராட்டமா இருக்குன்னு விரக்தில இருந்தவங்கள்லாம் இங்கே வந்து வணங்கியபிறகு... அவங்க வாழ்க்கையே மாறிப் போயிருக்கு. அவங்கள்லாம் நிம்மதியும் சந்தோஷமுமா ஒரு பழுத்த ஆன்மாவா மாறியிருக்காங்க ஐயா!''என்றார்.

சித்தீஸ்வரர் கோயில்
சித்தீஸ்வரர் கோயில்
நந்தி
நந்தி


சுவாமிக்கு முன்னால் கொஞ்ச நேரம் தியானத்தில் ஆழ்ந் தோம். மனம் சிவத்தில் லயித்துக் கிடக்க, உள்ளே ஆரஞ்சு வண்ண ஒளி பரவியது. உடல் இலகுவாகி, உச்சி மண்டையும் நெற்றிப் பொட்டும் கனத்து விண்விண்ணென்று துடிக்க...

`வெளியில் வெளிபோய் விரவிய வாறும்

அளியில் அளிபோய் அடங்கிய வாறும்

ஒளியில் ஒளிபோய் ஒடுங்கிய வாறும்

தெளியும் அவரே சிவ சித்தர் தாமே.' என்ற திருமந்திரம் காதில் ஒலிக்க ஆழ்ந்த தியானத்தில் கிடந்தோம். சிறிது நேரத்தில் விழித்தெழ, சொல்ல முடியாத உற்சாகமும் பரவசமும் உடலுக் குள் புகுந்துகொண்டதுபோல் இருந்தது. இறை அதிர்வும் சித்தர்களின் அருளும் இங்கு அதிகம் என்பதை நன்கு உணர முடிந்தது. சுவாமியை மீண்டும் வணங்கித் தொழுதோம்.

அம்பிகை சிவகாமியம்மை. ஈசனின் மீது பெருவிருப்பம் கொண்ட பெருமாட்டி. பாறையில் புடைப்புச் சிற்பமாய் எழுந்தருளி இருக்கிறாள். பழங்காலச் சிற்பமாய்க் காணப் படுகிறாள். இவளை வணங்கினால் திருமண வாழ்வு சிறப்பாக அமையுமாம். அருகில் புதிதாக அமைக்கப்பட்ட விநாயகர், முருகன் சிலைகள். ஈசனின் எதிரே பழைமையான நந்தியும் இருக்கிறார். கோயிலுக்கு வெளியே சூல வடிவிலான பழைமை யான கல்வடிவை தீபம் ஏற்றி வணங்குகிறார்கள். அதுகுறித்த தொன்மைத் தகவல்கள் எவருக்கும் தெரியவில்லை.

சிவகாமியம்மை
சிவகாமியம்மை

கோயிலை வலம் வரும் வேளையில் வானம் இருட்டியது. `உடனே புறப்படு' என்று எவரோ உத்தரவிடுவது போல் தோன்றியது. மீண்டும் ஒருமுறை சுவாமியை வணங்கிவிட்டுக் கிளம்பினோம். சிறிது நேரத்தில் பெருமழை ஆரம்பித்தது. சிந்தையில் சித்தீஸ்வரரே நிறைந்திருந்தார்.

பல நூறாண்டுகளைக் கடந்த இந்த ஆலயம் மீண்டும் பொலிவு பெறவேண்டும் என்பதே அடியார்களின் விருப்பமாக உள்ளது. அதையே சங்கல்பமாக ஏற்றுச் செயல்பட்டு வருகிறார்கள். அவர்களின் அந்த முயற்சிக்கு நாமும் தோள் கொடுப்போம். நம்மால் இயன்ற பங்களிப்பை தாராளமாக வழங்குவோம். சித்தீஸ்வரர் திருவருள் நம் வாழ்வை மாற்றும்; நம் சந்ததியை வாழவைக்கும்!

வங்கிக் கணக்கு விவரம் :

A/c.Name : K.ARUMUGAM

A/c.No : 0725301000094660

Bank Name : Lakshmi Vilas Bank

Branch : TINDIVANAM

IFSC No : LAVB0000725

தொடர்புக்கு : 75501 51354

அன்னம்ம நாயகி!

சிவகாசி நகரத்தில் இருந்து சுமார் 4 கி.மீ. தொலைவில் இருக்கிறது திருத்தங்கல். `திரு' என்றால் லட்சுமிதேவி. ' லட்சுமிதேவி நிரந்தரமாக தங்கியிருக்கும் தலம் இது என்கிறார்கள்.

அன்னம்ம நாயகி
அன்னம்ம நாயகி

இங்கே ஶ்ரீதேவி, பூதேவி, நீளாதேவி, ஜாம்பவதி ஆகியோருடனும் தனது பேரன் அநிருத்தன் மற்றும் அவனது தேவி உஷையுடன், ஶ்ரீமந் நாராயணர் அருள்கிறார். தாயார் திருநாமம் செங்கமலத் தாயார். பிரம்மாண்ட புராணத்தில் இந்தத் தாயார் `அன்னம்ம நாயகி' எனக் குறிப்பிடப்படுகிறார். திருமணம், குழந்தைப் பேறு உள்ளிட்ட கோரிக்கைகளை இந்தத் தாயாரிடம் சமர்ப்பித்து வழிபடுகிறார்கள்.கோரிக்கை நிறைவேறியதும், தாயாருக்குத் திருமஞ்சனம் செய்து, புடவை சார்த்தி வழிபட வேண்டும்.

- கே.கீதா, விருதுநகர்