Published:Updated:

வறுமையிலும் குன்றாத பக்தியை போற்றும் `தங்கமீன்’ திருவிழா! - நாகையில் இன்று கோலாகலம்

மு.இராகவன்

நாகையில், ஆண்டுதோறும் நடைபெறும் அதிபத்த நாயனார் தங்கமீனை இறைவனுக்கு அர்ப்பணிக்கும் திருவிழா இன்று நடைபெறுகிறது.

காயாரோகணசுவாமி கோயில்
காயாரோகணசுவாமி கோயில்

நாகையில், ஆண்டுதோறும் நடைபெறும் அதிபத்த நாயனார் தங்கமீனை இறைவனுக்கு அர்ப்பணிக்கும் திருவிழா, ஆவணி மாதம், ஆயில்யம் நட்சத்திர நாளான இன்று காயாரோகணசுவாமி கோயிலில் வெகு விமரிசையாக நடைபெறுகிறது.

ஸ்ரீ அதிபத்த நாயினார் ஆலயம்
ஸ்ரீ அதிபத்த நாயினார் ஆலயம்

அதிபத்தர் நாயனார் சிவத்தொண்டர்களாக வாழ்ந்த 63 நாயன்மார்களுள் ஒருவராவார். இவர், மீன்பிடிப்பதைத் தொழிலாகக் கொண்டிருந்தவர். சிவன் மீது கொண்ட ஆழ்ந்த பக்தியின் காரணமாக, தான் முதலில் பிடிக்கும் மீன்களில் சிறந்த ஒன்றை சிவபெருமானுக்கு அர்ப்பணம் செய்வதை வழக்கமாகக் கொண்டிருந்தார். ஒருசில நாள்களில், ஒற்றை மீனே பிடிபட்டாலும் அதையும் சிவபெருமானுக்கு அர்ப்பணம் செய்து விட்டு, வெறுங்கையுடன் வீடு திரும்புவார். இதனால் சில சமயம் வருமானமின்றி வறுமையில் வாடினார்.

ஒரு சமயம் சிவபெருமான், அதிபத்தரை சோதிக்க எண்ணி ரத்தினங்கள் பதிந்த தங்க மீனை வலையில் சிக்குமாறு செய்தார். ஆனால், தீவிர சிவபக்தரான அதிபத்தர், அதையும் சிவபெருமானுக்கே அர்ப்பணம் செய்தார். இவ்வாறு தான் வறுமையிலும் பசியிலும் வாடியபோதும் இறைவனுக்கு சமர்ப்பிக்கும் அளவுக்கு பக்திகொண்டவராக அதிபத்தர் விளங்கியமையால், அவரை நாயன்மார்களில் ஒருவராகப் போற்றுகிறார்கள்.

அதிபத்தர்  நாயனார்
அதிபத்தர் நாயனார்
prasanna venkatesh

ஆண்டுதோறும் அதிபத்தர் அவதரித்த ஆயில்யம் நட்சத்திரத்தன்று, தங்கமீனை இறைவனுக்கு அர்ப்பணிக்கும் நிகழ்வைப் போற்றும் வகையில், நாகப்பட்டினம் காயாரோகண சாமி கோயிலில் இத்திருவிழா நடத்தப்படுகிறது. இன்று, அதிபத்தர் உற்சவர் சிலையை ஒரு கட்டுமரத்தில் எழுந்தருளச் செய்வார்கள். கட்டுமரத்தில் உற்சவர் கடலுக்குள் மீன் பிடிக்கச் செல்கிறார். அப்போது, மீனவர்கள் தங்கமீனை வலையில் வைத்து கடலில் பிடித்ததைப்போல பாவனைகள் செய்வார்கள். இது அதிபத்தர் தங்கமீனைப் பிடித்தாகக் கொள்ளப்படும். அவ்வேளையில், சிவபெருமான் கடற்கரையில் எழுந்தருள , தங்க மீனை சிவனுக்குப் படைத்து சிறப்பு பூஜைகள் செய்வார்கள். பிறகு, சிவபெருமான் அதிபத்தருக்கு முக்தி தரும் நிகழ்வு நடைபெறும். இந்த விழாவில் ஏராளமான பக்தர்கள் குடும்பத்துடன் கலந்துகொண்டு இறையாசி பெறுவர்.