Published:Updated:

சரஸ்வதி பூஜை... வழிபட உகந்த நேரம் எது? வழிமுறைகள் என்னென்ன?

சரஸ்வதி பூஜை
சரஸ்வதி பூஜை

`பராசக்தியே வெவ்வேறு வேஷங்களைப் போட்டுக்கொண்டு வெவ்வேறு காரியங்களைச் செய்கிறாள். துர்கையாக இருக்கும்போது வீரம், சக்தி எல்லாம் தருகிறாள்; மகா லட்சுமியாகி சம்பத்துக்களையும், சரஸ்வதியாகி ஞானச் செல்வத்தையும் அளிக்கிறாள்’ என்பது மகான்கள் அருள்வாக்கு.

காஞ்சி மகாபெரியவர், தன்னை வணங்கும் பக்தர்களுக்கெல்லாம் அடிக்கடி சொல்லும் வார்த்தை: "என்னை நமஸ்காரம் பண்றதைவிட, அம்பாள் அங்கே இருக்கா! அங்கே போய் காமாக்ஷியை நமஸ்காரம் பண்ணிக்கோ. க்ஷேமமா இருப்பே. எனக்கு முக்கியம் அம்பாள்’’ என்பார்.

அந்த அம்பாளுக்கு உகந்த நவராத்திரி காலம் இது. இந்தக் காலத்தில் பராசக்தியான துர்காபரமேஸ்வரியையும், மகா லட்சுமியையும், சரஸ்வதிதேவியையும் பூஜிக்கிறோம். மூன்று மூர்த்திகளாகச் சொன்னாலும் முப்பது முக்கோடி மூர்த்திகளாகச் சொன்னாலும் அத்தனையாகவும் இருப்பது ஒரே பராசக்திதான்.

இந்த உண்மையையே... லலிதா சகஸ்ரநாமம், ‘அவளே ஸ்ருஷ்டிகர்த்ரீ, அவளே கோப்த்ரீ, அவளே ஸம்ஹாரிணீ’ என்கிறது. அதாவது... சிருஷ்டி செய்பவளும் அவளே, பரிபாலனம் செய்வதும் அவளே, சம்ஹாரம் செய்பவளும் அவளே என்று விளக்குகிறது.

சரஸ்வதி தேவி
சரஸ்வதி தேவி

`பராசக்தியே வெவ்வேறு வேஷங்களைப் போட்டுக்கொண்டு வெவ்வேறு காரியங்களைச் செய்கிறாள். துர்கையாக இருக்கும்போது வீரம், சக்தி எல்லாம் தருகிறாள்; மகா லட்சுமியாகி சம்பத்துக்களையும், சரஸ்வதியாகி ஞானச் செல்வத்தையும் அளிக்கிறாள்’ என்பது மகான்கள் அருள்வாக்கு.

ஆக, ஆதிசக்தியே கலைமகளாகவும் அருள்கிறாள். அவளை வழிபடவேண்டிய அற்புதமான திருநாளையே, நவராத்திரியில் 9-ம் நாளான மகாநவமி தினத்தில் சரஸ்வதி பூஜையாகக் கொண்டாடுகிறோம். இந்த நன்னாளில் அன்னை கலைவாணியை முறைப்படி பூஜித்து வழிபட அனைத்து நன்மைகளும் உண்டாகும்.

வீட்டில் சரஸ்வதி பூஜை செய்வது எப்படி?

நவராத்திரி காலத்தில் மகா நவமித் திருநாளான ஒன்பதாம் நாளை மகா சரஸ்வதி பூஜையாகக் கொண்டாடுகிறோம். இந்தத் தினத்தில் முறைப்படி சரஸ்வதிதேவியை வழிபட்டால், அனைத்து கலைகளிலும் சிறந்து விளங்கலாம். பிள்ளைகளுக்கு உரிய துதிப்பாடல்களைச் சொல்லிக்கொடுத்து படிக்கச் செய்து வழிபட்டால், அவர்கள் கல்வி-கேள்விகளில் சிறந்த முறையில் தேர்ச்சி பெறுவார்கள்.

இந்தப் புண்ணிய தினத்தில் அன்னை சரஸ்வதியை விரிவான முறையில் பூஜை செய்யும் முறை உண்டு. அதாவது முறைப்படி பூஜை அறையில், தோரண மேடை அமைத்து அதில் கலசம் வைத்து, அதில் அன்னையை எழுந்தருளச் செய்து, வேத விற்பன்னர்களின் வழிகாட்டலுடன் வழிபடுவார்கள். இது விரிவான வழிபாட்டு முறையாகும். எளிய முறையில் அன்னையை வழிபட உகந்த நியதிகளைத் தெரிந்துகொள்வோம்.

சரஸ்வதி பூஜைக்கு முதல்நாளே (அதாவது இன்று) பூஜை அறையைக் கழுவி சுத்தம் செய்து வண்ணக் கோலங்கள் இட்டு அலங்கரிக்க வேண்டும்.

பூஜை அறையில் எளிய முறையில் மேடை அமைக்கலாம். சிலர், பாடப் புத்தகங்களை அடுக்கி மேடையாக அமைப்பார்கள். மூன்று அல்லது ஐந்து அடுக்குகள் அமையும் வண்ணம் புத்தகங்களால் மேடை அமைப்பது வழக்கம். புத்தகங்களை அடுக்கி அதன் மீது வெண்பட்டு விரித்து அலங்கரிப்பார்கள்.

இனி, பூஜை மேடையைச் சுற்றிலும் நான்கு மூலைகளிலும் 16 முழம் உயரத்துடன் தூண்கள் நட்டு, தோரணங்களால் அலங்கரிக்க வேண்டும். தூண்களில் அம்பாள் உருவம் உள்ள சிவப்புக் கொடி கட்டுவது சிறப்பு. பூஜை இடத்தில் மையமாக சரஸ்வதிதேவி படத்தை வைத்து பூஜைக்குத் தயாராக வேண்டும்.

சரஸ்வதி பூஜை அன்று அதிகாலையில் எழுந்து நீராடி, அன்னை சரஸ்வதி தேவி படத்துக்குச் சந்தனக் குங்குமத் திலகமிட்டு, பூக்கள் சூட்டி அலங்கரிக்கலாம். அருகிலேயே பூஜைக்கான கலசம் வைத்து அதில் ஏலக்காய் முதலான வாசனைத் திரவியங்களைப் போட்டு (தங்க ஆபரணங்கள் முத்துக்கள் போன்றவற்றைப் போடுவதும் உண்டு), கலசத்தில் வாயில் மாவிலை தேங்காய் வைத்து வணங்கி, பூஜையைத் தொடங்க வேண்டும்.

மகாநவமி திருநாளான இந்தத் தினத்தில் பிள்ளைகளின் பாடப் புத்தகங்களையும், நம்முடைய அன்றாடப் பணிக்குத் தேவைப்படும் பொருள்களையும் அன்னையின் திருமுன் வைத்து வழிபடலாம்.

முதலில் `கணபதி குணநிதி வேண்டும் வரம் தரும் அருள்நிதி போற்றி’ என்று கூறி, முழுமுதற் தெய்வமாம் விநாயகரைத் தொழுது, நாம் மேற்கொள்ளப் போகும் சரஸ்வதிதேவிக்கான பூஜை எவ்விதத் தடங்கலுமின்றி நிறைவேற அருள்செய்ய வேண்டும் என்று பிரார்த்திக்கவேண்டும்.

பின்னர் சரஸ்வதிதேவியை மனத்தில் தியானித்து, `தாயே என் பூஜையை ஏற்று, அறியாமால் ஏதேனும் பிழை நேர்ந்தால் பொறுத்து, பூரண அருளை வழங்க வேண்டும்’ என்று மனதார வேண்டிச் சங்கல்பித்துக்கொண்டு, உரிய துதிப்பாடல்களைப் பாடி, வணங்க வேண்டும். குமரகுருபரர் அருளிய சகலகலா வல்லிமாலை முதலான துதிப்பாடல்களைக் குடும்பத்துடன் சேர்ந்து பாடுவது விசேஷம்.

பின்னர் முறைப்படி தூப, தீப ஆராதனைகளைச் செய்யவேண்டும். நைவேத்தியமாக பழரசம், இளநீர், மாதுளை, வாழை, மா, பலா முதலானவற்றையும், சித்ரான்னங்கள் ஆகியவற்றைப் படைத்து வழிபடவேண்டும்.

பூஜைக்குப் பின் ஏழைகளுக்குப் சித்ரான்னப் பிரசாதங்களை வழங்கி அவர்கள் உண்டபின்னர், நாமும் பிரசாதம் ஏற்கலாம். சரஸ்வதி பூஜை அன்று ஏடு அடுக்கும் நாம், மறுநாள் விஜயதசமி தினத்தில் உரிய நேரத்தில், சரஸ்வதிதேவிக்கு கற்கண்டு கலந்த பால் நைவேத்தியம் செய்து ஏடு பிரிக்கவேண்டும்.

விஜயதசமி தினத்தில் அன்னையை வணங்கி வழிபட்டு, எதிர்காலத் திட்டமிடலுடன் நீங்கள் தொடங்கவுள்ள நற்காரியங்களை, வீட்டின் சுபகாரியங்களைத் தொடங்கினால், அந்தக் காரியங்களில் வெற்றி கிடைக்கும்.

சரஸ்வதி பூஜை செய்ய உகந்த நேரம்

இந்த வருடம், அக்டோபர் 25 ஞாயிறன்று அதாவது நாளைய தினம் (ஐப்பசி-9) சரஸ்வதி பூஜை. நாளை காலை 7:31 மணி முதல் 9 மணிக்குள் ஏடு அடுக்கி, சரஸ்வதிதேவியை பூஜித்து வழிபடுவது உத்தமம்.

சரஸ்வதி பூஜை
சரஸ்வதி பூஜை

ஏடு பிரிக்கும் நேரம்: அக்டோபர் 26-ஆம் தேதி, திங்களன்று (ஐப்பசி- 10) விஜயதசமி. அன்றைய தினம், காலை 6 மணி முதல் 7:30 மணிக்குள் அன்னையை வழிபட்டு, ஏடு பிரிக்கலாம். விஜய தசமிக்கு மறுநாள் கொலுவை எடுத்து வைப்பது வழக்கம்.

அடுத்த கட்டுரைக்கு