திருக்கதைகள்
Published:Updated:

பசிப் பிணி நீங்கட்டும்

வள்ளலார்
பிரீமியம் ஸ்டோரி
News
வள்ளலார்

வள்ளலார்

வள்ளலார் வாழ்ந்த காலம் நம் பாரத தேசம் அந்நியர் ஆட்சியில் அடிமைப்பட்டுக்கிடந்த காலம். சுதந்திரம் மட்டுமல்ல சாமானியர்கள் வாழ்வதுகூடப் பிரச்னையாக இருந்தது. 19-ம் நூற்றாண்டில் மட்டும் இந்தியா முழுவதும் ஒன்பது மாபெரும் பஞ்சங்கள் தோன்றின. உண்ண உணவின்றி மக்கள் கூட்டம் கூட்டமாகச் செத்து மடிந்தனர். இவற்றை எல்லாம் அவதானித்து வந்த வள்ளலாரின் ஆன்மிக மனம் மிகவும் வருந்தத் தொடங்கியது.

வள்ளலார்
வள்ளலார்


'வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன்' என்று வருந்தும் வள்ளல்பிரான் மக்கள் பசிப்பிணி கொண்டு சாவதைப் பொறுப்பாரா என்ன? உண்ண உணவின்றி மக்கள் சாவதை அனுமதிக்கும் ஆட்சியைக் 'கருணையிலா ஆட்சிக் கடுகி ஒழிக' என்று பாடியவர் அல்லவா...

தன் போதனைகளில் பசிப்பிணி போக்குவதை முதன்மையாக்கினார். அதையே பேரறமாகவும் உபதேசிக்கத் தொடங்கினார். நாடு முழுமையையும் ஆட்டிப் படைக்கும் பசி அரக்கன் தான் வாழும் தமிழ் நிலத்திலும் கால் பதிப்பானோ என்று அஞ்சினார். அதுவே அவரது ஆன்மிக வாழ்வின் பாதையைப் புதிதாக மாற்றியது.

'பசி தவிர்ப்பதே முக்கியம்; அன்னதானமே பிரதானம்; பழங்கஞ்சியானாலும் வழங்குவது நன்று' (திருவருட்பா. 873) என்பதைத் தன் உபதேசமாக மாற்றினார். போகும் இடமெல்லாம் அன்னதானத்தின் மகிமையை எடுத்துரைத்தார். அதன் ஒரு பகுதியாக வடலூரில் மக்களின் பசிப்பிணி தீர்க்க அன்னதானக் கூடத்தை உருவாக்கினார். பலரின் உதவியோடு அந்த அன்னதானக் கூடத்தை நடத்திவந்தார். பசி என்று வந்தவர்களுக்கு உணவிட்டு அனுப்பினார். ஆனால் அதிலும் பல சோதனைகள் வந்தன. ஒருமுறை சமையலுக்குத் தேவையான உணவுப்பொருள்கள் பற்றாக்குறையானது.

அடியவர்கள் கவலையோடு வள்ளல் பெருமானிடம் அதைக் கூறினர். வள்ளலார் கவலையோடு கேட்டுக்கொண்டு தனி அறைக்குள் சென்று சிறிது நேரம் தியானம் செய்தார். பின்பு வெளியே வந்து, 'நாளை வேண்டிய பொருள்கள் வந்துவிடும்' என்று உறுதியாகக் கூறினார்.

அடியவர்களுக்குக் குழப்பம். யார் வருவார்கள்... எப்படிப் பொருள்கள் வரும் என்று நம்பிக்கையின்றிக் காத்திருந்தனர். ஆனால் மறுநாள் ஸித்திவளாகம் தேடி வேண்டிய உணவுப்பொருள்கள் வந்து சேர்ந்தன. ஒரு நல்ல உள்ளம் அவற்றைக் கொண்டுவந்து கொடுத்தது. என்று வள்ளல்பிரான் அந்த அடுப்பை ஏற்றினாரோ அன்றிலிருந்து இன்றுவரை அந்த அடுப்பு அணையாமல் எரிந்து வருவோர் அனைவரின் பசியையும் போக்கிவருகிறது.

வள்ளலார் சுவாமிகள் 1874 -ம் ஆண்டு ஜனவரி 30-ம் தேதி தைப்பூசத் திருநாள் அன்று ஜோதியில் கலந்தார். இந்த நன்னாளில் அனைவரும் வள்ளல்பிரானின் திருவடிகளைப் போற்றி திருவருட்பா பாராயணம் செய்து நலம் பெறுவோம்.

- வி.கீதா, சென்னை-52