ஜோதிடம்
Published:Updated:

`மலையின் குரலா மனதின் குரலா?'

மலையின் குரல்!
பிரீமியம் ஸ்டோரி
News
மலையின் குரல்!

துளித் துளிக் கடல்கள் - எஸ்.ராஜகுமாரன்

‘குறையொன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா’ என்பது மூதறிஞர் ராஜாஜி எழுதி, எம்.எஸ். சுப்புலட்சுமி பாடிய பாடல். இப்பாடலை நாம் அனைவரும் கேட்டு ரசித்திருப்போம்!
நிறை சொல்லும் மனிதர்களைவிட குறை சொல்லும் மனிதர்கள் நிறைந்த உலகம் இது.

`மலையின் குரலா மனதின் குரலா?'

தில் என்ன வேடிக்கை என்றால், தங்களிடம் உள்ள எல்லா குறைகளையும் மறந்துவிட்டு அல்லது மறைத்துவிட்டு அடுத்தவர்களை குறை சொல்லும் அங்கதம். இரண்டு மனிதர்கள் சந்தித்தால், அவர்கள் இருவரும் குறைந்தது ஒரு மூன்றாவது நபரைக் குறை கூறுவது என்பது மனித இயல்பு! இந்தப் பாடலைப் பாருங்கள்… கண்ணுக்குத் தெரியாமல் நிற்கின்ற கடவுளைப் பற்றிக் கவலை இல்லை. ஏனெனில், வேண்டுவதைக் கொடுக்கக்கூடிய அவரைப்பற்றி வேறு எதற்கு ஆராய்ச்சிகள் என்பது போன்ற நம்பிக்கை வார்த்தைகள் இந்தப் பாடல் முழுவதும் மிளிரும்.

கடவுளிடம்கூட குறைகளாக சொல்லிக் கொண்டிருப்பதைவிட, இதுவரையிலும் நம் வாழ்வில் அவர் கொடுத்த சந்தோஷங்களை, நிறைகளைக் கூறி நன்றி தெரிவித்து - மேலும் நல்வாழ்வைத் தா என்று இறைஞ்சுவதே நேர்மறையான பிரார்த்தனை என்பது மெய்யறிவாளர்களின் கூற்று!

‘பூமியில் இருப்பதும் வானத்தில் பறப்பதும் அவரவர் எண்ணங் களே!’ எனும் கண்ணதாசனின் பாடல் வரிகள், குறை சொல்லும் குணத்துக்குப் பதில் சொல்வது போன்றவை.

சாதாரணமாக வீடுகளில் மின்சாரம் போனால் ‘ஐயய்யோ! மின்சாரம் போய்விட்டதே... இரண்டு மணி நேரம் ஆகிவிட்டது இன்னும் வரவில்லையே... எப்போது வரும் என்று தெரியவில்லையே...’ - என்று குறை சொல்லிப் புலம்புவது எதிர்மறைச் செயல்.

மின்சாரம் போனதும் சட்டென்று ஓர் அகல் விளக்கை ஏற்றலாம். இன்றைய தொடுதிரை செல்பேசி உலகில், உடனடியாக செல்பேசியில் உள்ள சிறிய விளக்கை விரலால் தொட்டு ஏற்றிவிட முடியும் அல்லவா?

`மலையின் குரலா மனதின் குரலா?'
THEPALMER

`இருட்டு இருட்டு என்று புலம்பும் கணங்களில் ஓர் அகல் விளக்கை ஏற்றலாம்’ என்பது, மின்வெட்டு குறித்து மின்னல்வெட்டு போல் யாரோ சொல்லிய வெளிச்ச வார்த்தைகள் - ஓர் அழகான ஒளிக் கவிதை! நேர்மறை எண்ணங்களின் வலிமையை உணர்த்தும் அருமையான குட்டிக்கதை இது:

ஒரு தந்தையும் மகனும் மலைப்பாதையில் குதிரையில் சென்று கொண்டிருந்தனர். வழியில் ஓரிடத்தில் சிறு கல் இடறியதால் குதிரை தடுமாறியது. முதலில் கீழே விழும் மகன் “ஐயோ!” என்று அலறினான். அது மலைகளில் `ஐயோ’ என்று எதிரொலித்தது.

மலை தன்னைக் கேலி செய்வதாகக் கோபம் கொண்ட சிறுவன் “உன்னைக் கொன்றுவிடுவேன்!” என்று மீண்டும் ஆத்திரமாகக் கத்தினான். அந்தச் சொற்களும் மலையில் எதிரொலித்தன.

“மீண்டும் கேலி செய்கிறாயா? நான் உன்னை என்ன செய்கிறேன் பார்!” என்று மறுபடியும் கூச்சலிட்ட சிறுவன், ஒரு கல்லை எடுத்து மலையை நோக்கி வீசினான்.

அவனுடைய குழந்தைத்தனத்தை, அறியாமையால் ஏற்பட்ட கோபத்தை உணர்ந்துகொண்ட அவன் தந்தை அவனிடம் `நான் நல்லவன்’ என்று கத்தும்படி அறிவுறுத்தினார். அவனும் அப்படியே செய்தான். மலை அதை அழகாக எதிரொலிக்கிறது!

தந்தை மீண்டும் அவனிடம் `உன்னை எனக்குப் பிடித்திருக்கிறது!’ என்று உரக்கக் கத்தும்படி பணித்தார். மகனும் அப்படியே கத்தினான். அந்தச் சொற்களையும் மலைச் சிகரங்கள் அழகாக எதிரொலித்தன.

அப்போதுதான் சிறுவனுக்குப் புரிந்தது. மலையில் எதிரொலிப்பது மலையின் குரல் அல்ல - தன் மனதின் குரல் என்று!

“மகனே! எண்ணங்களே வாழ்க்கை. உன் மனம் சிரித்தால் அது சிரிக்கும். இந்த உலகம் சிரிக்கும். உன் மனம் அழுதால், உன் கண்களில் கண்ணீர் வரும். உலகமே ஒரு கண்ணீர்க் காடாக காட்சி அளிக்கும்... புரிந்துகொள்!” என்ற தந்தை, மகனைக் குதிரையில் ஏற்றிக் கொண்டு பயணத்தைத் தொடர்ந்தார்.

-பருகுவோம்…