Published:Updated:

திருக்கண்ணபுரம் முனையதரையன் பொங்கல் வந்த வரலாறு தெரியுமா? #Video

திருக்கண்ணபுரம் தலத்தில் இரவு முனையதரையன் பொங்கல் என்னும் நிவேதனம் செய்கிறார்கள். இந்த வழக்கம் ஏற்பட்ட வரலாறு மிகவும் சுவாரஸ்யமானது.

முன்னொரு காலத்தில் சில முனிவர்கள் திருக்கண்ணபுரத்தில் பெருமாளை வேண்டித் தவம் செய்தனர். ஊண் உறக்கம் இன்றிப் பெருமாளை மட்டும் எப்போதும் தியானித்து வணங்கி வந்ததால் அவர்கள் மிகவும் மெலிந்து நெற்கதிர்கள் போன்ற தேகம் உடையவர்களாக இருந்தனர்.

மகாவிஷ்ணுவிடம் 'அஷ்டாட்சர மந்திரம்' கற்றிருந்த உபரிசிரவசு என்பவன் தன் படையுடன் இவ்வழியாக திரும்பிக் கொண்டிருந்தான். அப்போது வீரர்களுக்குப் பசியெடுத்தது. எனவே, இங்கு தவம் செய்து கொண்டிருந்த முனிவர்களை நெற்கதிர்கள் என நினைத்த வீரர்கள் அவர்களை வாளால் வெட்டிவீட முயன்றனர். முனிவர்களின் நிலையைக் கண்ட விஷ்ணு, அவர்களைக் காக்க சிறுவன் வடிவில் வந்து போர் புரிந்தார். மன்னனின் படையால் சிறுவனை ஒன்றும் செய்ய முடியவில்லை.

திருக்கண்ணபுரம்
திருக்கண்ணபுரம்

எனவே, இறுதியாக உபரிசிரவசு தான் கற்றிருந்த அஷ்டாட்சர மந்திரத்தை சிறுவன் மீது ஏவினான். அம்மந்திரம் சிறுவனின் பாதத்தில் சரணடைந்தது. இதைக்கண்ட மன்னன் தன்னை எதிர்த்து நிற்பது மகாவிஷ்ணு எனத் தெரிந்து மன்னிப்பு கேட்டான். விஷ்ணு அவனை மன்னித்து நீலமேகப்பெருமாளாக காட்சி தந்தார். அவன் வேண்டுதலுக்காக இங்கேயே எழுந்தருளினார் என்கிறது தலபுராணம்.

இத்தலத்தில் பெருமாள் தலையில் முடியுடன் காட்சிகொடுக்கிறார். அமாவாசையன்று உலா செல்லும்போது மட்டுமே திருமுடி தரிசனம் காண முடியும். 'சவுரி' என்ற சொல்லுக்கு 'முடி' என்றும், 'அழகு' என்றும் பொருள்கள் உண்டு. எனவே இங்கு பெருமாளுக்கு சௌரிராஜன் என்பது திருநாமம்.

இந்தப் பெருமாள் சௌரிராஜராக மாறிய வரலாறு குறிப்பிடத்தக்கது. ஒருமுறை இக்கோயில் அர்ச்சகர் ஒருவர் சுவாமிக்கு சாத்திய மாலையை மன்னருக்கு அணிவித்தார். அதில் பெண்ணின் முடி இருந்ததைக்கண்ட மன்னர் மாலையில் முடி எப்படி வந்தது என்று கேட்டார். அர்ச்சகர் பெருமாளின் தலையில் இருந்த முடியாக இருக்கும் என்று பதில் சொன்னார். மன்னனுக்கு சந்தேகம் வரவே, தான் பெருமாளின் திருமுடியை பார்க்க வேண்டும் என்றார். மறுநாள் கோயிலுக்கு வந்தால் முடியைக் காட்டுவதாக அர்ச்சகர் கூறினார். சுவாமிக்கு திருமுடி இல்லாத பட்சத்தில் தண்டனைக்கு ஆளாக வேண்டும் என எச்சரித்துவிட்டுச் சென்றார் மன்னர். கலங்கிய அர்ச்சகர் அன்றிரவில் சுவாமியை வணங்கி தன்னை காக்கும்படி வேண்டினார்.

சௌரிராஜப் பெருமாள்
சௌரிராஜப் பெருமாள்

மறுநாள் மன்னர் கோயிலுக்கு வந்தார். அர்ச்சகர் பயந்து கொண்டே சுவாமியின் தலையை மன்னருக்கு காட்ட, திருமுடியுடனே காட்சி தந்தார் பெருமாள். எனவே சௌரிராஜப் பெருமாள்' என்ற பெயரும் பெற்றார் என்கிறது தலபுராணம். இந்தத் தலத்தில் இரவு முனையதரையன் பொங்கல் என்னும் நிவேதனம் செய்கிறார்கள். இந்த வழக்கம் ஏற்பட்ட வரலாறு மிகவும் சுவாரஸ்யமானது. இதுகுறித்து அறிந்துகொள்ள கீழே உள்ள வீடியோவைப் பாருங்கள்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு