Published:Updated:

திருநீற்று புதனில் தொடங்கி உயிர்த்தெழுதல் வரை... தவக்காலத்தின் தாத்பர்யம், விரத முறைகள்!

இயேசுவுக்குப் பிறகு ஒவ்வொருவருமே நோன்பிருக்க வேண்டும் என்று ஓர் ஆழமான வாக்கு வேத வசனம் மூலம் கிறிஸ்துவர்களுக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

கிறிஸ்துவர்கள் ஒவ்வொரு வருடமும் தங்களது வழிபாட்டு காலத்தை திருவருகைக்காலம், பொதுக்காலம், தவக்காலம் என்ற மூன்றாகப் பிரித்துக்கொள்கிறார்கள். இவற்றில் தவக்காலம் மிகவும் முக்கியமானது. ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து தனித்திருந்து ஜபம் செய்த நாள்களே தவக்காலம். இந்தத் தவக்காலத்தின் தாத்பர்யம் என்ன? இதை எவ்வாறு கடைப்பிடிப்பது என்று ஃபாதர் அலோஷியஸ் பாபுவிடம் கேட்டோம்.

 இயேசு
இயேசு
Vikatan

"பாவக் கறைபடிந்த மனித சமுதாயத்தை மீட்டெடுக்கக் கடவுள் தன் மகனையே மண்ணுலகுக்கு அனுப்பினார். அந்த இறைமகன் இயேசு என்று அழைக்கப்படுகிறார். இயேசு, தன் வாழ்நாளில் அர்ப்பணத்துடன் தொண்டாற்றி மனித வாழ்வுக்கு அர்த்தம் கொடுக்கத் தன் பாடுகள், மரணம், உயிர்ப்பு வழியாக ஒரு மீட்பை உண்டாக்கினார். இயேசுவுடைய அர்ப்பணத்தின் சிந்தனைகளை ஒவ்வொருவரும் தனதாக்கிக்கொண்டு தியானிக்க வேண்டிய காலமே தவக்காலம்.

இயேசு தனது பணி வாழ்வைத் தொடங்குவதற்கு முன்னால் 40 நாள்கள் தவமிருந்தார். அந்த 40 நாள்களே தவக்காலம் என்று கடைப்பிடிக்கப்படுகிறது.

தவக்காலம், திருநீற்று புதன் முதல் தொடங்கி இயேசுபிரானின் பாடுகளைத் தியானிக்கும் பெரிய வெள்ளிக்கிழமை வரை கணக்கிடப்பட்டிருக்கிறது. இது ஆங்கிலத்தில் லென்ட் சீஸன் (Lent season) என்று அழைக்கப்படுகிறது. இந்த 40 நாள்கள் ஒரு மனிதன் மனம் வருந்த, தன்னைப் புதுப்பிக்க, ஒரு புதுப் படைப்பாக மாற ஒரு அற்புதமான வாய்ப்பு.

குருத்தோலைத் திருவிழா
குருத்தோலைத் திருவிழா

ஜபத்தின் மகிமை

முதலாவது, ஜபம். இயேசுவுடைய வாழ்வு ஜபத்தை மையப்படுத்தியதாக இருந்தது. அவர் எந்த ஒரு முடிவை எடுப்பதற்கு முன்பாகவும் எந்த ஒரு செயல்களைச் செய்வதற்கு முன்பாகவும் ஜபத்தை செய்கிறவராகத் தன்னுடைய வாழ்நாளில் எல்லாத் தருணங்களிலும் இறைவனோடு பேசி நல்ல முடிவுகளை எடுத்து அதை நற்செய்தியாகச் சொல்பவராகவும் செயல்படுத்துபவராகவும் வாழ்ந்து காட்டியவராகவும் இருந்தார். தவக்காலத்தில் கிறிஸ்துவர்கள் தம்மையே புதுப்படைப்பாக மாற்றிக்கொள்ள ஜபம் என்பது அடிப்படைத் தேவை. ஜபம் என்பது இறைவனோடு உறவாடுவதே ஆகும். அவை வாய்மொழியில் சொல்லக்கூடிய ஜபங்களாகவும் இருக்கலாம் அல்லது ஆழ்நிலை தியானங்களாகவும் இருக்கலாம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

உண்ணா நோன்பின் சிறப்புகள்

40 நாள்கள் இயேசு பாலைவனத்தில் யாருடனும் பேசாமல் உண்ணா நோன்பு இருந்து தவம் செய்தார். இறைவனோடு தனியாகப் பேசுவதற்கு நோன்பிருத்தல் தேவையான ஒன்று என்பதே கிறிஸ்துவர்களின் நம்பிக்கை. நோன்பிருத்தல் என்பது வெளிவேடங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் ஆழ்ந்த பொருளைக் கொடுப்பதாக இருத்தல் அவசியம். பேசாமல் இருப்பதும் உணவு உண்ணாமல் இருப்பதும் சில உணவுகளைத் தவிர்த்து வாழ்தலும் நோன்பாகக் கணக்கிடப்படுகிறது. திருச்சபையின் சிந்தனையின் அடிப்படையிலே திருநீற்று புதன் முதல் பெரிய வெள்ளிவரை 18 வயதுக்கு மேற்பட்டவர்களும் முதுமையை அடையாதவர்களும் நோன்பிருத்தல் வேண்டும். நோன்பு இருத்தல் என்பது உண்ணா நோன்பாக இருக்கலாம். ஒரு சந்தியாக இருக்கலாம் அல்லது சுத்தபோஜனமாகவும் இருக்கலாம். பேசாமல் இருத்தலும் நோன்பாகவே கருதப்படுகிறது.

சாம்பல் புதன்
சாம்பல் புதன்

பைபிள் வசனம் மாற்கு 2:18-20, 'யோவானுடைய சீடரும் பரிசேயரும் நோன்பிருந்து வந்தனர். சிலர், ஏசுவிடம் யோவானுடைய சீடர்களும் பரிசேயர்களுடைய சீடர்களும் நோன்பிருக்க உம்முடைய சீடர்கள் ஏன் நோன்பு இருப்பதில்லை என்று கேட்டனர். அதற்கு இயேசு அவர்களை நோக்கி, மணமகன் தங்களோடு இருக்கும்வரை மணவிருந்தினர்கள் நோன்பு இருக்க முடியுமா? மணமகன் அவர்களோடு இருக்கும் காலமெல்லாம் அவர்கள் நோன்பிருக்க முடியாது. ஆனால், மணமகன் அவர்களைப் பிரிய வேண்டிய காலம் வரும், அப்போது அவர்களும் நோன்பு இருப்பார்கள் என்றார்.'

இயேசுவுடைய இறப்பிற்குப் பிறகு ஒவ்வொருவருமே நோன்பிருக்க வேண்டும் என்று ஓர் ஆழமான வாக்கு இதன்மூலம் கிறிஸ்துவர்களுக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது.

தானம் செய்தல்

ஏழை எளியவர்களுக்கு, மாற்றுத் திறனாளிகளுக்கு தேவைகள் இருப்பவர்களுக்கு தானம் செய்ய வேண்டும். இவை இறைவனுக்கே செய்வதாக எண்ணிச் செய்ய வேண்டும் என இயேசுபிரானின் வார்த்தைகள் வலியுறுத்துகின்றன.

எனவே, சமுதாயத்தில் உள்ள எளியவர்கள் அனைவருக்கும் செய்கின்ற செயல்கள் அனைத்துமே இறைவனுக்குச் செய்வது போன்றது என்பது கிறிஸ்ததுவர்களின் நம்பிக்கை.

அலோஷியஸ் பாபு
அலோஷியஸ் பாபு

பெரிய வியாழன், பெரிய வெள்ளி

பெரிய வியாழன், பெரிய வெள்ளி, உயிர்ப்பு ஞாயிறு ஆகிய நாள்கள் தவக்காலத்தின் முக்கியமான இறுதி நாள்கள். பெரிய வியாழன் என்பதை இயேசுவின் இரவு உணவை நினைவுகூர்வது. இயேசு சீடர்களோடு இறுதி உணவை உண்டபோது அப்பத்தை எடுத்து அதைத் தன் உடல் எனக் கூறியும் திராட்சை ரசத்தை எடுத்துத் தன் ரத்தம் எனக் கூறியும் இதை என் நினைவாகச் செய்யுங்கள் என்று சொல்லுகிற அந்த நிகழ்வு இரவு உணவு நிகழ்வு. அன்றைய தினமே இயேசு தன் சீடர்கள் தொடர்ந்து பணிபுரிய அழைப்பு விடுக்கக் கூடிய நிகழ்வாகவும் அமைந்தது. பெரிய வெள்ளிக்கிழமையன்று இயேசுவினுடைய திருப்பாடுகள் சிறப்பாகச் சிந்தித்து தியானிக்கப்படுகின்றன. ஞாயிற்றுக்கிழமை உயிர்ப்புப் பெருவிழாவாகக் கொண்டாடப்படும். தவக்காலத்தில் இறைமகன் இயேசு மரணத்திலிருந்து உயிர்த்தெழுந்தார் என்ற ஒரு செய்தியே நினைவுகூரத்தக்க செய்தி.

தவக்காலத்தின் கடைசி வாரமாகிய குருத்து ஞாயிறு முதல் உயிர்ப்பு ஞாயிறுவரை உள்ள நாள்கள் புனித வாரம் என்று அழைக்கப்படுகிறது. இது இயேசுவும் சீடர்களும் மக்களோடு இணைந்து செருசலேம் நோக்கிப் பயணம் செய்த நிகழ்வைக் சுட்டிக் காட்டுகிறது.

புனித வெள்ளி
புனித வெள்ளி
Vikatan

தவக்காலம் கிறிஸ்துவர்கள் தவறவிடக் கூடாத காலம். இறைமகன் இயேசுவின் நினைவைப் போற்றும் இந்தத் தவக்காலத்தை அனைவரும் போற்றிக் கடைப்பிடிப்போம்" என்றார் ஃபாதர் அலோஷியஸ் பாபு.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு