Published:Updated:

குருவருளும் திருவருளும் அருளும் காரைக்கால் அம்மையார் குருபூஜை... சிறப்புகள் என்னென்ன?

காரைக்கால்
News
காரைக்கால்

கைகளால் கயிலாயம் ஏறிவரும் அந்தப் பேயுருவைக் கண்ட உமையம்மை ஈசனிடம், "யார் இது?" என்று கேட்டாளாம். அம்பாள் அறியாத ஒன்று இந்த அகிலத்தில் உள்ளதா என்ன? ஆனாலும் கேட்டாள். ஏன் தெரியுமா?

காரைக்காலில் அது அதிகாலை நேரம். நகரில் மின்விளக்குகள் அனைத்தும் அணைக்கப்பட்டு இருள் சூழ்ந்திருந்தது. இந்தப் பிரபஞ்சத்தின் எப்போதும் அணையாத விளக்கு அந்த இறைவன் ஒருவனே என்பதைக் குறிப்பிடும் வகையில் கயிலாயநாதர் கோயில் வாசலில் ஒரு சுடரை ஏற்றிவைப்பார்கள். அதேபோன்று அந்த அம்மையார் கோயிலில் ஒரு தீபத்தை ஏற்றி வைப்பார்கள். பின்பு அந்தத் தீபத்தைக் கொண்டுவந்து சிவபெருமான் கோயில் தீபச் சுடருடன் சேர்ப்பார்கள். சுடருடன் சுடர் கலந்தபின் இரண்டும் ஒன்றெனச் சுடர் விடும் திருக்கோலம். ஜீவாத்மா பரமாத்மாவுடன் இரண்டும் ஒன்றென மாறின தத்துவம். காண்பவர் கண்களில் நீர் பெருகச் செய்யும் ஆனந்த தரிசனம்.

இப்படி ஒரு காட்சி ஒவ்வோர் ஆண்டும் மாங்கனித் திருவிழாவின்போது காரைக்காலில் நடைபெறும். காரைக்கால் அம்மையார் என்று போற்றப்படும் புனிதவதி அம்மையார் ஈசனுடன் கலந்த நிகழ்வையே இப்படிச் சிலிரிப்பூட்டும் காட்சியாகக் காலங்காலமாக சித்திரித்து விழாக்கண்டு வருகிறார்கள்.

காரைக்கால் அம்மையார் குருபூஜை
காரைக்கால் அம்மையார் குருபூஜை
மற்ற அடியார்கள் அனைவரைக்காட்டிலும் காரைக்கால் அம்மைக்கு சிறப்பு ஒன்று கூடுதல். உலகமே 'அம்மையே அப்பா' என்று ஈசனைப் புகழ்ந்துகொண்டிருக்க அந்த ஈசனே, 'அம்மையே' என்று அழைத்த பெருமை அவருக்கு உண்டு.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

கைகளால் கயிலாயம் ஏறிவரும் அந்தப் பேயுருவைக் கண்ட உமையம்மை ஈசனிடம் "யார் இது?" என்று கேட்டாளாம். அம்பாள் அறியாத ஒன்று இந்த அகிலத்தில் உள்ளதா என்ன? ஆனாலும் தன்னலம் மறந்து இறைவனடி நினைந்து உலகையும் உடலையும் துச்சமென மதித்துப் பரம்பொருளை நாடிவரும் அடியாரை ஆண்டவன் எவ்வாறு மதிக்கிறான் என்று இந்த அகிலம் அறிய வேண்டுமல்லவா... அதற்காக அப்படிக் கேட்டாள்.தொழுதவர்க்குத் தன்னையே தரும் ஈசன், "எம்மைப் பேணும் அம்மை இவள்!'' எனப் பதிலுரைத்தாராம் பரமன்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

அத்தோடு நில்லாமல், 'அம்மையே வருக...' என்று வரவேற்றாராம்.

அத்தகைய சிறப்புப் பெற்ற காரைக்கால் அம்மையின் ஆசையைத் தீர்க்கவே திருவாலங்காட்டில் நடமாடி ஆனந்தக் காட்சியருளினார் ஈசன்.

அப்போதுதான் அம்மை

"இறவாத இன்ப அன்பு வேண்டிப்பின் வேண்டு கின்றார்

பிறவாமை வேண்டும் மீண்டும் பிறப்புண்டேல் உன்னை என்றும்

மறவாமை வேண்டும் இன்னும் வேண்டும்நான் மகிழ்ந்து பாடி

அறவாநீ ஆடும் போதுன் அடியின்கீழ் இருக்க என்றார்"

என்று வேண்டிக்கொண்டாராம். அதன்படி அத்தலத்தில் ஈசனின் திருவடியில் சரண்புகுந்தார் அம்மை என்கிறது புராணம்.

திருவாலங்காடு ஈசன்
திருவாலங்காடு ஈசன்

அத்வைதத்தின் ஆதி ஊற்று அம்மையே!

காரைக்கால் அம்மையார் சைவசமயக் குரவர்களின் பாடல்களுக்கு முன்மாதிரியான பாடல்களைப் பாடியவர். இவர் பாடல்களில் இறைவனை அன்பின் உருவமாகவும் இந்த உலகத்தைத் தோற்றுவித்து உலகின் முதல்வனாய் விளங்கும் தன்மையைப் போற்றிப் பாடினார். அரன், அரி, அயன் என எப்பெயரிட்டு அழைத்தாலும் எல்லாமே அரக்கனின் செருக்கடக்கிய ஈசன் ஒருவனையே குறிக்கும் என்று பாடினார். அப்படியெல்லாம் பாடிய அம்மை அந்த ஈசனே சகலமும் என்னும் அத்வைதக் கருத்தையும் பாடுகிறார்.

இந்தப் பிரபஞ்சத்தில் இருக்கும் சகல உயிர்களும் சகல பொருள்களும் அந்த பரப்பிரம்மமே என்கிறது அத்வைதம். ஆதிசங்கரரே அத்வைத சித்தாந்தத்தைப் பரப்பியவராகப் போற்றப்படுகிறார். ஆனால் அவர் காலத்துக்கு முன்வாழ்ந்த காரைக்கால் அம்மையோ அத்வைதக் கருத்துப் பொருள்படும்படியும் பாடல் பாடினார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

'அறிவானும் தானே அறிவிப்பான் தானே

அறிவாய் அறிகின்றான் தானே - அறிகின்ற

மெய்ப்பொருளும் தானே விரிசுடர்பார் ஆகாயம்

அப்பொருளும் தானே அவன்' என்று பாடுகிறார்.

- அற்புதத் திருவந்தாதி

அறிபவனும், அறிவிப்பவனும், அறிவாய் இருந்து அறிகின்றவனும், அறிகின்ற மெய்ப்பொருளும் அவனே. அவனே ஐம்பூதங்களாகவும் விளங்குகின்றான் என்று அம்மை பாடுவதன் பொருள் அத்வைதமே என்றால் அது மிகையில்லை.

காரைக்கால் அம்மையார்
காரைக்கால் அம்மையார்

திருவாலங்காட்டில் காட்சி தரும் அம்மை

காரைக்காலில் வாழ்ந்த புனிதவதி கயிலாய தரிசனம் கண்டு பின் இறைவனின் அற்புதத் தாண்டவத்தைக் காண திருவாலங்காடு வந்தார். இங்கேயே அவரின் ஐக்கியமும் நிகழ்ந்தது. திருவாலங்காட்டில் அமைந்திருக்கும் ரத்ன சபை எனப்படும் திருக்கோயிலில் நடராஜர் சந்நிதியில் அமர்ந்த கோலத்தில் அம்மை காட்சி தருகிறார். பத்மாசனத்தில் அமர்ந்து ஈசனின் நடத்தைக் கண்டு பாடல்கள் பாடும் பாவனையில் கையில் தாளங்கள் ஏந்திக் காட்சி தருகிறார். உமையம்மையோ ஈசனின் ஊர்த்துவத் தாண்டவத்தைக் கண்டு வியந்து நிற்கும் பாவனையில் காட்சி தருகிறார்.

திருவாலங்காட்டில் பங்குனி மாதம் பிரம்மோற்சவம் நடைபெறும். அது முடிந்ததும் சுவாதி நட்சத்திரத்தை ஒட்டி காரைக்கால் அம்மையாரை சிறப்பிக்கும் வகையில் இரண்டு நாள்கள் உற்சவம் நடைபெறும்.

பங்குனி சுவாதியே காரைக்கால் அம்மையின் குருபூஜை தினம். எனவே அந்த நாளில் அம்மையை நினைத்து அவர் பாடிய பதிகங்களைப் பாடிப் போற்றி ஈசனை வணங்கி வேண்டுவது மிகவும் சிறப்புடையதாகும். இந்த உலகில் தாயைப் புகழ்ந்துபோற்றினால் மகிழாதவர்கள் உண்டா... அதேபோன்று திருவாலங்காட்டில் அருளும் காரைக்கால் தாயை வணங்கிப் போற்றினால் ஈசன் அகம் மகிழ்வார்.

காரைக்கால் மாங்கனித் திருவிழா
காரைக்கால் மாங்கனித் திருவிழா

காரைக்கால் அம்மையை வேண்டிக்கொண்டு காரைக்காலில் ஆனி மாதம் நடைபெறும் மாங்கனித் திருவிழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துகொள்வார்கள். அவ்வாறு தங்களின் வேண்டுதல்கள் நிறைவேறப் பெற்றவர்கள் அடுத்த ஆண்டுவந்து மாங்கனிகளை வீசி எறிந்து தங்களின் நேர்த்திக்கடனை செலுத்துவார்கள். குறிப்பாகத் திருமண வரம் வேண்டுபவர்கள், குழந்தை பாக்கியம் வேண்டுபவர்கள் காரைக்கால் அம்மையை நினைத்து வழிபட்டு வேண்டிக்கொண்டால் விரைவில் அவர்களுக்கு அந்த பாக்கியம் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

காரைக்கால் அம்மையின் குருபூஜை தினமான பங்குனி சுவாதி நாளை (30.3.21) கொண்டாடப்படுகிறது. மறக்காமல் சிவாலயம் சென்று நாயன்மார்களில் அமர்ந்த கோலத்தில் அருள்பாலிக்கும் அம்மையை வணங்கி குருவருளும் திருவருளும் பெற்று மகிழலாம். முடிந்தால் அம்மை பாடிய பதிகம் ஒன்றினை சிவன் சந்நிதியின் நின்று பாடினால் அந்த ஈசன் மகிழ்ந்து வேண்டும் வரம் தருவார்.