Published:Updated:

காட்டு யானைகள் கோயிலுக்குள் வந்த வரலாறு - கோயில் யானைகளிடம் நாம் ஆசிர்வாதம் வாங்குவது ஏன்?

கோயில் யானைகள்
கோயில் யானைகள்

யானைகள் போர்களுக்கு மட்டுமே பயப்படுத்தப்பட்ட நிலையில் அவை கோயில்களில் வளர்க்கப்பட்டது ஏன்? புராணக் கதைகள் அதிகம் புகழ்பெற்ற ஆறாம், ஏழாம் நூற்றண்டுகளில்தான் யானைகள் கோயிலுக்குள் வந்தன என்று கூறப்படுகிறது.

யானைகள் மனிதனோடு தொடர்பு கொண்டு அவனோடு சேர்ந்து வாழத் தொடங்கி இரண்டாயிரம் ஆண்டுகளைத் தாண்டிவிட்டோம். அதற்கு மேலேயும் இருக்கலாம் என்கின்றன வரலாற்று ஆய்வுகள். சங்க இலக்கியங்களில் யானைகள் குறித்தும், யானைப் படை குறித்தும் பல செய்திகள் உள்ளன. இந்தியாவைத் தாக்க வந்த பல வெளிநாட்டு மன்னர்கள் இங்குள்ள யானைப் படைகளைக் கண்டே அஞ்சினார்கள் என்ற வரலாற்றுக் குறிப்புகளும் உள்ளன.

தென்னிந்தியாவில்தான் யானைகள் முதன்முதலாக படைகளில் பயன்படுத்தப்பட்டது என்ற தகவலை தாமஸ் ட்ரவுட்மேன் என்ற வரலாற்று ஆய்வாளர் தெரிவித்துள்ளார். இது பின்னர் கிழக்காசியா முழுக்க விரிவானது.

யானை
யானை

சேரர் படையில் ஆயிரக்கணக்கான யானைகள் மிகுந்து இருந்தன என்றும் 'பல்யானைச் செல்கெழு குட்டுவன்' என்ற சேர மன்னன் காலத்தில் யானைகளின் எண்ணிக்கை அதிகமானது என்றும் வரலாறு கூறுகின்றது. சோழர்களின் படையிலும் 60,000க்கும் மேலான யானைகள் இருந்தன என்ற குறிப்புகளும் உள்ளன. 'கொல்யானை பலவோட்டிக் கூடா மன்னர் குழாம் தவிர்த்த பெருவழுதி' என்ற சிறப்புப் பெயரை ஒரு பாண்டிய மன்னன் பெற்றுள்ளான் என்பதையும் வரலாறு கூறுகிறது. அவ்வளவு ஏன் 1883-ம் ஆண்டு கூட சயாம் நாட்டு மன்னர் கம்போடியா நாட்டு மன்னருடன் போரிடும்போது பெரும் யானைப் படைகளைப் பயன்படுத்தினார் என்ற தகவலும் உண்டு. இதுவே உலகின் கடைசி யானைப் படை எனப்படுகிறது.

யானைகள்
யானைகள்
யானைகள் போர்களுக்கு மட்டுமே பயப்படுத்தப்பட்ட நிலையில் அவை கோயில்களில் வளர்க்கப்பட்டது ஏன்? விழாக்களில் கடவுளர்களைச் சுமக்கவும், தேர் திருவிழாவில் முன்னே செல்லவும், தீர்த்தங்களைக் கொண்டு செல்லவும், பக்தர்களுக்கு ஆசி வழங்கவும் யானைகள் ஏன் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இன்றும் பெரிய பெரிய ஆலயங்களில் யானைகள் பராமரிக்கப்பட்டு கோயிலின் முக்கிய அடையாளமாக விளங்கி வருகின்றன.

புராணக் கதைகள் அதிகம் புகழ்பெற்ற ஆறாம், ஏழாம் நூற்றண்டுகளில்தான் யானைகள் கோயிலுக்குள் வந்தன என்று கூறப்படுகிறது. பல்லவர்கள் காலத்தில் போர்க்களத்தில் காயம் அடைந்த யானைகள், அதன் புகழ் மற்றும் பராக்கிரமம் காரணமாக வெகு சிறப்பாக கவனித்துக்கொள்ள கோயிலில் ஒப்படைக்கப்பட்டன. சரியான ஓய்வும், ஆரோக்கியமான உணவும் கொடுத்து அவை பராமரிக்கப்பட்டன. அதிலிருந்து சோழர்கள் காலத்தில் பெரும் கோயில்களுக்கு யானைகள் காணிக்கையாகக் கொடுப்பதும் வழக்கமானது. பசுவின் பின்புறத்தில் மகாலட்சுமி வீற்றிருக்கிறாள் என்பதுபோல மகாலட்சுமி யானையின் முன் நெற்றியில் வீற்றிருப்பதாக நம்பப்படுகிறது. இதனால் யானைகள் இருக்கும் இடம் லட்சுமியின் வாசஸ்தலம் என்று கோயில்களில் அவை குடி புகுந்தன.

கஜபூஜை
கஜபூஜை

காணாபத்யம் எனும் விநாயகர் வழிபாடு ஓங்கி வளர்ந்த காலகட்டத்தில் கணபதியின் அம்சமாகவே போற்றப்பட்ட யானைகளும் பெரும் மதிப்பையும் வணக்கத்தையும் பெற்றன. பாற்கடலில் திருமகளோடு தோன்றிய திசை வேழங்கள் என்று போற்றப்படும் யானைகள், திருமகளின் உடன்பிறப்பாக கொண்டாடப்பட்டன. கஜலட்சுமி என்ற திருவுருவே திருமகளுக்கு உண்டானது. முருகப்பெருமானின் வாகனங்களில் ஒன்றாகவும் யானை ஆனது. யானையின் தோலுரித்த ஈசன், கஜசம்ஹார மூர்த்தி என்ற வடிவம் கொண்டார். இப்படி யானைகள் எல்லா தெய்வங்களுடனும் இணைத்துப் பேசப்பட்டு பெரும்புகழ் கொண்டன. கோமாதா பூஜை முக்கியமானது போல கஜபூஜையும் விழாக்களில் முதன்மையானது.

சமயபுரம்: ஆயிரம் ஆயிரம் கண்ணுடையாள் எங்கள் கண்ணபுரத்தாள்! | திருப்பம் தரும் திருச்சி கோயில்கள்
உயர்ந்த விஷயங்களை உயர்ந்தவைகளைக் கொண்டே போற்றவேண்டும் என்ற அடிப்படையில் சுவாமியின் புறப்பாட்டுக்கு முன்னர் பிரமாண்டமான யானைகளைக் கொண்டே முன் அணிவகுப்பு நடத்தப்பெற்றது. அரசன் யானையின் அம்பாரியின் மீது நகர்வலம் வருவதைப்போல சுவாமிக்கு நடத்தப்பட்டது.

விழா காலங்கள் போக, மற்ற நேரங்களில் யானைகள் பக்தர்களுக்கு ஆசி வழங்கவும், குழந்தைகள் மகிழ்ந்து அதன் மீது ஏறிக்கொள்ளவும் என ஒரு சந்தோச அடையாளமாக மாறிவிட்டன. அதுசரி, யானையிடம் மட்டும் மனிதர்கள் ஆசி வாங்க ஆசைப்படுவது ஏன்? அதனால் நன்மை ஏதும் உண்டா என்றால்... அது ஒரு மிகப்பெரிய ஆன்மிக ரகசியம் எனலாம்.

கோயில் யானை
கோயில் யானை

நாம் சுவாசிக்கும்போது ஒரு நேரத்தில் ஒரு மூக்கு துவாரத்தின் வழியேதான் சுவாசித்து காற்றை உள்ளே அனுப்புகிறோம். இப்படி 24 நிமிடங்களுக்கு ஒரு வலது இடது என நாசி துவாரங்களை மாற்றி மாற்றி பயன்படுத்துகிறோம். இதுவே பிங்கலை, இடங்கலை நாடிகள் என்கிறது ஆன்மிகம். ஆனால் பிராண யோகம், வாசி யோகம் கற்ற பெரியோர்கள் ஒரே நேரத்தில் இரு துவாரங்களிலும் சுவாசித்து யோக அனுபவம் பெறுவர். இது சுழுமுனை வாசி யோகம் என்று சொல்லப்படுகிறது. இந்த யோகத்தை அடைந்தவர் ஞானியர். இதே விஷயத்தை யானைகள் அன்றாடம் எதேச்சையாக செய்கின்றன. சுழுமுனை வாசியால் வெளியாகும் அந்த மூச்சுக் காற்று நம் தலைமீது பட்டால் பல நன்மைகள் உள்ளன.

தலைக்கு மேலே நம்மைச் சுற்றியுள்ள சூட்சும சக்திக்கு அந்த மூச்சுக் காற்று அமைதியை அளிக்கும். அலைபாயும் குணத்தால் அவதிப்படுவோருக்கு இந்த யானை ஆசீர்வாதம் நன்மை அளிக்கும். அதிக கோபம், ரத்த அழுத்தம் கொண்டவர்களுக்கு இந்த சுழுமுனைக் காற்று நிவாரணம் அளிக்கும்.

இதைக் கண்டுகொண்ட நம் பெரியோர்கள், யானையை கோயிலில் வைத்து, அதை அமைதியாக வளர்த்தெடுத்து நாம் ஆசி பெரும் வகையிலும் ஏற்பாடு செய்தார்கள். இதற்காகவே யானை நம்மை ஆசிர்வதித்தால் செல்வ வளம் கிட்டும் என்றார்கள். உண்மைதானே... ஆரோக்கியத்தை விட செல்வம் ஒன்று உள்ளதா என்ன?
அடுத்த கட்டுரைக்கு