Published:Updated:

வாழ்வை வளமாக்க உதவும் கந்த சஷ்டி விரத மகிமைகள், கடைப்பிடிக்க வழிகாட்டல்!

முருகன்
முருகன்

அந்தக் கொக்கின் சாற்றை வேதம் பயிலும் பிராமணர்கள் விரும்பி ஏற்றனர். வீர சைவர்களாகத் திகழ்பவர்களும் அதை ஓடிவந்து தாமும் அருந்தினர். இவர்களுக்குப் போட்டியாகத் தவம் செய்யும் முனிவர்களும் பாய்ந்து வந்து அதை விரும்பிப் பெற்றனர். சுவையான அந்தச் சாற்றை அனைவரும் கொண்டாடி மகிழ்ந்தனர்.

குற்றாலக்குறவஞ்சி தமிழ் சிற்றிலக்கியங்களில் மனதைக் கொள்ளைகொள்ளும் ஓர் அற்புத இலக்கியம். அதில் சுவையான பாடல் ஒன்று உண்டு. அந்தப் பாடல் மலையில் வாழும் ஒரு வேடன் குறித்தது. அவன் மனைவி ஒரு குறத்தி.

வேடன் ஒருநாள் வேட்டைக்குப் போனான். கடுமையான வேட்டை. ஆறுநாள்கள் தேடி அலைந்ததில் ஒரே ஒரு கொக்கு அவனிடம் அகப்பட்டது. ஆறுநாள்கள் போராடிக் கிடைத்த அந்தக் கொக்கை சமைக்க ஒரு சட்டியில் சாறாக்கி வைத்தான்.

கந்த சஷ்டி
கந்த சஷ்டி

அட, அந்தக் கொக்கின் சாற்றை அருந்த வேதம் பயிலும் பிராமணர்கள் விரும்பி ஏற்றனர். காலங்காலமாக வீர சைவர்களாகத் திகழ்பவர்களும் ஓடிவந்து தாமும் அதை அருந்தினர். இவர்களுக்குப் போட்டியாகத் தவம் செய்யும் முனிவர்களும் பாய்ந்து வந்து அதை விரும்பிப் பெற்றனர். சுவையான அந்தச் சாறை அனைவரும் கொண்டாடி மகிழ்ந்தனர் என்கிறது அந்தப்பாடல். ‘என்னது, கொக்கின் சாற்றை, வேத பிராமணர்களும் சைவர்களும் முனிவர்களும் விரும்பி உண்டார்களா’ என்று ஆச்சர்யத்தோடு அந்த அற்புதப் பாடலின் பொருளைத் தேடினால் அது கந்தக் கடவுளின் பெருமையைப் பறைசாற்றும் பாடலாகத் திகழ்கிறது.

குறத்தி என்றால் அது வள்ளிக்குறத்தி. அவளைக் கொண்ட வேடுவன் முருகன். ஆறுநாள்கள் அவன் நடத்திய வேட்டை சூரபத்மன் முதலான அசுரர்களுடனான யுத்தம். `கொக்கு’ என்றால் `மாமரம்’ என்றும் பொருள். ஆறாம்நாள் மாமரமாகி நின்ற சூரபத்மனை வென்றான் முருகன். சஷ்டியே இங்கு ‘சட்டி’ ஆனது. சாறு என்றால் திருநாள் என்று பொருள். முருகன் சூரபத்மனை அழித்த சஷ்டிப் பெருவிழாவை அனைவரும் கொண்டாடி மகிழ்ந்தனர் என்பதுவே இந்தப் பாடலின் பொருள்.

கந்த சஷ்டி
கந்த சஷ்டி

ஐப்பசி மாதத்துக்கு ஆயிரம் பெருமைகள் இருந்தாலும் அதில் முக்கியமானது சஷ்டி விரதம். முருகக் கடவுளை வழிபட உகந்த திதி. சஷ்டி. அதிலும் ஐப்பசி மாத வளர்பிறையில் வரும் சஷ்டி கந்த சஷ்டி என்று புகழப்படுகிறது.

முருகனுக்கு அழகுதமிழில் ஆயிரம் நாமங்கள் உண்டு. முருகன், கந்தன், குமரன், வேலன், செவ்வேள், செய்யோன் என்று அவன் திருப்பெயர்கள் ஒவ்வொன்றும் ஒரு சிறப்பை உடையது. அழகு தமிழில் முருகனின் பெயர்கள் ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு பொருள். இதில் ‘கந்தன்’ என்னும் பெயர் தனிச் சிறப்புடையது.

கந்த புராணம், கந்தரலங்காரம், கந்தர் அனுபூதி, கந்த சஷ்டிக் கவசம் எனக் கந்தன் என்னும் பெயரோடே முருகனின் பெருமைகள் பேசப்பட்டுவந்துள்ளன. `கந்து’ என்றால் பற்றுக்கோடு என்று பெயர். இந்த வாழ்க்கைக் கடலைக் கடக்க நாம் பற்றிக்கொள்ள வேண்டியவன் என்பதால் அவன் கந்தன். வடமொழி நிகண்டு ஒன்று கந்தன் என்ற சொல்லுக்கு பகைவர்களின் பராக்கிரமங்களை ஒடுக்குபவன் என்று பொருள் சொல்கிறது. நமக்குள் இருக்கும் பகை நம் மனம். அதை ஒடுக்கி நல்வழிப்படுத்துபவன் ஆகையால் அவனைக் கந்தன் என்று சொல்வது பொருத்தமே. இத்தகைய பெருமைகளையுடைய கந்தனின் பெயராலே குறிப்பிடப்படும் கந்த சஷ்டி ஆறுநாள் விரதமாக முருக பக்தர்களால் கடைப்பிடிக்கப்படுகிறது.

முருகன்
முருகன்

சூர சம்ஹாரம் உணர்த்தும் தத்துவம்

முருகக் கடவுளின் பராக்கிரமங்களைச் சொல்வது சூர சம்ஹாரம். சூரபத்மன் ஆணவத்தில் முருகக் கடவுளோடு போர்புரிந்தான். தன் வலிமையாலும் மாயையாலும் முருகனை வெல்ல நினைத்தான். ஆனால், ஆதிமுதல்வானான ஈசனின் மகனுக்கு முன்பாக அவை தோற்றன. முருகனின் கை வேலுக்கு சக்திவேல் என்றுபெயர். அன்னையே தன் அம்சமாக அந்த வேலை முருகக் கடவுளுக்கு வழங்கினார். அந்த சக்திவேல் சூரர் படையை அழித்தது.

வீரத்தால் முருகனை வெல்ல முடியாது என்றுணர்ந்த சூரபத்மன், இறுதியில் தன் மாயையால் வெல்ல நினைத்து மாமரமாகி நின்றான். வீரத்தை வெல்ல சக்தியாக நின்ற வேல், மாயையை வெல்ல ஞானவேலாக மாறியது. மாயையை இருகூராகக் கிழித்தது. ஞானத்தின் தீண்டுதலால் மாயை அகல அந்த மாமரம், மாயை அற்ற சேவலாகவும் மயிலாகவும் மாறியது. சூர சம்ஹாரம், ஞான உபதேசமாக மாறிப்போக பகைவனான சூரபத்மன் முருகக் கடவுளின் புகழ்போற்றும் கொடியும் வாகனமும் ஆனான். ஆணவம் அழிந்து ஞானமும் பெற்றுவிட்டால் எந்த ஆன்மாவுமந்தப் பரமாத்மாவோடு ஐக்கியமாகிவிடலாம் என்பது கந்த சஷ்டி சொல்லும் வாழ்க்கை ரகசியம்.

முருகன்
முருகன்
குறைகள் தீர்க்கும் கேதார கௌரி விரதம்! கடைபிடிப்பது எப்படி?

அந்த ஞானத்தைப் பெற்றுத் தரும் அற்புத விரதமே கந்த சஷ்டி. முருகப் பெருமான் கோயில் கொண்டுள்ள அனைத்து ஆலயங்களிலும் கந்த சஷ்டிப் பெருவிழா உற்சாகமாக இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியுள்ளது. முருகபக்தர்கள் இன்றுமுதல் ஆறுநாள்கள் விரதமிருந்து முருகனை வழிபடுவர்.

கந்த சஷ்டி விரதம் - ஒரு வழிகாட்டல்

28.10.2019 அன்று தொடங்கும் இந்த விரதம் ஆறாவது நாளான 2.11.2019 அன்று சூரசம்ஹாரத்தோடு நிறைவுபெறும்.

ஆறுநாள்களும் தினமும் அதிகாலையில் எழுந்து குளித்து திருநீறு தரித்து, முருகக் கடவுளை வணங்க வேண்டும். அருகில் இருக்கும் ஆலயங்களுக்குச் சென்று வணங்குவது சிறப்பு. குறிப்பாக, யாகசாலை அமைத்து பூஜைகள் நடைபெறும் ஆலயங்களுக்குச் செல்வது விசேஷம். ஆறுநாள்களும் உண்ணா நோன்பிருக்க வேண்டும்.

ஆறுமுகன்
ஆறுமுகன்

ஒருசிலர் பால் பழம் உட்கொள்வது வழக்கம். ஒருசிலர் ஒரு வேளை மட்டும் உப்பில்லா உணவை உண்பர். எதுவாக இருந்தாலும் ஆறுநாள்களும் ஒரே மாதிரி வழக்கத்தைப் பின்பற்றுவது நன்று.

முருகனின் பெருமைகளைப் பாடும், கந்த சஷ்டிக் கவசம், கந்த குரு கவசம், வேல்மாறல், வேல் வகுப்பு போன்ற துதிகளை நாள்முழுவதும் பாட வேண்டும். இதன்மூலம் மன ஒருமைப்பாடு சாத்தியப்படும்.

குருப்பெயர்ச்சி -2019 பொதுப் பலன்கள்! #Astrology

ஆறாவது நாள் சூர சம்ஹாரத்தை தரிசித்து நீராடிப் பின் முருகனை வழிபட வேண்டும். ஒருசிலர் சூரசம்ஹாரம் முடிந்ததும் உணவு எடுத்துக் கொள்வார்கள். அது தவறு. ஏழாவது நாள் காலையில் முருகப் பெருமானை தரிசித்த பின்பு உணவு உண்டு விரதம் முடிப்பதே சிறந்தது.

விரதத்தில் முக்கியமானது பக்தி. இந்த ஆறுநாள்களும் முருகனை மனதில் நினைத்துத் துதித்த வண்ணம் இருக்க வேண்டும். அவ்வாறு விரதம் இருந்தால் முருகப் பெருமானின் அருள் ஸித்திக்கும் என்பது நம்பிக்கை.

அடுத்த கட்டுரைக்கு