பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக திகழ்கிறது திருவண்ணாமலை. எம்பெருமான் ஈசனே அக்னி வடிவில் எழுந்தருளி அருள்காட்சி தருவதாகப் பார்க்கப்படுகிறது. திருக்கார்த்திகை தீபத் திருவிழா என்றதுமே பக்தர்களின் பார்வைகள், திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயில் மீதுதான். மலையின் உச்சியில் ஏற்றப்படும் மகா தீபத்தை காண்பதற்கு தமிழகம் மட்டுமின்றி பிற மாநிலத்தை சேர்ந்த லட்சக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலையில் ஒன்று சேர்வார்கள்.
07.11.2021 தொடங்கி 23.11.2021 வரை 17 நாள்கள் இந்த ஆண்டும் திருவண்ணாமலை தீபத் திருவிழா நடைபெற்று வருகிறது. கொரோனா பெருந்தொற்றைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக கடந்த இரண்டு வருடங்களாக பல்வேறு கட்டுப்பாடுகளுடன் இந்த தீபத் திருவிழா நடைபெற்று வருகிறது. கடந்த வருடம் 5000 பக்தர்கள் மட்டுமே இணையவழியில் முன்பதிவு செய்து இத்தலத்தில் சுவாமியை தரிசனம் செய்வதற்கு அனுமதிக்கப்பட்டிருந்தனர். இந்த ஆண்டு அதில் சற்று கூடுதல் தளர்வுகள் அளிக்கப்பட்டது. 3,000 உள்ளூர் பக்தர்கள் உட்பட மொத்தம் 13,000 பக்தர்கள் இணையவெளியில் அனுமதி பெற்று இலவசமாக சுவாமி தரிசனம் செய்து கொள்ளலாம் என கூறப்பட்டது. அதன்படி உள்ளூர் பக்தர்கள் நேரடியாக அனுமதி பெற்றும், வெளியூர் பக்தர்கள் திருக்கோயிலின் இணையதளத்தில் பதிவு செய்தும் சாமி தரிசனம் செய்துவந்தனர்.

கொரோனா பிரச்னை காரணமாக இந்த வருடமும் மாடவீதியில் நடைபெறும் சுவாமி திருவீதி உலா, வெள்ளித் தேரோட்டம், மகா தேரோட்டம் ஆகியவை ரத்து செய்யப்பட்டன. அதற்கு பதிலாக, சுவாமி அண்ணாமலையார், கோயிலின் உட்பிராகாரத்தில் தினமும் உலா வருவது மாற்று ஏற்பாடாக செய்யப்பட்டிருந்தது. அதுமட்டுமின்றி கிரிவலம் செல்லும் பௌர்ணமி தினம் மற்றும் மகாதீபம் ஏற்றப்படும் நாள்களில் பக்தர்கள் அதிகம் குவிவார்கள் என்பதனால் 17.11.2021 பிற்பகல் 1.00 மணி முதல் 20.11.2021 வரை பக்தர்கள் கிரிவலம் வருவதற்கும், சுவாமி தரிசனம் செய்வதற்கும் அனுமதி இல்லாமலிருந்தது. இந்நிலையில் 20,000 பக்தர்கள் வரை 19.11.2021 மற்றும் 20.11.2021 ஆகிய இரு தினங்களுக்கு பக்தர்கள் கிரிவலம் செல்வதற்கு மட்டும் அனுமதி அளித்து உத்தரவு பிறப்பித்தது உயர்நீதிமன்றம்.
அதன்படி, உரிய வழிமுறையை பின்பற்றி இணையதளம் மூலம் பதிவுசெய்து பக்தர்கள் நேற்று (19.11.2021) கிரிவலப்பாதையில் மெல்ல மெல்ல வந்துசேரத் தொடங்கினார்கள். அதற்கு முன்பாகவே நேற்று அதிகாலை 4 மணி அளவில் பரணி தீபம் ஏற்றப்பட்டது.

கடந்த 10ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கிய தீபத் திருவிழாவின் 10வது நாள் உற்சவத்தின் இறுதி நிகழ்ச்சி நேற்று மாலை 4 மணி முதல் நடைபெற துவங்கியது. கோயிலின் மூன்றாம் பிராகாரத்தில் உள்ள தீப தரிசன மண்டபத்தில் பஞ்சமூர்த்திகள் எழுந்தருளிக் காட்சி அளித்தனர். அதன் தொடர்ச்சியாக, அண்ணாமலையார் உமையவளுக்கு இடபாகம் வழங்கி 'அர்த்தநாரீஸ்வரர்' திருக்கோலத்தில் ஆனந்த தாண்டவம் ஆடியபடி சுமார் 5.45 (மாலை) மணி அளவில் கோயிலின் தங்ககோபுரம் முன்பு எழுந்தருளிக் காட்சியளித்தார்.
மாலை 6 மணிக்கு தங்கக் கொடிமரம் அருகே 'அகண்ட தீபம்' ஏற்றப்பட்ட உடன்... 2,668 அடி உயர மலையின் உச்சியில் 'மகாதீபம்' ஏற்றப்பட்டது. அண்ணாமலையாரை போற்றும் துதி, சங்கொலி முழங்க... 'அரோகரா' என்ற கோஷம் விண்ணை முட்டியது. அண்ணாமலையார் ஜோதிப் பிழம்பாய் பக்தர்களுக்கு அருள்காட்சி புரிந்தார். தீபம் ஏற்றுவதற்கு 3,500 கிலோ நெய் மற்றும் ஆயிரம் மீட்டர் திரி பயன்படுத்தப்பட்டுள்ளது.
அதனைத் தொடர்ந்து, கோயில் முழுவதும் வண்ண கோலம் பூண்டது. வான வேடிக்கைகள் அரங்கேறின. மக்கள் தங்களது இல்லங்களில் தீபங்களை ஏற்றி வைத்து வழிபட்டனர். திருவண்ணாமலை நகரமே தீப ஜோதியில் மின்னியது. மலை மீது ஏற்றப்பட்டுள்ள தீபம் தொடர்ந்து 11 நாள்கள் எரியும். அதன்படி 29-ஆம் தேதி வரை உரிய வழிமுறையை பின்பற்றி பக்தர்கள் மகா தீபத்தை தரிசிக்கலாம்.