இருளில் தவிப்பருக்கு வெளிச்சமாகத் திகழ்வதே பக்தியின் வேலை. வீண் வதந்திகளில் மனம் செல்வதை விடுத்து உங்களுக்கு இஷ்டமான தெய்வங்களை வேண்டி பிரச்னைகளிலிருந்து விடுபடலாம். ஆன்மிகத்தின் சிறந்த பணியே துக்கத்தை விலக்குவதுதான். உண்மையான பிரார்த்தனை ஒரு நல்ல அதிர்வை, நேர்மறை சக்தியை உருவாக்கும். அப்போது நம்மை மீறிய ஒரு சக்தி செயல்பட்டு நிலைமையைச் சீராக்கும். அதனால்தான் நம் முன்னோர்கள் இறைவழிபாட்டுக்கால முறைகளை வகுக்கும்போது அதில் பூஜை முறைகளோடு பிரார்த்தனை செய்ய ஸ்லோகங்கள், பதிகங்கள், பாசுரங்கள் ஆகியனவற்றையும் உருவாக்கியுள்ளனர்.

அப்படிப்பட்ட பதிகங்களில் ஒன்று திருநெடுங்களப் பதிகம். திருநெடுங்களத்தில் சுவாமியின் மற்றொரு திருநாமம் நித்திய சுந்தரேஸ்வரர் என்பதாகும். வங்கிய சோழனுக்காக அழகு சுந்தரராகக் காட்சி கொடுத்தார் இறைவன். அப்போது, 'என்றும் எப்போதும் இப்படி அழகனாகவே இங்கு அருள் வழங்க வேண்டும்!' என்ற கோரிக்கையை சோழ மன்னர் வைக்க, அதற்கு இறைவனும் ஒப்புக் கொண்டார்.
இங்கு திருஞானசம்பந்தப் பெருமான் அருளிய பதிகத்தை காரிய ஸித்தி அருளும் பதிகம் என்கிறார்கள் பெரியோர்கள். திருநெடுங்களத்துக்கு திருஞானசம்பந்தர் பதினோரு பாடல்கள் கொண்ட ஒரு பதிகம் பாடியுள்ளார். ஒவ்வொரு பாடலின் கடைசி வரியிலும், 'இடர் களையாய்' என்று குறிப்பிடுகிறார். அதனாலேயே, இது 'இடர் களையும் பதிகம்' எனப்படுகிறது. சுவாமிக்கும் 'இடர்களை நாதர்' எனும் திருநாமம் ஏற்பட்டு விட்டது.

இத்தலத்தில் சுவாமி சந்நிதிக்கு இரண்டு விமானங்கள். அதெப்படி இரண்டு விமானங்கள்? இதுவும் இந்தக் கோயிலின் சிறப்புகளில் ஒன்று. காசியில் இருப்பது போல இரண்டு விமானங்கள் இருப்பதால், திருநெடுங்களத்துக்கு 'தட்சிண கயிலாசம்' என்றும் பெயர் வழங்கப்படுகிறது. இப்படிப் பல்வேறு சிறப்புகளை உடைய திருநெடுங்களம் குறித்து இன்றைய தினம்தோறும் திருவருள் நிகழ்ச்சியில் பேசுகிறார் சுமதிஶ்ரீ. மேலும் இந்தத் தலத்தில் திருமணத்தடை நீங்க செய்யப்படும் பிரார்த்தனை குறித்த தகவலையும் காரியத் தடை அகற்றும் பதிகம் குறித்தும் விரிவாகப் பேசியிருக்கிறார். அவற்றை அறிந்துகொள்ள கீழே உள்ள வீடியோவைப் பாருங்கள்.