Published:Updated:

சியாமளா நவராத்திரி: மாணவர்கள் தவறவிடக் கூடாத வசந்த பஞ்சமி... வழிபாடு செய்ய உகந்த நேரம் எது?

சியாமளா நவராத்திரின் ஐந்தாம் நாள் (வசந்த பஞ்சமி) சரஸ்வதி தேவி அவதரித்ததாகப் புராணங்கள் சொல்கின்றன. எனவே வட இந்தியாவில் இந்த நாளையே சரஸ்வதி பூஜையாகக் கடைப்பிடிக்கிறார்கள்.

இந்த உலகைக் காக்கும் ஆதி சக்தியைக் கொண்டாடும் பண்டிகை நவராத்திரி. ஒரு காலத்தில் அம்பிகையை வழிபடும் சாக்தம் என்று தனித்த மதமாக விளங்கியபோது பன்னிரண்டு மாதங்களுமே நவராத்திரி விழா கொண்டாடப்பட்டது என்கிறார்கள் ஆய்வாளர்கள். தற்போது அதுவே நான்கு நவராத்திரிகளாக மாற்றம் கொண்டன. ஆஷாட நவராத்திரி, சாரதா நவராத்திரி, சியாமளா நவராத்திரி, வசந்த நவராத்திரி என்று நான்கு நவராத்திரிகளில் சாரதா நவராத்திரியே நாம் தமிழகத்தில் புரட்டாசி மாதம் கொண்டாடும் நவராத்திரி. இவற்றுள் சியாமளா நவராத்திரி தை மாத அமாவாசைக்கு அடுத்த நாள் தொடங்கி ஒன்பது நாள்கள் கொண்டாடப்படும் நவராத்திரி.

பராசக்தியை சங்கீத மூர்த்தியாகப் பாவிக்கும்போது அவளுக்கு 'சியாமளா' என்று பெயர் என்கிறார் மகாபெரியவா. ஸங்கீதத்தில் தோய்ந்து ஆனந்த மயமாகவும், சாந்த மயமாகவும், குழந்தை உள்ளத்தோடும் உள்ள சியாமளாதேவியைத் தியானித்தால், அவள் பக்தர்களுக்குக் கருணையைப் பொழிவாள்.
லலிதா பரமேஸ்வரி
லலிதா பரமேஸ்வரி

மாதங்கியே ராஜ சியாமளா என்றும் மஹா மந்திரினி என்றும் அழைக்கப்படுகிறாள். தசமகாவித்யாக்களில் ஒன்பதாவது திருவடிவம் இந்த சியாமளா தேவி. வேத மந்திரங்களுக்கெல்லாம் அதிதேவதை என்பதால் மந்திரிணி எனப்படுகிறாள். கல்வி, வித்தை, ஞானம் ஆகிய அனைத்திற்கும் இவளே ஆதாரம்.

லலதாம்பிகையின் கரும்பில் இருந்து தோன்றியவள். மஹா மேரு சாம்ராஜ்யத்தில் இவளே மந்திரி ஆவாள். அம்பிகையின் வலப்புறம் அமைச்சராக சியாமளாவும் இடப்புறம் படைத்தலைவியாக வாராகியும் அமர்ந்திருக்கின்றனர் என்கிறது புராணம்.

மகாகவி காளிதாஸ் அன்னையின் அற்புதமான தோற்றத்தை பின்வருமாறு வர்ணிக்கிறார்.

மாணிக்ய வீணாம் முபலாலயந்தீம் மதாலஸாம் மஞ்சுளவாக் விலாஸாம் |

மாஹேந்த்ர நீலத்யுதி கோமளாங்கீம் மாதங்க கன்யாம் மனஸா ஸ்மராமி ||

சதுர்புஜே சந்த்ரகலாவதம்ஸே குசோன்னதே குங்கும ராகஸோனே |

புண்ட்ரேக்ஷு பாஸாங்குஸ புஷ்பபாண ஹஸ்தே நமஸ்தே ஜகதேக மாத: ||

இந்தப் பாடலின் கருத்து:

மாணிக்க கற்கள் பதித்த வீணையை வாசிக்கும் விருப்பம் உடையவள். பச்சை நிறம் கொண்டவள். மதங்க முனிவரின் புதல்வி. நான்கு திருக்கரம் உடையவள் பாசம், அங்குசம், மலர் அம்பு கொண்டவள். சந்திர கலை தலையில் அணிந்தவள். குங்கும சாந்தை மார்பில் தரித்தவள் என்று அம்பிகையின் தோற்றத்தை வருணிக்கிறார் கவிஞர்.

16-2-2021 பஞ்சாங்கம்
16-2-2021 பஞ்சாங்கம்
சியாமளா நவராத்திரின் ஐந்தாம் நாள் (வசந்த பஞ்சமி) சரஸ்வதி தேவி அவதரித்ததாகப் புராணங்கள் சொல்கின்றன. எனவே வட இந்தியாவில் இந்த நாளையே சரஸ்வதி பூஜையாகக் கடைப்பிடிக்கிறார்கள்.

இந்த நாளில் வீட்டில் சரஸ்வதி விக்ரகம் அல்லது படத்தினை வைத்து அலங்கரித்து அதன் அருகே படிக்கும் நூல்களை கலைக்குரிய கருவிகளை வைத்து வழிபாடு செய்வார்கள். இவ்வாறு செய்வதன் மூலம் சரஸ்வதி தேவியின் அருள் பரிபூரணமாகக் கிடைத்து கல்வி கேள்விகளில் மேன்மை அடைவோம் என்கின்றனர் பெரியவர்கள். மேலும் மாணவர்கள் சியாமளா தேவியைப் போற்றி வணங்கினால் நல்ல நினைவாற்றலும் கல்வியில் மேன்மையும் அடைவர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

நாளை (16-02-2021) வசந்த பஞ்சமி என்பதால் அன்று மறக்காமல் மாணவர்கள் சரஸ்வதி தேவியை வழிபட வேண்டும். காலையில் குளித்து நீராடி சரஸ்வதி தேவிக்குரிய ஸ்தோத்திரங்களைச் சொல்லி வழிபாடு செய்ய வேண்டும். நாம் உண்ணும் உணவையே நிவேதனம் செய்து வணங்கினால் சரஸ்வதியின் அருள் பரிபூரணமாகக் கிடைக்கும்.

தமிழகத்தில் மீனாட்சி அம்மனை சியாமளா தேவியாகப் போற்றி வழிபடுவது மரபு. எனவே மதுரை மீனாட்சி அம்மனின் படம் இருந்தால் அதற்கு மலர்கள் சாத்தி வழிபாடு செய்யுங்கள்.

சியாமளா நவராத்திரி நடைபெறும் நாள்களில் காலையும் மாலையும் பூஜை அறையில் விளக்கேற்றி அம்பாளை ஸ்தோத்திரம் செய்ய வேண்டும். சியாமளா தண்டகம் போன்ற ஸ்லோகங்களை வாசிக்கத் தெரிந்தவர்கள் பாராயணம் செய்யலாம். லலிதா சகஸ்ரநாமத்தைப் பாராயணம் செய்து பாயசம் நிவேதனம் செய்தால் மிகுந்த பலன்கள் உண்டாகும். பச்சை வண்ண உடையை அம்பிகையின் படத்துக்கு அல்லது திருவுருவத்துக்கு சாத்தி அதை தானம் செய்தால் துன்பங்கள் தீர்ந்து நன்மைகள் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

நாளை சரஸ்வதி வழிபாடு செய்ய உகந்த நேரம் : காலை 6.59 முதல் மதியம் 12.35 வரை.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு