Published:Updated:

நந்தி எனும் நல்குருவை வழிபட்டு நலம் பெற வேண்டிய பிரதோஷம் இன்று... தனிநாயகனன் குறித்த 13 தகவல்கள்!

நந்திதேவர்
News
நந்திதேவர்

நந்திதேவர் சிவபெருமானின் முதல் சீடர். அவரே குருபரம்பரையின் முதல் குருவாகி சனகர், சனாதனர், சனற்குமாரர், பதஞ்சலி, சிவயோகமாமுனி, வியாக்ரபாதர் ஆகியோருக்கு சிவ உபதேசம் செய்தார். நந்திதேவரின் எட்டாவது சீடர் திருமூலர்.

அனைத்து தினங்களிலும் சிவாலயங்களில் சிவபெருமானுக்கு அபிஷேக ஆராதனைகள் நடைபெறும். பிரதோஷ தினத்தன்றோ அவை மிகச் சிறப்பாக நடைபெறும். சிவபெருமானுக்கு மட்டுமல்ல நந்தி தேவருக்கும் அன்று சிறப்பு அபிஷேகங்கள் நடைபெறுவதைக் காண்கிறோம். அந்த நாளில் நந்தியிடம் வைக்கும் வேண்டுதல்கள் பலிக்கின்றன. அவர் நம் துயர்நீக்கும் அனுக்கிரக மூர்த்தியாக அன்று அவர் விளங்குகிறார். நந்தி சிவனின் வாகனம் என்கின்றன நம் புராணங்கள். ஆனால் வெறும் வாகனம் மட்டுமல்ல நந்தி என்கின்றன நம் சாத்திரங்கள். இந்தப் பிரதோஷ நன்னாளில் நந்தி பகவான் குறித்த சில அற்புதத் தகவல்களை நமக்குள் பகிர்ந்துகொள்வோம்.

நந்திதேவர்
நந்திதேவர்

குருவே சர்வமும்...

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

சைவ சமயத் தனிநாயகன் நந்தி

உய்ய வகுத்த குருநெறி ஒன்றுண்டு

தெய்வச் சிவநெறி சன்மார்க்கம் சேர்ந்துய்ய

வையத்துளார்க்கு வகுத்து வைத்தானே

என்கிறார் திருமூலர்.

நந்திதேவர் சிவபெருமானின் முதல் சீடர். அவரே குருபரம்பரையின் முதல் குருவாகி சனகர், சனாதனர், சனற்குமாரர், பதஞ்சலி, சிவயோகமாமுனி, வியாக்ரபாதர் ஆகியோருக்கு சிவ உபதேசம் செய்தார். நந்திதேவரின் எட்டாவது சீடர் திருமூலர்.

குருர் பிரம்மா குருர் விஷ்ணு

குருர் தேவோ மஹேஷ்வர:

குருர் சாக்ஷாத் பரப் பிரம்மா

தஸ்மை ஸ்ரீ குரவே நம:

என்கிறது சாஸ்திரம்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

இறைவன் மாசில்லா ஜோதியன். அவரை மாசுள்ள மாந்தர்கள் நெருங்க முடியாது. அதற்காகவே கருணையின் வடிவான குருவை இறைவன் சிருஷ்டிக்கிறார். குருவே பரப்பிரம்ம சொரூபம் என்பதால் அவரைப் பணிந்து அவரின் துணையோடு இறைவனின் திருவடி நிழலை அடையலாம் என்பதே நம் மார்க்கங்கள் சொல்லும் தத்துவம். பிரதோஷ நாளில் நந்திபகவான் ஆராதனைகளில் முக்கியத்துவம் பெறுவது என்பது குருவழிபாட்டின் மகிமையை உணர்த்துவது என்று சொன்னால் அது மிகையில்லை.

சதா சர்வகாலமும் சிவபெருமானின் சந்நிதியிலேயே இருப்பவர் நந்திதேவர். எனவே அவரிடம் நாம் வைக்கும் வேண்டுதலை தக்க நேரத்தில் அவர் ஈசனிடம் எடுத்துரைத்து வரம் பெற வகை செய்வார் என்பது நம்பிக்கை.

வாகனம் என்றால் சுமந்து வருபது என்று பொருள். சிவ என்னும் திருநாமத்தையும் அந்த ஈசனின் மகிமையையும் இந்தப் பிரபஞ்சத்துக்குத் தாங்கி வருபவராக விளங்குபவர் நந்திதேவர். எனவேதான் பிரதோஷ நாளில் சிவத்தைத் தாங்கிவரும் சிவனடியாரும் சிவமே என்பதால் நந்தியை சிவனாகவே கண்டு வணங்கி வருகிறோம்.

நந்திதேவர்
நந்திதேவர்

நந்தி ஞானத்தின் அடையாளம் மட்டுமல்ல தர்மத்தின் அடையாளம் கூட. சிவ சந்நிதியில் இறைவனை நந்திக்குப் பின் நின்று தரிசனம் செய்ய வேண்டும் என்று சொல்வது உண்டு. தர்மத்தின் வழி நின்று இறைவனை வழிபட வேண்டும் என்னும் தத்துவமே அதில் நிறைந்திருக்கிறது. தர்மத்தை மீறிச் செயல்படுபவர்களை தண்டிக்கும் காவலனாக நந்தி தேவர் அருள்கிறார்.

நந்தி தேவருக்கு, ருத்திரன், தூயவன், சைலாதி, அக்னிரூபன், மிருதங்க வாத்யப் ப்ரியன், சிவ வாகனன், கருணாகரமூர்த்தி, வீரமூர்த்தி, தனப்ரியன், கனகப்ரியன், சிவப்ரியன் ஆகிய திருநாமங்களும் உண்டு.

சிவாயநம எனும் ஐந்தெழுத்தின் உருவத்தைக் கொண்டவர் நந்திதேவர். அதாவது, பஞ்சாட்சரத்தின் வடிவமானவர். ஒப்பில்லாத நான்கு வேதங்களையும் நான்கு பாதங்களாகக் கொண்டவர் நந்திதேவர் என்கின்றன புராணங்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

சிவாலயங்களில் கொடிமரத்திற்கும் நந்திக்கும் இடையில் நந்தியின் பின்புறம் நின்று, நந்தியம்பெருமாளின் இரண்டு கொம்புகளுக்கு நடுவில் இறைவனை தரிசிக்க வேண்டும். இந்த நந்தியை அதிகார நந்தி என்பர்.

கொடி மரத்திற்குப் பக்கத்தில் இருக்கும் அதிகார நந்திக்கு அடுத்து ஒரு நந்தி காட்சிதரும். அது மால்விடை எனப்படும் விஷ்ணுநந்தி. திரிபுர சம்ஹார காலத்தில் திருமால், நந்தி வடிவம் எடுத்து சிவனைத் தாங்கினார் என்கிறது புராணம்.

கொடிமரம் இல்லாத கோயில்களில் சிவனை நோக்கி ஒரு நந்தி காட்சி தருவார். இவரை பிராகார நந்தி என்பார்கள்.

சிவபெருமானுக்கு அருகில் நெருக்கமாக இருக்கும் நந்தி, ‘தர்ம நந்தி’ எனப்படுவார். இந்த நந்தியின் மூச்சுக்காற்று சுவாமியின் மீது பட்டுக்கொண்டேயிருக்கும். அதனால் நந்திக்கும் சுவாமிக்கும் இடையே செல்லக் கூடாது என்று சாஸ்திரம் சொல்லும்.

திருவண்ணாமலையை வலம் வரும்போது அஷ்ட லிங்கங்களைத் தரிசிக்கலாம். அங்குள்ள நந்திகள் அனைத்தும் கருவறையில் அருள் புரியும் சிவலிங்கத்தைப் பார்க்காமல், திருவண்ணாமலையைப் பார்த்த வண்ணம் இருப்பதைக் காணலாம். திருவண்ணாமலையே சிவரூபமாக இருப்பதால் இந்தக் கோலம் என்பர் அடியார்.

பழைமையான சிவாலயங்களில் அதிகபட்சம் ஒன்பது நந்திகள் இருக்கும். அவை: பத்ம நந்தி, நாக நந்தி, விநாயக நந்தி, மகா நந்தி, சோம நந்தி, சூரிய நந்தி, கருட நந்தி, விஷ்ணு நந்தி, சிவ நந்தி ஆகியன. இந்த ஒன்பது நந்திகளையும் நந்தியால், ஸ்ரீசைலம் ஆகிய திருத்தலங்களில் தரிசிக்கலாம்.