Published:Updated:

ஆணாகிப் பெண்ணாகி நின்றான் அவன்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
ஶ்ரீஅர்த்தநாரீஸ்வரர் திருவண்ணாமலை
ஶ்ரீஅர்த்தநாரீஸ்வரர் திருவண்ணாமலை

அர்த்தநாரீஸ்வரர் தரிசனம் பி.சந்திரமெளலி

பிரீமியம் ஸ்டோரி

அம்பிகைக்கு இறைவன் தன் திருமேனியில் இடப்பாகத்தை அளித்து மாதொருபாகனாக நின்ற நாள் திருக்கார்த்திகைத் திரு நாள். அந்த நாளின் இனிய மாலைவேளையில் சிவசக்தியர் இருவரும் ஓருடலாக நின்று களி நடனம் புரிய, அன்பர்கள் அதைக் கண்ணாரக் கண்டு மகிழ்ந்தனர்.

ஆணாகிப் பெண்ணாகி 
நின்றான் அவன்!

திருவண்ணாமலையில் கார்த்திகைத் திருநாளில் மாலையில் மலையின் உச்சியில் தீபம் ஏற்றப்படும். அவ்வேளையில், ஆலயத்துள் மலையை நோக்கியவாறு பஞ்சமூர்த்திகள் எழுந்தருள, அவர்களுக்குத் தீபாராதனை செய்யப்படுகிறது. அதேநேரத்தில், ஆலயத்துள்ளிருந்து அர்த்தநாரீசுவரர் வெளிவந்து கொடிமரத்தின் முன்பாகத் திருநடனம் புரிகின்றார்.

தீப்பந்தங்களின் நடுவில் நின்று ஆடும் அவரது நடனம் சில மணித் துளிகளே நிகழ்கிறது என்றாலும், கண்ணுக்கும் மனதுக்கும் பெருத்த மகிழ்ச்சியையும் சொல்லொணா நிம்மதியையும் அளிக்கின்றது. தீபவிழாவை ஒட்டி, நாமும் அர்த்தநாரீஸ்வர திருவடிவின் மகிமையை அறிந்து மகிழ்வோம்.

ஆணாகிப் பெண்ணாகி 
நின்றான் அவன்!

தொன்மைக் கோலம்!

ர்த்தநாரீசுவர திருக்கோலத்தை மாணிக்கவாசகர் தொன்மைக் கோலம் என்று போற்றுகின்றார்.

தோலும் துகிலும் குழையும் சுருள் தோடும்
பால் வெள்ளெய் நீறும் பசும் சாந்தும் பைங்கிளியும்
சூலமும் தொக்க வளையும் உடைத் தொன்மைக்
கோலமே நோக்கி குளிர்ந்து ஊதாய் கோத்தும்பீ

-மாணிக்கவாசகர் (திருவாசகம்)

கருத்து: புலித்தோலும், பட்டாடையும், குழையும் தோடும், பால் போன்ற திருநீறும் பசும் சாந்து பூசிய திருமேனியும், பைங்கிளி, சூலம் மற்றும் தொகுப்பான வளையல்கள் அணிந்த திருக்கரங்களுடனும் திகழும் தொன்மை வாய்ந்த அர்த்தநாரீஸ்வரரின் திருவடிவை போற்றுவாய் தும்பியே!

திருக்கார்த்திகை திருநாளில் இந்தப் பாடலைப் பாடி சிவபிரானை அர்த்தநாரீஸ்வர வடிவில் தியானித்து வழிபட்டால், சகல தோஷங்களும் விலகும்.

ஆணாகிப் பெண்ணாகி 
நின்றான் அவன்!

புராணம் சொல்லும் திருக்கதை!

சிவகணங்களின் தலைவர்களுள் ஒருவர் பிருங்கி முனிவர். தினமும் திருக்கயிலாயத்தில், சிவனாரை மட்டும் வலம் வந்து வணங்குவாரே தவிர, உடன் இருக்கும் பார்வதிதேவியை வலம் வர மாட்டார் பிருங்கி.

அதனால் கோபம் கொண்ட பார்வதிதேவி, முனிவரின் உடலில் சக்தியின் கூறாக உள்ள உதிரம், மாமிசம் முதலானவற்றை அகற்றினார். ‘இறைவன் ஒருவனே; அவர் சிவபெருமான் மட்டுமே’ என்று தீவிர பக்தியுடன் வாழ்ந்த பிருங்கி முனிவரின் எலும்புகள் மட்டுமே மிஞ்சியிருந்தன. அவரால் ஓர் அடி கூட நகர முடியவில்லை.

பிருங்கியின் சிவபக்தியையும் வைராக்கியத்தையும் உலகுக்கு உணர்த்த விரும்பிய ஈசன், அவர் நடப்பதற்கும் சிரமப்படுவதைப் பார்த்து மூன்றாவது கால் ஒன்றை வழங்கினாராம் (ஊன்று கோல் என்றும் சொல்வர்).

பிருங்கி போன்றோர், தம்மை விலக்கி சிவனாரை மட்டும் வழிபட்டுச் செல்ல இனி இடம் கொடுக்கக் கூடாது என்று கருதினாள் பார்வதிதேவி. எனவே, கடும் தவம் இருந்து, சிவனாரை வேண்டி அவரின் இட பாகத்தை பெற்றாள். இப்படி அம்மையும் அப்பனும் சேர்ந்திருக்கும் கோலமே ஶ்ரீஅர்த்த நாரீஸ்வர வடிவம்.

ஶ்ரீஅர்த்தநாரீசுவர வடிவம் இறைவியின் விருப்பால் எழுந்தது. சிவம் - அமைதி நிலை; சக்தி- ஆற்றல் நிலை. உலகப் பொருட்கள் அனைத்தும் சிவமும் சக்தியும் ஆகும். இந்தத் தத்துவத்தையே, அம்மையப்பனின் அர்த்தநாரீஸ்வர திருவடிவம் விளக்குகிறது. அர்த்த நாரீசுவர வடிவத்தைத் தொழுவதால் இல்லற வாழ்வும் செல்வச் செழிப்பும் உண்டாகும்.

ஆணாகிப் பெண்ணாகி 
நின்றான் அவன்!

இலக்கியங்கள் போற்றும் திருவடிவம்!

திருஞானசம்பந்தர் பாடியருளிய முதல் தேவாரப் பாடலின் முதல் வரியே, ‘தோடுடைய செவியன்’ என்று அர்த்தநாரீஸ்வர திருக்கோலத்தையே விவரிக்கிறது. ‘உண்ணாமுலை உமையாளோடும் உடனாகிய ஒருவன்’, ‘பாதியோர் மாதர்’, ‘பெண் ஓர் கூறினர்’, ‘பரநாரிபாகர்’ என்றெல்லாம் பாடிப் பரவுகிறார் திருஞானசம்பந்தர்.

‘பாதியோர் மாதினன்’, ‘உமையொரு பாகர்’ ‘மங்கை தன்னை மகிழ்ந்து ஒரு பால் வைத்து...’ என்கிறார் திருநாவுக்கரசர்.

சங்க இலக்கியங்களான புறநானூறு, ஐங்குறுநூறு ஆகியவையும் ஶ்ரீஅர்த்தநாரீஸ்வரர் வடிவை சிறப்பிக்கின்றன. யாப் பருங்கலம் என்ற சமண நூலை அருளிய அமர்தசாகரர், அதன் விருத்தியுரைக்காரர், ‘வீர சோழியம்’ நூலாசிரியர், இளங்கோவடிகள் ஆகியோரும் ஶ்ரீஅர்த்தநாரீஸ்வரர் வடிவம் பற்றி குறிப்பிட்டுள்ளனர்.

இலக்கிய நூல்கள் மட்டுமன்றி ஆகம நூல்களும் ஶ்ரீஅர்த்தநாரீஸ்வரர் வடிவம் பற்றி விவரிக்கின்றன. அம்சுத்பேதாகமம், காமிகாகமம், சுப்ரபேதாகமம், காரணாகமம் ஆகியனவும் சில்ப ரத்னம், காச்யபசில்ப சாஸ்திரம், மயமதம், ஶ்ரீதத்வநிதி ஆகிய சிற்ப நூல்களும் அர்த்தநாரீஸ்வரர் வடிவம் பற்றி குறிப்பிடுகின்றன.அர்த்தநாரீஸ்வரர் தரிசனம்!

பழைமையான சிவாலயங்களில், கருவறையின் மேற்குக் கோஷ்டத் தில் அர்த்தநாரீஸ்வரர் திருவடிவை தரிசிக்கலாம். கும்பகோணம் ஶ்ரீநாகேஸ்வரர் கோயிலில் முற்கால சோழர்களால் அமைக்கப்பட்ட ஶ்ரீஅர்த்தநாரீஸ்வர வடிவம் உள்ளது. காஞ்சிபுரம், மதுரை, தாராசுரம், திருச்செங்காட்டங்குடி, பாதாமி (வாதாபி) ஆகிய ஆலயங்களிலும் மாமல்லபுரம் தருமராஜ ரதத்தின் பின்புறமும் இந்தத் திருவடிவைக் காண முடிகிறது.

திருவண்ணாமலை ஆலயத்தில், பஞ்சலோக படிமமாக விளங்கும் ஶ்ரீஅர்த்தநாரீஸ்வரர் வெகு அழகு. அட்டவீரட்ட தலங்களில் ஒன்றான திருக்கண்டியூரில் அமர்ந்த கோலத்தில் காட்சி தருகிறார் ஶ்ரீஅர்த்தநாரீஸ்வரர்.

காசியில் அனுமன்காட் - ஶ்ரீசக்ரலிங்கேஸ்வரர் ஆலயத்தில், பஞ்சலோகத்தால் ஆன ஶ்ரீஅர்த்த நாரீஸ்வர தட்சிணாமூர்த்தியின் தரிசனம்வெகு அற்புதம். ஜடா மகுடம்... வலக் கரங்கள் ஒன்றில் டமருகமும் மற்றொன்றில் அபய முத்திரையும் திகழ... இடக் கரங்களில் நீலோத்பல மலரும் புத்தகமும் ஏந்தி... பத்மாசனத்தில் அமர்ந்து வலக் காலை முயலகனின் மீது வைத்தபடி காட்சி தருகிறார் இவர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு