திருக்கதைகள்
Published:Updated:

புண்ணியம் அருளும் பூசமும் வியாழனும்!

தைப்பூச தரிசனம்
பிரீமியம் ஸ்டோரி
News
தைப்பூச தரிசனம்

தைப்பூச தரிசனம் - வலையப்பேட்டை ரா.கிருஷ்ணன்

மாதம்தோறும் வரும் பெளர்ணமித் திருநாளுக்கு ஏற்றம் தந்து சிறப்புற விழா நிகழ்த்திக் கொண்டாடுவது, நம் மதத்தின் தனிச் சிறப்பு. அவ்வகையில் தைப்பூசத் திருவிழாவும் சிறப்புப் பெறுகிறது. தை மாதம் சூரியன் மகர ராசியில் சஞ்சரிப்பதால் சக்தி வடிவமாகிய சந்திரன் பூரணக் கலையுடன் (முழு நிலாவாக) வியாழனோடு விளங்கும்போது தைப்பூசம் கொண்டாடப்பட வேண்டும் என்று கூறப்படுகிறது.

தைப்பூச தரிசனம்
தைப்பூச தரிசனம்

புஷ்ய நட்சத்திரத்தையே `பூசம்’ என்று அழைப்பர். பூசத்தின் அதிதேவதை குரு (பிரகஸ்பதி). அவரது சிறப்பு அம்சமே அவரது நாவன்மைதான். அவர் சொல்லழகு மிக்கவர். மனதில் பதிந்த எண்ணம் சொல் வடிவம் பெற்று வெளி வருகிறது. சொல்லானது எண்ணத்தைப் பிரதிபலிப்பதாக உள்ளது. ஆக அறிவு, ஆற்றல், ஞானம் இவற்றில் சிறந்த பிரகஸ்பதியை தேவர்களின் குருவாக புராணங்கள் குறிப்பிடுகின்றன.

இவருக்கும் தட்சிணாமூர்த்திக்கும் எவ்வித சம்பந்தமும் கிடையாது. தட்சிணாமூர்த்தி பகவான் சிவபெருமானின் வடிவம். அவர் லோக குரு; பிரகஸ்பதி தேவ குரு ஆவார்.

பிரகஸ்பதிக்கு மிஞ்சிய அறிவாளி இல்லை என்பது உலக வழக்கு. தர்மத்துடன் இணைந்த செயல்களைச் செய்பவர். இவரை அதி தேவதையாக உடைய பூச நட்சத்திரம், மிகவும் மென்மையானது. இயல், இசை, நாடகம், சிற்பம், மருந்து, பயணம், அணிகலன், அறுபத்துநான்கு கலைகள், உயர்கல்வி ஆகியவற்றுடன் இந்த நட்சத்திரம் பிரகாசிக்கும் தன்மையுடையது ஆகும்.

மார்கழி மாதம் தேவர்களுக்கு இரவாகிய தட்சிணாயனம் முடியும் காலம். அது முடிந்து பகல் தொடங்கும். அவ்வகையில் தை மாதம் காலை நேரமாக உள்ளது. எனவே, தை மாதம் முதல் நாளை உத்ராயனத்தின் ஆரம்ப நாள் என்பர். உத்தராயனம் தேவர்களுக்கு மட்டுமன்றி மற்ற உயிரினங்களுக்கும் புண்ணியம் தரும் காலமாகும்.

சந்திரனின் ராசி-கர்க்கடகம் (கடக ராசி) ஆகும். இதில் வியாழன் இருப்பது குரு புஷ்யம் (வியாழன் பூசம்). இந்த வேளையில் தேவர்களும் முனிவர்களும் புண்ணிய நீர் நிலைகளில் தீர்த்தம் ஆடுவார்கள்.

ஒவ்வொரு மாதத்திலும் ஒவ்வொரு நீர்த்துறையில் நீராடுதல் என்ற மரபை நம் முன்னோர் வகுத்துள்ளனர். ஐப்பசியில் ஆற்றில் நீராடுவது சிறப்பு. அவ்வகையில் மயிலாடுதுறையில் ஆண்டுதோறும் துலா ஸ்நானம் சிறப்பாக நடைபெறும். அதேபோல் கார்த்திகையில் சுனை நீராடுதலும் மார்கழியில் குளங்களில் நீராடுதலும் சிறப்பு. `மார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாளால் நீராடப் போதுமினா நேரிழையீர்’ என்று ஆண்டாள் நாச்சியாரின் திருப்பாவை பாசுரம் விவரிக்கிறது. அப்படியே தை மாதத்தில் ஆற்றில் நீராடுதலும், மாசியில் கடலில் நீராடுதலும் சிறப்பாகும்.

மேற்சொன்ன நான்கு மாதங்களும் குளிர்காலமாகும். இந்த மாதங்களில் விடியற்காலையில் நீராடுவதால், உடலில் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் என்பது உண்மை.

தைப்பூச தரிசனம்
தைப்பூச தரிசனம்
ajijchan

திருஞானசம்பந்தப் பெருமான் திருவிடைமருதூர் தேவாரத்தில் தைப்பூச விழா நீராடல் பற்றி சிறப்பாகப் பாடுகிறார். உடம்பினை வருத்தி தவத்தினை மேற்கொண்ட முனிவர்களும், வானவர்களும், மண்ணுலகத்தாரும் மற்றும் பிறரும் வந்து தைப்பூசத் திருநாளில் நீராடியும், உலக நன்மைக்காக மறையோர் வேதம் ஓதியும் விளங்கும் தலம் இடைமருதூர். இவ்வூரின் கோயிலையே கோயிலாகக் கொண்டவர் சிவபெருமான் என்கிறார் அவர்.

`வருந்திய மாதவத்தோர் வானோர் ஏனோர் வந்தீண்டிப்

பொருந்திய தைப்பூசமாடி உலகம் பொலிவெய்தத்

திருந்திய நான் மறையோர் சீரால் ஏத்த இடைமருதில்

பொருந்திய கோயிலே கோயிலாப் புக்கீரே’ - என்று பாடுகிறார் அவர்.

மற்றொரு தேவாரப் பாடலில் `பூசம் புகுந்து ஆடி பொழிந்து அழகாய ஈசன் உறைகின்ற இடை மருது ஈதோ’ என்று போற்றுவார்.

கும்பகோணம் அருகில் உள்ள திருவிடைமருதூர் மகாலிங் கேச்வரர் திருக்கோயில், பிரசித்திபெற்ற தலம். இங்கே காவிரியாற்றில் `பூசத்துறை’ என்றே நீராடல் துறை உள்ளது. தஞ்சை நாயக்க மன்னர்களின் முதலமைச்சராக விளங்கிய கோவிந்த தீட்சிதர், இங்கே ஒரு மண்டபத்தைக் கட்டியுள்ளார். இத்துடன் திருவிடைமருதூர் கோயிலில் தைப்பூச உற்சவம் - (புயோத்ஸவதிற்கு) வெள்ளி ரதம், வெள்ளி ரிஷப வாகனம் ஆகியவற்றையும் அளித்துள்ளார் என்று வரலாறு கூறுகிறது.

திருநாவுக்கரசு சுவாமிகளும் திருவிடைமருதூர்த் தேவாரத்தில் `பூசம் நாம் புகுதும் புனல் ஆடவே...’ என்று பூசநாளில் நீராடுதலின் சிறப்பைக் காட்டுகிறார்.

திருவிடைமருதூரைப் போலவே திருநெல்வேலியிலும் தாமிர பரணி ஆற்றில் பூசத்துறை உண்டு. தொண்டை நாட்டில் (உத்திர மேரூர் அருகில்) சேயாற்றின்கரையில் அமைந்த பெருநகர் எனும் தலத்தில், பட்டுவதணாம்பிகை சமேத பிரம்மபுரீச்வரர் அருள்கிறார். சோழர்காலச் சிற்பக்கலையுடன் சிறப்பாக விளங்கும் இத்திருக்கோயிலில் தைப்பூசத்தன்று பன்னிரண்டு ரிஷப வாகன சேவை விழா மிகவும் அருமையாக நடைபெறுகிறது.

திருஞானசம்பந்தர் - எலும்பைப் பெண்ணாக்கிய பூம்பாவைப் பதிகத்தில் , அக்காலத்தில் மயிலைத் தலத்தில் ஒவ்வொரு மாதமும் நடைபெற்ற திருவிழாக்களைப் பட்டியலிடுகிறார். அதில், தைப்பூசச் சிறப்பை பாடும்போது `மை அணிந்த ஒளிமிக்கக் கண்களை உடைய பண்புடை மகளிர் விளங்கும் மயிலையில், கையினால் பூசப்படும் திருநீற்று மேனியனான கபாலீச்சரத்தில் விளங்கும் சிவபெருமானுக்கும் நெய் பெய்து (நெய்யமுது) நைவேத்தியம் படைத்து, நேரிழையார் கொண்டாடும் தைப்பூச விழாவைக் காணாமல் போகக்கடவையோ பூம்பாவாய்?” என்று விவரிக்கிறார்.

தாருகாவனத்தில் சிவபெருமான் ஆனந்த நடனம் ஆடியதைக் கண்டு இன்புற்ற திருமால், அதுபற்றி ஆதிசேஷனாகிய பதஞ்சலி முனிவருக்கு விவரித்தார். அந்தத் தாண்டவத்தைத் தாமும் கண்டு களிக்க விரும்பி தவமியற்றினார் பதஞ்சலி. சிவபெருமான் மிகவும் மகிழ்ந்தார். தில்லையில் தாம் வியாக்ரபாத முனிக்கு நடனமாடிக் காட்டவுள்ளதைத் தெரிவித்து, அங்கு வந்து திருநடனத்தைத் தரிசிக்கும்படி அருள்பாலித்தார்.

அவ்வாறே பதஞ்சலி தில்லைக்குச் சென்று வியாக்ர முனிவருடன் தங்கியிருந்த காலத்தில், ஆடல்வல்லான் அவ்விருவருக்கும் திருக்கூத்து ஆடிக் காட்டினார். அவ்வாறு அவர் ஆனந்த நடனம் ஆடிய நன்னாள் தைப்பூசம்.

தை மாதத்தில் பூசமும், வியாழனும், பௌர்ணமியும், சித்த யோகமும் கூடிய நடுப்பகல் வேளையில், சிவபெருமான் திருநடனம் ஆடினார். எனவே மேற்கண்டவாறு அமையும் தைப்பூச தினம் மிகவும் உத்தமம் ஆகும் என்பார்கள்.

முருகப்பெருமான். அசுரர்களை சம்ஹாரம் செய்யப் புறப்படு முன், பார்வதி தேவி தம் சக்தியை வேல் வடிவில் அளித்து அருள் பாலித்தார். இதனை `எம் புதல்வா... வாழி வாழி எனும்படி வீறான வேல் தர’ என்று அருணகிரியார் திருச்செந்தூர் திருப்புகழில் பாடுகிறார். இவ்வாறு அம்பிகை கந்தப் பெருமானுக்கு வேல் வழங்கிய நன்னாள் தைப்பூசம் எனக் கூறப்படுகிறது. எனவே, சிவாலயங்கள் போலவே முருகப்பெருமான் திருக்கோயில்களிலும் தைப்பூசத்தன்று தேர், தீர்த்தத் தெப்பத் திருவிழாக்கள் நடைபெறுகின்றன.

தைப்பூசம் அறிவைப் பிரகாசிக்கச் செய்யும் நன்னாள் என்பதால், திருவருட்பிரகாச வள்ளலார் அன்று சித்தி விளாகத்தில் ஜோதியில் கலந்தார் என்பர். இதையொட்டி வடலூரில் ஏழு திரையை விலக்கி ஜோதிக் காட்சி நடைபெறும்.

சிவபெருமானும் முருகப்பெருமானும் வேறல்ல - இருவரும் ஒருவரே என்னும் தத்துவப்படி தைப்பூசம் - பங்குனி உத்திரம் - வைகாசி விசாகம் முதலான விசேஷ நாள்கள் முருகப்பெருமானுக்கும் உரியதாகக் கொண்டாடப்படுகிறது.

தைப்பூச விழாவையொட்டி பழநிக்குப் பாதயாத்திரை செல்வதும், காவடி எடுப்பதும் பிரசித்தமான விழாவாகும். தமிழகத்தில் மட்டுமல்லாமல் மலேசியா, சிங்கப்பூர், இலங்கை, மொரீசியஸ் போன்ற பல நாடுகளிலும் தைப்பூச விழா சிறப்பா கக் கொண்டாடப்படுகிறது. நாட்டுக்கோட்டை நகரத்தார் இந்த விழாவைப் பிரபலப்படுத்தி உலகில் உள்ள எல்லா முருகன் கோயில்களிலும் தைப்பூச விழா சிறப்பாகக் கொண்டாட வகை செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இங்ஙனம் குருவருளும் திருவருளும் சிறந்து விளங்கும் தைப்பூசத் திருநாளில் நாமும் முக்கண்ணனையும் அவர் மைந்தன் முருக வேளையும் எல்லாம்வல்ல பராசக்தியையும் வழிபட்டு வேண்டும் வரம்பெற்று மகிழ்வோம்.

தைப்பூசத்தில் வழிபாடு!

திருநெல்வேலி தலத்தில் பராசக்தி தாமிரபரணியில் நீராடி தவம் இருந்து, தைப்பூசத் திருநாளில் இறைவனின் அருள் பெற்றாளாம். ஆக தைப்பூச நாளில் அம்மையப்பரை வழிபட, தம்பதி ஒற்றுமை மேலோங்கும்; சகல மங்கலங்களும் பெருகும். அதேபோல் இந்தப் புனித நாளில் சுப காரியங்கள் செய்தால் தம்பதிகள், வாழ் வில் எல்லா வளமும் பெற்று நலமுடன் வாழ்வர் என்பது ஐதிகம்.

உத்திரமேரூர்- வந்த வாசிக்கு இடையே காஞ்சி புரத்துக்கு தெற்கே சுமார் 26 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது வானவன் மாதேவிச் சுரம் - வானசுந்தரேஸ்வரர் திருக்கோயில். ராஜேந்திர சோழன், தன் தாயின் பெயரில் இந்தத் திருக்கோயிலைக் கட்டினா னாம். இங்கு, தைப்பூச திருநாளன்று சூரியக் கடவுள் தனது ஒளிக் கதிர்களால் வானசுந்தரேஸ்வரரைத் தொட்டுத் தழுவி, பூஜிப்பது கண்கொள்ளாக் காட்சியாகும்!