Published:Updated:

செவ்வாய் பிரதோஷத்துக்கு என்ன சிறப்பு தெரியுமா... கடைப்பிடிப்பது எப்படி?

நந்தி - பிரதோஷம்
நந்தி - பிரதோஷம்

நாளை செவ்வாய்க்கிழமையோடு திரயோதசி திதியோடு கூடிவருகிறது. பொதுவாக செவ்வாய் பிரதோஷத்தை 'ருண ரோக விமோசன பிரதோஷம்' என்பார்கள். அதாவது நோய் மற்றும் கடன் பிரச்னைக்குத் தீர்வாக அமைவது.

தினமும் சூரியன் மறையும் மாலை வேளையில் 4.30 முதல் 6 மணிவரையிலான நேரத்தைப் பிரதோஷ காலம் என்றே அழைப்பார்கள். அதிலும் திரயோதசி திதி அன்று வரும் பிரதோஷ காலம் சிறப்பானதாகக் கருதப்படுகிறது. அதனாலேயே அந்த நாளை 'பிரதோஷம்' என்றே அழைக்கிறோம்.

பொதுவாகவே பிரதோஷ வழிபாடு பிரச்னைகளைத் தீர்க்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. அந்த நாளில் பிரதோஷ வேளையில் சிவபெருமானுக்கும் நந்தியம் பெருமானுக்கும் நடைபெறும் அபிஷேக ஆராதனைகளைக் கண்ணாரக் காண்பதன் மூலம் நம் மனத்துயர் எல்லாம் விலகும் என்கிறார்கள் அடியவர்கள். அப்படிப்பட்ட பிரதோஷம் எந்தக் கிழமையில் வருகிறதோ அதற்கேற்ப விசேஷ பலன்கள் கிடைக்கும் என்கின்றன ஞானநூல்கள். அவ்வாறு வாரத்தின் ஏழு நாள்களிலும் வரும் பிரதோஷ வழிபாட்டின் பலன்களை இப்போது காண்போம்.

சிவபெருமான்
சிவபெருமான்

1) ஞாயிற்றுக்கிழமைகளில் பிரதோஷ வேளை சந்திரன் மற்றும் சனியின் ஓரையில் அமையும். இந்நாளில் செய்யக்கூடிய பிரதோஷ பூஜையினால் நமக்கு சனி பகவானின் அனுக்கிரமும் சூரியபகவானின் அருளும் கிடைக்கும். பிரச்னைகளில் சிக்கித் தவிப்பவர்கள் கட்டாயம் வழிபட வேண்டிய பிரதோஷம் ஞாயிறு பிரதோஷ்ம்.

2) திங்கட்கிழமை என்றாலே அது சிவபெருமானின் வழிபாட்டுக்குரிய நாள் என்றே கொள்ளலாம். அந்த நாளின் பிரதோஷ வேளையானது செவ்வாய் மற்றும் சூரிய ஓரையில் அமையும். ஆகவே, திங்கட்கிழமைகளில் வரும் பிரதோஷ வேளையில் சிவபெருமானை வழிபடுவதன் மூலம் சூரிய பகவானின் அருளைப் பெற முடியும். மேலும் இந்தக் கிழமைக்கு உரிய கிரகம் சந்திரன். சந்திரன் மனோகாரகன். எனவே திங்கட்கிழமைகளில் பிரதோஷ வேளையில் பிறை சூடிய பெருமானை வழிபடுவதன் மூலம் சந்திரனின் அருளைப் பெறலாம். மனம் சார்ந்த சிக்கல்கள் உள்ளவர்கள், மனவலிமை வேண்டுபவர்கள் கட்டாயம் வழிபட வேண்டிய பிரதோஷம் திங்கள்கிழமை பிரதோஷம்.

3) செவ்வாய்கிழமை பிரதோஷ வேளை புதன் மற்றும் சந்திரனின் ஓரையில் அமையும். அந்த வேளையில் சிவ வழிபாடு செய்தால் முருகப்பெருமானின் அருள் நமக்குக் கிடைக்கும். ஜாதகத்தில் செவ்வாய் பகவானின் நிலையால் ஏற்படும் பாதகங்கள் நீங்கும். செவ்வாயின் அருள் பரிபூரணமாகக் கிடைப்பதால் நோய் மற்றும் கடன் பிரச்னைகளிலிருந்து நிவாரணம் கிடைக்கும் என்று நம்பப்படுகிறது.

4) புதன்கிழமை பிரதோஷ வேளை குரு மற்றும் செவ்வாய் ஓரையில் அமையும். எனவே இந்த நாளில் செய்யும் பிரதோஷ கால வழிபாடு ஜாதகத்தில் குருவின் நிலையால் ஏற்படும் நற்பலன்களைக் கூடுதலாக்கும். கல்வி, கலை, ஞானம் ஆகியவற்றில் மேன்மை உண்டாக்கும்.

குருபகவான்
குருபகவான்

5) வியாழக்கிழமை பிரதோஷம் வந்தால், அந்த நாளின் பிரதோஷ வேளை சுக்கிரன் மற்றும் புதன் ஓரையில் அமையும். இன்று பிரதோஷ பூஜை செய்வதன் மூலம் மகாலட்சுமியின் அருள் கிடைக்கும். மாணவர்கள் இந்தப் பிரதோஷ காலத்தில் வழிபாடு செய்தால் கணிதத்தில் சிறப்பான முறையில் நிபுணத்துவம் பெற முடியும் என்கிறார்கள் அடியவர்கள்.

6) வெள்ளிக்கிழமையில் பிரதோஷ தினம் வந்தால், அன்றைய பிரதோஷ வழிபாடு நடைபெறும் வேளை சனி மற்றும் குரு ஓரையில் அமையும். இது காரிய ஸித்தியைக் கொடுக்கும். குருபகவானால் அருளால் பொன்பொருள் சேரும்.

7) சனிக்கிழமையுடன் திரயோதசி திதி இணைந்து வரும் நாளையே சனி மகா பிரதோஷம் என்று சிறப்பித்துக் கூறுகிறோம். சனிக்கிழமை பெருமாளுக்கு உகந்தது என்று சொல்வார்கள். ஆஞ்சநேயருக்கும் மிகவும் உகந்த தினம் சனிக்கிழமையே. இந்த நாளில் பிரதோஷ வேளையானது சூரியன் மற்றும் சுக்கிர ஓரையில் அமையும். இந்த நேரம் வெற்றி தரும் முகூர்த்தத்தைக் குறிக்கிற ஒரு நேரமாகும். எனவே இந்த வேளையில் சிவவழிபாடு செய்வது மிகவும் விசேஷம்.

இந்த வேளையில் செய்யும் வழிபாடு கிரகதோஷங்களை நீக்கி, நல்லருளைப் பெற்றுத்தரும். இந்த நாளில் சிவபுராணம், திருவாசகம், தேவாரம், திருப்பல்லாண்டு முதலிய தமிழ் வேதங்களைப் பாராயணம் செய்தல் மிகவும் சிறப்பு.

நாளை செவ்வாய்க்கிழமையோடு திரயோதசி திதியோடு கூடிவருகிறது. பொதுவாக செவ்வாய் பிரதோஷத்தை 'ருண ரோக விமோசன பிரதோஷம்' என்பார்கள். அதாவது நோய் மற்றும் கடன் பிரச்னைக்குத் தீர்வாக அமைவது. எனவே, இந்த அற்புதமான நாளில் நாளைக் காலை நீராடி, நீறுபூசி சிவபுராணம் பாராயணம் செய்ய வேண்டும். உடலால் இயன்றவர்கள் உபவாசம் இருக்கலாம். முடியாதவர்கள் பழங்கள் மற்றும் திரவ உணவுகளை எடுத்துக்கொண்டு சிவ நாமம் ஜபித்தபடி இருக்கலாம்.

மாலை வேளையில் சிவபெருமானை நினைத்து வழிபட வேண்டும். ஆலய தரிசனத்துக்கு வாய்ப்பில்லாததால் வீட்டிலேயே இருக்கும் சிவபெருமானின் படத்துக்கு மலர்சாத்தி எளிய நிவேதனம் ஒன்றைச் செய்து வழிபாடு செய்யலாம். இவ்வாறு செய்து வேண்டிக்கொள்வதன் மூலம் சிவனருள் கிடைப்பதோடு, நோய், கடன், பகைவர்களால் தொல்லை முதலியவை நீங்கும் என்பது நம்பிக்கை.

அடுத்த கட்டுரைக்கு