`ஒரு நாள் பூரா சோறு தண்ணிகூட இல்லாம இருந்துடுவேன். பேசாம இருன்னு மட்டும் சொல்லிடாதீங்க’ என்பார்கள் சிலர். பேச்சு என்பது ஒரு கலை. சரி, அது இருக்கட்டும். மௌனம் என்பது..? அது வரம்.

நம்மூரில் பலரும் மௌன விரதம் இருப்பதைப் பார்த்திருப்போம். அவர்களில் பலர், வாய்விட்டுப் பேச மாட்டார்களேயொழிய, பேப்பரிலோ, ஸ்லேட்டிலோ தாங்கள் நினைப்பதை எழுதிக் காட்டிக்கொண்டிருப்பார்கள்.
அவர்கள் உள்ளுக்குள் பேசிக்கொண்டிக்கிறார்கள் என்றுதான் அர்த்தம். உண்மையான மௌன விரதம் என்பது மனமற்று, செயலற்று, சிந்தையற்று, சொல்லற்று சும்மா இருப்பது. மௌனத்தின் மூலம்தான் இறைவனுடன் உரையாட முடியும். அதைவிடச் சிறந்த மொழி உலகில் வேறு இருக்க முடியாது.
காந்தியடிகள் தன் அகிம்சைப் போராட்டத்தின் மூன்று வடிவங்களாக வைத்திருந்தவை சத்தியம், உண்ணாவிரதம், மௌன விரதம். அவர் வாரத்துக்கு ஒரு முறை மௌன விரதம் இருப்பார். காஞ்சி பரமாச்சார்யார், அரவிந்த அன்னை, சுத்தானந்த பாரதியார், எழுத்தாளர் லா.ச.ராமாமிர்தம்... எனப் பல பெரியவர்கள் மௌன விரதத்தைக் கடைப்பிடித்திருக் கிறார்கள்.
தட்சிணாமூர்த்தியை `மௌனகுரு’ என்றுதான் சொல்வார்கள். தியானத்தின் அடிப்படை மௌனம். வீட்டில் மனைவியோடு சண்டை போடுகிறோம். கோபத்தில் அவர் ஒரு நாள் முழுக்க பேசாமல் இருக்கிறார். அதைவிடப் பெரிய தண்டனை நமக்கு வேறு இருக்க முடியாது.
பகவான் ரமணரிடம் வரும் பல பக்தர்கள், தங்கள் கஷ்டங்களையெல்லாம் கொட்டித் தீர்க்கும்போது, அவரின் பதில் மௌனமாகவே இருக்கும். ``அவர் பேசவே வேண்டாம். தன் அருள் நிறைந்த காந்த விழியால் அவர் ஒரு பார்வை பார்த்தாலே போதும். பிரச்னைகளெல்லாம் பஞ்சாகப் பறந்துவிடும்’’ என்பார்கள் அவரை நேரில் சந்தித்த அன்பர்கள்.
கந்தர் அநுபூதியில் அருணகிரிநாத சுவாமிகள்,
`ஆசா நிகளம் துகளாகியபின் பேசா அனுபூதி பிறந்ததுவே’ என்கிறார். அதாவது, `ஆசையாகிய விலங்கு தூள் தூளாகப் பொடிப் பொடியாக ஆனதன் பிறகு, மௌனநிலையுடன்கூடிய அனுபூதிநிலை எனக்குக் கிடைத்தது’ என்கிறார். மௌனத்தின் மகத்துவம் அப்படி!
அரையாண்டு பரீட்சை. பேப்பரை எடுத்துக்கொண்டு வந்த ஆசிரியர் ஒரு மாணவனை அழைத்தார்.
``ஏம்ப்பா... பரீட்சை பேப்பர்ல ஒண்ணுமே எழுதாம பிளாங்க்கா விட்டிருக்கே..?’’
``சில நேரங்கள்ல மௌனம்தான் சார் சிறந்த பதிலா இருக்க முடியும். சரிதானே சார்?’’ என்றான் அந்த மாணவன்