Published:Updated:

கள்ளழகர் யாத்திரை, வஸ்திரரகசியம், ஆரத்தி வழிபாடு... மதுரை சித்திரைத்திருவிழா கதைகளும் காரணங்களும்!

கள்ளழகர்
கள்ளழகர்

விரதம் தொடங்கி, காப்புக் கட்டி, கள்ளர் வேடமிட்டு, அழகர் மீது பாட்டெடுத்து, நீர் தெளித்து, தீபம் காட்டி வணங்குவது என விதவிதமாய் வேண்டுதல் வைக்கும் அன்பர்கள் இல்லத்தில் சித்திரை முழுவதும் கொண்டாட்டம்தான்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

சித்திரைத் திருவிழா அன்னை மீனாளையும் அழகர் பெருமாளையும் தங்கள் குடும்பத்து உறவாக தமிழ் மக்கள் சிறப்பித்துக் கொண்டாடும் அற்புதத் திருவிழா. மண்மணக்க மக்கள் மனம் மகிழ மாமதுரை கொண்டாடும் இந்த விழாவின் சிறப்பு அங்கங்கள் மீனாள் கல்யாணமும் அழகர் யாத்திரையும்தான்!

மக்களைத் தேடி மலையிறங்கி பவனி வந்து வைகையில் அழகர் எழுந்தருள்வது என்னவோ சித்திரைப் பெளர்ணமியில்தான். ஆனால், அவரைக் கொண்டாடும் சனங்களின் மனத்திலோ சித்திரைத் தொடக்கத்திலேயே அழகாய் எழுந்தருளி விடுகிறார் அழகர்.

விரதம் தொடங்கி, காப்புக் கட்டி, கள்ளர் வேடமிட்டு, அழகர் மீது பாட்டெடுத்து, நீர் தெளித்து, தீபம் காட்டி வணங்குவது என விதவிதமாய் வேண்டுதல் வைக்கும் அன்பர்கள் இல்லத்தில் சித்திரை முழுவதும் கொண்டாட்டம்தான்.

கள்ளழகர்..!
கள்ளழகர்..!

விழா அற்புதத்தைக் காணும்முன் அழகர்மலை அற்புதத்தைச் சற்றுத் தெரிந்துகொள்வோம்.

அழகர் மலை - கோடிக்கணக்கான தமிழ் நெஞ்சங்களில் என்றென்றும் நிலைத்து நிற்கும் அழகு மலை அது. திருமாலிருஞ்சோலை என்று இலக்கியங்களும் ஞான நூல்களும் போற்றுகின்றன. வைணவ திவ்விய தேசங்களில் ஒன்றாகவும் திகழும் அழகர்மலைக்கு மாலிருங் குன்றம், சோலை மலை, ரிஷபகிரி ஆகிய பெயர்களும் உண்டு.

சிந்துரச் செம்பொடிப்போல்திருமாலிருஞ் சோலையெங்கும்

இந்திர கோபங்களே எழுந்தும்பரந் திட்டனவால்

மந்தரம் நாட்டியன்று மதுரக்கொழுஞ் சாறுகொண்ட

சுந்தரத் தோளுடையான் சுழலையினின் றுய்துங்கொலோ

என்று இந்த மலையில் குடியிருக்கும் அழகனை - சுந்தரபாஹுவைப் பாடிப் பரவுகிறாள் ஆண்டாள். ஆம்! அழகரின் உற்சவருக்கு சுந்தர ராஜன் என்றும் 'சுந்தரபாஹு' என்றும் திருப்பெயர்கள் வழங்குகின்றன. 'சுந்தரன்' என்றால் 'அழகன்' என்றல்லவா பொருள். ஆக, இந்த மலையும் அதன் மேல் கோயில்கொண்டிருக்கும் பெருமாளும் மிகப் பொருத்தமான பெயர்களையே ஏற்றிருக்கிறார்கள்!

அழகர் கோயில்
அழகர் கோயில்

சிலம்பும் பரிபாடலும் இந்த அழகுமலையின் இயற்கை வனப்புகளை அழகுற விவரிக்கின்றன. பஞ்ச ஆயுதங்களுடன் பெருமாள் அருளும் இந்த மலையில் கிருத யுகம் அல்லது திரேதாயுகத்திலேயே கோயில் அமைக்கப்பட்டிருக்கவேண்டும் என்பது புராணங்களின் கணிப்பு.

ஆண்டாள் நேர்ந்துகொண்ட அக்கார அடிசில் பிரார்த்தனை, அதை ராமாநுஜர் நிறைவேற்றிய திருக்கதை, அபரஞ்சி எனும் அபூர்வ தங்கத்தால் ஆன உற்சவர், பிரயோக நிலையில் சக்ரத்தாழ்வார்... இப்படி அழகர் மலைக் கோயிலின் சிறப்புகளைச் சொல்லிக்கொண்டே போகலாம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

கள்ளழகர் கோயில் சித்திரைத் திருவிழாவின் மூன்றாவது நாள், திருக்கோயிலின் கொண்டப்ப நாயக்கர் மண்டபத்திலிருந்து கள்ளர் வேடத்தில் தங்கப்பல்லக்கில் மதுரைக்கு எழுந்தருளும் அழகர், பொய்கைக் கரைப்பட்டி, கள்ளந்திரி, அப்பன் திருப்பதி வழியாக சுந்தர்ராஜன்பட்டி மறவர் மண்டபத்தை வந்தடைவார்.

அங்கிருந்து கடச்சனேந்தல் வழியாக மூன்றுமாவடியை வந்தடையும் போது, பொதுமக்கள் அழகரை எதிர்கொண்டு அழைத்துச் செல்வார்கள். அன்றிரவு தல்லாகுளம் பிரசன்ன வேங்கடாசலபதி கோயிலில் எழுந்தருள்வார். மறுநாள் காலையில் தங்கக்குதிரை வாகனத்தில் கள்ளழகர் வைகையாற்றில் எழுந்தருளும் வைபவம் நிகழும். பத்தாம் நாள் கள்ளர் திருக்கோலத்திலேயே பூப்பல்லக்கில் திருமாலிருஞ்சோலைக்கு எழுந்தருள்வார்!

அம்பி பட்டர்
அம்பி பட்டர்

இந்த வைபவத்தில் மண்டூக ரிஷிக்கு அழகர் சாபவிமோசனம் அருள்வது முக்கிய நிகழ்வாகும். 'வைகை நதியில் நீ தவளையாக இருப்பாயாக’ என்று சுபதஸ் முனிவரைச் சபித்துவிடுகிறார் துர்வாசர். சுதபஸ் முனிவர் தவளையாக மாறிவிட்டதால், அவர் மண்டூக ரிஷி என்று பெயர் பெற்றார்.

அவர், சாபவிமோசனம் தரும்படி துர்வாசரை வேண்டிக்கொள்ள,

"விவேகவதி (வைகை) தீர்த்தக் கரையில் தவமியற்றி வா. அழகர் வந்து விமோசனம் தருவார்’’ என்று வழிகாட்டினார் துர்வாசர். அதன்படி, சுதபஸ் முனிவருக்கு சாபவிமோசனம் அளிக்கவே கள்ளழகர் வைகைக்கு எழுந்தருள்வ தாகப் புராணங்கள் கூறுகின்றன.

சித்திரைத் திருவிழாவின் ஒரு பகுதியாக தேனூர் மண்டபத்தில் அழகரை எழுந்தருளச் செய்து சுதபஸ் முனிவருக் குச் சாப விமோசனம், அளிக்கப்படுகிறது. அப்போது, முனிவர் சாப விமோசனம் பெற்றதைக் குறிக்கும் விதமாக 'நாரை’ பறக்கவிடப்படும்.

இங்ஙனம் அழகர் வைகைக்கு வரும்போதும் திரும்பும்போதும் பல மண்டகப்படிகளில் எழுந்தருள, சிறப்பு ஆராதனைகளும் கொண்டாட்டங்களும் அமர்க்களப்படும். வண்டியூரில் சைத்ர உபசாரம் நிகழும் அழகருக்கு.

யாத்திரை... வைபவங்கள்... மட்டுமா அழகரின் அலங்காரமும் வஸ்திர வண்ணமும்கூட முக்கியத்துவம் பெறுகின்ற இந்த விழாவில்.

இந்த அற்புத விழா குறித்து அழகர் திருக்கோயிலின் அம்பி பட்டர் என்ன சொல்கிறார்? அழகர் வர்ணனைப் பாட்டு என்றால் என்ன? இப்படிப் பல செய்திகளை அறிந்துகொள்ளக் கீழே இருக்கும் வீடியோவைப் பாருங்கள்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு