Published:Updated:

ஓங்கி உலகளந்த உத்தமன் பேர்பாடி... நோன்பின் பயன்களைப் பட்டியலிடுகிறாள் கோதை! - திருப்பாவை 3

உலகளந்த பெருமாள்
உலகளந்த பெருமாள்

யக்ஞத்துக்காகத்தான் எல்லாப் பொருள்களும். நம் வழிபாடும் நோன்பும் ஒருவகையில் அவனைப் போற்றும் யக்ஞமே... எனவே, ஒருகணமும் தயங்காமல் நோன்பினைத் தொடங்குங்கள்... அவன் புகழ் பாட இதைவிட நல்ல தருணம் வாழ்வில் வாய்ப்பதரிது..."

ஓங்கி உலகளந்த உத்தமன் பேர்பாடி

நாங்கள் நம்பாவைக்குச் சாற்றி நீராடினால்

தீங்கின்றி நாடெல்லாம் திங்கள்மும் மாரி பெய்து

ஓங்கு பெருஞ் செந்நெல் ஊடுகயல் உகளப்

பூங்குவளைப் போதில் பொறிவண்டு கண்படுப்ப

தேங்காதே புக்கிருந்து சீர்த்த முலைபற்றிவாங்கக்

குடம்நிறைக்கும் வள்ளல் பெரும்பசுக்கள்

நீங்காத செல்வம் நிறைந்தேலோ ரெம்பாவாய்!

"இன்னும் அவள் பெருமையைச் சொல்லுங்கள்..." - ஆண்டாளின் பெருமைகளைக் கேட்பதிலும் அந்த நாராயணனின் கல்யாண குணங்களை அவளின் பாசுரங்களின் மூலம் அனுபவிப்பதிலும் கிருஷ்ணதேவராயர் தன் மனம் வசப்பட்டவராக பாகவதர்கள் சொல்லப்போகும் அற்புதமான கருத்துகளுக்காகக் காத்திருந்தார். "மன்னவரே, ஆண்டாளின் அவதார மகிமையும் அவள் தீந்தமிழ் பாசுரங்களின் மகிமையும் சொல்லிலடங்காதன. ஆண்டாள் பிராட்டி குறித்து வேதாந்த தேசிக சுவாமிகள் `கோதாஸ்துதி' என்று ஒன்றைச் செய்திருக்கிறார்.

கிருஷ்ணன்
கிருஷ்ணன்

"ஸ்ரீ விஷ்ணுசித்த குலநந்தந கல்பவல்லீம்

ஸ்ரீரங்கராஜ ஹரிசந்தன யோக த்ருச்யாம் |

ஸாக்ஷாத் க்ஷமாம் கருணயா கமலாமிவாந்யாம்

கோதாம் அநந்யசரண: சரணம் ப்ரபத்யே |

"கோதை நாச்சியார் விஷ்ணு சித்தரின் குலம் விளங்கவந்த செல்வம். விஷ்ணு சித்தரின் குலம் என்ன... தொண்டர்தம் குலம். அந்தப் பெருமாளுக்குக் கைங்கர்யம் செய்யும் குலம். அந்தக் குலத்தின் பெருமையைக் காக்கத் தோன்றியவள். அரங்கன் என்னும் கற்பக விருட்சத்தைச் சார்ந்து நிற்பவள். அவள் கருணையில் அந்தப் பெரிய பிராட்டியைப் போன்றவர். அத்தகைய கோதையின் சரணங்களில் நாம் சரணடைவோம் என்று பாடுகிறார். கோதை பூமிப் பிராட்டியின் அவதாரம். பூமிப் பிராட்டி பொறுமையின் வடிவானவள். தம் மக்கள் செய்யும் பிழைகளைப் பொறுத்தருள்பவள். மேலும், அவர்களை அவர்களின் பாவத்துக்காகத் தள்ளாமல் காப்பவள்.

அப்படிப்பட்ட பூமிப் பிராட்டியின் அவதாரமான கோதை கமலத்தில் வாசம் செய்யும் பெரிய பிராட்டியோடு ஒப்பிட்டுக் கூறுவதன் மூலம் கோதையே ஶ்ரீதேவியாகவும் பூதேவியாகவும் அவதாரம் செய்தார் என்பது ஆசார்யர்களின் தீர்மானம். இத்தகைய புகழினை உடைய நாச்சியார் செய்த திருமொழிகள் எல்லாம் வேதத்தின் சுருக்கம். உலகம் உய்யத் தோன்றிய வேதங்கள், இதிகாச புராணங்கள், உபநிடதங்கள் என அனைத்தும் அன்னையின் பாசுரங்களுக்குள் அழகாக வந்து வாசம் செய்கின்றன. சாமானியரும் கடைத்தேற அந்தக் கருணைக் கடலான பெரிய பிராட்டி செய்த பிரயத்தனமாகவே நாம் அவளின் பாசுரங்களை அறிந்துகொள்ளமுடியும்" என்றார் அந்த பாகவதர். கிருஷ்ணதேவராயர் தேனுண்டவர் மேலும் தேனை நாடுவதுபோல மேலும் சொல்லுங்கள் என்பதுபோல அவரையே பார்த்துக்கொண்டிருந்தார்.

***

திருப்பாவை
திருப்பாவை
`நாராயணனே நமக்கே பறை தருவான்..!' கண்ணனைப் போற்றிப்பாட அழைக்கிறாள் கோதை - திருப்பாவை - 1

`கோதைக்குக் கண்ணனே லட்சியம். அவள் இந்த நோன்பின் மூலம் அதை அடைய விரும்புகிறாள். நாம் அவள் அளவுக்கு உயர்ந்த பக்குவப்பட்ட ஆத்மா இல்லையே... நாம் ஏன் இந்த நோன்பை மேற்கொள்ள வேண்டும்' என்பதாக சில ஆய்ச்சியர் மனதுள் கேள்விகள் இருந்தன.

அறிதுயில் கொள்ளும் அரங்கனையே அறிந்துவைத்திருப்பவள் அருகிலிருக்கும் ஆய்ச்சியரின் மனதையா அறியாள்...

``நோன்பு நோற்பதில் இரண்டு பலன்கள். ஒன்று உயிர்களின் ஒப்பிலாத லட்சியமான அந்தப் பரமாத்மாவை அடைவது. மற்றொன்று பிறவிகளில் பிணியும் வறுமையும் இல்லாத செல்வச்செழிப்பு மிக்க ஒரு வாழ்வை அடைவது. உயர்ந்த லட்சியத்தை நோக்கிப் பயணிக்கும் ஒருவருக்கு இரண்டாவது லட்சியமும் இயல்பாகக் கூடிவிடும். குறையொன்றுமில்லாத அந்த கோவிந்தனை நாம் பாடிப் பறைகொள்ளும்போது நமக்குக் குறைகள் நேர்வதில்லை.

பெருமாள்
பெருமாள்

அவன் ஓங்கி உலகளந்த உத்தமன். இந்தப் பிரபஞ்சத்தின் நன்மைக்காகத் தன் திருக்கையேந்தி யாசிக்கவும் துணிந்தவன். அவன் ஏன் யாசகம் கேட்க வேண்டும்... இந்த அண்டசராசரங்களும் அவன் ஆக்ஞைக்காகக் காத்திருப்பவை. ஆனால், அவனோ பரம பாகவதோத்தமனான பிரகலாதனின் பேரனிடம் சென்று கையேந்தி நின்றான். அதுதான் அவன் பக்தனுக்குத் தரும் மரியாதை. நாமசங்கீர்த்தனம் செய்பவர்களுக்குத் தரும் கௌரவம்.

வரப்புயர... என்று ஒரு சொல்லில் வாழ்த்தினாளாம் தமிழ்பாட்டி. அதுபோல நல்மழையில் நெல்வயல்கள் செழித்து ஓங்கும். வயல்களில் தேங்கியிருக்கும் சேற்றில் மீன்கள் குதித்து விளையாடும். மலர்கள் எல்லாம் மலர்ந்து மணம் வீச வண்டுகள் அதில் தேன் உண்ணப் பறந்தபடியிருக்கும். நல்ல புற்களின் வளர்ச்சியை உண்டு கொழுத்த மாடுகள் குறைவின்றி தம் மடிப் பாலால் நம் இல்லத்துக் குடங்களை நிறைக்கும். நம் இல்லங்கள் எல்லாம் செல்வத்தால் நிறையும். செல்வம் என்றால் செல்வோம் என்று சென்றுவிடுவன என்பார்கள் இந்த உலகத்தோர். ஆனால், இந்த நோன்பு நமக்குத் தரும் செல்வம் நீங்காததாக, அந்த நாராயணனின் மார்போடு உறையும் ஶ்ரீதேவியைப்போல நம்மோடே நித்தமும் இருக்கும் என்பதை உணருங்கள்.

கிருஷ்ணர்
கிருஷ்ணர்
ஞான குருவான கோதை... பாவை நோன்பில் செய்ய வேண்டியவை செய்யக் கூடாதவை என்னென்ன? திருப்பாவை - 2

கண்ணனையே வேண்டிப் பெற்றுவிடலாமே, இந்த உலகத்துச் செல்வங்கள் தேவையா என்று கேட்கலாம். ஆனால், இந்த செல்வங்கள் எல்லாமே அந்த கோபாலனை இடைவிடாமல் பூஜை செய்யவும் அவனுக்கு சகலவிதமான நைவேத்தியங்கள் செய்து வழிபடவும் தடையின்றி யாகங்கள் நடைபெறவும் மிகவும் அவசியம். உலகப் பொருள்களையெல்லாம் நாம் வேண்டிப் பெறுவது, `யக்ஞேன கல்பதாம்' என்கிறது வேதம். யக்ஞத்துக்காகத்தான் எல்லாப் பொருள்களும். நம் வழிபாடும் நோன்பும் ஒருவகையில் அவனைப் போற்றும் யக்ஞமே... எனவே ஒருகணமும் தயங்காமல் நோன்பினைத் தொடங்குங்கள்... அவன் புகழ் பாட இதைவிட நல்ல தருணம் வாழ்வில் வாய்ப்பதரிது..."

ஆண்டாளின் இந்தப் பாசுரத்தைப் பாடி அந்த வேங்கடவனை மனதுருக வேண்டிக்கொண்டால் வறுமை நீங்கி நம் இல்லங்களிலும் நீங்காத செல்வம் நிறையும் என்பது ஐதிகம்.

அடுத்த கட்டுரைக்கு