Published:Updated:

பகவான் ஸ்ரீரமண மகரிஷி ஆராதனை தினம்... குருவை நினைக்கக் குறைகள் தீரும்!

சிறகு முளைத்த பறவை கூட்டில் தங்குமா என்ன? முக்தி தரும் தலமான திருவண்ணாமலையே இனி தன் வாசஸ்தலம் என்று முடிவுசெய்து வந்து சேர்ந்தார். வெங்கட்ராமன், ரமணர் ஆனார். திருவண்ணாமலையின் அருட் தீபமாகிப் பிரகாசித்தார்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

திருவண்ணாமலை... முக்தர்களும் சித்தர்களும் வந்து வாழும் தவபூமி. இங்கு வாழ்ந்த வாழ்ந்து கொண்டிருக்கிற மகான்கள் ஏராளம். அப்படிப்பட்ட புண்ணிய பூமியில் இரு மகான்கள் ஒரே காலகட்டத்தில் வாழ்ந்தனர். அவர்கள் இருவரும் ஒருவரைக் குறித்து ஒருவர் மதிப்பும் மரியாதையும் கொண்டிருந்தனர். அவர்களில் ஒருவர் சேஷாத்திரி சுவாமிகள். சேஷாத்திரி சுவாமிகள் குறித்து மற்றொரு மகானிடம் கேட்டாராம் பக்தர் ஒருவர்.

''சுவாமி, சேஷாத்திரி சுவாமியைப் பைத்தியம் என்கிறார்களே..?''

இதைக் கேட்ட அந்த மகான் சிரித்துவிட்டார்.

ரமணர்
ரமணர்

''ஆமாம், திருவண்ணாமலையில் மூன்று பைத்தியங்கள் இருக்கின்றன. ஒன்று, அண்ணாமலையார் என்கிற பைத்தியம்; இன்னொன்று சேஷாத்திரி சுவாமிகள் என்கிற பைத்தியம்; மூன்றாவது இந்தப் பைத்தியம்!'' என்றாராம்.

அந்த மகான் வேறு யாருமல்ல... தான் யார் என்பதைத் தேடி, இளம் வயதுமுதலே அலைந்து திரிந்து தவம் புரிந்து தன்னைப் பரமாத்ம ஸ்வரூபமாகக் கண்டுகொண்ட ஸ்ரீ ரமண மகரிஷியே ஆவார்.

1879-ம் ஆண்டு டிசம்பர் 30 -ம் நாள் திருச்சுழியில் சுந்தரம் ஐயர் - அழகம்மாள் தம்பதிக்கு மகனாகப் பிறந்தார் ஸ்ரீரமணர். இவருக்கு வெங்கட்ராமன் என்று பெயரிட்டு வளர்த்துவந்தனர் பெற்றோர். சிறுவயதாக இருக்கும்போது திருவண்ணாமலையில் உள்ள உறவினர் ஒருவர் அவர்கள் இல்லத்துக்கு அடிக்கடி வருவார். அவர் திருவண்ணாமலையின் மேன்மையைப் பற்றி சிறுவன் வெங்கட்ராமனிடம் அடிக்கடி கூறுவார்.

அதனால், சிறுவனுக்கும் அங்கே செல்ல வேண்டும் என்று தீராத ஆவல் ஏற்பட்டது. அந்த இளம் வயதிலேயே ஆன்மிக நூல்களை வாசிக்கும் ஆர்வமும் அதிகரித்தது. மரண ஊர்வலம் ஒன்றைக் கண்ட சித்தார்த்தன் புத்தன் ஆனது போல உறவினர் ஒருவரின் மரணத்துக்குச் சென்ற வெங்கட்ராமன் மெள்ள மெள்ளத் தன்னுள் கேள்விகளை வளர்த்து வேறொரு மனிதனாக ஆனார். அவரது 17 -ம் வயதில் மதுரையிலிருந்த அவருடைய சிற்றப்பா வீட்டில் ஒருநாள் திடீரென அவருக்கு ஒரு விசித்திர அனுபவம் ஏற்பட்டது. தனக்கு மரணம் நிகழ்ந்தது போன்ற அனுபவம். அந்த அனுபவத்துக்குப் பின் எது ஆன்மா, எது மரணம் எது மரணமில்லாப் பெருவாழ்வு ஆகியன குறித்த கேள்விகளுக்கான விடைகளைத் தேடத் தொடங்கினார் வெங்கட்ராமன்.

சிறகு முளைத்த பறவை கூட்டில் தங்குமா என்ன? அதுபோல ஆன்மிக தாகம் ஏற்பட்டுவிட்ட வெங்கட்ராமன் தன் வீட்டிலிருந்து புறப்பட்டு திருவண்ணாமலை வந்துசேர்ந்தார். முக்தி தரும் தலமான திருவண்ணாமலையே இனி தன் வாசஸ்தலம் என்று முடிவுசெய்துகொண்டார். வெங்கட்ராமன், ரமணர் ஆனார். திருவண்ணாமலையின் அருட் தீபமாகிப் பிரகாசித்தார்.

ரமணர்
ரமணர்

முதலில் அருணாசலேசுவரர் ஆலயத்தில் தியானம் செய்தார். பின்னர் விருபாக்ஷி குகை, கந்தாச்ரமம், பாலாக்கொத்து எனப் பல இடங்களில் வாசம் செய்து இறுதியில் திருவண்ணாமலை அடிவாரத்தில் தனது தியானத்தை மேற்கொண்டார். அந்த இடமே தற்போது ரமணர் ஆசிரமமாக உள்ளது.

தேனிருக்கும் இடம் நோக்கி வண்டுகள் படையெடுக்கும் என்பதுபோல ரமணரை நோக்கி பக்தர்கள் வரத் தொடங்கினர். அவர்களுக்கு அருள்வழி காட்டியதோடு வாழும் முறையையும் உபதேசித்தார் ஸ்ரீ ரமணர். ‘எப்போதும் உண்மையே பேசுதல், கடினமான உழைப்பிற்கு பின்னே ஓய்வு. வெற்றி தோல்விகளைச் சமமாக பாவித்தல். பிறரை தாழ்வாக எண்ணாதிருப்பது, உணவையும் வீணாக்காமல் இருப்பது’ போன்ற நடைமுறை வாழ்வியலுக்கான உபதேசங்கள் அவரிடமிருந்து பிறந்தன.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ரமண மகரிஷியின் புகழை உணர்ந்தவர்கள் பலர். உலகெங்கிலும் இருந்து பக்தர்கள் அவரைத் தேடிவந்தனர். அவர்களில் லண்டனைச் சேர்ந்த புகழ்பெற்ற பத்திரிகையாளர் பால் பிரான்டன் என்பவரும் ஒருவர். இந்து மதம் சார்பாக நிறைய கேள்விகளுக்குத் தெளிவான பதில்களைப் பெற நினைத்த பிரான்டன் அதற்கு ரமணரே தகுதி வாய்ந்தவர் என்பதை அறிந்தார். அதன்பொருட்டு ரமணரைப் பார்க்க திருவண்ணாமலை வந்தார்.

சீடர்களிடம் தான் வந்த நோக்கத்தை கூறிவிட்டு ரமண மகரிஷியின் முன் அமர்கிறார். தியானம் முடிந்து கண் திறந்து அவரை ரமணர் பார்க்கிறார். சூரியனின் கதிர் பட்டதும் தாமரை மலர்வதுபோல பிரான்டனின் மனம் மலர்ந்தது. நேரம் செல்லச் செல்ல, பால் பிரான்டனின் கண்களில் இருந்து தாரை தாரையாக நீர் கொட்டியது. கேள்விகள் பல கேட்க நினைத்த பால் பிரான்டன் எந்தக் கேள்வியும் அவர் மனதில் இல்லை.

ரமணர்
ரமணர்

பின்னாளில் இந்தச் சந்திப்பைப் பற்றித் தான் எழுதிய புத்தகத்தில், 'நான் எண்ணற்ற கேள்விகளுடன் ரமணரை தரிசிக்கச் சென்றிருந்தபோது, எந்தக் கேள்வியும் கேட்காமலேயே எல்லா கேள்விகளுக்கும் பதில் கிடைத்துவிட்டன. அனைத்தையும் கடந்த ஒப்பற்ற ஞானி பகவான் ஸ்ரீரமணர்' என்று குறிப்பிட்டார்.

இவரது அருந்தமிழ் நூல்கள் ஆன்மிகத் தமிழுக்கு அருங்கொடைகளாகும். இவரது உபதேசங்களின் தொகுப்பான 'நான் யார்?' என்னும் நூலும் ஆதிசங்கரரின் ஆக்கமான 'ஆத்ம போதம்' நூலின் தமிழ் மொழிபெயர்ப்பும் குறிப்பிடத் தக்கவை.

திருவண்ணாமலையில் தங்கி, பல லட்சம்பக்தர்களின் வாழ்வில் ஆன்மிக விளக்கை ஏற்றிவைத்த ஸ்ரீ ரமண மகரிஷி, 1950-ம் ஆண்டு இயற்கையோடு கலந்தார்.

ரமணர் முக்தி அடையப் போகிறார் என்பதை உணர்ந்த அவருடைய சீடர்கள் கலங்கினர். தங்களை வழிநடத்த தங்களுடனே இருக்கவேண்டும் என்று கூறி அழுதனர். அதற்கு பகவான்,

''நான் எங்கே செல்லப்போகிறேன்? இங்கேயேதான் எப்போதும் இருப்பேன்!'' என்று கூறித் தேற்றினார். அந்த சத்தியமான வார்த்தைகளை மெய்ப்பிப்பதுபோல பகவான் இன்றும் அங்கு சூட்சும ரூபமாய் இருந்து அருள்கிறார். பகவான் ரமணரின் சந்நிதியில் நின்று கேட்கும் வரங்கள் யாவும் கிடைக்கின்றன என்கிறார்கள் பக்தர்கள்.

இன்று பகவானின் ஆராதனை தினம். திருவண்ணாமலை ஆசிரமத்தில் பல்வேறு வழிபாடுகள் நடைபெற்று வருகின்றன. இந்த நாளில் பகவானை நினைத்து அவரவர் இருக்கும் இடத்தில் இருந்து வணங்குவோம். குருவின் அருளால் நம் குறைகள் யாவும் நீங்கி நல்வாழ்வு வாழ்வோம்.
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு