Published:Updated:

செருப்புக்காலே கிரீடம்... எச்சில் நீரே கங்கை ஜலம்... ஆதிசங்கரர் போற்றும் கண்ணப்பநாயனார் குருபூஜை!

காளஹஸ்தி
காளஹஸ்தி

செருப்பு கால் உனக்கு கூர்ச்சம் போலானது. (அதாவது கிரீடம் போலானது). எச்சில் ஜலம் கங்கையை விட புனிதமானதாக ஆனது. சுவைத்த எச்சில் மாமிசம் சிரேஷ்டமான பிரசாதமாக ஆனது. உண்மையான பக்தி இருந்தால் எதைத்தான் சாதிக்க முடியாது?

மகாபாரதத்தில் பஞ்ச பாண்டவர்கள் 12 வருடங்கள் வனவாசம் மேற்கொண்ட பொழுது, வியாச பகவான் அர்ஜுனனிடம், சிவபெருமானைத் துதித்து, பாசுபதம் பெற்று வரும்படி ஆக்ஞை விடுத்தார். அதன்படி அர்ஜுனன், கயிலை மலையில், பாசுபதாஸ்திரம் வேண்டி சிவபெருமானைக் குறித்துத் தவம் இருந்தபோது, சிவபெருமான் அர்ஜுனனிடம் விளையாட விரும்பினார். ஒரு வேடன் ரூபத்தில் வந்தார். ஒரு காட்டுப் பன்றியின் பொருட்டு சிவபெருமானுக்கும் அர்ஜுனனுக்கும் மோதல் ஏற்பட்டது. அர்ஜுனன் தோற்கும் தறுவாயில் சிவபெருமானை வில்லால் அடித்தான். அப்போது சிவபெருமான் தான் யார் என்பதை வெளிப்படுத்தி, "என்ன வரம் வேண்டும்?" என்று கேட்க "உங்களிடம் வரம் பெற்றுச்செல்லத் துதித்து நின்ற நான், உங்களையே தாக்கத் துணிந்துவிட்டேன். மன்னியுங்கள். உங்கள் பால் முப்பொழுதும் அன்பு செய்யும் மனம் மட்டும் இருந்தால் போதும்" என்று வேண்டி நின்றான் அர்ஜுனன். சிவபெருமானும் மனம் மகிழ்ந்து பாசுபதாஸ்திரத்தை அளித்து, "அடுத்த பிறவியில் காளத்தியில், என்னை வந்து அடைவாயாக" என்று அருளாசியும் செய்தார் என்கிறது காளத்தி புராணம்.

கண்ணப்ப நாயனார்
கண்ணப்ப நாயனார்

காளத்தி மலைக்கு வடக்கே அமைந்த பொத்தப்பி நாட்டின் தலைநகரம் உடுப்பூர். அந்நகரத்தில் வேடுவ அரசனாக இருந்த நாகனுக்கும், தத்தைக்கும், முருகப் பெருமானின் அருளால் பிறந்தவன்தான் திண்ணன். ஆறு வயது முதலே வில், வாள் பயிற்சிகளைக் கற்றறிந்தான். வயோதிகத்தின் காரணமாக நாகன், பதினாறு வயது நிரம்பிய திண்ணனுக்கு, வேடுவ அரசனாக முடி சூட்டினான்.

முதல்நாள், திண்ணன், தன் சக தோழர்களான நாணன், காடன் ஆகியோரோடு வேட்டைக்குச் சென்றான். கண்ணில்பட்ட காட்டுப்பன்றியைத் துரத்தி சென்றபோது, அது ஓர் இடத்திலேயே நின்றுவிட்டது. "திராணியற்று நிற்கும் ஒரு பிராணியை தூரத்தில் நின்று வேட்டையாடுவது வேடனுக்கு அழகல்ல, தர்மமும் அல்ல" என்று கூறி, தன் இடையிலிருந்த வாளை உருவி நேருக்குநேர் பன்றியுடன் சண்டையிட்டு அதை மாய்த்தான். வேட்டையாடுவதில் தீவிரமாக இருந்ததால், தான் இருந்த மலையை விட்டு, வெகு தூரம் வந்திருப்பதை அப்போதுதான் உணர்ந்தான்.

வெகுநேரம் துரத்தி வந்த களைப்பினால் தாகம் மேலிட, நாணனின் வழிகாட்டுதலின்படி, மலை அடிவாரத்தில் பொன்முகலி ஆற்றில் நீர் அருந்த மூவருமே திரும்பினார்கள். முதல்நாள் வேட்டைக்கு வெளியே வந்த திண்ணனுக்கு புது இடமாக இருந்ததால் ஒன்றும் புரியவில்லை.

நாணன் மூலம், அம்மலையின் மேல் குடுமித்தேவர் என்னும் பெயருடைய ஒரு சாமி இருப்பதாகவும், யாரோ ஓர் அந்தணர் தினமும் அந்த சாமிக்குத் தண்ணியை ஊற்றி, பூவைப் போட்டு, வெறும் சோற்றை மட்டும் அவர் முன்னால் காட்டிவிட்டுப் போவதாகவும் அறிந்து கொண்டான். அவனுக்கு ஏனோ அந்த சாமியைப் பார்க்க வேண்டும் என்ற எண்ணம் மனதில் எழுந்தது. திரும்பி வந்து உண்ணுவதற்குத் தோதாக, காடனிடம், பன்றியைப் பக்குவமாகச் சுட்டு வைக்கும்படிச் சொல்லிவிட்டு, நாணனுடன் வேகமாக மலை ஏறத் தொடங்கினான்.

குடுமித் தேவரைப் பார்த்தவுடன் அவன் மனதில், சொல்லொண்ணா பாசம் பொங்கி எழுந்தது. "ஐயோ குடுமித் தேவரே இப்படி அடர்ந்த காட்டில் தனியாக இருக்கிறாயே. என்ன செய்வேன்? உனக்கு ஆகாரம் நல்லபடியாக வருகிறதா இல்லையா தெரியவில்லையே. காட்டு மிருகங்கள் உன்னை துன்புறுத்தி விடுமே" என்று பதற ஆரம்பித்தான்.

காளகஸ்தி
காளகஸ்தி

நாணன் ஊர் திரும்புவதற்காகக் கூப்பிட்ட சொற்களோ, தன் குலத்தொழிலோ, தந்தை தாய் ஞாபகமோ எதுவுமே அவனுக்கு மனதில் இல்லை. அவன் மனம் முழுவதும் முக்கண்ணனே நிறைந்திருந்தார்.

ஒரு குழந்தை பசித்து இருந்தால் எப்படி ஒரு தாயின் மனம் கவலைப்படுமோ அதுபோல் கவலைப்படத் தொடங்கினான். '"உனக்குப் பசிக்குமே, சாப்பிட ஏதாவது கொண்டு வருகிறேன். தினமும் வெறும் சோற்றை சாப்பிடுகிறாயாமே. உனக்குப் பக்குவமாகச் சாப்பிட கொண்டு வருகிறேன். நீ கவலைப்படாதே. இங்கேயே பத்திரமாக இரு" என்று கூறிவிட்டு, மலை அடிவாரத்தில் இருக்கும் ஆற்றுக்கு ஓடினான். நாணன் கூறியது நினைவிற்கு வந்தது. குடுமித் தேவருக்கு மேல் தண்ணீர் கொட்ட வேண்டும். பூக்கள் போட வேண்டும். சாப்பாடு காட்டவேண்டும்.

வாயில் ஆற்றுநீரை நிரப்பிக் கொண்டான். கண்ணில் கண்ட பூக்களைத் தன் தலையில் செருகிக் கொண்டான். காடன் சுட்டு வைத்திருந்த பன்றிக் கறியை எடுத்துக் கொண்டான். குடுமித் தேவருக்குப் படைக்கும் பொருட்டு மீண்டும் மலை ஏறினான்.

அப்பொழுதுதான் அந்தனர் சிவலிங்கத்திற்கு பூஜை செய்துவிட்டுப் போயிருந்ததால் லிங்கத் திருமேனி முழுவதும் பூக்கள் இருந்தன. அந்தணர் குடுமித்தேவரை எப்படி ஆராதித்தாரோ அதற்குச் சற்றும் குறைவில்லாமல் தன் ஆராதனை இருக்க வேண்டும் என்பதனால், செருப்புக் காலால் அப்பூக்களை அகற்றினான். வாயில் நிரப்பி வந்த நீரை லிங்கத்தின் மேல் உமிழ்ந்தான். தலையில் செருகிய பூவை, லிங்கத்தின் மேல் போட்டான். பக்குவமாகச் சுட்டுக் கொண்டு வந்த பன்றிக் கறியை குடுமித் தேவருக்குச் சமர்ப்பித்தான். குழந்தைக்கு எப்படி தாய் கொஞ்சி கெஞ்சி ஊட்டுவாளோ அதுபோல் குடுமித் தேவருக்கு உபசாரம் செய்தான்.

எவ்வளவோ அழைத்தும் வராத திண்ணனின் நிலைமையைக் கண்ட அவன் நண்பர்கள், திண்ணனின் பெற்றோரிடம் தெரிவித்தார்கள். அவர்கள் அழைத்தும், செவிமடுக்காத மகனைப் பார்த்து வேடுவர் குலத் தலைவனாக அவனை நியமித்தது தவறோ என்று எண்ணி ஏமாற்றத்துடன் திரும்புவதைத் தவிர அவர்களால் வேறொன்றும் செய்ய முடியவில்லை

தினமும் சிவகோசரியார், சிவனுக்கு நேரும் அபச்சாரத்தைக் கண்டு மனம் மருகுவதும், அந்த இடத்தைச் சுத்தம் செய்துவிட்டு ஆற்றில் போய் குளித்துவிட்டு வருவதும் வழக்கமாக இருந்து வந்தது.

கண்ணப்ப நாயனார்
கண்ணப்ப நாயனார்

இப்படியே ஐந்து நாள்கள் கழிந்தன. ஐந்தாம் நாள் இரவு சிவசார்யரின் கனவில் சிவபெருமான் தோன்றி, மறுநாள் காலை திண்ணனின் பக்தி பாவத்தை மறைந்திருந்து காணும்படி கூறி மறைந்தார்.

ஆறாம் நாள் காலை சிவகோசாரியார் வழக்கப்படி பூஜையை முடித்துவிட்டு ஒரு மரத்தின் பின்னே மறைந்து கொண்டார். சிறிது நேரத்தில் திண்ணன் வந்தான். எப்போதும்போல் வாயில் இருந்த நீரை உமிழ்ந்தான். பூக்களை உதிர்த்தான். மாமிசத்தை நைவேத்தியம் செய்வதை சிவகோசாரியார் கண்டார். அவர் மனம் பதைபதைத்தது.

திடீரென்று சிவபெருமானின் வலது கண்ணிலிருந்து குருதி வழிந்தது. பதறினான், திண்ணன். பிறந்தது முதலே, கொலை, குருதி, மாமிசம் இதைப் பார்த்துப் பழகியவனுக்குப் பதற்றம் பயத்தினால் அல்ல. குடுமித் தேவரின் பால் கொண்டிருந்த அதீத பாசத்தினால் ஏற்பட்டதுதான் அது.

அருகில் இருக்கும் பச்சிலைகளைக் கொண்டு வந்து கண்ணில் பிழிந்தும் கட்டுப்படாமல் நிற்கும் உதிரத்தைக் கண்டு என்னசெய்வதென்று அறியாத நிலையில் 'ஊனுக்கு ஊன்' என்று அவன் குலவழக்கில் சொல்லப்படும் ஒரு சொலவடை ஞாபகத்திற்கு வந்தது.

மதுரை, மூதூர் மாநகரத்தின் கதை - 1 | புராணமும் பண்பாடும் நிறைந்த பொற்றாமரைக் குளம்!

தன் வலது கண்ணை அம்பு கொண்டு பெயர்த்து லிங்கத்தின் கண்ணில் அப்பினான். குருதி நின்றது. ஆனந்தக் கூத்தாடினான். எல்லாம் சிறிது நேரம்தான். திடீரென்று இடது கண்ணிலிருந்து குருதி வழியத் தொடங்கியது. இப்பொழுதும் அவன் கவலைப்படவில்லை. அவனுக்கு மருந்து என்ன என்பது புரிந்திருந்தது. இரண்டு கண்ணும் போய்விட்டால் எப்படி மற்றொரு கண்ணைப் பொறுத்துவது? அதனால் ஒரு காலை எடுத்து சிவபெருமானின் இடது கண்ணில் வைத்துக் கொண்டு அம்பினால் இடது கண்ணையும் பெயர்க்கப் போனவனை, ஒரு கரம் தடுத்தது. ஆம்... சிவபெருமான் அவனை ஆட்கொள்ள வந்துவிட்டார். "நில் கண்ணப்பா" என்று கூறியபடி அவன் கையை இறுகப் பிடித்தார்.

"இனி எப்போதும் என்னுடன் என் வலப்பக்கத்திலேயே இருப்பாயாக" என்று கூறி அவனைத் தடுத்தாட்கொண்டார். பகவானே பக்தனின் கையைப் பிடித்து ஆட்கொண்டார் என்றால் என்னே பாக்கியம்! திண்ணன் கண்ணப்ப நாயனார் ஆனார்.

காளத்தி மலை
காளத்தி மலை

அவரின் பக்தி பிரேம பக்தி! தன்னையே பகவானுக்கு அர்ப்பணிக்கத் துணிந்த சிரேஷ்டமான பக்தி. அவருக்கு சாஸ்திரம் தெரியாது. சம்பிரதாயம் தெரியாது. புராண இதிகாசங்கள் படித்ததில்லை. ஆசார, அனுஷ்டானங்கள் பழக்கம் இல்லை. இன்னும் சொல்லப்போனால், பரமசிவன் என்கிற பெயரில் ஒரு தெய்வம் உண்டு என்பது கூட அப்பொழுது அவருக்குத் தெரியாது. ஆனால் ஆறே நாள்களில் ஆண்டவன் அவரை ஆட்கொண்டார்.

சித்தூர் மாவட்டத்தில், தென் கைலாயம் என்றும் காளஹஸ்தி என்றும் அழைக்கப்படும் திருகாளத்தியில், காளஹஸ்தீஸ்வரர் சந்நிதிக்கு வலப்புறம் கண்ணப்ப நாயனாரின் சந்நிதி அமைந்துள்ளது.

சிவானந்தலஹரியில், அறுபத்து மூன்றாவது ஸ்லோகத்தில், ஸ்ரீ ஆதிசங்கரர், கண்ணப்ப நாயனாரின் பக்தியை சமஸ்கிருதத்தில் கூறியிருப்பதின் தமிழ் ஆக்கம்.
"செருப்பு கால் உனக்கு கூர்ச்சம் போலானது. (அதாவது கிரீடம் போலானது). எச்சில் ஜலம் கங்கையை விட புனிதமானதாக ஆனது. சுவைத்த எச்சில் மாமிசம் சிரேஷ்டமான பிரசாதமாக ஆனது. உண்மையான பக்தி இருந்தால் எதைத்தான் சாதிக்க முடியாது?" என்கிறார்.

மாணிக்கவாசகர், திருமூலர் போன்றோரும் கண்ணப்ப நாயனாரின் பக்தியைப் போற்றிப் பாடியிருக்கிறார்கள். பக்தி செய்துகொண்டிருந்தால் முக்தி பெறலாம் என்கிறார் நந்தனார்.

இத்தகைய கண்ணப்ப நாயனாரின் குருபூஜை தை மாதம் மிருகசீரிடம் நட்சத்திர நாளாகும். இந்த நாள்களில் சிவாலயங்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறும். இந்த நாளில் சிவபுராணம் பாடி கண்ணப்பனை நினைத்துப் போற்றிவழிபடுவதன் மூலம் சகல நன்மைகளும் உண்டாகும்.

அடுத்த கட்டுரைக்கு