Election bannerElection banner
Published:Updated:

எந்த காரியமும் சிக்கலின்றி தொடர ஆருத்ரா வழிபாடே உதவும்... அதன் மகிமைகள் என்னென்ன?

ஆருத்ரா தரிசனம்
ஆருத்ரா தரிசனம்

பிரபஞ்ச இயக்கத்துக்குக் காரணமான சிவபெருமானின் ஐந்தொழில்களையும் வெளிப்படுத்தும் அற்புதக் கோலம் ஶ்ரீநடராஜ திருவடிவம்.

தமிழ் மாத பௌர்ணமி தினங்கள் ஒவ்வொன்றும் ஒரு நட்சத்திரத்தோடுக் கூடி பண்டிகை நாளாகக் கொண்டாடப்படுவது விசேஷம். மார்கழி மாத பௌர்ணமி ஆருத்ரா விழாவாக வருவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டும் மார்கழி மாத பெளர்ணமி நாள் ஆருத்ரா அபிஷேகத் திருநாளாகவும் (29-12-2020) மறுநாள் திருஆதிரை நட்சத்திர நாளில் (30-12-20202) ஆருத்ரா தரிசன நாளாகவும் கொண்டாடப்படுகின்றது.

ஆருத்ரம் என்றால் அக்னி மயமான ருத்ர சக்தியை குளிர்ந்த தெய்விக நிலைக்கு உருமாற்றி சகல ஜீவன்களும் தரிசிக்கும்படி செய்யும் புண்ணிய நாள் என்பர் பெரியோர். ஆருத்ரா நாளில்தான் வேத பீஜ மந்திர சக்திகள் ஈசனை வேண்டும் ஜீவன்களை வந்தடையும் என்றும் ஆன்மிக நூல்கள் கூறுகின்றன. ஆருத்ரா நாளில்தான் அழகே உருவான பிட்சாடன மூர்த்தி தாருகா வனத்து ரிஷிகளின் அஞ்ஞானம் அழிக்க ரௌத்திர பெருமானாக உருமாறி ருத்திர தாண்டவம் ஆடினார். மனம் திருந்திய அவர்களின் வேண்டுதலுக்காக மனமிரங்கி ஆனந்த தாண்டவமும் ஆடினார். அந்த நாளே ஆருத்ரா எனப்படுகிறது. சகல தேவர்களுக்காகவும் ஈசன் திருநடனம் புரிந்த தினம் ஆருத்ரா நன்னாள். இது நடந்த திருவழுவூர் எனப்படுகிறது. திருப்பராய்த் துறை என்னும் தாருகாவனம் என்றும் கூறப்படுகிறது.

உத்திரகோசமங்கை , ராமேஸ்வரத்தில் ஆருத்ரா தரிசனம் படம் - உ.பாண்டி
உத்திரகோசமங்கை , ராமேஸ்வரத்தில் ஆருத்ரா தரிசனம் படம் - உ.பாண்டி

அதுமட்டுமா? ஈசனின் திருநடனத்தை எல்லோரும் தரிசித்த வேளையில் சிவலோகத்தில் நிஷ்டையில் இருந்த வியாக்ரபாத முனிவரும், பதஞ்சலியும் மட்டும் காண முடியாமல் போனது. இதனால் இவர்கள் தில்லை வனத்துக்கு வந்து ஈசனை வேண்டி நெடுங்காலம் தவமியற்றினார்கள். அப்போது அவர்களுக்கு அருள் காட்சி தந்த ஈசன் அவர்களுக்காகவே தில்லையில் ஆடல் கூத்தனாக பொன்னம்பலத்தில் காட்சி தந்து ஆனந்த நடனமாடினார். இந்த நாளும் ஆருத்ரா புண்ணிய தினம்தான்.

ஊழிக் காலம் முடிந்து மீண்டும் சிருஷ்டிக்கும் காலம் தொடங்கியதும் மகா சதாசிவனான ஈசன் இந்த பிரபஞ்சம் முழுவதும் வியாபித்து நின்று பேரொளியாகத் திகழும் நாளும் ஆருத்ரா நன்னாள் என்கின்றன ஆன்மிக நூல்கள். அன்றுதான் அண்ட சராசரங்கள் உருவாகின என்றும் கூறுகின்றன. ஆருத்ரா என்றால் தொடக்கம்; சலனம்; அதிர்ச்சி என்றெல்லாம் பொருள். சலனம் தொடங்கியதும் சிருஷ்டி தொடங்கும் என்பது வேத வாக்கு அல்லவா!

'ஆருத்ரா தரிசனம்'
'ஆருத்ரா தரிசனம்'

சிவ பக்தியால் சகல சொத்துக்களையும் இழந்து வறுமையில் வாடிய சேந்தனாருக்கு அருள் புரிய ஈசனார் அவரை நாடி வந்து களி உண்ட நாளும் திருவாதிரை விழா நாளில்தான். அடுத்த நாளான ஆருத்ரா தரிசன நாளில்தான் சேந்தனார் திருப்பல்லாண்டு பாட, தில்லை தேர் நகர்ந்து ஓடிய திருவிளையாடல் நடைபெற்றது. இதனால் இன்றும்
ஆருத்ரா அபிஷேக நாளுக்கு அடுத்து வரும் ஆருத்ரா தரிசனத் திருநாளன்று திருவாதிரைக் களியுடன் ஏழுக்கு மேலான காய்கறிகள் கலந்த கூட்டு இறைவனுக்குப் படைக்கும் வழக்கம் உள்ளது.

தில்லைக்கும் முன்பாக சிவனார் ஆடிய திருத்தலம் உத்தரகோச மங்கை என்றும், அங்கே தான் ஆருத்ர வடிவில் (கருணை வடிவில்) முதன்முதலில் ஈசன் அம்பிகைக்காக ஆனந்த நடம் புரிந்தார் என்றும் சொல்லப்படுகிறது. அதனாலேயே அங்கு இன்றும் மரகத நடராஜராக ஆடல் வல்லான் நம்மை ஆண்டு கொண்டிருக்கிறான். 'மத்தளம் முழக்க மரகதம் உடைபடும்' என்பார்கள் பெரியோர். அதனால்தான் சிறிய சலனத்துக்கே பழுதாகும் தன்மை படைத்த மரகதக் கூத்தனின் திருமேனியில் சந்தனக் காப்பிட்டு பாதுகாக்கிறார்கள். திருவாதிரை நாளில் மட்டுமே திருக்காப்பு களையப்பட்டு கூத்தனின் திருமேனியை மரகத வடிவிலேயே தரிசிக்கலாம் என்பது சிறப்பான விஷயம்.

ஆருத்ரா நாளில்... அற்புத தரிசனம்!
ஆருத்ரா நாளில்... அற்புத தரிசனம்!

பாம்பும் புலியும் போற்ற, பாரில் பொன்னம்பலத்தில், பாதம் தூக்கி ஆடும் அந்த பரமேஸ்வரனின் திருப்பாதங்களைப் பற்றிக்கொண்டு வாழ்வோம். ஆருத்ரா நாளில் தொடங்கப்படும் எந்த காரியமும் சிக்கலின்றி நடைபெறும் என்பார்கள். இந்த நாளில் சேரும் செல்வம் மேலும் மேலும் பெருகும் என்பார்கள். அழகியக் கூத்தனின் அருளால் எல்லோரும் எல்லாமும் பெற்று வாழ வேண்டுவோம். திருச்சிற்றம்பலம்!

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு