Published:Updated:

சைவ மறுமலர்ச்சிக்குப் பாடுபட்ட அப்பய்ய தீட்சிதரின் ஜயந்திவிழா!

அப்பய்ய தீட்சிதர்
அப்பய்ய தீட்சிதர்

மறைந்திருந்த கொலைகாரர்கள் ஒரு பெரும் கூட்டம் நடந்துவரும் சத்தத்தைக் கேட்டார்கள். சத்தம் வந்த வழியில் நூற்றுக்கணக்கான சிவகணங்கள் கைகளில் வேலும் சூலமும் ஏந்தியபடி நடந்துவர அவர்களுக்கு நடுவே கம்பீரமாக ஏகாந்த பாவனையில் ஸ்தோத்திரம் சொல்லியபடி வருகிறார் அந்த மகான்.

அவர் ஒரு பெரிய மகான். சிறுவயதிலிருந்தே சிவநாமத்தைச் சொல்லியே வளர்ந்தவர். அவரின் அருமைகளை அறிந்த மன்னர் அவருக்குக் கனகாபிஷேகம் செய்தார். கனகசபையில் ஆடும் அந்த கயிலாயநாதனை மனதுள் நினைத்துவாழ்பவர், கனகத்தின் மீது தன் கவனத்தைக் கொள்ளுவாரா... அனைத்தையும் சிவாலயப் பணிகளுக்கே என்று ஒதுக்கிவிட்டுக் கால்நடையாகத் தன்னூருக்குத் திரும்பத் தொடங்கினார். பொழுது சாய்ந்து பின்னேரமாகியிருந்தது. அரசன், துணைக்குத்தன் படையையே அனுப்பத் தயாராக இருந்தான். ஆனால் அவரோ தனக்கு அந்த மகேஸ்வரன் ஒருவனின் துணை போதும் என்று சொல்லிக் காட்டுவழி தனித்து நடக்க ஆரம்பித்தார். அவர் உதடுகள் , ‘சம்போ மகாதேவ தேவா சிவ சம்போ மகாதேவ தேவேச சம்போ - சம்போ மகாதேவ தேவா’ என்று எப்போதும் தன் வழியைக் காப்பவரான அந்த வழித்துணை நாதரைத் துதிக்க ஆரம்பித்தன.

அடையப்பலம் கோயில்
அடையப்பலம் கோயில்

அடையப்பலம் கோயில்ஞானிகளின் மகிமை உணர்த்துவதற்காகவே அஞ்ஞானிகளும் இந்த உலகில் பிறக்கிறார்கள். அப்படி ஒருவர் அந்த அரசவையிலேயே இருந்தார். அவர் அந்த மகானைக் கொல்ல ஆட்களை ஏற்பாடு செய்திருந்தார். கானகத்தின் மத்தியில் வைத்துக் கொல்லத் திட்டம். இறைவனைத் துதித்துக்கொண்டே வருகிறார் மகான். காட்டிற்குள் நீண்டதூரம் வந்துவிட்டார். மறைந்திருந்த கொலைகாரர்கள் ஒரு பெரும் கூட்டம் நடந்துவரும் சத்தத்தைக் கேட்கிறார்கள். சத்தம் வந்த வழியைப் பார்க்கிறார்கள்.

அங்கே நூற்றுக்கணக்கான சிவகணங்கள் கைகளில் வேலும் சூலமும் ஏந்தியபடி நடந்துவர அவர்களுக்கு நடுவே கம்பீரமாக ஏகாந்த பாவனையில் ஸ்தோத்திரம் சொல்லியபடி வருகிறார் அந்த மகான். இதைக் கண்ட கொலைகாரர்களால் தங்கள் கண்களைத் தங்களாலேயே நம்பமுடியவில்லை. தாங்கள் செய்ய இருந்த பாதகத்தை எண்ணி மனம் வருந்தினர். தங்கள் தவற்றுக்கு மன்னிப்புக் கேட்கவில்லை என்றால் என்ன ஆகும் என்று பயந்து ஓடிச் சென்று அந்த மகானின் காலடியில் வீழ்ந்தனர். அந்த நொடியில் அவரைச் சுற்றியிருந்த சிவகணங்கள் மறைந்தன. தங்களின் எண்ணத்தைச்சொல்லி, தாங்கள் கண்ட காட்சியையும் சொல்லிப் பிழைபொறுக்குமாறு வேண்டினர். ஈசனின் கருணையைச் சிந்தித்துச் சிலிர்த்தார் அந்த மகான். அவர்தான் அப்பய்ய தீட்சிதர். அவர் அப்போது பாடிய ஸ்லோகமே 'மார்க்க பந்து ஸ்தோத்திரம்' என்று போற்றப்படுகிறது.

சிவபெருமான்
சிவபெருமான்
பஞ்சாங்கக் குறிப்புகள் -  அக்டோபர் 14 முதல் 20 வரை #VikatanPhotoCards

அப்பய்ய தீட்சிதர் 1520-ம் ஆண்டு வேலூருக்கு அருகேயுள்ள திரிவிரிஞ்சிபுரம் எனும் ஊரில் ரங்கராச தீட்சிதர் என்பவரின் மகனாக அவதரித்தார். ஆதி சங்கரரின் அவதாரம் என்று போற்றப்பட்ட அப்பய்யர் சிறுவயதிலேயே சிவதீட்சை பெற்றார். வேதம் முதலான சாஸ்திரங்களைக் கற்றுக் கரைகண்டார். அந்நிய மதங்களாலும் வைணவ சைவச் சமயப் பூசல்களாலும் சைவ சமயம் புகழ்மங்கியிருந்த சமயத்தில் நாயன்மார்களைப் போன்று பணிசெய்து மீண்டும் சைவ சமய மறுமலர்ச்சி ஏற்படக் காரணமாயிருந்தார். வேதாந்த விமர்சனம், தத்துவம், பக்தி இலக்கியம் எனப் பல்துறை சார்ந்து சிறந்துவிளங்கிய அப்பய்ய தீட்சிதர் ஆத்மார்ப்பண ஸ்துதி, குவலயானந்தம், சித்தாந்த லேச சங்கிரகம் முதலிய 104 நூல்கள் எழுதியதாகக் குறிப்பிடப்படுகிறது. அவற்றுள் தற்போது 60 நூல்களே தொகுக்கப்பட்டுப் பாதுகாக்கப்பட்டுள்ளன.

இதில் சித்தாந்த லேச சங்கிரகம் என்னும் நூல் அத்வைதத்தின் நுட்பமான விளக்கங்களைக் கொண்டது. இன்றளவும் அத்வைத பாஷ்யம் பயில விரும்புகிறவர்கள் கற்கவேண்டிய முதல்நூலாக இந்நூல் அமைந்துள்ளது. வடமொழியில் அமைந்த இந்த நூலை கிருஷ்ணானந்த தீர்த்தர் தமிழில் பொருளுடன் மொழிபெயர்த்துள்ளது குறிப்பிடத்தக்கது. இவரது ஆத்மார்ப்பண ஸ்துதி என்னும் நூல் மிகவும் முக்கியமானதாகக் கருதப்படுகிறது. பொதுவாக அனைவரும் இறைவனைப் பாடி ஸ்தோத்திரம் செய்கிறோம். ஆனால் அதை உதடுகளில் இருந்து சொல்கிறோமா அல்லது ஆத்மார்த்தமாகச் சொல்கிறோமா என்னும் சந்தேகம் அனைவருக்குமே எழும். அப்படித்தான் அப்பய்யருக்கும் சந்தேகம் ஏற்பட்டது. ‘தான் உள்ளார்ந்த ஆத்மாவிலிருந்து துதிக்கிறோமா’ என்பதை சோதித்தறிய விரும்பினார்.

மார்க்கபந்தீஸ்வரர் கோயில்
மார்க்கபந்தீஸ்வரர் கோயில்

மனிதனின் புத்தியை தடுமாறச் செய்யும் ஊமத்தங்காயைப் பறித்துக்கொண்டார். அதேபோல அதிலிருந்து மீட்கும் மருந்தையும் தயார் செய்துவைத்துக்கொண்டார். தன் மாணவர்களை அழைத்து, “நான் நினைவைச் சிதறடிக்கும் இந்தக் காயை உண்ணப்போகிறேன். என் சுயநினைவு இழந்தபின் நான் சொல்வனவற்றையெல்லாம் எழுதிவையுங்கள். பின்பு இந்த மாற்றுமருந்தை எனக்குக் கொடுங்கள். நான் நினைவில்லாதபோது என்ன சொல்கிறேன் என்பதை அறிந்துகொள்ளவிரும்புகிறேன்” என்றார். ‘உயிருக்கே ஆபத்தை உண்டாக்கும் இந்த விளையாட்டை விளையாடுவானேன்’ என்று மாணவர்கள் நினைத்தாலும் அவரின் வார்த்தைக்கு மறுபேச்சின்றி அவர் சொல்லப்போகும் வார்த்தைகளுக்காகக் காத்திருந்தனர்.

நினைவிழந்த கணத்திலிருந்து அவர் ஸ்லோகங்களைச் சொல்லத் தொடங்கினார். அனைத்தும் சிவபெருமானைப் போற்றுபவை. இதைக் கண்டு வியந்த அவர் மாணவர்கள் அவற்றையெல்லாம் எழுதியதோடு ஆத்மார்த்தமாக அவர் உரைத்த ஸ்லோகங்கள் என்பதால் இதற்கு ஆத்மார்ப்பண ஸ்துதி என்று பெயரிட்டனர். இதற்கு ‘உன்மத்தப் பஞ்சாசத்’ என்றும் பெயருண்டு. உன்மத்தம் என்றால் பித்து நிலை என்று பொருள்.

சிவபெருமான்
சிவபெருமான்

சிவனைத் துதிப்பதையே தன் வாழ்வின் லட்சியமாகக் கொண்டிருந்த அப்பய்ய தீட்சிதர் வைணவம் மீதும் மதிப்பும் மரியாதையும் கொண்டு விளங்கினார். இதைவிளக்க ஒரு நிகழ்வினைச் சொல்வதுண்டு. ஒரு சமயம் அவர் மதுரை அழகர்கோயிலுக்குச் சென்றார். அப்போது கோயில் வாசலிலேயே இருக்கும் கருப்பண்ண சாமியை வணங்கினார். அப்போது சில குறும்புக்கார நண்பர்கள் சிலர் தீட்சிதரின் கையைப் பிடித்து கருப்பண்ண சாமியின் சந்நிதியில் சத்தியம் செய்வதுபோலச் செய்து, ‘வேதம், பரம், பரப்பிரும்மம் என்று பரத்துவமாக யாரைக் குறிப்பிடுகிறது’ என்று கேட்டார்கள்.

கருப்பண்ண சாமி சந்நிதியில் பொய் சத்தியம் செய்யக்கூடாது என்பது ஐதிகம். தீட்சிதரும் சிரித்துக்கொண்டே, ‘நாராயண பரோவக்யாத் அண்டம் அவயக்த சம்பவம்’ என்று ஆதிசங்கர பாஷ்யம் சொல்லியிருக்கிறது என்றார். ‘நாராயணனும் சிவனும் வேறுவேறல்ல. பரம்பொருளை சமயங்களுக்குள் சிக்க வைக்க முடியாது’ என்று சொல்லிச் சத்தியம் செய்தார்.

சிவபெருமான்
சிவபெருமான்
சனிபகவான் குறித்த அற்புதத்தகவல்கள்... பரிகாரத்தலங்கள் ! #Video

இத்தகைய அற்புத ஞானியின் ஜயந்தி தினம் 14.10.19 அன்று வருகிறது. இந்த நாளில் சிவநாமத்தை ஜபம் செய்து குருவருளையும் திருவருளையும் பெறுவோம். அப்பய்ய தீட்சிதர் பாடிய மார்க்க பந்து ஸ்தோத்திரத்தைப் பயணங்களின் போது சொல்வது மிகவும் சிறந்தது. இந்த பிறவிப் பிணிக்கு மருந்தாகும் ஈசன் நம் வாழ்க்கைப் பயணத்திலும் துணைசெய்வான். விபத்தில்லாத அற்புதப் பயணமாக நம் வாழ்க்கைப் பயணங்கள் அமைந்திடும்.

அடுத்த கட்டுரைக்கு