திருத்தலங்கள்
குருப்பெயர்ச்சி பலன்கள்
Published:Updated:

யக்ஷியின் சாபம்!

கேரளக் கதைகள்
பிரீமியம் ஸ்டோரி
News
கேரளக் கதைகள்

கேரளக் கதைகள்-15 `சாஸ்தா வியாசர்' வி.அரவிந்த் சுப்ரமணியம் ஓவியம்: ஜெயசூர்யா

கேரளவில் பிரபலமான மாந்திரீகக் குடும்பங்களில் ஒன்று சூர்யகாலடி. இந்தக் குடும்பத்தின் சிறப்பு குறித்து ஏற்கெனவே ஒரு கதையில் விரிவாகச் சொல்லியிருந்தோம். இந்தக் குடும்பத்தைச் சேர்ந்த நம்பூதிரிகளை `காலடி பட்டத்திரி’ என்று அழைப்பர்.

யக்ஷியின் சாபம்!

ருமுறை, இந்தக் குடும்பத்தின் பட்டத்திரி ஒருவர், தன்னுடைய நண்பரான வேறோரு நம்பூதிரி ஒருவருடன் இணைந்து பூரம் திருவிழாவுக்கு நடைபயணமாகப் புறப்பட்டார். வழியில் ஓரிடத்தை அடையும் வேளையில் பொழுது இருட்டத் தொடங்கியது. இருவரும் தங்குவதற்கு இடம் தேடினர். அப்போது அழகான பெண்கள் இருவர் எதிர்ப்பட்டனர்.

``நீங்கள் யார்... எங்கிருந்து வருகிறீர்கள்” என்று நண்பர்களிடம் விசாரித்தனர். இருவரும் தங்கள் தேவையைக் கூறினர்.

உடனே அந்தப் பெண்கள், “எங்கள் வீடு அருகில்தான் உள்ளது. நீங்கள் எங்கள் வீட்டுக்கு விருந்தினர்களாக வந்தால் மகிழ்வோம்” என்று கூறி அழைத்தார்கள். அழைப்பை நண்பர்கள் மகிழ்ச்சியுடன் ஏற்றனர்.

வீட்டில் இருவருக்கும் ராஜ உபசாரம் செய்யப்பட்டது. இரவு உணவு முடிந்ததும் நண்பர்கள் இருவரும் தனித்தனியே தங்களுக்கு ஒதுக்கப்பட்ட அறைக்குச் சென்றனர். ஒவ்வொரு அறைக்கும் ஒரு பெண்மணி வந்து சேர்ந்தாள். நம்பூதிரி தன் அறைக்குள் நுழைந்த பெண்ணை அருகில் அழைத்தார். ஆனால் அவள் அதைச் செய்யவில்லை. மாறாக, அவர் அருகில் வைத்திருந்த புத்தகத்தை வேறு பக்கம் எடுத்து வைக்கச் சொன்னாள்.

நம்பூதிரி துர்காதேவியின் தீவிர பக்தர். துர்கா சப்தசதி எனப்படும் தேவீ மாஹாத்மியம் நூலை அருகில் வைத்திருந்தார். அந்தப் பெண் புத்தகத்தைக் கண்டு பயப்படுவதைக் கண்டு நம்பூதிரிக்குச் சந்தேகம் எழுந்தது. புத்தகத்தை இறுகப் பற்றிக்கொண்டு அங்கிருந்து நகர்ந்து பக்கத்து அறைக்குச் செல்ல முயன்றார்.

ஆனால் அதேநேரத்தில், நண்பரான காலடி பட்டத்திரி இருந்த அறைக்குள் நுழைந்த பெண் பெரிதாகச் சிரிக்கும் சத்தம் கேட்டது. கூடவே காலடி பட்டத்திரியின் அலறலும் கேட்டது. நம்பூதிரிக்கு எல்லாம் தெளிவாகிவிட்டது. இந்தப் பெண்கள் இருவரும் யக்ஷிகள். அழகிய பெண்களாகத் தோன்றி ஆண்களை மயக்கி அவர்களின் ரத்தத்தைக் குடிக்கும் தீய சக்திகள்.

காலடி பட்டத்திரி, அவர் அறைக்குள் நுழைந்த யக்ஷியால் கொல்லப்பட்டதை அறிந்துகொண்டார் நம்பூதிரி. அதேநேரம், இவரின் கையில் தேவீ மாஹாத்மியம் இருக்கும் காரணத்தால், யக்ஷியால் இவரை நெருங்க முடியவில்லை.

எப்படியோ இரவைக் கழித்தார். விடியும் தருணத்தில் அந்த விநோதம் புலப்பட்டது. அங்கே ஒரு வீடு இருந்ததற்கான அறிகுறியே இல்லை. இரண்டு பனைமரங்கள் மட்டுமே இருந்தன. உயிர் பிழைத்த நம்பூதிரி ஒரு பனையின் மீது அமர்ந்திருந்தார். அருகிலிருந்த பனையில் தலைமுடியும் நகங்களும் மட்டுமே கிடந்தன. உடனடியாக ஊருக்குத் திரும்பி, முழு விவரங்களையும் பட்டத்திரியின் குடும்பத்திடம் தெரிவித்தார்.

அந்த நேரத்தில் பட்டத்திரியின் மனைவி கருவுற்று இருந்தாள். சில நாட்களில் அழகிய ஆண் குழந்தையைப் பெற்றெடுத்தாள். குழந்தை வளர்ந்தான். தந்தையின் கதியை அறிந்து, பழிவாங்கத் துடித்தான். தாந்திரீக சடங்குகளைக் கற்றுத் தேர்ந்தான். விரைவிலேயே பெரும் மாந்திரீகன் ஆனார்.

இனி, மாந்திரீகர் என்றே அழைப்போம்.

யக்ஷியின் சாபம்!

விரைவில் சூரிய பகவானைக் குறித்து கடும் தவத்தை ஆரம்பித்தார் மாந்திரீகர். ஒருநாள் முதியவர் ஒருவர் இவரைத் தேடி வந்தார். தன்னிடமுள்ள சுவடிக்கட்டை கொடுத்தார். மாந்திரீகம், மந்திர உபாஸனை தொடர்பான மிக அபூர்வமான சுவடிகள் அவை. வியப்படைந்த மாந்திரீகர், நன்றி சொல்ல தேடியபோது முதியவரைக் காணவில்லை. எனில், வந்தது சூரியபகவானே என்று உணர்ந்து மகிழ்ந்தார். சூரியனின் அருள்பெற்ற அவரின் இல்லம் `சூரிய காலடி' எனப்பட்டது.

நாட்கள் நகர்ந்தன. ஓலைச் சுவடியில் இருந்த மாந்திரீகச் சடங்குகளைப் பயின்றவர், தன் லட்சியத்தை நிறைவேற்ற வேண்டிய தருணம் இதுதான் என்று முடிவு செய்தார். விசேஷமான யாகத்தைத் தொடங்கினார். யாகத்தின் சக்தியால், உலகில் உள்ள அனைத்து யக்ஷிகளும் அவர் முன் தோன்றினர். அவர்களிடம் தன் தந்தையைக் கொன்றவள் பற்றிய உண்மையைக் கூறும்படி உத்தரவிட்டார் மாந்திரீகர்.

ஒவ்வொருவராகத் தோன்றி தாங்கள் அந்தக் காரியத்தைச் செய்யவில்லை என்று மறுக்க, பட்டதிரியைக் கொன்ற யக்ஷியின் முறை வந்தது. வேறு வழியில்லாத அவள் உண்மையை ஒப்புக் கொண்டாள். அத்துடன் சூரிய காலடி பட்டத்திரியான அந்த மாந்திரீகரின் காலில் விழுந்து தன்னை மன்னிக்கும்படி மன்றாடினாள். ஆனால் அவரோ அவளைப் புனித நெருப்பில் எரித்தார்.

நெருப்பில் பொசுங்குவதற்குமுன் அந்த யக்ஷி “நாற்பத்தொரு நாள்களுக்குள் நீ மூச்சுத் திணறி இறப்பாய்” என்று சபித்தாள்.

மாந்திரீகர் அந்த சாபத்தைப் பெரிதாகக் கருதவில்லை. ஒரு மாதத்துக்குப் பிறகு மன்னர் ஒருவர் காலடி பட்டத்திரியான இந்த மாந்திரீகரைத் தனது அரண்மனைக்கு அழைத்தார்.

மன்னரின் மனைவி விசித்திரமான நோயால் பாதிக்கப்பட்டிருந்தாள். அவளின் உடலில் கந்தர்வன் ஒருவன் புகுந்து இம்சை செய்கிறான் என்பதையும் அறிந்தார் மாந்திரீகர்.

அவரால் அழிக்கப்பட்ட யக்ஷியின் இணையான கந்தர்வனே இங்கு அரசியின் உடலில் இருந்தவன். விசேஷ பூஜைகள் செய்து, அவனை அவளது உடலிலிருந்து வெளியேறும்படி உத்தரவிட்டார். அவன் அதற்கு இசையவில்லை. தனது மனைவியைக் கொன்றது குற்றம் என்று இவர் மீது சீற்றம் காட்டினான். காலடி பட்டத்திரியான மாந்திரீகரோ, தனது சக்தி வாய்ந்த தாந்திரீக சடங்குகளால், கந்தர்வனை ராணியின் உடலை வலுக்கட்டாயமாக வெளியேற்றினார்.

மனம் நொந்துபோன கந்தர்வனும், ``இன்னும் ஏழு நாள்களுக்குள் நீ இறந்துவிடுவாய்” என்று மாந்திரீகரைச் சபித்தான்.

அரண்மனையில் மாந்திரீகருக்கு மதிப்புமிக்க பரிசுப் பொருள்கள் கொடுக்கப்பட்டன. ஆனால் மாந்திரீகருக்கோ மனம் மகிழ்ச்சியில் இல்லை. மாறாக அவருக்குள் மெள்ள கவலை எழுந்தது. ஆம்! இரண்டு சாபங்கள் கிடைத்ததும் கவலைப்படத் தொடங்கினார்.

யக்ஷியின் சாபத்தில் கூறப்படும் 41-ம் நாளும் கந்தர்வ சாபத்தில் கூறப்படும் 7-ம் நாளும் ஒரே நாள்தான். இந்த உண்மை அவரை மேலும் சங்கடப்படுத்தியது.

இந்தச் சாபத்துக்கு விமோசனம் உண்டா என்று ஆய்வு செய்தார். திருவாளூர் எனும் தலத்தில் உள்ள கோயிலுக்குச் சென்று பிரார்த்தனை செய்தால், அவர் தப்பிக்க வாய்ப்பு உண்டு என்று கண்டறிந்தார். சாபம் நிறைவேறக்கூடிய அந்த நாள் முழுவதும் அந்தக் கோயிலில் செலவிட முடிவு செய்தார்.

ஆனால் விதி வேறுவிதமாக இருந்தது. காலடி பட்டத்திரியாகிய இந்த மாந்திரீகர் அந்த ஆலயத்தை அடைவதற்கு முந்தைய நாள், கோயிலில் ஓர் அசரீரி ஒலித்தது.

யக்ஷியின் சாபம்!

“நாளை மதியத்திற்குமுன் கோயிலை மூட வேண்டும். மூடிய பிறகு யாரும் கோயில் வளாகத்தில் இருக்கக்கூடாது” என்றது அந்த அசரீரி.

உண்மையில் அந்தக் குரல் கந்தர்வனுடையது. ஆனால், அதை சிவ வாக்கு என்று நம்பிய பூசகர்கள், குறிப்பிட்ட நாளில் அந்த வாக்கு சொன்னபடியே செய்தார்கள். சூர்ய காலடி பட்டத்திரி வந்தபோது, ​​கோயில் மூடப்பட்டிருந்தது,

ஆகவே, கோயில் குளத்தில் நீராடலாம் என்று இறங்கினார். திடீரென்று அவர் வயிறு நிரம்பியதாக உணர்ந்தார். மேலும் சிறுநீர் கழிக்கவேண்டும் எனும் உணர்வு எழ அருகிலுள்ள காட்டுப் பக்கம் சென்றார். ஆனால் அங்கு எதுவும் நடக்கவில்லை. மீண்டும் குளத்துக்கு வந்தார். ஆனால், மீண்டும் இயற்கையின் அழைப்பு வந்தது!

இவ்வாறு பலமுறை நடக்கவே, குளத்தின் படிகளில் ஏறி இறங்கியதால் மூச்சுத் திணறலுக்கு ஆளானார் அவர். இரண்டு சாபங்களின் பிடியும் தன்னை இறுக்குவதைப் புரிந்து கொண்டார். ஆகவே, குளத்தின் படிகளில் விழுந்து சூரியனை வணங்கினார். “அந்தச் சுவடிகளில் குறிப்பிடப்படாத எதையும் நான் செய்யவில்லை. பிறகு நான் ஏன் கஷ்டப்படுகிறேன்?” எனக் கேட்டார்.

அப்போது வானில் ஒரு குரல் ஒலித்து விளக்கம் தந்தது. சுயநல நோக்கங்களுக்காக புனிதச் சடங்குகளைப் பயன்படுத்தியது தவறு என்பதை அவருக்கு உணர்த்தியது. அதற்காக அவர் மன்னிப்பு கேட்டார். ஆனால் விதியின் முடிவை எவரும் மாற்ற முடியாதே. சூரியன் அஸ்தமிக்க; மூச்சுத் திணறல் அதிகரித்து பட்டத்திரியும் மறைந்தார்.

ஆனால் சூர்யனின் அருள்பெற்ற அக்குடும்பம் தழைத்து வளர்ந்தது. பல மாந்திரீக வல்லுநர்கள் அக்குடும்பத்தில் உருவானார்கள். மஹாகணபதியின் அருளையும் பெற்று, தெய்வ சக்தியால் பலருக்கும் பலவிதமான உதவிகளைச் செய்தார்கள்!

- தொடரும்...