Published:Updated:

திருமாலைப் பற்றிக் கொள்ள எளிய வழி இதுதான்... நாலாயிர திவ்ய பிரபந்தம் கண்டெடுக்கப்பட்ட வரலாறு!

நாலாயிர திவ்ய பிரபந்தம் | திருமால்
நாலாயிர திவ்ய பிரபந்தம் | திருமால்

நாராயணனை அடைய எத்தனையோ வழிகள். அதில் எளிமையானது மார்கழி அதிகாலையில் திவ்ய பிரபந்தங்களைப் பாடித் தொழுவது.

"ஆராவமுதே! அடியேனுடலம் நின்பால் அன்பாயே
நீராய் அலைந்து கரைய உருக்குகின்ற நெடுமாலே!
சீரார் செந்நெல் கவரி வீசும் செழுநீர்த்திருக் குடந்தை
ஏரார் கோலம் திகழக்கிடந்தாய்! கண்டேன் எம்மானே!"

கணீரென்றக் குரலில் அரையர்கள் சிலர் காட்டுமன்னார் கோவில் என்னும் திருத்தலத்தில் எழுந்தருளிய வீரநாராயணப்பெருமாளை வேண்டி மேற்கண்ட பாசுரத்தைப் பாடிக் கொண்டிருந்தார்கள். இதைக் கேட்டுக் கொண்டிருந்த ஸ்ரீநாதமுனிகள் மெய்சிலிர்த்துக் கண்ணீர் வடித்தார். கும்பகோணம் ஸ்ரீசாரங்கபாணி பெருமாள் மீது பாடப்பட்ட பாடல் அது. அந்த பாடலில் 'குழலின் மலியச் சொன்ன ஓராயிரத்துள் இப்பத்தும்' என்ற வரி ஒன்று வந்தது. இதைக்கேட்டு துணுக்குற்ற நாதமுனிகள் அந்த அரையர்களிடம் இந்த பத்துப் பாடல்கள் சரி, மீதம் இருக்கும் 990 பாடல்கள் எங்கே என்று கேட்டார். அரையர்களோ 'நாங்கள் ஒன்றும் அறிய மாட்டோம் சுவாமி, இந்த பாடல் திருவாய்மொழி என்ற பிரபந்தம் என்றும், இதை இயற்றியவர் ஸ்ரீநம்மாழ்வார் எனும் ஆசார்யன் என்று மட்டும் பெரியோர்கள் சொல்லக் கேள்வி..." என்றார்கள்.

நாலாயிர திவ்ய பிரபந்தம் | திருமால்
நாலாயிர திவ்ய பிரபந்தம் | திருமால்

"ஹாஹா... இந்த 10 தேமதுரப் பாடல்கள் பாடல்களே இத்தனை இனிமை என்றால் மீதமுள்ள 990 பாடல்களும் கேட்டால், வைகுந்தத்தையே மண்ணுக்கு வரவைத்து விடலாம் போலிருக்கிறதே..." என்று எண்ணிய நாதமுனிகள் உடனே ஆழ்வார்திருநகரி திருத்தலம் சென்று அங்கு வசித்து வந்த மதுரகவியாழ்வாரின் வம்சாவளியினரிடம் நம்மாழ்வார் குறித்தும் அவர் இயற்றிய பாடல்கள் குறித்தும் விவரம் கேட்டார். (நம்மாழ்வாரை குருவாக வரித்துக் கொண்டவர் மதுர கவியாழ்வார். திருமாலைக் கூட பாடாமல் தன் குருவான நம்மாழ்வாரை மட்டுமே 11 பாசுரங்களால் பாடி வழிபட்டு ஆழ்வார்கள் வரிசையில் இடம் பெற்றவர் மதுரகவி ஆழ்வார்) மதுரகவி ஆழ்வார் உறவுகளுக்கும் ஒரு விவரமும் தெரியவில்லை.

கடைசியாக ஒரு பெரியவர் ஸ்ரீநாதமுனிகளிடம், "சிரமமே படவேண்டாம், நீங்கள் ஆழ்வாரிடமே கேட்டுக் கொள்ளலாம். மதுரகவியாழ்வாரின் 11 பாசுரங்களை, 12 ஆயிரம் முறைகள் பாடி நம்மாழ்வாரை துதித்தால் அவர்கள் முன்பு மதுரகவி ஆழ்வாரே தோன்றி தன் ஆசார்யரை வணங்கியவரை வணங்கி அருள் செய்வார். அப்போது அவரிடம் பாசுரங்கள் குறித்துக் கேட்டுத் தெரிந்து கொள்ளலாம்" என்று கூறினார்.

அதன்படியே ஸ்ரீநாதமுனிகள் கடும் விரதமிருந்து 'கண்ணிநுண்சிறுதாம்பு' பாசுரத்தை 12 ஆயிரம் முறைகள் பாராயணம் செய்து ஆழ்வாரின் அருளால் ஒரு ஆயிரம் அல்ல, நான்கு ஆயிரம் பாடல்களையும் பெற்றார். மேலும் அந்த பாடல்களுக்கு தமிழ்ப்பண் அமைப்பில் இசையமைத்து அழகு சேர்த்தார். அந்தp பாடல்கள் தேசமெங்கும் பரவ வேண்டும் என்ற உயர்ந்த நோக்கில் தனது சீடர்களான உய்ய கொண்டார், குருகை காவலப்பன், மேலையகத்தாழ்வான் போன்றோரை அனுப்பி தலம்தோறும் பாடச் செய்தருளினார்.

நாலாயிர திவ்ய பிரபந்தம்
நாலாயிர திவ்ய பிரபந்தம்

உயிரை உருக்கும் அற்புதப் பாடல்களாக வெளியான 12 ஆழ்வார்களின் பாடல்கள் ஆரம்பத்தில் 'ஆழ்வார்கள் அருளிச் செயல்கள்' என்ற பெயரில் பாடப்பட்டு வந்தது. பிறகு மணவாள மாமுனிகள் காலத்தில் 12 ஆழ்வார்களின் பாடல்களோடு, திருவரங்கத்தமுதனார் அருளிய 'இராமானுச நூற்றந்தாதி'யும் சேர்த்து 'நாலாயிர திவ்ய பிரபந்தம்' என்ற பெயரில் உருவானது. ஆம்,12 ஆழ்வார்கள் மட்டுமின்றி 13-வது ஆசார்யராக திருவரங்கத்தமுதனார் சேர்ந்தார். இவர் ஆழ்வார் வரிசையில் இல்லாவிட்டாலும் ஸ்ரீராமாநுஜர் மீது ஆழ்ந்த பக்தி கொண்ட சீடர். அதனாலேயே திருமாலைக் கூட பாடாமல் தன் குருவான ராமாநுஜரை மட்டுமே பாடி திவ்ய பிரபந்தத்தில் தனது பாடலும் சேரும் அருள் பெற்றார். (மதுரகவி ஆழ்வாரைப் போலவே)

வீடு, நிலம், சொத்து தொடர்பான பிரச்னைகள் நீக்கும் பெரமண்டூர் வராகர் வழிபாடு

நினைவில் வைத்துக் கொள்ளுங்கள், நாலாயிரம் திவ்ய பிரபந்தம் கிடைக்கக் காரணமானது நம்மாழ்வாரின் திருவாய்மொழி பாசுரங்கள். நம்மாழ்வாரை வணங்கியதும் ஓடிவந்து மற்ற பாசுரங்களை தேடித் கொடுத்தது அவர் சீடரான மதுரகவி ஆழ்வார். ஆக, ஆசார்யரைப் பற்றிக் கொண்டால் திருமாலையும் எளிதாகப் பற்றிக் கொள்ளலாம் என்கிறது வைணவம். அதை விட எளிமையாக திராவிட வேதம் எனப்படும் திவ்ய பிரபந்தங்களை நெக்குருகிப் பாடினால் நாராயணனை எளிதாக அடைந்து விடலாம் என்றும் வைணவம் கூறுகிறது. நாராயணனை அடைய எத்தனையோ வழிகள். அதில் எளிமையானது மார்கழி அதிகாலையில் திவ்ய பிரபந்தங்களைப் பாடித் தொழுவது.

ஓம் நமோ நாராயணாய!

"மனத்தாலும் வாயாலும் வண்குருகூர் பேணும்
இனத்தாரை யல்லாதி றைஞ்சேன் - தனத்தாலும்
ஏதுங் குறைவிலேன் எந்தை சடகோபன்
பாதங்கள் யாமுடையபற்று."

அடுத்த கட்டுரைக்கு