Published:Updated:

தேவசயனி ஏகாதசி, வாசுதேவ துவாதசி விரத மகிமைகள்... கடைப்பிடிக்கும் வழிமுறைகள்!

ஏகாதசி விரதம்
ஏகாதசி விரதம்

ஏகாதசிக்கு மிஞ்சிய விரதம் இல்லை என்பது ஆன்றோர் வாக்கு. ஒவ்வொரு ஏகாதசியும் தனித்துவம் வாய்ந்தது. ஆஷாட மாதத்தில் வரும் வளர்பிறை ஏகாதசிக்கு தேவசயனி ஏகாதசி என்று பெயர். இக்கட்டான சூழலில் இறைவனின் அருளைப் பெற உதவும் விரதம் இது.

வாழ்க்கை சார்ந்த அடிப்படையான பல கேள்விகளை முன்வைப்பவை நம் புராணங்களும் உபநிடதங்களும். அப்படியான கேள்விகளில் ஒன்று இந்த வாழ்வில் நிகழும் எதையும் மாற்ற இயலுமா என்பதுதான். கடுமையான துயரங்கள் மற்றும் இக்கட்டான தருணங்களை நம் வாழ்வில் சந்திக்கும்போது இவற்றிலிருந்து மீண்டுவர வழியே இல்லையா என்பதுதான் மனித மனத்தில் எழும் கேள்வி. அத்தகைய கேள்விகளுக்கான விடைகளாக நம் முன்னோர்கள் கண்டுபிடித்துவைத்திருக்கும் முறையே விரதங்கள். ஒரு மாதத்தில் ஓரிரு நாள்கள் விரதமிருந்து இறைவனை வழிபட ஏற்பட இருக்கும் அல்லது ஏற்பட்டிருக்கும் துன்பங்களிலிருந்து காத்துக்கொள்ளலாம் என்று அவர்கள் உறுதியாக நம்பினார்கள். அவற்றைக் கடைப்பிடித்து அதன் பலனையும் புராணங்களாக எழுதிவைத்தார்கள். அப்படிப்பட்ட விரதங்களில் மிகவும் முக்கியமானது ஏகாதசி விரதம்.

சீனிவாச பெருமாள் - வஞ்சுளவல்லித் தாயார்
சீனிவாச பெருமாள் - வஞ்சுளவல்லித் தாயார்

தேவசயனி ஏகாதசி

‘ஏகாதசிக்கு மிஞ்சிய விரதம் இல்லை’ என்பது ஆன்றோர் வாக்கு. ஏகாதசி திதி ஒரு மாதத்தில் இருமுறை வரும். ஒவ்வோர் ஏகாதசியும் ஒரு தனிச்சிறப்பு வாய்ந்தது. அப்படி ஆஷாடமாதம் வளர்பிறையில் வரும் ஏகாதசிக்கு தேவசயனி ஏகாதசி என்று பெயர். சயனம் என்றால் உறக்கம். தேவர்களும் மகாவிஷ்ணுவும் உறங்கச் செல்லும் நாள் தேவசயனி ஏகாதசி. இந்த நாளில் யோக நித்திரையில் ஆளும் மகாவிஷ்ணு பின்பு கார்த்திகை மாதத்தில்வரும் பிரபோதினி ஏகாதசி அன்றுதான் கண்விழிப்பதாக ஐதிகம். இதைத் தொடர்ந்துவரும் பௌர்ணமியிலிருந்து சாதுர்மாஸ்ய விரதம் தொடங்குகிறது.

சாதுர்மாஸ்ய விரதம்

தேவசயனி ஏகாதசிக்குப் பின்வரும் பௌர்ணமியிலிருந்து நான்கு மாத காலம் மேற்கொள்ளப்படும் விரதமே சாதுர்மாஸ்ய விரதம். அதாவது ஆஷாட பௌர்ணமியில் இருந்து கார்த்திகை பௌர்ணமி வரையான கால கட்டமே சாதுர்மாஸ்ய விரத காலம். இந்தக் காலம் மிகவும் புனிதமான காலமாகப் போற்றப்படுகிறது. இந்த விரதத்தை மேற்கொள்பவர்கள் தங்கள் உணவு முறையில் ஒரு நெறிமுறையைப் பின்பற்றுவார்கள். குறிப்பாக, முதல் மாதம் உணவில் காயும் பழங்கள் மட்டுமே எடுத்துக்கொள்வார்கள். இரண்டாம் மாதத்தில் பால் அருந்துவதைத் தவிர்ப்பார்கள். மூன்றாம் மாதம் தயிரைத் தவிர்ப்பார்கள். நான்காம் மாதம் பருப்பு வகைகளைச் சேர்த்துக்கொள்ள மாட்டார்கள். இப்படி உணவிலும் ஒரு கட்டுப்பாடு கொள்வதோடு மனதை இறைவழிபாட்டிலேயே வைத்திருப்பார்கள். இந்தக் காலகட்டத்தில் சூரியன் தன் உத்திராயண சஞ்சாரத்திலிருந்து விலகி தட்சிணாயின சஞ்சாரத்தில் பிரவேசிப்பார். இவை எல்லாமே தேவசயனி ஏகாதசியை அடுத்துவரும் நிகழ்வுகள்.

விஷ்ணு
விஷ்ணு

மக்களுக்காக வாழ்ந்த மன்னன் மாந்தாதா

ஏகாதசி விரத மகிமைகளை பாண்டவர்கள் கேட்பதுபோலவும் பகவான் கிருஷ்ணர் சொல்வதுபோலவும் அமைந்திருப்பது ஏகாதசி மஹாத்மியம் என்னும் நூல். இதன் காரணம், பகவான் கிருஷ்ணரே இந்த ஏகாதசி விரதத்தின் மகிமைகளைப் போற்றிக்கூறியிருப்பதுதான். மேலும் கிருஷ்ண பரமாத்மாவின் காலத்துக்கு முன்பாகவே ஏகாதசி விரதங்கள் புகழ்பெற்று விளங்கின என்பதையும் இதன் மூலம் அறிந்துகொள்ள முடியும்.

யுதிஷ்ட்டிரர் கண்ணனிடம் தேவசயனி ஏகாதசியின் மகிமைகளைக் கேட்க, கிருஷ்ணரோ, பிரம்மா, நாரதருக்கு எடுத்துச் சொன்ன ஒரு நிகழ்வைச் சொல்லி இதன் சிறப்பை விளக்குகிறார். சூரிய வம்சத்தில் பிறந்த மன்னன் மாந்தாதா. தன் நாட்டில் நீதி வழுவாமல் ஆட்சி செய்துவந்தான். நாடும் சுபிட்சமாக இருந்தது. ஒருமுறை அவன் நாட்டில் மழை குறைந்து பஞ்சம் ஏற்பட்டது. தான் நீதி வழுவாமல் ஆட்சி புரிந்தும் இப்படி ஆகிவிட்டதே என்று வருந்திய மன்னன் இதன் காரணம் அறிய கானகத்தில் வாழும் ரிஷிகளைச் சந்திக்கச் சென்றான். அங்கு ஆங்கிரஸ முனிவரைச் சந்தித்து ஆசிபெற்றான். அப்போது தன் நாட்டின் பஞ்சத்துக்கு என்ன காரணம்? தான் நீதி வழுவாமல்தானே ஆட்சி செய்கிறேன்’ என்று கேட்டார்.

இதைக் கேட்ட முனிவர் அவனின் சிந்தையைச் சோதிக்கும்விதமாக, “ஒருநாட்டில் குடிமக்கள் செய்யும்பாவம் மன்னனையே சாரும். எனவே உன் நாட்டு மக்களில் ஒருவன் செய்த பாவமே உன் நாட்டை இப்படி வாட்டுகிறது. நீ அவனைத் தேடிக் கண்டுபிடித்துக் கொலை செய்துவிட்டால் இந்தப் பஞ்சம் நீங்கிவிடும்” என்றார்.

திருவல்லிக்கேணி பெருமாள்
திருவல்லிக்கேணி பெருமாள்

அதைக் கேட்ட மன்னன் திடுக்கிட்டு, “ஓர் உயிரைக் கொல்லும் பாவத்தைச் செய்யாது, இதிலிருந்து மீள வேறு வழியில்லையா” என்று கேட்டான். இதைக் கேட்ட மகரிஷி குடிமக்கள் மீதான அவன் அன்பை உணர்ந்து மகிழ்ந்து ஆஷாட மாதத்தில் வரும் ஏகாதசி விரதத்தைப் பின்பற்று. அன்றைய தினத்தில் நீயும் உன் நாட்டு மக்களும் விரதம் இருந்து அந்த நாராயணரை வழிபட்டால், அவர் ஜல நாராயணராக பெருமழை பெய்து உன் நாட்டின் பஞ்சத்தைப் போக்குவார்” என்று ஆசிவழங்கினார். மன்னனும் அவ்வாறே விரதம் இருந்து வணங்கினான். முனிவர் சொன்னதுபோல் பெருமழை பொழிந்து பஞ்சம் நீங்கியது. அன்று முதல் தேவசயனி ஏகாதசி என்பது இக்கட்டான தருணங்களில் கடைப்பிடித்துப் பயன் பெற வேண்டிய ஏகாதசிவிரதமாகப் போற்றப்பட்டது என்று கிருஷ்ணர் விளக்கினார்.

விரத முறைகள்

பொதுவாக ஏகாதசி விரதம் என்பது மூன்று நாள்கள் கொண்டது. ஏகாதசிக்கு முன் தினம் அதாவது தசமி திதி அன்று இரவு உணவைத் தவிர்க்க வேண்டும். மறுநாள் காலையில் நீராடி பெருமாளை வணங்கி விஷ்ணு சகஸ்ரநாம பாராயணம் அல்லது நாராயண மந்திரத்தை ஜபம் செய்ய வேண்டும். ஏகாதசி அன்று முழு உபவாசம் இருப்பது நல்லது. இயலாதவர்கள் முழு அரிசி சோற்றைத் தவிர்க்க வேண்டும். ஏகாதசி அன்று துளசி தீர்த்தம் அருந்த வேண்டும். அதற்கான துளசியை தசமி அன்றே பறித்துவைத்துக்கொள்ள வேண்டும். மறுநாள் துவாதசி காலையில் பாரனை செய்து விரதம் முடிக்க வேண்டும்

பெருமாள்
பெருமாள்

வாஸுதேவ துவாதசி

தேவ சயனி ஏகாதசியை அடுத்துவரும் துவாதசி வாசுதேவ துவாதசி ஆகும். இந்த நாளில் வாசுதேவ கிருஷ்ணரை வழிபடும் முறை உள்ளது. இந்த நாளில் காலையில் நீராடி பகவான் கிருஷ்ணரை முழுமுதற்கடவுளாக எண்ணி வழிபட வேண்டும். மேலும் வாசுதேவ துவாதசி அன்று செய்யும் தானம் பல மடங்கு பலன் அளிக்கக் கூடியது. இந்த நாளில் உணவு தேவை உள்ளவர்களுக்குத் தானியம் தானம் செய்வது சிறப்பு.

தேவசயன ஏகாதசி: 1.7.2020

துவாதசி பாரனை நேரம்: 2.7.2020 காலை : 6.00 மணி முதல் 6.45 வரை

அடுத்த கட்டுரைக்கு