Published:Updated:

கடனிலிருந்து மீட்கும் பைரவர்; புத்திரபாக்கியம் அருளும் தண்ணீர் குட பரிகார வழிபாடு!

பைரவர்

பைரவர்: இந்த பைரவர் ஆலயத்தில் வேறு எங்கும் இல்லாத வகையில் பைரவர் ஒரு நபரின் மீது மருளாக வந்திரங்கி அருள்வாக்கு சொல்லப்படும் நிகழ்வு நடைபெறுகிறது.

கடனிலிருந்து மீட்கும் பைரவர்; புத்திரபாக்கியம் அருளும் தண்ணீர் குட பரிகார வழிபாடு!

பைரவர்: இந்த பைரவர் ஆலயத்தில் வேறு எங்கும் இல்லாத வகையில் பைரவர் ஒரு நபரின் மீது மருளாக வந்திரங்கி அருள்வாக்கு சொல்லப்படும் நிகழ்வு நடைபெறுகிறது.

Published:Updated:
பைரவர்
இறைவன் ஈசனுக்கு 64 திருமேனி ரூபங்கள் உள்ளன என சைவ நூல்கள் தெரிவிக்கின்றன. அதில் மிக முக்கிய ரூபம் தான் பைரவ ரூபம். ஆம் அஷ்டதிக்குகளுக்கும், நவகிரகங்களுக்கும், பஞ்ச பூதங்களுக்கும் நால் வேதங்களுக்கும், பைரவரே அதிதேவதை என புராணங்கள் கூறுகின்றன.
பைரவர்
பைரவர்

இதனால் தான் பைரவர் உடையே அஷ்டபைர ரூபங்கள் நம்மால் காண முடிகிறது. பைரவரின் தோற்றம் என்பது பிரம்மனின் அகங்காரத்தை அடக்க பஞ்ச சிரசிலிருந்து ஒரு சிரசை கொய்வதற்காக சிவன் எடுத்த ஒரு அவதாரமே பைரவ அவதாரமாகும். சிவாலயங்களில் கோஷ்டத்தின் அருகே பைரவரின் சன்னதிகளை நம்மால் காண முடியும் இது ஏன் வாசலிலேயே உள்ளது என்றால் அக்காலங்களில் கோவிலின் கதவுகளை பூட்டிய பின் பைரவரின் பாதங்களில் தான் அந்த ஒட்டுமொத்த கோவிலில் கொத்து சாவியும் வைக்கப்படும். இதனால் கோவிலில் உள்ள தெய்வங்களுக்கோ அல்லது கோவிலின் சொத்துக்களுக்கோ எவ்வித திருட்டு சேதமோ ஏற்படாது என்பது நம்பிக்கை இதை பைரவர் பாதுகாப்பார் என்பதும் மக்களால் நம்பப்படுகிறது.

இப்படி கோயில் கோஷ்டத்தில் பார்க்கும் பைரவரை நாகை மாவட்டம் வேதாரண்யம் வட்டம் தகட்டூர் கிராமத்தில் தனி கோயிலிலேயே காண முடிகிறது. அனைத்து ஊர்களிலுமே சிவாலயம் என ஒரு கோயில் இருக்கும் அதே போல் இந்த தகட்டூரின் மத்தியிலும் ஒரு சிவனாலயம் உள்ளது ஆனால் மூலவர் சிவலிங்க ரூபம் அல்ல பைரவர்தான் இந்த கோயிலின் மூலவர்,ஆம் இவ்வாலயம் பைரவருக்கான தனி ஆலயம் ஆகும். இங்கு பைரவரை சுற்றியே மற்ற தெய்வங்கள் உள்ளன ,சரி முதலில் இந்த பைரவர் ஏன் இங்கு தனி கோயிலில் ,தனி சன்னதியில் உள்ளார்? யார் இவரை பிரதிஷ்டை செய்தது? என வாசகர்கள் மனதில் பல கேள்விகள் உலா வரும் அவற்றை காண்போம்.

திரேதா யுகத்தில் ராம பெருமான் தனது சகாக்களுடன் இலங்கையில் ராவண வதத்தை முடித்த பிறகு சீதையுடன் ராமேஸ்வரம் வந்தடைந்தார் ராமர். அங்கு இராவணனை கொன்றதால் வந்த பிரம்மஹத்தி தோஷத்தை நிவர்த்தி செய்ய அனுமானிடம் சொல்லி காசியில் இருந்து ஒரு லிங்கத்தை எடுத்து வர ஆணையிட்டார். ஆஞ்சநேயபெருமானும் ராமனின் ஆணையை ஏற்று காசியில் பிரவேசிக்க அங்கு காசி காவல் தெய்வமான பைரவர் தடுக்கிறார், இதனால் அங்கு ஆஞ்சநேயருக்கும் பைரவருக்கும் கடுமையான போர் நடைபெறுகிறது, இதன் முடிவில் வெற்றி பெற்ற காசி காவல் தெய்வமான பைரவர் ஆஞ்சநேயரை லிங்கம் எடுத்துச் செல்வதற்கு சம்மதிக்கிறார்.

பைரவர்
பைரவர்

ஆனால் அதற்கு ஒரு நிபந்தனையை பைரவர் இடுகிறார் அதன்படி காசிலிங்கத்துடன் தன்னுடைய ரூபமும் வரும் என்று கட்டளையிடுகிறார். இதன்பின் பைரவர் இடம் ஆசி பெற்று லிங்கத்தை எடுத்துக்கொண்டு ராமேஸ்வரம் நோக்கி அனுமனும் பைரவரும் விரைகின்றனர். பல தொலைவு கடந்து வருகையின் அசதிகாரணமாக லிங்கத்துடன் ஆகாயத்திலிருந்து ஆஞ்சநேயர் இந்த தகட்டூரில் இறங்கி ஓய்வு எடுக்கிறார். அப்பொழுது ஆஞ்சநேயர் உடன் இருந்த பைரவ ரூபம் இவ் ஊரின் அழகை கண்டு இவ்வூரிலேயே நிரந்தரமாக தங்குவதாகவும், காசிலிங்கத்தை எடுத்துக்கொண்டு நீ ராமேஸ்வரத்திற்கு உடனடியாக செல்ல வேண்டும் என்றும் ஆஞ்சநேயரை வற்புறுத்தியதால் ,பைரவ ரூபத்தை அங்கேயே விட்டுவிட்டு ஆஞ்சநேயர் ராமேஸ்வரம் விரைந்ததாக தல வரலாறு கூறுகிறது. இதனால் இங்குள்ள பைரவர் மிக மிக தொன்மையானவர் என அறியப்படுகிறது.

இவ்வாலயம் இருக்கும் பகுதி முதலில் எந்திரபுரி என்று அழைக்கப்பட்டதாம். ஏனெனில் இங்கு உள்ள பைரவர் சக்திகள் இங்கு எந்திர வடிவில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளதால் இப்பெயர் பெற்றதாம். காலப்போக்கில் தகடூர் என்று மாறி அது தற்பொழுது தகட்டூர் என்று மருவி மக்களால் அழைக்கப்படுகிறது என பக்தர்கள் தெரிவிக்கின்றனர். இது மட்டுமல்லாமல் திருத்தகட்டூர் திருப்பதிகமானது சுந்தரரால் இக்கோயிலின் பைரவநாத ஸ்வாமி மீது பாடப்பட்டுள்ளது என தெரிகிறது.

இத்தகைய பல்வேறு சிறப்புகள் வாய்ந்த இந்த பைரவ நாத சுவாமி ஆலயத்தை அடைந்தால் முதலில் ராஜகோபுரம் கடந்து நாய் வாகனம் உயர்த்தப்பட்ட கொடிமரம் என அர்த்தமண்டபம், மகா மண்டபத்தை கடந்து கருவறையை அடைந்தால் மூலஸ்தானத்தில் எந்திர பீடத்தில் நான்கடி உயரத்துடன் சுத்த நிர்வான ரூபத்தில் இரண்டு கரங்களுடன் சர விளக்கொளியில் பைரவ நாத சுவாமி காட்சி அருளுகிறார். முகத்தில் காருண்யமும் கரங்களில் அபய வரத ஹஸ்தமும் தாங்கி நிற்கும் பைரவரை காணும் பொழுது மனம் மிருதுவாகிறது நம்மை பிடித்துள்ள கஷ்டங்கள் தவிடு பொடி ஆகிறது. மூலஸ்தானத்தை கடந்து நகர்ந்தால் பைரவரின் உற்சவர் திருமேனியை இங்கு காணமுடிகிறது அவரின் கைகளில் வெள்ளிப் பிரம்பும் திரிசூலமும் காணப்படுகிறது. இதனைக் கடைந்தால் கல்யாண விநாயகர் மற்றும் அஸ்தான விநாயகரும் ,காசி விஸ்வநாதர் விசாலாட்சி அம்பிகை, சுப்ரமணியர் என பற்பல சன்னதிகள் ஒரு சிவாலயத்திற்கே உரித்தான தோற்றத்தில் ஆகம விதிப்படி கட்டப்பட்டுள்ளது. இவ்வாலயம் மிகவும் பழமையான ஒரு ஆலயமாக இருப்பதால் ஆலயத்தின் பின்புறத்தில் தகழீஸ்வரர் என்ற சிவலிங்க திருமேனியை காண முடிகிறது. இது மட்டுமல்லாமல் பைரவர் இங்கு திருக்கோயில் கொள்ள காரணமாக இருந்த வாயுபுத்திரன் ஆஞ்சநேயர் தனி சன்னதியில் நின்ற திருமேனியில் காட்சி அருளுகிறார். 

பைரவர் திருக்கோயில்
பைரவர் திருக்கோயில்

இவ்வாலயங்களை கடந்து வெளியே வந்தால் திருக்குளம் உள்ளது. திருக்குளத்தின் கிழக்கு புறம் பைரவரை பார்த்தபடி காத்தாயி, கருப்பாயி சமேத ராவுத்தர் ,கையில் சொக்குமத்தடி, வீரவால்  தாங்கி பைரவரை பார்த்த வண்ணம் அருளுகிறார். இந்த பைரவர் ஊருக்கே காவல் தெய்வமாக இருந்தாலும் இந்த பைரவருக்கு காவல் தெய்வம் இந்த ராவுத்தர் சுவாமி தான் என கிராம மக்கள் தெரிவிக்கின்றனர் இந்த காவல் தெய்வம் ராவுத்த சுவாமிக்கு பூஜை செய்வதற்காகவே இங்கு ஒரு கிராமமே உள்ளது பண்டாரத்தேவன் காடு என்ற இந்த கிராமத்தின் ஒரு சில மக்களை தவிர்த்து இந்த ராவுத்தர் சன்னதியினுல் வேறு யாரும் நுழைவது இல்லையாம். அதேபோல் இந்த ராவுத்த சுவாமிக்கு சுதை சிற்பமோ அல்லது கல் சிலாரூபமோ இங்கு இல்லை இடி விழாத அத்தி மரத்தில் தான் இங்கு உள்ள ராவுத்த சுவாமி சிலை  செய்யப்படுகிறதாம்.

தகட்டூர் பைரவநாத சுவாமி கோயில்
தகட்டூர் பைரவநாத சுவாமி கோயில்

இந்த ராவுத்த சுவாமிக்கு பல்லாயிரம் குடும்பங்கள் மருளாளிகளாக உள்ளனர் .இவருக்கு பானகம் கரைத்து வைத்து, பச்சரிசி களி செய்து, ரொட்டி தட்டி வைத்தால் வேண்டியது கிடைக்கும் என்று மக்கள் நம்புகின்றனர் ,இந்த படையளின் பெயர் பாபல்லையம் என பூசாரி இராசேந்திரன் தெரிவிக்கிறார். ராவுத்தரை வணங்கி கோயிலை வலம் வந்தால் தெற்கு புறத்தில் ஒரு மிகப்பெரிய பழமையான ஒரு நாவல் மரம் உள்ளது. இதைப் பற்றி பூசாரியிடம் கேட்கும் பொழுது இந்த மரம் பல நூறு ஆண்டு பழமையானது என்றும் இதில் இருக்கும் பொந்துகளில் நாகங்கள் உள்ளது என்றும் தெரிவித்தார். அவர் கூறியதுபடியே ஒரு மிகப்பெரிய பொந்து உள்ளது அதில் பக்தர்கள் நாகர்களை பிரதிஷ்டை செய்து வழிபடுகின்றனர். கஜா புயலில் பல ஆலயங்களில் கோபுரங்களே சரிந்த போதும் இந்த நாவல் மரம் சாயவில்லையாம் இது சக்தி உள்ள மரம் என்று பக்தர்கள் கூறி சிலாகிக்கின்றனர். இந்த பைரவர் ஆலயத்தின் மற்றொரு சிறப்பாக சொல்லப்படுவது 12 ராசிகளுக்கும் 24 நட்சத்திரங்களுக்கும் உரித்தான மரங்கள் இவ்வாலயத்தை சுற்றி நடப்பட்டு கோவில் நிர்வாகத்தால் பராமரிக்கப்படுகிறதாம் இதை அந்தந்த நட்சத்திரக்காரர்கள் சுற்றி வந்து பைரவருக்கு மிளகு தீபம் ஏற்றினால் நவகிரக தோஷங்களால் ஏற்படும் அனைத்து தீவினைகளும் சரியும் என கோவிலின் ஆஸ்தான பூஜைகள் சிவாச்சாரியார் ஞானசேகரன் தெரிவிக்கிறார்.

இந்த பைரவர் ஆலயத்தில் வேறு எங்கும் இல்லாத வகையில் பைரவர் ஒரு நபரின் மீது மருளாக வந்திரங்கி அருள்வாக்கு சொல்லப்படும் நிகழ்வு நடைபெறுகிறது. இந்த நிகழ்வு பிரதி திங்கள், வெள்ளிகளில் இவ்வாலயத்தில் வெண்கலத்தால்  வேயப்பட்ட குறி மேடையில் அமர்ந்து கோவிலில் தயாரிக்கப்படும் விபூதியால் அருள்வாக்கு கொடுக்கப்படுகிறது. இதில் நீண்ட நாள் திருமணமாகாதவர்கள் புத்திர பாக்கியம் இல்லாதவர்கள் இங்கு ஒரு குடத்தில் தண்ணீர் எடுத்து வருகின்றனர் அதில் சந்தனம் கோவில் விபூதியை சாமியாடி ராதாகிருஷ்ணன் கரைக்கிறார் பின்பு அந்த நீரை கோவில் வாசலில் வைத்து திருமணமாகாதவர்கள் மற்றும் புத்திரபேறு இல்லாதவர்கள் தலையில் ஊற்றப்படுகிறது பிறகு அதே ஈரத்துணியுடன் பைரவரிடம் அருள்வாக்கு கேட்கப்படுகிறது இதில் பலர் பயனடைந்துள்ளனர் என்றும் பக்தர்கள் கூறுகின்றனர்.

பைரவர்
பைரவர்

இந்த அருள் வாக்கிற்கு எவ்விதமான கட்டணமோ அல்லது காணிக்கைகளோ கிடையாது என கோவிலால் தெரிவிக்கப்படுகிறது. இந்த பைரவர் சாமி ஆடி கொண்டே  ஒவ்வொரு வருடமும் பங்குனி செவ்வாயில் பைரவரின் தங்கை என்று கூறப்படும்   திருமேனி அம்மனைக்கான செல்லும் நிகழ்வு நடைபெறுகிறது . திருமேனியம்மன் மாப்பிள்ளை வீரன் கோவில் பைரவர் கோவிலில் இருந்து வடகிழக்கு திசையில் மூன்று கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. இவ்வாலையத்தின் திருவிழாவுக்கு பைரவர் மருளாடி கொண்டே வந்து குதிரைகளுக்கு விபூதி ஊதியெறிந்து மாப்பிள்ளை வீரன் மேடைக்கு   பாலபிஷேகம் செய்து தேங்காய் உடைக்கிறார் .இத் தருவாயில் பல லட்சம் மக்கள் ஒன்று திரளுவர் பின் திரும்பி பைரவர் கோவிலுக்கு மருளாடிக்கொண்டே கூட்டத்துடன் வந்துவிடுவார் இது ஒரு அற்புதமான நிகழ்வாக பல்லாயிரம் ஆண்டுகளாக  இக்கிராம மக்களால் நடத்தப்படுகிறது. இங்குள்ள பைரவருக்கு ஒரு வெள்ளிப் பிரம்பு கையில் கொடுக்கப்பட்டுள்ளது இந்த பிரம்பு மருளாடி வயதாகிய பின் மற்றொரு மருளாடியை தேர்ந்தெடுக்க உதவும் என கிராம மக்கள் தெரிவிக்கின்றனர்.

இத்தகைய சிறப்புகள் கொண்ட தகட்டூர் பைரவர் நாத சுவாமி ஆலயத்தில் மாதாந்தோறும் தேய்பிறை அஷ்டமி யாகம் வெகு சிறப்பாக நடைபெறுகிறது. இதில் அஷ்டோத்திரம் மற்றும் பைரவ மந்திரங்கள் உச்சாடனம் செய்து கலச நீர்கள் பைரவருக்கு அபிஷேகம் செய்யப்பட்டு தீர்த்தமாக பக்தர்களுக்கு கொடுக்கப்படுகிறது. தீராத கடன் தொல்லை உள்ளவர்கள் ,சனிதோஷம் உள்ளவர்கள், புத்திர பாக்கியம் இல்லாதவர்கள் இதில் கலந்துகொண்டு யாகத்திற்கு வஸ்துக்களை சமர்ப்பிக்கின்றனர். இதிலும் கார்த்திகை மாதத்தில் வரும் தேய்பிறை அஷ்டமி இங்கு எட்டு நாள் உற்சவமாகவே கொண்டாடப்படுகிறது. இது மட்டுமல்லாமல் சித்ரா பௌர்ணமிக்கு பத்து நாட்களுக்கு முன்பு இங்கு பிரம்மோற்சவத்திற்கான கொடியேற்றப்பட்டு தினம் சுவாமி பகல் பத்து, இராபத்தில் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளுகிறார். இதில் திருவிழா நாளான சித்ரா பௌர்ணமி அன்று பல மக்கள் பைரவருக்கு மாவிளக்கு போட்டும் அர்ச்சனைகள் செய்தும் வழிபடுகின்றனர் அன்று பகலில் மகா தேரோட்டமும் பக்தர்களால் நடத்தப்படுகிறது.

தகட்டூர் பைரவநாத சுவாமி கோயில்
தகட்டூர் பைரவநாத சுவாமி கோயில்

பல சிறப்புகளும் மர்மங்களையும் கொண்ட தகட்டூர் பைரவநாத சுவாமி கோயில் தமிழ்நாடு இந்து அறநிலைத்துறை கீழ் இயங்கும் ஒரு முக்கிய திருக்கோயில் ஆகும். வேண்டுவோருக்கு வேண்டும் வரம் அருளும் தகட்டூர் பைரவர் ஆலயம் திருவாரூர் ரயில் நிலையத்திலிருந்து வேதை மார்க்கத்தில் 40 கிலோ மீட்டரிலும் சாலை மார்க்கமாக திருத்துறைப்பூண்டி டு வேதாரண்யம் வாய்மேடு வழி சாலையில் பைரவர் கோவில் பாலம் என்ற பஸ் நிலையத்தின் வழியாகவும் செல்லலாம். சுமார் 24 ஆண்டுகள் கழித்து இந்த தமிழ் ஆண்டில் தகட்டூர் பைரவாத சுவாமி ஆலயத்தில் திருக்குடமுழக்கு வேதாகமங்கள் முறைப்படி நடைபெற உள்ளது. தீராத கஷ்டங்களும் வியாதிகளும் உள்ளவர்கள் மனம் உருக வந்து பைரவரை வணங்கி வாழ்வில் வளம் பெற வேண்டுகிறேன்.