திருத்தலங்கள்
Published:Updated:

பொலிவு பெறட்டும் ஜெயங்கொண்டம் சிவாலயம்!

ஜெயங்கொண்டம் சிவாலயம்
பிரீமியம் ஸ்டோரி
News
ஜெயங்கொண்டம் சிவாலயம்

ஆலயம் தேடுவோம்

அன்றாடம் சிவபூஜை செய்யும் ஏழை அந்தணர் ஒருவர், தெருவில் ஏதோ தேடிக் கொண்டிருந்தார். அவரை அந்த ஊர் வணிகர் ஒருவர் அழைத்து ``என்ன தேடுகிறீர்கள்!'' என்று கேட்டார்.

ஜெயங்கொண்டம் சிவாலயம்
ஜெயங்கொண்டம் சிவாலயம்


``சுவாமிக்கு நைவேத்தியம் செய்ய ஓரணா வைத்திருந்தேன். அது எங்கோ விழுந்துவிட்டது'' என்று கவலையோடு கூறினார் அந்தணர்.

அந்த வியாபாரியோ பக்தியில் அவ்வளவு விருப்பம் இல்லாதவர் என்றாலும் அந்த ஏழை பக்தரின் தவிப்பைப் புரிந்துகொண்டார். அவருக்கு ஓரணாவைக் கொடுத்து பூஜை செய்ய அனுப்பிவைத்தார்.

காலம் உருண்டது. இருவருமே ஒரே நேரத் தில் இறந்து போனார்கள். தேவலோகத்தில் வந்து இறங்கிய இருவருக்கும் தேவேந்திரன் ஆசனங்கள் தந்து வரவேற்றான். வியாபாரிக்கு தங்க ஆசனமும் பூஜை செய்தவருக்கு வெள்ளி ஆசனமும் வழங்கப்பட்டது. அந்தணருக்கு தேவதைகள் கவரி வீச, வியாபாரிக்கு அரம்பையர் கவரி வீசினர். இது கண்டு வியந்த இந்திரன் மகன் ஜயந்தன் காரணம் கேட்டான்.

``சிவபூஜை செய்தவரைவிட அதற்கு உதவிய வர்கள் மேலானவர்கள். கும்பாபிஷேகத்தை முன்நின்று செய்பவர்களை விடவும், அதற்கு சிறிதளவேனும் உதவி செய்யும் அன்பர்கள் சிவகதியை நிச்சயம் அடைவர். அவர்களின் ஏழேழ் தலைமுறைகளும் நீடுழி வாழும்'' என்றான் இந்திரன்.

உண்மைதான். ஓர் ஆலயத்துக்கு நீங்கள் என்ன கொடுக்கிறீர்களோ, அது அந்த ஆலயம் இருக்கும் காலம் வரை, உங்களின் முந்தைய ஏழு தலைமுறைக்கும் பிந்தைய ஏழு தலைமுறைக்கும் வளத்தைத் தரும் என்கிறார்கள் ஆன்றோர்கள். புதிதாக ஆலயங்களை எழுப்புவதைக் காட்டிலும் தமிழகமெங்கும் உள்ள ஆயிரக்கணக்கான பழைமையான ஆலயங்களை புனரமைப்பது சிறந்தது!

அந்த வகையில் புனரமைக்கவேண்டிய ஓர் ஆலயம் செஞ்சிக்கு அருகில் இருப்பதை அறிந்து அங்கு சென்றோம். சுமார் 1500 ஆண்டுகளைக் கடந்த அந்த ஆலயத்தின் பிரமாண்டம் நம்மை மலைக்கவைத்தது.

300 ஆண்டுகளுக்கு முன்னால் இந்த ஆலயம் அந்நியர்களால் வெகுவாக சிதைக்கப் பட்ட போதிலும், இன்று மிஞ்சியிருக்கும் கோயிலே இவ்வளவு பிரமாண்டம் என்றால், ஆதியில் இது எப்படி இருந்திருக்கும் என்று எண்ணி வியந்தோம்.

ஆம்... 5 திருச் சுற்றுகள், 5 நிலை இரண்டாவது கோபுரம், கற்றளி என தோற்றத்தில் கம்பீரமா கவே திகழ்கிறது இந்த ஆலயம். ராஜ கோபுரம் இடிந்துபோயுள்ளது. அதன் கீழ்ப்புற கருங்கல் சுவர்களில் உள்ள அழகிய சிற்பங்கள் சோழர் காலத்தைப் பிரதிபலிக்கின்றன.

பல்லவர் ஆட்சிக் காலத்தில் இந்த ஆலயம் உருவாகி, பிறகு பிற்காலச் சோழர்களின் காலத் தில் புனரமைக்கப்பட்டது என்கிறார்கள் இந்த ஊர் மக்கள். பாண்டியர்கள் காலத்திலும் திருப்பணி கண்டமைக்குச் சான்றாக ஆங்காங்கே மீன் இலச்சினைகள் காணப் படுகின்றன.

ஜெயங்கொண்டீஸ்வரர்
ஜெயங்கொண்டீஸ்வரர்
ஜெயங்கொண்டீஸ்வரர்
ஜெயங்கொண்டீஸ்வரர்
நந்தி
நந்தி
ராஜதேசிங்கு
ராஜதேசிங்கு
சிதிலமான சந்நிதி
சிதிலமான சந்நிதி
அரசமர பிள்ளையார்
அரசமர பிள்ளையார்
ஆலய நுழைவு வாயில்
ஆலய நுழைவு வாயில்
கோயில் குளம்
கோயில் குளம்

சோழர் காலத்தில் செஞ்சிக்கு சிங்கபுரி கோட்டம் என்று பெயர். பல்லவர்கள் காலத் தில் செஞ்சி `சிவசெஞ்சி' என்றும், சிங்கவரம் `விஷ்ணு செஞ்சி' என்றும் வழங்கப்பட்டனவாம். செஞ்சி சுற்று வட்டாரத்தில் இருந்த 11 பிரமாண்ட சிவாலயங்களில் இதுவும் ஒன்றாம்.

செஞ்சிக்கு அருகே விழுப்புரம் செல்லும் சாலையில் உள்ளது ஜெயங்கொண்டம் என்ற கிராமம். இந்த கிராமத்தில்தான் தையல்நாயகி சமேதராக ஜெயங்கொண்டீஸ்வரர் அருள்கிறார். இங்கே ஈசனைத்தவிர புதிதாக நிர்மாணிக்கப்பட்ட நவகிரக, முருகன் சந்நிதி மட்டுமே உள்ளன. அரச மரத்தடியில் கணபதி அருளுகிறார். மற்றபடி அம்பிகை உள்ளிட்ட எந்த திருவுருவங்களும் காணப்படவில்லை.

3 தனிக் கற்றளி சந்நிதிகள் உள்ளன. அந்நியர் அழிப்பிலோ ஆக்கிரமிப்பிலோ சிலைகள் களவு போயிருக்கலாம் என்கிறார்கள். ராஜதேசிங்கு தன் மனைவியோடு குதிரையில் செல்லும் சிற்பம் காணப்படுகிறது. அவர் காலம் வரையிலும் புகழ்பெற்று விளங்கிய இந்த ஆலயமும் கோட்டையும், 1714 ஆம் ஆண்டு நடந்த செஞ்சிப் போரில் அழிக்கப் பட்டது. செஞ்சியைச் சுற்றி இருந்த நூற்றுக் கணக்கான ஆலயங்களும் அழிந்துபோயின.

மட்டுமன்றி, ஆலயத்தின் மண்டபங்களும் பிற சந்நிதிகளும் இன்று ஆக்கிரமிப்பில் மறைந்துபோயுள்ளன. இது ஆலயமாக மட்டுமன்றி, பெரும் கோட்டையாகவும் இருந்திருக்கும் என்பதை, ஊரின் எட்டுத் திக்கிலும் உள்ள மூலக் கொத்தளங்கள் அறிவிக்கின்றன. ஊரெங்கும் இந்தக் கோயிலின் குளம், அலங்கார மண்டபம், ஊஞ்சல் மண்டபம் என்று காணும்போது இந்த ஊரே ஒரு காலத்தில் கோயிலாக இருந்ததையும், பின்னர் ஆக்கிரமிப்பின் பிடியில் சுருங்கிப் போனதையும் உணரமுடிகிறது.

ஊரின் `ஜெயங்கொண்டம் என்ற பெயரே பிற்காலத்தில் வந்திருக்கலாம். இந்த ஊருக்கும் அம்பிகை மற்றும் சுவாமிக்கும் தற்போது வழங்கப்படும் திருப்பெயர்களே ஆதிப் பெயராக இருந்திருக்க முடியாது. அதுபற்றிய விவரத்தைச் சொல்லும் கல்வெட்டுகளும் ஆவணங்களும் அழிக்கப்பட்டு இருக்கலாம் என்கிறார்கள் வரலாற்று ஆர்வலர்கள்.

அரியலூர் ஜெயங்கொண்டம் ராஜேந்திர சோழரின் வெற்றியைக் குறிக்க உருவானது போல, இந்த ஊரும் சோழர்களின் வெற்றியைக் குறிக்க உருவாகி இருக்கலாம் என்றும் மற்றொரு தரப்பினர் கூறுகிறார்கள். இந்தக் கோயிலில், ஈசன் சதுர ஆவுடையில் வீற்றிருக்கிறார். ஒரு கால பூஜையும், மாத சிவராத்திரி, பிரதோஷ பூஜைகளும் நடைபெற்று வருகின்றன.

கோயிலின் உள்ளே இருக்கும் முருகப் பெருமானுக்கு தனியே விழாக்கள் ஊராரால் நடத்தப்படுகின்றன. மற்றபடி இந்த ஆலயத்தின் வரலாறும் புராணமும் அறிய முடியாத அளவுக்கு ஆக்கிரமிப்புகளும் அழிவும் நடந்துள்ளன. 50 ஆண்டுகளுக்கு முன்புகூட இங்கிருந்து சிலைகளும் கற்பலகைகளும் அகற் றப்பட்டன என்கிறார்கள் ஊர் பெரியவர்கள்.

அடையாளமோ சாட்சியோ இல்லா விட்டால் என்ன? நம்பினவருக்குத்தானே நடராஜன்! அவர்மீது நம்பிக்கை வைப்போம். வெகுசீக்கிரம் இந்த ஆலயம் பொலிவு பெறும்.

இதே சிந்தையோடு, `ஐயனே இந்த ஆலயம் பிரமாண்டமாக எழுந்து, நீயும் இந்த ஊரும் புகழ்பெற்று விளங்க வழி காட்டு' என்று அந்த இறைவனை வேண்டி விடைபெற்றோம்.

இந்த ஆலயத்தை புனரமைத்து எழுப்ப அடியார் கூட்டம் ஒன்று தயாராகி உள்ளது. நாமும் இணைந்து கரம்கோர்த்தால் ஆலயம் பொலிவுபெறும். ஜெயங் கொண்டேஸ்வரரின் திருவருளால் நம் வாழ்க்கை செழிக்கும். (தொடர்புக்கு: சுப்பிரமணி - 96002 06727).