
திருமலை திருப்பதிக்கு இணையான மகிமைகளோடு நம் தமிழ் நாட்டில் அமைந்த தலம் தலைமலை. நாமக்கல் மாவட்டம், எருமைப்பட்டி ஒன்றியத்தில் உள்ள வடவத்தூர் ஊராட்சியில் இருக்கிறது, தலைமலை.
இந்த மலையின் மீது சுமார் 2,700 அடி உயரத்தில் கோயில் கொண்டு அருளாட்சி நடத்துகிறார் அருள்மிகு சஞ்ஜீவிராய பெருமாள். மலையையே மாலவனாகக் கருதி பக்தர்கள் போற்றும் அற்புத க்ஷேத்திரம் இது.
திரேதா யுகம். ராம - ராவண யுத்தத்தில் இந்திரஜித்தின் அஸ்திரத் தால் மூர்ச்சையானார் லட்சுமணன். அவரின் மயக்கம் தீர்க்க, அனுமன் சஞ்ஜீவி மலையைப் பெயர்த்து எடுத்து வந்த திருக்கதையை நாமறிவோம். மூலிகையின் உதவியால் லட்சுமணன் மயக்கம் தெளிந்தார். பிறகு, மலையை இருந்த இடத்திலேயே வைத்துவிடலாம் என்று அனுமனைப் பணித்தார் ஜாம்பவான்.
அனுமன் சஞ்ஜீவி மலையை தனது வாலால் சுழற்றி வீச, இமய மலையில் எற்கெனவே இருந்த இடத்தில் போய் அமர்ந்ததாம் அந்த மலை. அவ்வாறு அது விண்ணில் பறந்து சென்றபோது, அதன் சிதறல்கள் பூமியில் 9 இடங்களில் விழுந்தன. அவற்றில் மலையின் தலைப் பகுதியாக விளங்கிய சிகரம் விழுந்து தலை மலையாகத் திகழ்கிறது என்கின்றன ஞானநூல்கள்.
இங்கே பெருமாள் சுயம்பு மூர்த்தியாய் தோன்றியவர். யம தருமனின் சனி தோஷம் நீங்கியதும் இந்தத் தலத்தில்தான். அப்போது அவர் தன் வாகனமான எருமையைக் கட்டிவைத்த இடமே தற்போது எருமைப்பட்டி என்ற ஊராக விளங்குகிறதாம். பக்தர்கள் சிரத்தையுடன் இந்த மலைக்கோயிலுக்குச் சென்று தரிசனம் செய்து வருகிறார்கள். கருப்பசாமி கோயில், காத்தாடி மேடு, முழங்கால் முடிச்சு, கன்னிமார் சுனை, அனுமன் சந்நிதி, கிருஷ்ணன் சந்நிதி என அமைகிறது தலைமலை தரிசனம். கிருஷ்ணனை வழிபட்டுவிட்டு, சஞ்ஜீவிராய பெருமாள் கோயிலை அடைகிறார்கள்.

கோயிலின் கருவறையில் இரண்டு மூலவர்கள். ஒருவர் சுயம்புவாய் உதித்த மூர்த்தி. மற்றொருவர் பூதேவி ஸ்ரீதேவி சமேதராய்ப் பிற் காலத்தில் உருவாக்கப்பட்ட மூர்த்தி. சுயம்புமூர்த்திக்கு அபிஷேகங்கள் இல்லை. மற்றவருக்கே அனைத்து அபிஷேகங்களும் நடைபெறுகின்றன. மகாலட்சுமி தாயாருக்குத் தனிச் சந்நிதி அமைந்துள்ளது. இங்கு வந்து வழிபட்டால் சகல வேண்டுதல்களும் விரைவில் பலிக்கும் என்கிறார்கள் பக்தர்கள்.
இந்தத் தலத்தின் சிறப்பம்சங்களில் ஒன்று பெளர்ணமி கிரிவலம். சுமார் 27 கி.மீ. தூரமுள்ள இந்தப் பாதை, பெருமாளுக்கான கிரிவலப் பாதைகளில் உலகிலேயே மிகப் பெரியதாம். இந்தப் பாதை அமைவ தற்குப் பெருமாள் திருவருள் புரிந்த சம்பவம், சிலிர்ப்பானது.
முதலில், மலைக்கு மேல் அமைந்துள்ள பெருமாள் சந்நிதியைச் சுற்றி சுமார் 27 அடி தூரம் வலம் வருவதையே கிரிவலமாகக் கருதி செய்து வந்துள்ளார்கள் பக்தர்கள். உயரமான இடத்தில் அமைந்த - மிகவும் குறுகிய அந்தப் பாதையில் வலம் வருவது ஆபத்து என்று அறிவித்து, அங்கே வலம் வருவதைத் தடை செய்தது தமிழக அரசு. பாதுகாப்பு கருதியே இந்த நடவடிக்கை என்பது புரிந்தாலும், பல காலமாக நடந்துவந்த வழிபாடு தடைப்பட்டு போனதே என்று பக்தர்களுக்கு ஆதங்கம்.

இந்த நிலையில் பேருந்து வசதி, குடிநீர் போன்ற அடிப்படை வசதிகளைச் செய்வதற்கான முயற்சிகளில் ஈடுபட்டிருந்தார் ஆலயத் தின் அறங்காவலர் குழுத் தலைவர் நந்தகோபன். எதிர்பார்த்தபடி அவருடைய முயற்சிக்கான பலன் கைகூடவில்லை. நிறைவில், தான் மேற்கொள்ள ஆசைப்படும் பணிகள் நடந்தேற அருள்புரியவேண்டும் என்று பெருமாளையே பிரார்த்தித்துக்கொண்டார்.
பக்தரின் வேண்டுதலைச் செவிசாய்க்காமல் போவாரா பெருமாள்? ஒருநாள் நந்தகோபனுக்குக் கனவுக் காட்சியாய் தோன்றினார். ‘மேற்குத் திசையில் இருந்து வரும் ஒருவர் அனைத்தையும் பார்த்துக் கொள்வார்’ என்று உத்தரவு அருளினாராம். நந்தகோபன் சிலிர்த்துப் போனார். விடிந்ததும் கனவு விஷயத்தை நெருங்கிய நண்பர்களுடன் பகிர்ந்துகொண்டார். அனைவரும் காத்திருந்தனர்.
ஆண்டுகள் பல கழிந்தன. 2017-ல் காவக்காரன்பட்டி வெங்கடாசலம் என்பவர் நந்தகோபனைச் சந்தித்தார். அவர் `பல காலமாக தடைப் பட்டிருந்த எருமைப்பட்டி அக்னி மாரியம்மன் கோயில் விழாவை, அன்பர் ஒருவர் எவ்வித பிரச்னையும் இல்லாமல் நடத்தி யிருக்கிறார்’ என்ற தகவலைப் பகிர்ந்துகொண்டார். விழாவை நடத்தியவர் பெயர் `அக்னி’ ராஜேஷ்; மேற்குத் திசையில் இருந்து வந்தவர் என்பதை அறிந்ததும் நந்தகோபன் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. பெருமாள் பக்தர்கள் அனைவரும் அவரைச் சென்று சந்தித்தனர். அவரும் பெருமாள் பணியில் முனைப்பு காட்டினார்.


நாமக்கல் மாவட்டம், பரமத்திவேலூர் அருகிலுள்ள பொத்தனூரில் பெரியவர் ஒருவர் உண்டு. காஞ்சி மகாபெரியவரின் ஆசியைப் பெற்றவர். அவர் தலைமலை தொடர்பான ஓலைச் சுவடிகளை ஆய்ந்து, சில தகவல்களைத் தொகுத்து வைத்திருந்தார். அந்தப் பெரிய வரிடம் அக்னி ராஜேஷை அறிமுகப்படுத்தினார் நந்தகோபன்.
அவரும் `இவரே பெருமாள் குறிப்பிட்ட அன்பர்’ என்பதை உணர்ந்து ஆசி வழங்கினார். அத்துடன், தலைமலை குறித்து தான் ஆய்ந்தறிந்ததும் கிரந்தத்தில் எழுதப்பட்டதுமான குறிப்புகள் அடங் கிய செப்புப் தகடுகளை ராஜேஷிடம் ஒப்படைத்தார். மேலும், அறங் காவலர் பொறுப்பை ஏற்று, டிரஸ்ட் மூலம் பணிகளை மேற்கொள்ளும் படி அறிவுறுத்தினார். அதன்படியே `தலைமலை சேவா டிரஸ்ட்’ தொடங்கப்பட்டது.
இது இறைவனின் கட்டளை அல்லவா? ஆகவே அடுத்தடுத்து பணிகள் சிறப்புற நடைபெற்றன. பண்டிகை நாள்களில் பக்தர்கள் சிரமமின்றி பெருமாளை தரிசித்து மகிழ்ந்தார்கள். அக்னி மாரியம்மன் கோயிலில் இருந்து வடவத்தூர் அடிவாரம் மற்றும் சிவந்திபட்டி அடிவாரம் வரையிலும் பேருந்து சேவை தொடங்கியது. தொடர்ந்து, பெருமாள் சந்நிதிக்குச் செல்லும் ஐந்து மலைப்பாதைகளையும் இணைத்து அடிவாரத்தை சுற்றி கிரிவலப் பாதை அமைக்கவும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. அதுபற்றி அக்னி ராஜேஷ் நெகிழ்ச்சியுடன் பகிர்ந்துகொண்டார்:
``கிரிவலப் பாதைக்கான ஆய்வுப்பணிகள், தலைமலை அடிவாரம் வரதராஜ புரத்தில், 2019 ஜூலை 4-ம் தேதி அன்று பூமி பூஜையுடன் தொடங் கியது. வரதராஜபுரத்தில் தொடங்கி நீலியாம்பட்டி, சிந்தம்பட்டி, மலைப்பட்டி, சஞ்சீவிபுரம், உடையாகுளம்புதூர், வடவத்தூர், காவல்காரன்பட்டி, எருமப்பட்டி, முட்டான்செட்டி வழியாக மீண்டும் வரதராஜபுரத்தில் நிறைவுறும் விதம் சுமார் 27 கி.மீ. தூரம் கிரிவலப் பாதை அமையும் என்பதை அறிந்து சிலிர்த்தோம்.
இவ்வளவு சுற்றளவு கொண்ட பாதையை - குறிப்பிட்ட பகுதிகளில் கல்லும்முல்லும் கரடுமுரடுமான நிலத்தைத் திருத்தி பாதை அமைப்பது என்பது சாதாரண விஷயம் அல்லவே. பெரும் நிதி தேவைப்பட்டது. மட்டுமன்றி நாங்கள் கணக்கிட்ட பாதை தனியார் இடம், அரசு புறம்போக்கு இடம், சமூக காட்டுப் பகுதி, காப்பு காட்டு பகுதி என பல இடங்களை உள்ளடக்கியதாக இருந்தது.


ஆரம்பத்தில் மலைக்கவே செய்தோம். ஆனால் அடுத்தடுத்த காரியங்கள் நல்லபடியாக நடந்தேறின. தனியார் வசம் இருந்த இடங்களை அவர்களே மனமுவந்து அளித்தனர். அரசு சார்பிலும் உடனுக்குடன் அனுமதி கிடைத்தது. அதனால் விரைவில் கிரிவலப் பாதை உருவானது. அனைத்தையும் அந்தப் பெருமாளே முன்னின்று நடத்தினார் என்றே சொல்வேன்’’ என்கிறார் ராஜேஷ்.
தலைமலை அடிவாரத்தில் முதல் கிரிவலம் 2019 ஆகஸ்ட் 15 அன்று நடைபெற்றது. அன்றைய தினம் பெருமாளுக்கு உகந்த திருவோண நட்சத்திரமும் பூரணச் சந்திரனும் இணைந்த நாள்; குரு வாரம் என்பது கூடுதல் சிறப்பு. முதல் கிரிவலத்தில் சுமார் 5000 பக்தர்கள் கலந்து கொண்டார்களாம். தொடர்ந்து மாதம்தோறும் பெளர்ணமி நாளில் கிரிவலம் சீரும் சிறப்புமாக நடைபெற்று வருகிறது. கிரிவலப் பாதையில் ஒவ்வொரு கிலோமீட்டருக்கும் ஒரு நட்சத்திர மரக்கன்று நடுவதற்குத் திட்டமிட்டுள்ளார்கள்.
அதேபோல் அந்தந்த நட்சத்திரத்துக்குரிய தெய்வச் சந்நிதிகளையும் அமைக்கவுள்ளார்களாம். இந்தத் தலம் யமதருமன் சனி தோஷம் நீங்கி அருள்பெற்ற இடம் அல்லவா? ஆகவே, அவருக்கும் மலையடி வாரத்தில் ஆலயம் எழுப்ப இருக்கிறார்கள். `மலை ஏற முடியாத பக்தர்களுக்காக ஹெலிகாப்டர் வசதி ஏற்படுத்துவது என்பது எங்களின் கனவுத் திட்டம்’ என்கிறார்கள் `தலைமலை சேவா டிரஸ்ட்’ அன்பர்கள். அவர்களின் கனவு நிறைவேற சஞ்சீவிராய பெருமாள் நிச்சயம் அருள்பாலிப்பார். விரைவில், தலைமலை கிரிவல யாத்திரை உலகப் பிரசித்தி பெறும் என்பதில் ஐயமில்லை.
அடுத்த கிரிவலம் வரும் டிசம்பர் 7 அன்று (கார்த்திகைப் பெளர் ணமி) நடைபெறும். அன்பர்கள் வாய்ப்பை ஏற்படுத்திக்கொண்டு தலைமலை கிரிவலத்தில் கலந்துகொள்ளுங்கள்; பெருமாள் அருளால் உங்களின் சகல பிரச்னைகளும் தீரும்; வாழ்வில் ஏற்றமும் நல்ல மாற்றமும் உண்டாகும்! (கிரிவலம் - தரிசனம் தொடர்புக்கு: 98430 59346)