Published:Updated:

திருவானைக்காவல் மூலஸ்தானத்தில் நீர் சூழ்ந்தது… பக்தர்கள் ஆனந்தம்!

நீண்ட வருடங்களுக்குப் பிறகு திருவானைக்கோயில் ஜம்புகேஸ்வரர் ஆலயத்திற்குள் நீர் புகுந்ததால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Jambukeswarar Temple, Thiruvanaikaval
Jambukeswarar Temple, Thiruvanaikaval

பஞ்சபூதங்களில் திருச்சி திருவானைக்கோயில் ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி கோயில் நீர் தலமாகப் போற்றப்படுகிறது. சைவத் திருத்தலங்களில் மிக முக்கியமான தலமாக விளங்கும் இக்கோயிலில் எப்போதும் பக்தர்கள் வருகை நிறைந்து இருக்கும்.

Jambukeswarar Temple, Thiruvanaikaval
Jambukeswarar Temple, Thiruvanaikaval

சிவபெருமான் பஞ்சபூதவடிவானவர். நிலம், நீர், காற்று, ஆகாயம், நெருப்பு என ஐம்பூதங்களால் இறைவன் கோயில் கொண்ட தளங்கள் சிவ வழிபாட்டில் மிகவும் சிறப்பு பெற்றவை. திருச்சி காவிரி மற்றும் கொள்ளிடம் ஆற்றுக்கு இடைப்பட்ட நிலப்பகுதியில் அமைந்துள்ளதால் இந்த ஆலயம் நீர் தலமாக கருதப்படும்.

சிவனை வழிபடப் பூலோகம் வந்த அம்பிகை காவேரியில் நீர் எடுத்து லிங்கம் வடித்து வழிபட்டார் என்றும், நீரால் ஆனதால் அந்த லிங்கம் ஜம்புகேஸ்வரர் எனப்பெயர் பெற்றது என்கிறது புராணம். மேலும் மூலஸ்தானம் நீர் சுரக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.

அதுமட்டுமல்லாமல் மாலியவான் சிலந்தியாகவும் புட்பதந்தன் யானையாக மாறி தினமும் இந்த ஆலயத்தில் இறைவனை வழிபட்டனர் என்றும், சிலந்தி வலைப்பின்னி இறைவன்மீது வெயில் மழை படாமல் பாதுகாத்தது. ஆனால், உதவி செய்ய வந்த யானை இறைவனின் மீது சிலந்தி பின்னிய வலையைப் பிடித்துப்போட்டது.

Jambukeswarar Temple, Thiruvanaikaval
Jambukeswarar Temple, Thiruvanaikaval

ஒரு கட்டத்தில் தான் பின்னிய வலையை யானை சுத்தம் செய்தது. இதைக் கண்ட சிலந்தி யானையின் துதிக்கையில் புகுந்து துன்புறுத்தியது, யானையும் சிலந்தியும் போராடி மடிந்தன. அந்த சிலந்திதான் பிற்காலத்தில் கோச்செங்கட்சோழனாகப் பிறந்தான் என்றும், அப்படிப் பிறந்தவர் தன்னுடைய பூர்வஜன்ம நினைவாக யானை ஏற முடியாதவாறு மிக குறுகலான படிகளை கொண்ட கோயிலைக் கட்டினார் என்றும் சொல்லப்படுகிறது.

2500 வருட மிகவும் பழைமையான இந்தக் கோயிலுக்கு வந்து இறைவனையும் இறைவியையும் வணங்கி வழிபடத் திருமணத் தடைகள் நீங்கும், சகல தோஷங்கள் விலகும், குழந்தை பாக்கியம் கிட்டும் என்பது நம்பிக்கை.

இப்படிப்பட்ட சக்திவாய்ந்த ஆலயமாக விளங்குகிறது இந்தக் கோயில், தற்போது காவிரி மற்றும் கொள்ளிடம் ஆற்றில் பெருமளவு தண்ணீர் செல்வதாலும், அடுத்தடுத்த தினங்களில் அதிகளவு மழைப்பொழிவு காரணமாகவும், கோயில் உள்ள பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்துள்ளது.

Jambukeswarar Temple, Thiruvanaikaval
Jambukeswarar Temple, Thiruvanaikaval

இந்நிலையில் சக்திவாய்ந்த நீர் தலமாக விளங்கும் கோயிலின் மூலஸ்தானத்தைச் சுற்றி அற்புதம் நிகழ்ந்துள்ளது. கோயிலுக்குள் நீர் புகுந்தது, தண்ணீரால் சூழ்ந்திருந்தது. இதை அறிந்து அங்கு திரண்ட பக்தர்கள் மிகவும் பக்தியாக சிவனை வணங்கி மகிழ்ந்தனர்.