Published:Updated:

குழந்தை வரம் அருளும் கோடியம்மை; தாயின் முகத்தில் விழிக்காத முனியதம்பிரான் - சிலிர்க்க வைக்கும் கதை!

கோடியம்மை

கோடியம்மை தன் பிறந்த வீட்டுக்குச் செல்லும் போது புன்சிரிப்புடன் லேசான மனதுடன் செல்வதால் முதல் நாள் திருவிழாவில் பல்லக்கின் எடை லேசாக இருக்குமாம். ஆனால் மறுபடி திருவிழா முடிந்து வரும்போது அன்னையின் பல்லக்கு எடை கூடும் எனப் பல்லக்குத் தூக்கும் அன்பர்கள் தெரிவிக்கின்றனர்.

குழந்தை வரம் அருளும் கோடியம்மை; தாயின் முகத்தில் விழிக்காத முனியதம்பிரான் - சிலிர்க்க வைக்கும் கதை!

கோடியம்மை தன் பிறந்த வீட்டுக்குச் செல்லும் போது புன்சிரிப்புடன் லேசான மனதுடன் செல்வதால் முதல் நாள் திருவிழாவில் பல்லக்கின் எடை லேசாக இருக்குமாம். ஆனால் மறுபடி திருவிழா முடிந்து வரும்போது அன்னையின் பல்லக்கு எடை கூடும் எனப் பல்லக்குத் தூக்கும் அன்பர்கள் தெரிவிக்கின்றனர்.

Published:Updated:
கோடியம்மை
திரும்பிய திசை எங்கும் சக்தி வழிபாட்டை கொண்ட நாகை மாவட்டத்தில் உள்ள அழகிய கிராமம் தாணிக்கோட்டகம். இக்கிராமத்தில்தான் சப்த கன்னியரில் மூத்தவளாகக் குழந்தை வரம் அருளும் கோடியம்மன் அருளுகிறார்.

முற்காலத்தில் அம்மையும் அப்பனும் திருமறைக்காட்டில் அகத்தியருக்கு திருமண கோலம் காட்டிய பின்பு மேல் திசை நோக்கி புறப்பட்டதாகவும் வழியில் இருந்த இவ்வூரின் அழகு கண்டு இவ்வூரிலேயே அம்பிகை தங்கியதாகவும் சொல்லப்படுகிறது.

கோடியம்மை
கோடியம்மை

'இந்த பகுதியை சோழர்கள் ஆண்டபோது ஒரு பெண் தஞ்சாவூரில் இருந்து பிழைப்பு தேடி இவ்வூருக்கு வந்தாராம். அவர் பெயர் கோடியம்மை. அந்தப் பெண் இவ்வூரில் பகல் நேரத்தில் வயல்களில் வேலை செய்பவராகவும், இரவுகளில் ஊர் காவல்காரியாகவும் மாறினார். காலப்போக்கில் இந்தக் கிராமத்தின் வடக்குக் கரையில் வசித்த கயிலாசநாதரை மணந்து இளமுனி, வீரமுனி என்ற இரு மகன்களை பெற்று எடுக்கிறார். வீரத்திலும் கல்வியிலும் சிறந்த விளங்கிய முனிகள் தன் தாயுடன் ஊர்க்காவல் பணியில் ஈடுபட்டனர். ஒரு நாள் அப்பகுதி வழியாக வந்த கோட்டூரைச் சேர்ந்த ஒரு பெருநிலக்கிழார் கோடியம்மையின் அழகு கண்டு கவர்ந்து செல்கிறான்.

இந்தச் செய்தியை அறிந்த கோடியம்மையின் மகன்கள் இரத்தம் கொப்பளிக்க தனது சகாக்களுடன் தாயைக் காக்கச் செல்கின்றனர். இதற்காக முனிகளின் சேவகனான முன்னோடியார், முனிகளின் நண்பர்களான மாட்டுராம சுவாமி மற்றும் எமதர்மன் என அனைவரையும் அழைத்துக்கொண்டு புறப்படுகின்றனர். முதலில் கோடியம்மையைக் காப்பாற்றுகின்றனர். பின் கடத்தியவனைத் தேடுகின்றனர். இதை கண்ட தாயோ மனம் பதைத்து 'என்னைக் கடத்தியவன் மண்ணாய் போகட்டும், என் பிள்ளைகள் கொலை செய்யலாகாது' என்று கெஞ்சுகிறார். ஆனால் இதையெல்லாம் கேட்காது முனிகள் அவனைக் கொல்கின்றனர். இதை கண்ட தாய் கோபம் கொண்டு 'என் பேச்சைக் கேட்காத என் பிள்ளைகள் இனி என் முகத்தில் முழிக்கக் கூடாது!' என ஒரு சாபம் அளிக்கிறார். இதனால் இன்று வரை உற்சவ கோடியம்மன் முன்பு முனியதம்பிரான் நிற்பதில்லை, அம்மனின் சந்நிதியைக் கூட பார்ப்பது இல்லை.

கோடியம்மன்
கோடியம்மன்

கோடியம்மன் ஆலயம் வடக்கு நோக்கி உள்ளது. வாசலில் ஆஸ்தான கணபதியும், அதைத் தொடர்ந்து சிறிய அளவிலான துவார பாலகிகளும் உள்ளனர். மூலஸ்தானத்தில் சப்தகன்னிகளுடன் நடுவில் வைஷ்ணவி தேவியாக கோடியம்மன் அருள்பாலிக்கிறார். ஊர் மக்கள் சப்தகன்னிகளை ஊர் பிடாரி என்கின்றனர். கோடியம்மன் ஆலயம் அருகிலேயே கிழக்கு நோக்கிய வண்ணம் முனியதம்பிரான் ஆலயம் உள்ளது. அதில் முனியனுடன் போருக்கு உதவிய மாட்டுராமசுவாமி, முன்னடியான் மற்றும் எமதர்மராஜாவிற்கு தனி தனி சந்நிதிகள் உள்ளன. இந்த முனியதம்பிரான் ஆலயத்தில் எந்தத் தெய்வத்திற்கும் உருவ வழிபாடு கிடையாது. தலை வழிபாடு மட்டுமே.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இந்த கோடியம்மன் ஆலயத்தில் பங்குனித் திருவிழா 15 நாள்கள் நடைபெறுகின்றது. இதில் முதல் இரண்டு நாள் திருவிழா கோடியம்மனுக்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. இதில் முதல் நாள் திருவிழா பகலில் அம்மனுக்கு மாவிளக்கு போடுதல், துள்ளுமாவு இடித்து வைத்தல், முடி இறக்குதல், காவடி எடுப்பது என நிகழ்வுகள் நடைபெறும். இரவு நேரத்தில் வாணவேடிக்கை நடைபெறுகிறது. இதில் என்ன விசேஷம் என்றால் கோயிலுக்கு வரும் அனைவருமே வாணவெடிகளை வாங்கிக் கொடுக்கின்றனர். இதை இங்கு ஒரு பிரார்த்தனையாகவே வைத்துள்ளனர். இதன்பின் இரவு 12 மணிக்கு மேல் முனியதம்பிரானுக்கு மோதகம் அவித்து பொங்கல் வைத்து காலை 4 மணிக்கு பல்லையம் என்ற படையலை இடுகின்றனர். இதன் பின் இரண்டாம் நாள் திருவிழாவில் கலைநிகழ்ச்சிகளும் அம்மன் தேரோட்டமும் நடைபெறும்.

முனியதம்பிரான், மாட்டுராமசுவாமி, எமதர்மராஜா
முனியதம்பிரான், மாட்டுராமசுவாமி, எமதர்மராஜா

மூன்றாம் நாள் முனியனுக்கான திருவிழா. அதில் பானகம் தயாரித்து முனியனுக்கு வழிபாடுகள் செய்கின்றனர். இத்திருவிழாவில் குழந்தை செல்வம் இல்லாதவர்கள் விழாவில் கட்டப்படும் வாழைத் தார் வாழைப் பழங்களுடன் கோயிலில் கொடுக்கும் விபூதியையும் பெற்றுச் சென்று உட்கொள்கின்றனர். இதனால் பிள்ளை வரம் கிடைக்கும் என்பது நம்பிக்கை. வேண்டுதல் நிறைவேறினால் புதிய வாழைத் தார்களை கோயிலில் கட்டி மக்களுக்கு விநியோகிக்கின்றனர். தொழிலில் வெற்றி பெற குதிரைச் சிலை வேண்டி எடுக்கிறார்கள். இங்குள்ள வேளாண் பெருங்குடி மக்கள் மற்றும் குடியானவர்கள் விளைந்த நெல்லில் ஒரு மரக்கால் கலனில் எடுத்து வைத்து கோடியம்மனுக்குக் காணிக்கையாக செலுத்துகின்றனர்.

இவ்வாலயத்தின் அதிஅற்புதம் என்னவெனில் இங்குள்ள உற்சவ கோடியம்மன், திருவிழா தொடங்கும் முன் இக்கிராமத்தின் வடக்குக் கரையில் உள்ள கயிலாசநாதர் ஆலயத்திலிருந்து புறப்படுவார். இது அம்மன், கோயிலின் படிதாண்டும் நிகழ்வாக நடைபெறும். அதேபோல் திருவிழா முடிந்த பின் இதே கோயிலுக்கு வந்து படியேறும் நிகழ்வும் நடைபெறுகிறது. கயிலாசநாதர் ஆலயம் என்பது கோடியம்மையின் புகுந்து வீடாகவும், கோடியம்மை கோயில் அம்மனின் பிறந்த வீடாகவும் கருதப்படுகிறது. இதனால் தன் பிறந்த வீட்டுக்குச் செல்லும் போது புன்சிரிப்புடன் லேசான மனதுடன் செல்வதால் முதல் நாள் திருவிழாவில் பல்லக்கின் எடை லேசாக இருக்குமாம். ஆனால் மறுபடி திருவிழா முடிந்து வரும்போது அன்னையின் பல்லக்கு எடை கூடும் எனப் பல்லக்குத் தூக்கும் அன்பர்கள் தெரிவிக்கின்றனர்.

கோடியம்மன் திருவிழா
கோடியம்மன் திருவிழா

வேண்டுவோருக்கு வேண்டும் வரம் அருளும் தாணிக்கோட்டகம் கோடியம்மன் ஆலயத்துக்கு திருவாரூர் ரயில் நிலையத்தில் இருந்து திருத்துறைப்பூண்டி - வேதாரண்யம் சாலையில் 31 கி.மீ. தொலைவில் இருக்கும் நைனான் குளம் பேருந்து நிலையத்தில் இறங்கிச் செல்லலாம்.