Published:Updated:

நெல்லை, குற்றாலம், பழநி திருத்தலங்களில் இன்று தெப்பத் திருவிழா! தெப்பத் திருவிழா நடத்துவது ஏன்?

தெப்பத் திருவிழா

தெப்ப விழாவைக் காண்பவர்கள் பிறவி எனும் பெரும் சங்கிலியை அறுப்பார்கள் என்கிறது ஆன்மிகம்

நெல்லை, குற்றாலம், பழநி திருத்தலங்களில் இன்று தெப்பத் திருவிழா! தெப்பத் திருவிழா நடத்துவது ஏன்?

தெப்ப விழாவைக் காண்பவர்கள் பிறவி எனும் பெரும் சங்கிலியை அறுப்பார்கள் என்கிறது ஆன்மிகம்

Published:Updated:
தெப்பத் திருவிழா

ஓயாது உழைத்துக் கொண்டிருக்கும் மனிதர்கள் சற்றே மகிழ்ந்திருக்கவும், எல்லோரும் கூடி ஒரே இடத்தில் வழிபடவுமே திருவிழாக்கள் கொண்டாடப்படுகின்றன. உறவுகள் யாவரும் ஒன்று கூடுதல், ஊர் தெய்வங்களைக் கொண்டாடுதல், உறவுகள் கூடி சமைத்து உண்ணுதல், மகிழ்ச்சியைப் பகிர்தல், பரிசுகள் அளித்தல் என உறவைப் புதுப்பித்துக் கொள்ளும் நாளாகவே திருவிழாக்கள் அமைகின்றன. அதுமட்டுமின்றி ஓர் ஊர் திருவிழா என்பது அந்த இடத்தில் உள்ள மக்களின் வாழ்க்கை முறை, அவர்களின் பண்பாடு, நாகரிகம், கலை, கலாச்சாரம், பாரம்பரியம் ஆகியவற்றையும் பிரதிபலிக்கின்றன. பெரும்பாலும் திருவிழா என்பது மதம் சார்ந்தவையாகவே உள்ளன. அவை நம் பண்பாட்டை நினைவு கூறும் விதமாகவோ, இறைவனுக்கு நன்றி செலுத்தும் வகையிலோ அமைகின்றன. அதில் முக்கியமான ஒரு திருவிழாவாக உள்ளது தெப்பத் திருவிழா.

தெப்பத் திருவிழா
தெப்பத் திருவிழா

இந்த விழா பெரும்பாலும் தைப்பூசத்தை அடுத்து கொண்டாடப்படுகின்றன. வட மாவட்டங்கள் பலவற்றில் பங்குனி உத்திர பிரம்மோற்சவ விழாவுக்கு அடுத்து தெப்பத் திருவிழா நடத்தப்படுகிறது. தென் மாவட்டங்களில் இது தைப்பூசம் முடிந்து அடுத்த இரு நாட்கள் நடத்தப்படும். ஆண்டுக்கு ஒருமுறை இந்த விழா கொண்டாடப்படுவது அவசியம் என்கின்றன ஆகமங்கள். இந்த விழாவின் பொழுது இறைவனையும் இறைவியையும் அலங்கரித்து அந்த ஆலயத்தின் திருக்குளத்தின் தெப்பத்தில் வைத்து ஒளி வெள்ளத்தில் குளத்தில் மிதக்க விடுவார்கள். ஈசனும் சக்தியும் ஒரு தெப்பத்தில் இருக்க, முருகப்பெருமான், வள்ளி-தெய்வானை மூர்த்தங்களும் மற்றொரு தெப்பத்தில் வலம் வருவது வழக்கம். தெப்பக்குளத்தின் நடுவே இருக்கும் நீராழி மண்டபத்தைச் சுற்றி அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் இறைவனை வைத்து 3, 5, 7, 9 என வலம் வந்து இந்த விழா கொண்டாடப்படும். அழகிய தெப்பத்தில் இறைவனும் இறைவியும் வலம் வரும் அழகே அழகு என்று அப்போது பக்தர்கள் சொக்கி நிற்பார்கள். முன்பெல்லாம் இறைவன் வீற்றிருக்கும் இந்த தெப்பத்தைக் கயிற்றால் இணைத்து அதை பக்தர்கள் சுற்றி வந்து இழுப்பது வழக்கம். இப்போது மின்மோட்டார்கள் வைத்து இயக்குகிறார்கள்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தெப்பத் திருவிழா
தெப்பத் திருவிழா

இரவின் இருளில் திருக்குளம் இருக்க, நீராழி மண்டபமும் அதைச் சுற்றி வரும் தெப்பமும் மட்டும் ஒளிவெள்ளத்தில் ஜொலிக்க, மங்கல வாத்தியங்களும் பக்தர்களின் போற்றி கோஷமும் இணைந்து அந்த இடத்தையே மெய்சிலிர்க்க வைக்கும். பிரமோற்சவம் மற்றும் தைப்பூச நாள்களில் பெரும்பாலும் 10 நாள்களுக்கு விழாக்கள் நடைபெறும். இந்நாள்களில் காலநேரம் பார்க்காமல் இறைவன் வீதி உலா வருவது வழக்கம். பக்தர்களை அனுகிரகிக்க ஓயாது உலா வரும் இறைவனை விழாவின் இறுதி நாளன்று தெப்பத்தில் வைத்து குளிரச்செய்வதோ, நீர் நிலைகளுக்குச் சென்று திருமஞ்சனம் செய்வதோ நம் தொன்றுதொட்ட வழக்கம்.

அதுமட்டுமின்றி இந்த விழா ஒரு சூட்சுமமான சித்தாந்தத்தை விளக்கும் ஒரு மகத்தான விழா என்று ஆன்மிக நூல்கள் சொல்லும். நீரே மனித உயிர்களுக்கு ஆதாரம். ஒரு தைப்பூச நாளிலேயே உலகில் நீர் முதன்முதலாகத் தோன்றியது என்பதை இறைவனே நீரில் உலா வந்து உணர்த்தும் விழா என்றும் சொல்கிறார்கள். ஒரு ஆன்மா பிறவி எனும் பெரும் கடலில் விழுந்து விழுந்து சலித்துப் போகிறது. அந்த பிறவிக் கடலில் இருந்து வெளியேற இறைவனே அருள வேண்டும். இறைவனின் கருணையானத் தெப்பமே நம் அருகிருந்து நம்மை பிறப்பு எனும் கடலில் இருந்து கரை சேர்க்க வேண்டும் என்பதையே இந்த விழாக் குறிப்பதாகக் கொள்ளலாம். தெப்பம் என்றால் படகு; தோணி என்றும் பிறவி என்றும் பொருள் தரும். தோணித்துறை நாதரான ஈசன், நான்கு துறைகளில் சமயக் குரவர் நால்வரை பிறவி எனும் பேராபத்தில் இருந்து கரை சேர்த்தார் என்று கூறும் சைவம். அவை தோணித்துறை எனும் சீர்காழி (திருஞானசம்பந்த பெருமான்) அருள்துறை எனும் திருவெண்ணெய் நல்லூர் (சுந்தரர்) வீரட்டந்துரை எனும் திருவதிகை (அப்பர் பெருமான்) திருப்பெருந்துறை எனும் ஆவுடையார் கோவில் (மாணிக்கவாசகப்பெருமான்) என்பன.

தெப்பத் திருவிழா
தெப்பத் திருவிழா

தெப்ப விழாவைக் காண்பவர்கள் பிறவி எனும் பெரும் சங்கிலியை அறுப்பார்கள் என்கிறது ஆன்மிகம். ஊர்தோறும் நடைபெற்று வந்த இந்த விழா இந்த ஆண்டு பக்தர்கள் யாருமின்றி சில ஆலயங்களில் எளிமையாக நடத்தப்பட உள்ளன. திருநெல்வேலி நெல்லையப்பர் கோயில், பழநி முருகன் கோயில், குற்றாலநாதர் கோயில்கள் உள்ளிட்ட பல பிரசித்தமான ஆலயங்களில் இன்று தெப்பத் திருவிழா நாள். ஊர் கூடி மகிழ்ந்து கொண்டாடும் இந்த விழா இன்று பல இடங்களில் தடை செய்யப்பட்டு இருந்தாலும், அது நம் நன்மைக்கே என்று கருதி வீட்டிலேயே வழிபடுவோம். நிச்சயம் நிலைமை மாறும். மீண்டும் உற்றார் உறவுகளோடு சிறப்பாகக் கொண்டாட பிரார்த்திப்போம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism