Published:Updated:

`எனக்காக பாபா நிகழ்த்திய அற்புதம்!'

ஶ்ரீசாயிபாபா
பிரீமியம் ஸ்டோரி
News
ஶ்ரீசாயிபாபா

வாசகர் அனுபவம் திருவள்ளுவன்

சில வருடங்களுக்கு முன்பு, ஹைதராபாத்தில் இருந்த என் மகன் போன் செய்து, ‘அப்பா, நாங்க குடும்பத்துடன் ஷீர்டி போறோம். நீங்களும் வாங்க. உங்களுக்குத் தெரிந்தவர்களிடம் சொல்லி, தரிசனத்துக்கும் தங்குவதற்கும் ஏற்பாடு செய்து கொடுங்க’ என்று கூறினார். நானும் அவர்கள் வருவதற்கு முதல் நாளே ஷீர்டிக்குப் போய், அங்கு இருக்கும் நண்பர் பாலமுருகன் மூலமாக எல்லா ஏற்பாடுகளையும் செய்துவைத்துவிட்டுக் காத்திருந்தேன்.

`எனக்காக பாபா 
நிகழ்த்திய அற்புதம்!'

மீண்டும் என் மகனிடமிருந்து போன். ‘அப்பா, ட்ரெயின் டிக்கெட் கன்ஃபார்ம் ஆகல. அதனால நாங்க வர முடியாதுப்பா. நீங்க பாபா தரிசனம் முடிச்சுட்டு ஊருக்குக் கிளம்புங்க..!’ என்றார் வருத்தத்துடன்.

‘ட்ரெயின் இல்லேன்னா என்னப்பா... ஃப்ளைட் இருக்கான்னு பாருங்க... புனே வந்து அங்கிருந்து காரில் வந்துடலாமே!’ என்று நான் யோசனை சொன்னதும், சரியென்று விமானத்தில் வந்து, நல்லபடியாக தரிசனம் முடித்து ஊருக்குக் கிளம்பினார்கள்.

நானும் அன்றிரவு புனேவில் இருந்து சென்னை திரும்ப, தாதர் எக்ஸ்பிரஸ்ஸில் டிக்கெட் ரிசர்வ் செய்திருந்தேன். அதனால் ஷீர்டியிலிருந்து புனே செல்ல, மாலையில் கிளம்பும் பாஸஞ்சர் ட்ரெயினில் ஏறினேன். வேலை முடிந்து செல்லும் பயணியர் கூட்டம் அதிகமிருந்தது. நிதானமான வேகத்தில் ஊர்ந்த ரயில், தௌந்த் (Daund) என்ற ஸ்டேஷனில் நின்றது.

திருவள்ளுவன்
திருவள்ளுவன்

பயணியர் இறங்கிய பிறகும் ரயில் கிளம்பவில்லை. 10 நிமிஷம் என்பது, கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்து அரை மணி நேரமாகியும் ரயில் நகரவில்லை. என்ன பிரச்னை என்றும் தெரியவில்லை.

‘இரவு 10 மணிக்கு, தாதர் எக்ஸ்பிரஸ் புனே வந்து கிளம்பும். அதற்குள் நான் புனேவில் இருக்க வேண்டுமே’ என்ற பதற்றம் என்னுள் மெள்ள பரவ, நான் ஸ்டேஷன் மாஸ்டரைப் பார்த்து விவரம் சொன்னேன்.

அவர் முதலில் ஒரு யோசனை சொன்னார். `அடுத்து வரும் ஏதேனும் ஒரு ரயிலில் ஷோலாப்பூர் போய்விடுங்கள். புனே ஸ்டேஷனுக்குப் பிறகு தாதர் அங்கு வரும்போது நீங்கள் ஏறிக் கொள்ளலாம்’ என்றார். ஆனால் அப்படிப் போனாலும் சரியான நேரத்தில் போய் ரயிலைப் பிடித்து விட முடியுமா என்ற சந்தேகம் எனக்குள். மட்டுமன்றி, புனே ஸ்டேஷனில் நான் ஏறவில்லை என்றால் தாதரில் நான் ரிசர்வ் செய்திருந்த இரண்டாம் வகுப்பு ஏசி பெர்த்தை வேறு யாருக்கேனும் ஒதுக்கிவிட்டால் திண்டாட்டமாகி விடுமே என்றும் யோசித்தேன்.

என்னுடைய தயக்கத்தையும் தடுமாற்றத்தையும் கவனித்த ஸ்டேஷன் மாஸ்டர், ‘சார் கொஞ்சம் பொறுங்கள்’ என்று சொல்லிவிட்டு உள்ளே போனார். நான் வெளியே காத்திருந்தேன். நான் வந்த பாசஞ்சர் அதே பிளாட்ஃபாரத்தில் அப்படியே நின்று கொண்டிருந்தது.

‘என்ன பாபா.. உங்களை தரிசனம் பண்ண வந்த என்னை இப்படித் தடுமாற விட்டுட்டீங்களே!’ என்று மனதுக்குள் அரற்றிக் கொண்டிருந்தேன். மகனுக்கு போனில் விவரத்தைச் சொன்னபோது, ‘அடுத்த ரயிலில் புனேவுக்கு வந்து, ஃப்ளைட்டில் போயிடுங்கப்பா’ என்றார். அதெல்லாம் அந்த இரவு நேரத்தில் சரிப்பட்டு வரும் என்று எனக்குத் தோன்றவில்லை.

`எனக்காக பாபா 
நிகழ்த்திய அற்புதம்!'

அரை மணி நேரத்தில் வெளியே வந்த ஸ்டேஷன் மாஸ்டர், ‘`சார் உங்களுக்காக ஒரு ஸ்பெஷல் அரேஞ்மென்ட் செய்திருக்கிறோம். உங்களுக்காக தாதர் எக்ஸ்பிரஸ் இங்கே சில வினாடிகள் நிற்கும். அதற்காக புனே டிவிஷன், ஷோலாப்பூர் டிவிஷன், புனே ஸ்டேஷன் மாஸ்டர் அனைவரிடமும் இதற்காக சிறப்பு அனுமதி வாங்கிவிட்டோம். தாதரில் இருக்கும் டிக்கெட் பரிசோதகர், தாதரை ஓட்டும் டிரைவர் இருவரிடமும் தகவல் சொல்லிவிட்டோம்.

ரயில் வரும் நேரத்தில் எந்த பிளாட்ஃபார்மில் வருகிறது என்பதைப் பார்த்து உங்களை கோச்சில் ஏற்றிவிட, எங்கள் பியூன் ஒருவரும் உங்களுடன் உதவிக்கு இருப்பார். நீங்கள் ஒரு சீனியர் சிட்டிசன் என்பதாலும், 2-ம் வகுப்பு ஏசி டிக்கெட் வைத்திருப்பதாலும் உங்கள் வயது கருதி செய்யப்பட்ட சிறப்பு எற்பாடு இது. அதிவேக தாதர் எக்ஸ்பிரஸ் இந்தச் சிறிய ஸ்டேஷனில் நிற்பது, தாதர் வரலாற்றிலேயே இதுதான் முதல் முறை!’’ என்று கூறினார்.

என்னால் நம்பவே முடியவில்லை. எனக்காக இப்படி ஓர் ஏற்பாடா என்று ஆச்சர்யத்தில் உறைந்து போனேன். சிறிது நேரத்தில் பியூன் வந்தார். ‘தாதர் 5-ம் நம்பர் பிளாட்ஃபாரத்தில் வருகிறது’ என்று சொல்லி, என் பெட்டியை வாங்கிக்கொண்டார். இருவரும் அந்த நடைமேடைக்குப் போனோம். ஆளரவமே இல்லாத அந்தச் சிறிய ஸ்டேஷனில், நீண்ட நெடிய பிளாட்ஃபாரத்தில் நாங்கள் இருவர் மட்டும் நின்றோம்.

சிறிது நேரத்தில் ‘தடதட’வென பெரும் சத்தத்துடன் அதிவேகத்தில் வந்த தாதர் எக்ஸ்பிரஸின் வேகம் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்தது. 20-க்கும் மேற்பட்ட பெட்டிகள். ரயில் நின்றதும், 2-ம் வகுப்பு ஏசி பெட்டியை நோக்கி நாங்கள் வேகமாக நடந்தோம்.

தூரத்தில் ஒரு பெட்டியிலிருந்து டிக்கெட் பரிசோதகர் இறங்கி, ‘`சார் வாங்க.. ஏறுங்க’’ என்று கையை அசைத்தார். வேகமாகப் போய் ஏறி, எனது பெர்த்தில் அமர்ந்து நிம்மதிப் பெருமூச்சு விட்டேன். அந்த அசுரவேக தாதர் மெதுவாக நகரத் தொடங்கியது.

சில மணி நேரத்தில் நடந்த எதையுமே என்னால் நம்ப முடிய வில்லை. பின்னால் சாய்ந்து கண்களை மூடினேன். முன்னால் பாபா வந்து நின்றார்.

‘என் அப்பனே.. எல்லாம் உங்க திருவிளையாடல். எனக்காக நீங்கதான் இதைச் செய்திருக்கீங்க!’ என்று மானசீகமாக வணங்கினேன்.

சில ஸ்டேஷன்களில் மட்டுமே நிற்கும் ஒரு அதிவேக ரயிலை, ஒரு சாமானியனுக்காக, ஒரு சிறிய ஸ்டேஷனில் வரலாற்றிலேயே முதல் முறையாக நிறுத்திய அற்புதத்தை சாயியை அன்றி வேறு யார் செய்திருக்க முடியும்!

தொகுப்பு: பிரேமா நாராயணன்

ஶ்ரீசாயி அருள்மொழிகள்

டவுள் எல்லா ஜீவராசிகளுக்குள்ளும் வசிக்கிறார். அவரே, இவ்வுலகின் மிகப் பெரிய பொம்மலாட்டக்காரர்.

பேராசையும் கடவுளும் எதிரெதிர் துருவங்கள். எங்கே பேராசை நிலவுகிறதோ, அங்கே கடவுள் இருப்பதில்லை.

அகங்காரம் மிக்கவனுக்கு குருவின் போதனைகள்கூடப் பயனற்றவை.

எனக்கு எட்டு விதமான அல்லது பதினாறு விதமான உபசாரங்கள் செய்ய வேண்டிய அவசியமில்லை. தூய்மையான பரிபூர்ண பக்தி உள்ள இடத்தில் நான் இருப்பேன்.

ஒரு பிராணிக்கு உணவளித்து அதன் பசியைத் தணியுங்கள்; என் பசி தீர்ந்து விடும்.

ஷீர்டியில் உள்ள துவாரகாமாயீயை அடைந்தவர்கள், அதீதமான மகிழ்ச்சி அடைவார்கள்.

மனிதர் எவ்விதம் என்னை நம்புகிறார்களோ, அவ்விதமே நான் அவர்களை ஏற்றுக்கொள்கிறேன்.