Election bannerElection banner
Published:Updated:

மந்திராலயமான மாஞ்சாலா கிராமம்... ஸ்ரீ ராகவேந்திர சுவாமிகளின் பிருந்தாவன மண்ணின் மகிமைகள்!

மந்த்ராலய மகானின் பிருந்தாவன பிரவேசம்!
மந்த்ராலய மகானின் பிருந்தாவன பிரவேசம்!

அது பத்தொன்பதாம் நூற்றாண்டின் ஒரு மழைக்காலத்தில் நிகழ்ந்தது. புண்ணிய நதியாம் துங்கபத்திரை அடிக்கடி வெள்ளப்பெருக்கு கொள்ளும் காலம். ஆனால், ஏனோ அன்று அதற்கான சுவடே இல்லை. மிகவும் சாதுவாக சத்தமில்லாமல் நகர்ந்துகொண்டிருந்தது.

ஆனந்ததாஸர் என்னும் பக்தர் மந்திராலய தரிசனம் செய்ய வந்தார். மகானின் பிருந்தாவனம் அவர் மனதைக் கொள்ளைக் கொண்டது. அதன்பின்பு மகான் தவம் செய்த பூமியைக் காண விரும்பினார்.

நதியின் மறுகரையில் இருந்தது அந்த குகை. நதியைக் கடந்து அக்கரை கொண்டுசேர்க்கப் பல பரிசல்காரர்கள் இருந்தார்கள். அவர்களில் ஒருவரின் துணைகொண்டு மறுகரை போய்ச்சேர்ந்தார் ஆனந்த தாஸர். குகையில் ஆஞ்சநேயரின் தரிசனம் முடித்துத் திரும்பி ஆற்றங்கரை வந்தபோது, ஆனந்த தாஸருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. காரணம் துங்கபத்திரையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

ஸ்ரீராகவேந்திரர் -
ஸ்ரீராகவேந்திரர் -

ஆவேசமாக ஓடிவரும் யானையைப்போல பெரும் பலத்தோடு நகரும் அந்த நதியில் பரிசல் ஓட்ட யார் துணிவார்கள்... எல்லோரும் அங்கிருந்து பாதுகாப்பான இடத்துக்குச் சென்றுவிட்டனர். ஆனந்த தாஸருக்கோ உடனே மறுகரை செல்ல வேண்டிய வேலை காத்திருந்தது. இது என்ன சோதனை சுவாமி என்று மகான் ஸ்ரீராகவேந்திரரை நினைத்துப் பிரார்த்தனை செய்தார்.

அப்போது அங்கு ஒரு பரிசல்காரர் வந்து ‘நான் வேண்டுமானால் உங்களுக்கு உதவுகிறேன்’ என்று சொல்லி அவரைப் பரிசலில் ஏற்றிக்கொண்டு ஆற்றில் பயணித்தார். ஆனால் நதி கோபம் கொண்டதுபோல ஓர் அலையைத் தும்பிக்கைபோல உயர்த்தி பரிசலைத் தூக்கிக் கவிழ்த்தது. வேகத்தில் பரிசல்காரர் ஒருபுறமும் ஆனந்த தாஸர் மறுபுறமும் விசிறியடிக்கப்பட்டனர்.

நீச்சல் அறிந்த பரிசல்காரர் எப்படியோ கரையேறிவிட்டார். ஆனால் ஆனந்ததாஸர் ஒரு சுழலில் சிக்கிக்கொண்டார். மீள முடியவில்லை. தன் வாழ்வின் கடைசி கணம் அதுவோ என்று பயந்தார். ஸ்ரீராகவேந்திர சுவாமிகளை நினைத்து மனதில் துதித்தார். எங்கிருந்தோ வந்தது ஒரு பரிசல். ஆனந்த தாஸரைக் கைபிடித்துத் தூக்கினர் பரிசல்காரர்கள். கண்ணிமைக்கும் நேரத்தில் கரை சேர்த்துவிட்டனர்.

ஆனந்த தாஸர் மனம் மகிழ்ந்து அவர்களை வணங்கி நீங்கள் யார் என்று கேட்டார். ‘நான் ராகப்பா, இவன் வாதப்பா” என்று சொல்லிவிட்டு ஆனந்ததாஸர் கண்மூடிக் கண் திறப்பதற்கு முன் அங்கிருந்து மாயமாயினர். வந்தவர்கள் யார் என்று ஆனந்ததாஸருக்குப் புரிந்துவிட்டது. பிருந்தாவனத்தின் திசை நோக்கி வணங்கித் துதித்தார்.

ஸ்ரீராகவேந்திரர்!
ஸ்ரீராகவேந்திரர்!

ஆனந்த தாஸர் மட்டுமா, மந்திராலயத்தின் சந்நிதிக்குச் சென்று அவரைத் தொழுதுகொண்ட எவருக்கும் அருளாசி வழங்கிக் காப்பார் ஸ்ரீராகவேந்திர மகான். தமிழகத்தில் பிறந்து கர்நாடக மாநிலத்தில் தன் பிருந்தாவனத்தை அமைத்துக்கொண்டவர் ஸ்ரீராகவேந்திரர். அவர் பயணம் செய்த திசைகள் எல்லாம் பலரின் துன்பங்களைத் தீர்த்தார். அவர் தந்த புனித மண் ராட்சதர்களை விரட்டியது. எளிய மக்களின் துயரங்களைத் தீர்த்தது. சாதி, மத பேதம் இன்றி அனைவரையும் அரவணைத்து அனைவருக்கும் தனது மூலராமரின் ஆசி கிடைக்குமாறு செய்தார்.

ஆதோனி என்னும் கிராமத்தில் ஆடு மேய்ப்பவராக இருந்த எழுத்தறிவில்லாத வெங்கண்ணா, சுவாமிகளின் அருளாசியால் ஞானவானாகவும் ஒரு சமஸ்தானத்தின் திவானாகவும் ஆனார். சுவாமிகளின் சக்தியை சோதனை செய்ய வந்த மாற்றுமத மன்னன் மகானின் மகிமைகளை அறிந்து அவரைப் பணிந்துகொண்டார்.

மாஞ்சாலா கிராமத்தைத் தேர்ந்தெடுத்து, அங்கு தான் ஜீவசமாதி அடையப் போகும் செய்தியை பக்தர்களுக்குத் தெரிவித்தார். தான் பிருந்தாவனப் பிரவேசம் செய்தாலும் 700 ஆண்டுகள் அங்கேயே இருந்து பக்தர்களுக்கு அருளாசி வழங்குவேன் என்றும் வாக்குக் கொடுத்தார்.

தன் பிருந்தாவனம் எங்கு எப்படி அமைய வேண்டும் என்பதையும் அடியவர்களுக்கு உரைத்து பல தேவ ரகசியங்கள் வெளிப்படுத்தினார்.

அப்படி அவர் வெளிப்படுத்திய ரகசியங்கள் என்னென்ன? அந்த பூமியின் மகிமைதான் என்ன? பிருந்தாவனம் அமைக்க அவர் தேர்ந்தெடுத்த பாறை எது... இப்படிப் பல கேள்விகளுக்கான விடைகளை மேலே சுட்டிய வீடியோவில் காணுங்கள்.

இன்று சுவாமி ராகவேந்திரரின் ஜயந்தி தினம். இந்த நல்ல நாளில் சுவாமிகளை நினைத்துப் பிரார்த்தனைகளைச் செய்து நற்பயன்கள் அடைவோம்.
Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு