திருத்தலங்கள்
ஜோதிடம்
Published:Updated:

வாரணமும் தோரணமும்

தோரணமலை
பிரீமியம் ஸ்டோரி
News
தோரணமலை

தோரணமலை

அகத்தியர் என்றால் அடக்கியவர் என்பது பொருள். புலனடக்கம் செய்த தவத்தாலும், ஏழு கடல்களையும் தம் கைக்குள் அடக்கிய திறத்தாலும், வானுயர நிமிர்ந்த விந்திய மலையை அடக்கிய மகிமையாலும் இப்பெயர் பெற்றார் என்று ஆன்றோர்கள் சிலாகித்துச் சொல்வார்கள்.

தோரணமலை
தோரணமலை


அகத்திய மாமுனிவர் வழிபட்ட சிவத்தலங்களை `அகத்தீஸ்வரம்' என்று போற்றிப் புகழ்கின்றன புராண நூல்கள். சிவத்தலங்கள் மட்டுமல்ல, குறுமுனிவர் வழிபட்டு அருள் பெற்ற குமரன் தலங்களும் பல உண்டு.

விருத்தாசுரன் என்பவன் இந்திரனுக்கு எதிராகப் போரிட்டு, சமாளிக்க முடியாமல் கடலில் போய் ஒளிந்துகொண்டான். அவனை வெளிக்கொண்டு வர முனைந்த இந்திரன், அகத்தியரின் உதவியை நாடினான். அவன் வேண்டுகோளை ஏற்று அசுரனை வெளிக்கொண்டு வரும்பொருட்டு அகத்தியர் கடல்நீரை உறிஞ்சினார்.

அப்போது கடலில் வாழும் சகல ஜீவராசிகளும் அவரின் வயிற்றுக்குள் சென்றதால், அகத்தியருக்கு வயிற்றுவலி உண்டானதாம். வலியைத் தீர்க்க மருத்துவனை நாடினார்.

`என்ன... மருத்துவக்கலையில் வல்லவரான அகத்தியரே, தம்மைக் குணப்படுத்த வேண்டி வேறொரு மருத்துவனை நாடினாரா?’ என்ற கேள்வியும் வியப்பும் உங்களுக்குள் எழலாம். வியப்பு தேவையில்லை. அகத்தியர் நாடியது அவரைப் போன்றோருக்கெல்லாம் மருத்துவம் உபதேசித்த மேலான தெய்வத்தை. ஆம், தணிகை முருகனின் அருளை நாடிச் சென்றார்! `பவரோக வைத்தியநாத பெருமாளே’ என்று சகலரும் போற்றும் தெய்வம் தணிகை முருகனே!

அவரை வணங்கி தனது வயிற்றுவலியை நீக்கி அருளும்படி வேண்டினார் அகத்திய மாமுனிவர். ‘கடல் நீருடன் அநேக ஜீவராசி களை உண்டதால் பாவம் ஏற்பட்டுத் துன்புறுகிறீர். அந்தப் பாவம் நீங்க, சிவபூஜை ஒன்றே வழி!’ என்று அருளினார் தணிகைவேள்.

அதன்படி, தொண்டை நாட்டில் குசஸ்தலை ஆற்றின் கரையில் பல சிவத் தலங்களில் பூஜை செய்து நலம்பெற்றாராம் அகத்தியர்.

தணிகையில் மட்டுமல்ல, ஆவினன்குடியான பழநியில் அகத்தியர் இரண்டு வேளையும் முருகனைப் பூஜித்து வைத்தியம், ஜோதிடம், ஞான நூல்கள் போன்றவற்றை இயற்றும் பேரருளைப் பெற்றார். இதனையே, ‘செந்தமிழில் உனையே வணங்கு குருநாதர் தென்றல் வரை முநிநாதர் அன்று கும்பிட நல்லருளே பொழிந்த தென் பழநி மேலுகந்த பெருமாள்...’ என்று போற்றுகிறார் அருணகிரியார்.

அதேபோன்று குன்றக்குடி மலையில் உள்ள சரவணத் தடாகத்தில் மூழ்கி குமரனைப் பூசித்து, அகத்தியர் அருள் பெற்றதை அந்தத் தல புராணம் விவரிக்கிறது. இந்த வரிசையில்... அகத்தியரின் அபிமான முருகத் தலங்களில் தோரணமலையும் ஒன்று என்பது நாம் பெற்ற பெரும்பேறு அல்லவா?

பொதிகை தீரம் அகத்தியரின் பெரும் விருப்பத்துக்கு உரியது. ‘பொதிய மலையில் அகத்தியரின் தமிழ்ச்சங்கம் இருக்கிறது. அங்கே செல்வீர்களாயின் தமிழ்ச் சுவையை நுகர்ந்து அவ்விடத்திலேயே இருப்பீர்கள்; நான் சொன்ன காரியத்தை மறந்து விடுவீர்கள்’ என்று சுக்ரீவன், வானர வீரர்களிடம் சொன்னதாக விவரிக்கிறது கம்ப ராமாயணம்.

ஆம், பொதிகை தீரம் அகத்தியர் விரும்பி உறையும் இடம். இன்றும் பொதிகை மலையில் அருவ நிலையில் முருகப் பெருமானை உபாசித்து வாழ்ந்து வருகிறார் அகத்தியர் என்கின்றன ஞானநூல்கள். பொதிகை தீரத்தை யொட்டிய தோரணமலையிலும் அகத்தியர் மற்றும் தேரையரின் அருள் சாந்நித்தியம் நிரம்பி உள்ளது என்கிறார்கள் தோரணமலை பக்தர்கள் பலரும்.

அகத்தியரின் சித்தப்படி அவரின் சீடரான தேரையர் இங்கே மருத்துவ சாலை அமைத்துப் பணிசெய்தது, இத்திருத்தலம் பெற்ற தனிச் சிறப்பாகும்.

செல்வங்களிலேயே பெரிய செல்வமாக இருந்து, நிம்மதியைத் தருவது நோயில்லாத வாழ்க்கையே. அவ்வகையில், மனித குலம் நோயில்லாத வாழ்வு வாழத் தங்களையே அர்ப்பணித்தவர்கள் அகத்தியர், தேரையர் போன்ற சித்த புருஷர்கள். அப்படியானவர்கள், அனுபவபூர்வமாக கண்டு சொன்ன தலங்களுக்குச் சென்று வழிபடுவதால், நம்முடைய உடற்பிணிகள் மட்டுமல்ல மனப்பிணிகளும் நீங்கும்; வாழ்வு அர்த்தமுள்ளதாகும்.

அவ்வகையில் ஒவ்வொருவரும் அவசியம் தரிசித்து வழிபடவேண்டிய தலம் தோரணமலை. பெளர்ணமி தினங்களில் இதுபோன்ற மலைத் தலங்களை கிரிவலம் வந்து வழிபடுவதால், நம் பாவங்கள் அனைத்தும் பொசுங்கும். முன்வினை காரணமாக நம்மை சூழ்ந்துள்ள தீமைகளும் தோஷங்களும் விலகும் என்பதுவும் சித்தர்களின் வழிகாட்டலே. குறிப்பாக சித்ரா பெளர்ணமி தினங்களில் தோரணமலையை கிரிவலம் வந்து வழிபடுவது மிகவும் விசேஷம்.

சித்ரா பௌர்ணமியின் உண்மையைக் கண்டுபிடித்து, அதை மனித குலத்துக்கு வெளிப்படுத்தியவர்களும் சித்த புருஷர்களே.

சித்ரா பௌர்ணமியன்று ஒரு சில ஊர்களில் இரவில் முழு நிலா வெளிச்சத்தில், பூமியில் இருந்து ஒருவகை உப்பு வெளிக் கிளம்பும். `பூமிநாதம்' என்று அழைக்கப்படும் அந்த உப்பு, மருந்துகளுக்கு அதிகமான சக்தியை அளிக்கக் கூடியது. இந்த உப்பு சித்ரா பௌர்ணமி அன்று வெளிப்படுவதைக் கண்டறிந்து சொன்ன வர்கள் சித்த புருஷர்களே. இதனால் சித்ரா பௌர்ணமி ஆதியில் ‘சித்தர் பௌர்ணமி’ என்றே அழைக்கப்பட்டதாம்!

வரும் மே 5-ம் நாள் வெள்ளிக்கிழமை சித்ரா பெளர்ணமித் திருநாள். இறையருளோடு சித்தர்களின் திருவருளும் பொங்கிப் பெருகும் அற்புதமான இந்த நாளில்... மூலிகைகள் நிறைந்த, தேரையரின் மருத்துவத்தால் மகத்துவம் பெற்ற தோரணமலையை வலம் வந்து வழிபடுவது அதீத நன்மைகளைப் பெற்றுத் தரும்; பலன்கள் பன்மடங்காகக் கிடைக்கும்; நாம் மனதில் நினைத்த நற்காரியங்கள் அனைத்தும் தடையின்றி நிறைவேறும் என்பதில் சிறிதும் ஐயம் இல்லை.

தோரணமலை முருகன்
தோரணமலை முருகன்


தோரணமலை முருகன் கோயிலுக்குச் செல்லும் பக்தர்கள், அடிவாரம் முதல் மலைச் சந்நிதி வரையிலும் உள்ள சகல தெய்வங்களையும் வழிபடுவது சிறப்பு. இதுபற்றிய விவரங்களை ஏற்கெனவே கொடுத் துள்ளோம். எனினும், வாசகர்கள் பலர் கேட்டுக் கொண்டதற்கு இணங்க, மீண்டும் விளக்கமாக அறிந்துகொள்வோம்.

அடிவாரத்தில் வல்லப விநாயகர் அருள்கிறார். முதல் வணக்கம் முதல்வனுக்கே அல்லவா! ஆகவே முதலில் வல்லப விநாயகரை வழிபட்டுவிட்டு, பின்புறம் உள்ள நாகர் சந்நதி, வியாழ பகவான், சுதை வடிவிலான பாலமுருகன், சப்த கன்னியர், கன்னி மாரம்மன், சுதை வடிவிலான சிவன், லட்சுமி, சரஸ்வதிதேவி ஆகியோரையும் நவகிரகங்களையும் தரிசித்து வழிபடலாம்.

அடிவாரத்திலேயே பக்தர்கள் குளிப்பதற்கு இரண்டு சுனைகள் உள்ளன. சுனையில் நீராடி விட்டோ அல்லது சுனை நீரை தலையில் தெளித்துக்கொண்டோ வழிபாட்டைத் தொடங்கலாம்.

விநாயகர் முதற்கொண்டு அனைத்துத் தெய் வங்களையும் தரிசித்த பிறகு, அடிவாரத்தில் முருகனை வணங்கிவிட்டு பக்தர்கள் மலையேறத் தொடங்குவது வழக்கம். மலை ஏற இயலாத அன்பர்கள், அடிவாரத்து முருகனிடமே தங்கள் வேண்டுதலைச் சமர்ப்பித்துச் செல்கிறார்கள்.

மலைமீது ஏறிச் செல்லும்போது, வழியிலேயே லட்சுமி சுனை உள்ளது. அதிலும் பக்தர்கள் நீராடலாம். மலைக்கு மேல் குகைக் கோயில் அழகனாம் தோரணமலையானின் சந்நிதி உள்ளது. அவருக்கு பூக்கள், பழங்கள் சமர்ப்பித்து வழிபடலாம். அங்கே பத்ரகாளியம்மன் சந்நிதியும் உண்டு. வேண்டுதலை நிறைவேற்றும் சிறந்த வரப்பிரசாதி அந்த அம்பிகை.

மலையுச்சியிலும் ஒரு சுனை உள்ளது. மூலவருக்கான அபிஷேகத் தீர்த்தம் அந்தச் சுனையிலிருந்தே எடுத்துவரப்படுகிறது.

தோரண மலையான் சந்நிதியில் கந்தசஷ்டிக் கவசம், குமார ஸ்தவம் முதலான துதிப்பாடல்களைப் பாடி வழிபடுவது மிகவும் விசேஷம். முருகனை நாமப் பிரியன் என்பார்கள். அதற்கேற்ப `கந்தா போற்றி, குமரா போற்றி, வடிவேலா போற்றி...’ என்று வல்லமை மிக்க முருகனின் திருப்பெயர்களுடன் போற்றி கூறி வழிபட்டால், தோரண மலையானின் அருள் பூரணமாகக் கிடைக்கும்; நம் வேண்டுதல்கள் விரைவில் பலிக்கும்.

சஷ்டி, கிருத்திகை முதலான விசேஷ தினங்களில் முருகனுக்கு நிகழும் வழிபாடுகளுக்கான மலர்கள், பழங்கள், அபிஷேகத் திரவியங்கள் போன்றவற்றை பக்தர்களும் தங்கள் பங்களிப்பாக வழங்கலாம். முருகனை தரிசித்துவிட்டு கீழே இறங்கும்போது, சுமார் 100 படிகள் இறங்கியதும் மேற்கு நோக்கி ஒற்றையடிப் பாதை பிரிந்து செல்லும். அதன் வழியே பயணித்தால், தேரையர் சித்தரின் ஜீவ சமாதியை தரிசித்து வழிபட்டு வரலாம்.

தோரணமலையானுக்குத் தினமும் அதிகாலை அபிஷேகம் உண்டு. அதேபோல் ஞாயிறுதோறும் அடிவாரம் மற்றும் மலைக்கு மேல் உள்ள அனைத்து தெய்வங்களுக்கும் சிறப்பு அபிஷேகம் நடைபெறும். தமிழ் மாதத்தின் கடைசி வெள்ளிக் கிழமை மற்றும் பெளர்ணமி தினங்களில் கிரிவலம் சிறப்பாக நடைபெறுகிறது.

இங்கே அன்னதானம் விசேஷம். தினமும் மதியம் அன்னதானம் வழங்கப்படுகிறது. ஞாயிற்றுக் கிழமைகள், பெளர்ணமிக் கிரிவல நாள்கள், தமிழ் மாதத்தின் கடைசி வெள்ளிக் கிழமைகளில் காலையிலும் அன்னதானம் நடைபெறுகிறது. பக்தர்கள் தாங்களும் அன்னதானப் பணிக்குப் பங்களிப்பை வழங்கலாம். அதேபோல். செவ்வாய் மற்றும் வெள்ளிக் கிழமைகளில் காலை வேளையில் பக்தர்களுக்கு அன்னப் பிரசாதம் வழங்கப்படுகிறது.

இந்தத் திருக்கோயில் தினமும் காலை 5 மணிக்கு நடை திறக்கப்படும். மாலை 5 மணிக்கு அடிவாரத்தில் நடைசாற்றப்படும். மலைமீது செல்லும் பக்தர்கள் காலை 5 முதல் மாலை 3 மணி வரை அனுமதிக்கப்படுகிறார்கள். தோரணமலைக்குச் செல்லும் அன்பர்கள், அதற்கேற்ப தங்களின் பயணத்தைத் திட்டமிடலாம்.

- தரிசிப்போம்...

அன்னதான வகைகள்!

அன்னதானம் தானங்களில் சிறந்தது என்கின்றன ஞானநூல்கள். அன்னதானம் ஒன்றே என்றாலும் அது செயப்படும் நிலைக்கேற்ப சிறப்பு பெறுகிறது. அவ்வகையில், அடியார்களுக்கு அன்னதானம் செய்வது மாகேசுவர பூஜை என்றும், ஆலயத்துக்கு வரும் பக்தர்களுக்கு அன்னதானம் செய்வது அன்னம் பாலிப்பு என்றும், ஏழை-எளியவர்களுக்கு வழங்கப்படுவது அன்னதானம் என்றும் அழைக்கப்படுகிறது.

- எஸ்.கண்ணன், சென்னை-67