தேய்பிறை அஷ்டமி நாளில்தான் அஷ்ட லட்சுமி யரும் பைரவரை வழிபட்டு தங்களுக்குத் தேவையான அனைத்து செல்வங்களையும் சக்தி களையும் பெற்றார்கள் என்பது புராணம் சொல்லும் தகவல்.

இதனால் தேய்பிறை அஷ்டமி நாளில் பைரவரை வணங்குவது நம் தொன்றுதொட்ட வழக்கமாய் உள்ளது.
கடந்த மார்ச் 25-ம் தேதி பங்குனி தேய்பிறை அஷ்டமி நாள் மிக மிக விசேஷமான நாள். அன்று தஞ்சை - திருவையாறு சாலையில் வைரவன்கோவில் என்ற ஊரில் இருக்கும் காலபைரவர் கோயிலில், வாசகர்கள் நலன் வேண்டி மூன்று `பைரவர் மஹா ஹோமங்கள்' சிறப்புற நடைபெற்றன.
காசி நகரின் காவல் தெய்வமாக விளங்குபவர் கால பைரவர். சிவாலயங்களில் வடகிழக்கு மூலையில் சந்நிதி கொண்டிருக்கும் கால பைரவர், வறுமை நிலை ஏற்படாமல் நம்மைப் பாதுகாப்பவர். காசிக்குப் பிறகு காலபைரவர் அதேநிலையில் அதே சாந்நியத்துடன் வீற்றிருக் கும் திருத்தலம் வைரவன் கோவில் என்கிறார்கள். இங்கும் மயானத்துக்கு எதிரே வீற்றிருக்கிறார் காலபைரவர்.


பிராணவத்துக்கு பொருள் கேட்க முருகப் பெருமானைத் தேடி சுவாமிமலைக்கு வந்த ஈசனுடன் அனைத்து தேவர்களும் வந்தனர். இவர்களில் பைரவர் ஈசனின் ஆணைப்படி அமர்ந்த இடமே வைரவன் கோயில். காவிரியின் வடகரையில் தென்முகமாக அமர்ந்து சகலரின் காலக் கணக்கையும் கணித்து அருள் செய்து வருகிறார் இந்த பைரவர். இங்கு பைரவரை பிரதிஷ்டை செய்து ஈசன் தங்கிய இடம் ஈசன் குடி எனும் ஊர். அதுவே ஈச்சங்குடியானதாம். இது மகாபெரியவாவின் தாயார் பிறந்த தலம் எனப்படுகிறது.
அதேபோல் தேவர்கள் நின்று வழிபட்ட இடம் தேவன்குடியானது. கணபதி பூஜித்த இடம் கணபதிஅக்ரஹாரம் ஆனது. தேவி உமையாள்புரத்திலும், நந்தி, நந்திமதகிலும், கங்கை கங்காபுரத்திலும் நின்று பைரவரை வழிபட்டார்கள் என்கிறது தலபுராணம்.
இவ்வளவு பெருமைகளும் சிறப்புகளும் கொண்ட வைரவன்கோவில் காலபைரவர் கோயிலில் இரவு ஏழு மணிக்குத் தொடங்கி சொர்ணாகர்ஷண பைரவர் ஹோமம், நவ பைரவர் ஹோமம், பைரவ காயத்ரி ஹோமம் என மூன்று சிறப்பு ஹோமங்கள் நடைபெற்றன. இந்த நிகழ்வில் முன்பதிவு செய்துகொண்ட வாசகர்களின் பிரார்த்தனைகள் பெயர், நட்சத்திரத்துடன் சங்கல்பம் செய்யப்பட்டு பிரார்த்தனை நடந்தது. மேலும் திருமுறைகள் பாராயணம், சங்காபிஷேகம், சிறப்பு அபிஷேக ஆராதனைகளும், பிரசாத விநியோகமும் நடைபெற்றன. பெரும் திரளான பக்தர்களும் ஊர் பொதுமக்களும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

தஞ்சை, திருவையாறு - கும்பகோணம் சாலையில் உள்ள இந்தக் கோயில் அளவில் சிறியதெனினும் மிகப் பழைமையானது. இடநெருக்கடி மற்றும் போக்குவரத்து நெரிசல் பக்தர்கள் வழிபாட்டுக்குச் சிரமம் அளிக்கின்றன. நாளுக்கு நாள் பெருகி வரும் கூட்டத்தால் பைரவருக்கு நடைபெறும் வழிபாடுகளை பக்தர்கள் சாலையில் நின்று தரிசிக்கும் நிலை.
இதனால் கோயில் நிர்வாகிகளும் ஊர் பொது மக்களும் இந்த ஆலயத்தின் பின்புறமே இடம் வாங்கி பெரும் ஆலயம் ஒன்றை கட்டி வருகிறார்கள். இந்த திருப்பணி நிதிப்பற்றாக்குறையால் தடைப்பட்டுள்ளது. சிவபக்தர்களும் அடியார்களும் பங்களித்தால், பைரவர் ஆலயம் பிரமாண்டமாக எழும்பும். நாமும் நம்மால் இயன்ற பங்களிப்பை இந்த ஆலயத் திருப்பணிக்கு வழங்குவோம். காலபைரவருக்கு அள்ளிக் கொடுத்தால், உங்கள் காலமும் சிறப்பாகவும் செழிப்பாகவும் இருக்கும் என்பது உறுதி!
வங்கிக்கணக்கு விவரம்:
Shrikhalabhairaver Vairavan Koil Annadhanaseva Trust
Indian Overseas Bank
Current Account - 179602000000112
IFSC No - IOBA0001796
MICR - 613020005
தொடர்புக்கு - 86101 88960
நெடுங்குணம் ராம தரிசனம்!
திருவண்ணாமலையில் இருந்து சுமார் 45 கி.மீ. தொலைவில் உள்ள நெடுங்குணம் என்ற திருத்தலத்தில் யோக ராமரைத் தரிசிக்கலாம். ஆரணி மற்றும் வந்தவாசியிலிருந்து சுமார் 25 கி.மீ. தொலைவில் உள்ளது நெடுங்குணம்.
இங்கே சுகபிரம்ம மகரிஷி ராமனுக்கு அரிய சுவடிகளை அளித்தாராம். அந்தச் சுவடிகளைப் பெற்ற அனுமன் அதிலுள்ளவற்றைப் படிக்க, அதற்கு ஞான விளக்கம் தரும் கோலத்தில் ராமபிரான் அருள்கிறார்.
பத்மாசனத்தில் அமர்ந்து ஞானம் உபதேசிக்கும் ராமனின் அருட்கோலம், காண்பதற்கரிய தரிசனம். சுவடியுடன் அமர்ந்திருக்கும் அனுமனும் கொள்ளை அழகு! இங்கு அருளும் தாயாரின் திருநாமம் செங்கமலவல்லித் தாயார். இங்கு வந்து, யோக ராமரைத் தரிசித்தால், ஞானம் கைகூடும்; இல்லறம் செழிக்கும் என்பது ஐதீகம்!