Published:Updated:

சென்னைப் பெருங்குடியில் கோடி சுவாமிகள் தபோவனம்... பஞ்சமகாபுருஷ யாகத்துடன் கலசாபிஷேகம் கோலாகலம்!

கோடி சுவாமிகள்
கோடி சுவாமிகள்

தனுஷ்கோடிக்குப் பிறகு கோடி சுவாமிகள் திருச்சியில் சில காலம் தங்கினார். கடைசியாக 1962-ம் ஆண்டு புரவிபாளையம் ஜமீனுக்கு வந்து சேர்ந்தார். பிறகு அங்கிருந்தபடி தன்னைத் தேடிவரும் பக்தர்கள் அனைவருக்கும் அருளாசி புரிந்தார்

மத்திம வயதைக் கடந்த பெண்மணி அவர். தீராத வயிற்றுவலியால் அவதிப்பட்டார். ஆயுர்வேதம், அலோபதி, நாட்டுவைத்தியம் என்று பார்க்காத வைத்தியம் இல்லை. ஆனாலும் வயிற்று வலி தீரவில்லை. ஒரு முறை வயிற்றுவலி தாங்கமுடியாமல் மருத்துவமனையிலேயே அந்தப் பெண்மணி கதறியபோது அருகிலிருந்த ஒருவர், ``மருத்துவத்தால் விரட்டமுடியாத வயிற்று வலியை புரவிப்பாளையம் சுவாமிகள் விரட்டியடிப்பார்” என்றார்.

கோடி சுவாமிகள்
கோடி சுவாமிகள்

அவர் கூறியதில் நம்பிக்கை இல்லாவிட்டாலும் வயிற்று வலிக் கொடுமையால், வேறு வழியின்றி புரவிப் பாளையம் சென்ற பெண்மணி சுவாமிகளை தரிசித்தார். அந்தப் பெண்மணியைப் பார்த்ததும், ``இப்போதுதான் என்னைப் பார்க்க வேண்டும் என்று தோன்றியதா?” என்று கேட்ட சுவாமிகள் பக்தர் ஒருவர் தனக்கு அளித்த சாக்லேட் ஒன்றை எடுத்துக் கொடுத்து, ``இதைச் சாப்பிடு. வயிற்றுவலி பறந்து போய்விடும்” என்றார்.

அந்தப் பெண்மணிக்கோ அதிர்ச்சி தாங்கவில்லை. ஏனெனில் தனக்கு வயிற்று வலி என்பதை அவர் சுவாமிகளிடமும் சரி, அங்கிருந்தவர்களிடமும் சரி கூறவே இல்லை. சுவாமிகள் கூறியதைக் கேட்டதும் நம்பிக்கை பெற்று அந்தச் சாக்லேட்டை சாப்பிட்டுவிட்டு, சுவாமிகளிடம் ஆசீர்வாதம் பெற்றுவிட்டு வந்தார்.

அதன்பிறகு, வயிற்றுவலி போன இடம் தெரியவில்லை. இப்படிப் பல பேரின் தீரா துயரங்களைத் துடைத்து வைத்தவர், கோடி மஹா சுவாமிகள். கோடி சுவாமிகள் என்றும் தாத்தா சுவாமிகள் என்றும் அழைக்கப்படும் இவரது இயற்பெயர் என்ன... எப்போது பிறந்தார்... இந்த மகானை ஈன்றெடுத்த புண்ணிய தம்பதி யார்... என்று எந்த விவரமும் யாருக்கும் தெரியாது. கோடி சுவாமிகளைப் பற்றிய விவரம் 1940-ம் ஆண்டிலிருந்துதான் தெரிய வருகிறது.

அவரை முதன்முதலில் கண்டதாகக் கூறுபவர் ரயில்வே போலீஸ் சப் - இன்ஸ்பெக்டராக இருந்து ஓய்வு பெற்ற என்.வரதராஜுலு. ``ரயில்வேயில் சப் - இன்ஸ்பெக்டராகப் பணியாற்றியதால் மண்டபத்திலிருந்து தனுஷ்கோடிக்கு ரோந்து செல்வேன். எப்போதும் ஒற்றைக்காலில் தவம் செய்துகொண்டிருக்கும் சுவாமிகளைப் பார்த்திருக்கிறேன். எப்போது சாப்பிடுவார், எப்போது தூங்குவார் என்ற விவரம் யாருக்கும் தெரியாது. எப்போதும் ஒற்றைக்காலில் நின்றுகொண்டிருப்பார். இவரைப் பார்த்துவிட்டுச் சென்றால் கடலில் மீன்கள் அதிகம் கிடைக்கும் என்று நம்புவார்கள் மீனவர்கள். அவரைப் பார்த்தபிறகு என் வாழ்க்கையே மாறிவிட்டது. பலவித அற்புதங்கள் நடைபெற்றிருக்கிறது” என்று கோடி சுவாமிகளைப் பற்றிக் கூறியிருக்கிறார் சப் இன்ஸ்பெக்டர் வரதராஜுலு.

தனுஷ்கோடிக்குப் பிறகு கோடி சுவாமிகள் திருச்சியில் சில காலம் தங்கினார். கடைசியாக 1962-ம் ஆண்டு புரவிபாளையம் ஜமீனுக்கு வந்து சேர்ந்தார். பிறகு அங்கிருந்தபடி தன்னைத் தேடிவரும் பக்தர்கள் அனைவருக்கும் அருளாசி புரிந்தார். அதே கிராமத்தில் 11.10.94 அன்று மகா சமாதி அடைந்தார் சுவாமிகள். மகா சமாதி அடைவதற்கு முன்பு தன் பக்தர்களின் துயர் துடைத்ததைப் போன்றே இன்றும் சூட்சும வடிவில் பக்தர்களுக்கு அருள்புரிந்து வருகிறார் கோடி சுவாமிகள். இவரது சமாதிக்கு மதத்தைக் கடந்து முஸ்லிம், கிறிஸ்துவர், இந்து என்று அனைத்துவித மக்களும் வந்து வணங்கிச் செல்கிறார்கள்.

தபோவனம்
தபோவனம்

சுவாமிகளுக்குப் பிடித்தமானது அன்னதானம். இல்லாதவர்களுக்கு அளித்தால் இன்புற்று நம் இன்னல்களைத் தீர்ப்பார் சுவாமிகள் என்பது அவர் பக்தர்களின் நம்பிக்கை. அதனால்தான் தனுஷ்கோடியில் தினமும் அன்னதானம் நடைபெறுகிறது. மேலும், மாசி மாத பௌர்ணமியை அடுத்த திருதியை அன்று சுவாமிகளுக்கு கடல்பூஜை செய்வதும் வழக்கம்.

அலைகடலால் அருளும் சுவாமிகள்

கடல்பூஜை அன்று காலை தனுஷ்கோடியில் யாகங்கள் செய்து பின் கடல் கரையில் படையல் போடுவார்கள். சுவாமிகள் அலை ரூபமாக வந்து அந்தப் படையலை ஏற்கும் அதிசயம் இன்றும் நடைபெறுகிறது. அந்த அற்புத கடல்பூஜை வரும் 11.3.2020 அன்று தனுஷ்கோடியில் நடைபெறும். அந்த பூஜையில் கலந்துகொண்டால் நம் துன்பங்கள் எல்லாம் தீர்ந்து வாழ்வில் செல்வச் செழிப்பு கூடும் என்கின்றனர் பக்தர்கள். 19 ஆண்டுகளாக நடந்துவரும் இந்த அற்புதம் 11-ம் தேதி நடைபெறும் பூஜையிலும் தொடரும். எனவே, ஏராளமான பக்தர்கள் அங்கு குவிவார்கள்.

தேர்வு எழுதும் பிள்ளைகளுக்காகப் பெற்றோர் செய்ய வேண்டிய வழிபாடுகள் என்ன?

பெருங்குடியில் தபோவனம்... பஞ்சமஹா புருஷ யாகம்

பொன்முடி கோடி சுவாமிகள் சமாதி அடைந்த புரவிபாளையத்தைப் போலவே மகத்துவம் வாய்ந்த சந்நிதானம் ஒன்று சென்னையில் அமைய வேண்டும் என்பது அவர் பக்தர்களின் நீண்ட நாள் ஆசை. சுவாமிகளின் அனுக்கிரகத்தால் இந்த ஆண்டு சென்னை பெருங்குடி, திருமலை நகர் 6-வது குறுக்குத் தெரு, எண் 108-ல் ஓர் அழகிய தபோவனம் ஒன்று உருவாகியுள்ளது.

பெருங்குடியில் அமையப் பெற்றிருக்கும் கோடி சுவாமிகள் ஆலயத்தில் வரும் மார்ச் 8-ம் தேதி ஆலய கலச ஸ்தாபனமும், பஞ்ச மஹா புருஷ யாகமும் நடைபெறவிருக்கிறது. இதையொட்டி 7-ம் தேதி கோடி சுவாமிகளின் பட்டணப் பிரவேசம் நடைபெறவிருக்கிறது.

தபோவனம்
தபோவனம்

இந்த பஞ்ச மஹா புருஷ யாகம் முனிவர்கள், யோகிகள், ஞானிகள், மகான்கள், சித்தர்களுக்கு மட்டுமே செய்யப்படும் சிறப்பு யாகமாகும். திருமூலர், ஆதி சங்கரர், ராகவேந்திரர், மஹா பெரியவா போன்ற சித்த புருஷர்களுக்குச் செய்யப்பட்ட இந்த யாகம் தற்போது கோடி சுவாமிகளுக்கு நடைபெறுவது குறிப்பிடத்தக்கது. இதில் கலந்துகொண்டால் கோடி சுவாமிகளின் அருள் பெற்று அனைத்து நன்மைகளும் கிடைக்கும் என்பது ஐதிகம். வாய்ப்பிருக்கும் பக்தர்கள் தவறாமல் இந்த நிகழ்வில் கலந்துகொண்டு கோடி சுவாமிகளின் அருளைப் பெறலாம்.

அடுத்த கட்டுரைக்கு