Published:Updated:

தை அமாவாசை வழிபாடு! அமாவாசை நாள்களில் ஏன் ஆசாரமாக இருக்க வேண்டும்?

தை அமாவாசை
தை அமாவாசை ( தை அமாவாசை )

தை அமாவாசை அன்று பித்ருக்களுக்கு வழிபாடு செய்யாமல் இருந்தால், அவர்களின் சாபத்திற்கு ஆளாகிவிட்டால் தெய்வத்தால்கூடக் கருணை காட்ட முடியாது என்கிறது கருட புராணம்.

வேர்களைப் பொறுத்தே விருட்சங்களின் உறுதி முடிவு செய்யப்படும் என்கிறது ஆன்மிகம். ஆம் ஒருவனின் சிறப்பான வாழ்க்கை என்பது அவனுடைய முன்னோர்களின் வினைப்பயனைக் கொண்டும் முடிவு செய்யப்படுகிறது. ஒருவன் அவனுடைய முன்னோர்களையும், முன்னோர்களின் அம்சமான குல தெய்வத்தையும் வணங்காது விட்டால், மற்ற தெய்வங்களை வணங்கியும் பலனில்லை என்கின்றன நம்முடைய சாஸ்திரங்கள். ஆத்ம சாந்தி அடையாத தன்னுடைய முன்னோர்களுடைய மனக்குறையைத் தீர்க்கும் பொருட்டு பகீரதன் கடும் முயற்சி எடுத்து கங்கையை பூமிக்கு வரவழைத்து தம் முன்னோர்களின் ஆன்மாவை சாந்தப்படுத்தினான் என்கிறது புராணம்.

திருச்செந்தூர்
திருச்செந்தூர்

சாதாரண மானிடரான நாம், நம்முடைய முன்னோர்களின் ஆன்மாவை குளிர்விக்கப் பெரும் பிரயத்தனங்களைச் செய்ய வேண்டியதில்லை. ஆண்டுக்கு மூன்று முறை பித்ருக்களுக்கான வழிபாட்டைச் செய்தாலே போதும் என்கின்றன சாஸ்திர நூல்கள். அதில் முக்கியமான தினம் தை அமாவாசை.

பிதுர் லோகத்தில் இருந்து ஆடி அமாவாசை தினத்தில் கிளம்பி வரும் பித்ருக்கள் தங்களுடைய வழித்தோன்றல்களை ஆசீர்வதித்து மீண்டும் மேலோகம் செல்லும் திருநாளே தை அமாவாசை நாள். இந்த நாளில் நாம் நம்முடைய பித்ருக்களுக்கான வழிபாட்டை முறையாகச் செய்து, சிறிய அளவிலான தானங்கள் செய்து மகிழ்வித்தால் பெரும் நலங்கள் சேருமாம். தை அமாவாசை நாளில், நாம் செய்யும் ஒவ்வொரு வழிபாடும் நம் பித்ருக்களுப் போய்ச் சேரும். இதனால் அவர்களுடைய ஆசிகளும் நமக்கு வந்துசேரும். அவை நமக்கு மட்டுமின்றி, நம் சந்ததிக்கும் நன்மை சேர்க்கும் என்பர்.

தை அமாவாசை - திதி கொடுக்க 9 புண்ணிய தீர்த்தத் தலங்கள்!

தை அமாவாசை அன்று பித்ருக்களுக்கு வழிபாடு செய்யாமல் இருந்தால், அவர்களின் சாபத்திற்கு ஆளாகிவிட்டால் தெய்வத்தால்கூடக் கருணை காட்ட முடியாது என்கிறது கருட புராணம்.

தை அமாவாசை
தை அமாவாசை

தை அமாவாசை நாளில் திதி, தர்ப்பணம், படையல், ஆலய வழிபாடு, தீர்த்தமாடுதல் மட்டுமின்றி மேலும் சில சடங்குகள் கடைப்பிடிக்கப்படுகின்றன. பஞ்சகவ்யப் பிரசாதம், பூசணி தானம், வாழைக்காய் சமையல் போன்றவை சில. முக்கியமாக பித்ருக்கள் வழிபாட்டை 'அபரான்ன காலம்' எனப்படும் பகல் 1:12 முதல் 3:36 வரையிலான நண்பகல் காலத்தில் செய்ய வேண்டும் என்கிறது நியதி. இந்த காலத்தில் தான் பித்ருக்கள் பூமிக்கு வந்து நமது வழிபாட்டை ஏற்கிறார்கள். மேலும் 'குதப காலம்' என அழைக்கப்படும் நண்பகல் 11:36 முதல் 12:36 மணி வரையிலான காலத்தில் முன்னோர்களுக்கு வழிபாடு செய்வதும் நல்லதே. ராகு காலம், எமகண்டம் போன்ற விஷயங்கள் பித்ருக்கள் வழிபாட்டிற்கு தொடர்பில்லை என்கிறது சாஸ்திரம்.

திதி செய்யும் வரை முதியோர், கர்ப்பிணிகள், சிறியோர், உடல்நலம் குன்றியோர் முழு விரதம் இருக்கத் தேவையில்லை. உடலுக்குச் சிரமம் என்றபோது சற்று பால், நீராகாரம், பழங்கள் எடுத்துக் கொள்ளலாம், இதற்கு தோஷம் இல்லை என்றும் கூறுவர்.

அமாவாசை நாள்களில் ஏன் ஆசாரமாக இருக்க வேண்டும்?

சூரிய கலையும், சந்திர கலையும் அமாவாசை நாளில் ஒன்று சேருவதால் சுழுமுனை என்னும் நெற்றிக்கண் பலம் பெறுகிறது. இதனால் உடல் உஷ்ணம் அதிகரிக்கும். மனம் ஒருமைப்படும் இதனாலேயே இந்த நாளில் மந்திர ஜபம் செய்யும் நாளாக அனுஷ்டிக்கப்படுகிறது. மேலும் உஷ்ணம் குறைய தீர்த்தமாடவும் செய்கின்றனர். அமாவாசை நாள்களில் காற்று, வெப்பம், கடல் அலை வேகம் என அனைத்திலும் ஓர் ஏற்ற இறக்கம் உருவாகிறது. பூமியின் அம்சமான உடலும் சமநிலையை அன்று இழக்கிறது. இதனால் அன்று முழுக்க சாத்விகமாக இருக்க நம் சாஸ்திரங்கள் கூறுகின்றன. அமைதியாக இருக்க ஜபதபங்கள் உதவும். பித்ருக்களின் வழிபாடும் நலம் சேர்க்கும் என்றே இவ்வாறு வகுக்கப்பட்டன.

தை அமாவாசை
தை அமாவாசை

மேலும் அமாவாசையில் அடிபட்டால் ஆற நாள் பிடிக்கும் என்பது பெரியோர்களின் வாக்கு. அதனால் அமாவாசையில் கடின வேலைகளைச் செய்யக்கூடாது; பயணம் போகக்கூடாது; புதிய காரியங்களைத் தொடங்கக்கூடாது; அன்று முழுக்க அதிகம் உணர்ச்சிவசப்படவும் கூடாது; எந்த ஒரு முடிவையும் எடுக்க கூடாது என்று பல நியதிகள் வகுக்கப்பட்டன. இதன் காரணமாகவே அமாவாசை நாளில் வேறு விசேஷங்கள் வேண்டாம் என்றது ஆன்மிகம். உணவே குணங்களைத் தீர்மானிக்கும் என்பதால் அன்று மாமிசம், பூண்டு, வெங்காயம் போன்றவற்றைத் தவிர்க்கச் சொன்னது.

எனவே நாளை வரவிருக்கும் தை அமாவாசை தினத்தில் உங்களின் பித்ருக்களுக்கான வழிபாட்டை மனமுவந்து செய்து எல்லா நலமும் வளமும் பெற வேண்டுகிறோம்.

அடுத்த கட்டுரைக்கு