Published:Updated:

வீட்டில் அன்னம் செழிக்க வைக்கும் நவராத்திரி தரிசனம் 6-ம் நாள் வழிபாடு... சிறப்புகள் என்னென்ன?

உலகோர் அனைவரும் அன்னை சக்தியைச் சரணடைந்து மன்றாடினர். அப்போது அவர்கள் முன் தோன்றிய பராசக்தி, மக்களின் தேவைகளான புஷ்பம், காய், கிழங்குகள், கீரையுடன் காட்சி அளித்தாள்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

வீட்டில் எப்போதும் அன்னம் செழித்திருக்க, செல்வகடாட்சம் நிறைந்திருக்க அருள் தரும் நாள் நவராத்திரியின் ஆறாம் நாள். ஆம்! அதியற்புதமான நவராத்திரி தினங்களில் சஷ்டி திதியுடன் இணையும் ஆறாம் நாளன்று சாகம்பரி வடிவில் பராசக்தியையும், மகா லட்சுமியையும் வழிபட வேண்டும்.

ஒருமுறை நவராத்திரியின் மகிமையை விளக்கிய காஞ்சி மகா பெரியவர் ஒன்பது நாளும் வழிபடவேண்டிய அம்பிகையின் வடிவங்களை விவரித்துள்ளார்.

சாகம்பரி
சாகம்பரி

“முதல் தினத்தில் தேவியை பாலையாகவும், இரண்டாவது தினத்தில் குமாரிகையாகவும், மூன்றாவது நாளில் பஞ்சதசாக்ஷரீயாகவும், நான்காவது தினத்தில் ஷோடசாக்ஷரீ வடிவிலும், ஐந்தாவது தினத்தில் சதாக்ஷீ வடிவிலும், ஆறாவது தினத்தில் சாகம்பரீ எனும் திருவடிவிலும், ஏழாவது நாளில் மகாதுர்கையாகவும், எட்டாம் நாளன்று மகாலட்சுமி ரூபத்திலும், ஒன்பதாவது நாளில் மகா சரஸ்வதியாகவும் உலகத்தை ரக்ஷித்து அம்பாள் விளங்கி வருகிறாள்’’ என்பது காஞ்சி முனிவரின் அருள்வாக்கு.

ஆக, நவராத்திரி 6-ம் நாளான இந்தத் தினத்தில் சாகம்பரி வடிவில் அன்னையைத் தியானித்து வழிபடவேண்டும்.

நவராத்திரியில் அவசியம் தரிசிக்க வேண்டிய 9 அம்பிகையர்... சிறப்புகள் என்னென்ன?

6-ம் நாளில் படிக்கவேண்டிய திருக்கதை

அம்பிகையின் திருநாமங்களில் ஒன்று சாகம்பரீ. ஒரு காலத்தில் துர்கமன் என்ற அசுரன், தன்னுடைய தவசக்தியால் மகரிஷிகளிடம் இருந்த மந்திர சக்திகளைப் பறித்துக்கொண்டான். தேவர்களையும் மிகவும் துன்புறுத்தினான். தேவர்கள் மற்றும் முனிவர்கள் சக்தியை இழந்ததால், இயற்கையின் இயக்கம் பாதித்தது. மழை பொய்த்தது; பூலோகமெங்கும் வறட்சி ஏற்பட்டது.

உலகோர் அனைவரும் அன்னை சக்தியைச் சரணடைந்து மன்றாடினர். அப்போது அவர்கள் முன் தோன்றிய பராசக்தி, மக்களின் தேவைகளான புஷ்பம், காய், கிழங்குகள், கீரையுடன் காட்சி அளித்தாள். ஆகவே அவளுக்குச் சாகம்பரீ என்ற பெயர் ஏற்பட்டது. அத்துடன் அசுரன் துர்கமனை அழித்த அன்னை உலகம் செழிக்கவும் அருள் செய்தாள் என்கிறது புராணம்.

கல்கண்டு சாதகம்
கல்கண்டு சாதகம்
தேங்காய் சாதம்
தேங்காய் சாதம்

ஆக, நவராத்திரி காலத்தில் 6-ம் நாளன்று சாகம்பரி தேவியாக அன்னையைத் தியானித்து வழிபடுவதால், வீட்டில் எப்போதும் அன்னம் செழித்திருக்கும்; உணவுப் பஞ்சம் விலகும்.

6-வது நாளில் தேவியை சண்டிகாதேவியாகவும் அலங்கரித்து வழிபடுவார்கள். சகல பீடைகளும் நீக்கும் அருள்வடிவம் இது. அதேபோல், 6-ம் நாளில் ஏழு வயதுள்ள பெண் குழந்தையை, ‘சண்டிகா’ எனும் திருநாமத்துடன் வழிபடுவதால் செல்வம் சேரும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

6-ம் நாளுக்கான வழிபாட்டு நியதிகள்

கோலம்: ஆறாம் நாளுக்கான கோலம் தேவியின் நாமங்கள் உடையதாக விளங்கவேண்டும். கோலம்போடப் பயன்படுத்த வேண்டிய பொருள் பருப்பு.

பூக்கள்: இந்தத் தினத்தில் செந்தாமரை, செம்பருத்தி, ரோஜா ஆகிய மலர்களால் அர்ச்சித்தும், மாலை அணிவித்தும் சக்தியை வழிபடலாம். தேவிக்கு வாசனை திரவியங்களைச் சமர்ப்பிப்பதும் மிகவும் விசேஷம்.

நைவேத்தியம்: சித்ரான்னங்கள் சமர்ப்பிக்கலாம். இன்று தேங்காய் சாதம் அல்லது கற்கண்டு சாதம் படைத்து அம்பிகையை வழிபடலாம்.

வழிபாட்டு துதிப்பாடல்:

கீழ்க்காணும் அபிராமி அந்தாதிப் பாடலை 11 முறை கூறி, மலர்களால் அர்ச்சித்து அன்னையை வழிபட்டால், சகல சுபிட்சங்களும் கைகூடும்.

புரந்தரன் போதன் மாதவன் ஆதியோர்கள் துதி

புரியும் பாதாம் புயமலர்ப்

புங்கவி புராந்தகி புரந்தரி புராதனி

புராணி திரிபுவனேசுவரி

மருந்தினும் நயந்த சொற்பைங்கிளி வராகி எழில்

வளர்திருக்கடவூரில் வாழ்

வாமி சுபநேமி புகழ்நாமி சிவசாமி மகிழ்

வாமி அபிராமி உமையே!

மகாலட்சுமி வணக்கம்

நவராத்திரி 6-ம் திருநாள் அன்னை மகாலட்சுமிக்கும் உகந்த நாள். அவள் தான்ய லட்சுமியாக அருள்பாலிக்கும் திருநாள் இது. ஆகவே, இந்த நாளில் கனகதாரா ஸ்தோத்திரம், லட்சுமி ஸ்துதி ஆகிய துதிகளைப் பாராயணம் செய்வது மிகவும் நல்லது. இந்த நாளில் செய்யும் உணவு தானம் நம் முன்வினைப் பாவங்களை நீக்கும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு