Published:Updated:

சங்கடங்கள் நீக்கிடும் தாமரைத் தண்டு தீபம்!

அழகுமலையான்  திருக்கோயில்
பிரீமியம் ஸ்டோரி
அழகுமலையான் திருக்கோயில்

தாமரைக்குளம் அழகுமலையான் திருக்கோயில்

சங்கடங்கள் நீக்கிடும் தாமரைத் தண்டு தீபம்!

தாமரைக்குளம் அழகுமலையான் திருக்கோயில்

Published:Updated:
அழகுமலையான்  திருக்கோயில்
பிரீமியம் ஸ்டோரி
அழகுமலையான் திருக்கோயில்

படங்கள்: திருமலை செல்லமணி

தாமரைத் தண்டில் திரி எடுத்து, அதைக்கொண்டு இந்தப் பெருமாளுக்குத் தீபம் ஏற்றி வழிபடுவதால் பித்ருதோஷம், முன்னோர் கோபம் ஆகியவை நீங்கும் என்கிறார்கள்.

அழகுமலையான் திருக்கோயில்
அழகுமலையான் திருக்கோயில்

“பிள்ளைங்களா... நாம நினைச்சவுடனே போயி அந்த அழகு மலையானைக் கும்பிட முடியலை. வண்டிமாட்டைக் கட்டிக்கிட்டு, ஐம்பது மைல் தாண்டி போயிட்டு வர்றது அவ்வளவு சிரமமா இருக்கு. வழியில் களவாணிப் பயலுக தொல்லை வேற! என்ன பண்ணலாம்னு ஒன்னும் புரியலைய்யா.

அழகுமலையான் குடிகொண்டிருக்கிறாரே... அந்த மலையும் அவரும் வேறு வேறு இல்லை. மலையே அவர்தான். அங்கிருக்கிற மண்ணும் நம்ம சாமிதான். அதனால, அழகுமலைலேர்ந்து மண்ணெடுத்து வந்து, நம்ம இடத்துலேயே கோயில் கட்டி கும்புடலாம்னு நம்ம பாட்டையா முடிவு எடுத்திருக்கார்’’ - என கூடியிருந்த அனை வருக்கும் கேட்கும்படி உரக்கக் கத்தினார் அந்தப் பெரியவர்.

அப்போது கூட்டத்தில் பக்தர் ஒருவர் உணர்ச்சிவயப்பட்டவராய் எழுந்தார். ஏதோ சாமி அருள் வந்ததுபோல் உரக்கக் கத்தினார்: “ஆத்மார்த்தமாய் என்னை அழைத்தால் எங்கும் குடிகொண்டு அருள்புரிவேன்!”

அவர் சொன்னதைச் சாமி வாக்காகவே எடுத்துக்கொண்டார்கள் அவ்வூர் மக்கள். `பாட்டையா எடுத்த முடிவு சரிதான். ஒவ்வொரு தடவை கோயிலுக்குப் போகும்போதும் வெள்ளைக்கார துரைகளுக்கும் பதில் சொல்ல வேண்டிருக்கு. அதனால, அழகுமலையானுக்கு நம்ம இடத்துலேயே ஒரு கோயில் கட்றதுதான் சரி!’ என்று தீர்மானித்து, ஊர்ப்பெரியவர் சொன்னதை மகிழ்ச்சியோடு ஏற்றுக் கொண்டார்கள்.

யார் அந்த அழகுமலையான்? விருஷபாத்ரி எனப் புராணங்களும் திருமாலிருஞ்சோலை என இலக்கியங்களும் போற்றிப் புகழும் அழகர் மலை இருக்கிறதே... அங்கு அருள்பாலிக்கும் கள்ளழகரையே அழகுமலையானாக வணங்கி வந்தனர் அந்த மக்கள். அவர்களுக்கு அந்தக் கள்ளழகரே குலதெய்வமும் இஷ்ட தெய்வமும் ஆவார்.

ஓவ்வொருமுறையும் தங்கள் ஊரிலிருந்து அழகர்மலைக்கு வெகு சிரமத்தோடு சென்று வந்தார்கள். அந்தக் காலத்தில் இப்படிப் பயணத்துக்கும் தரிசனத்துக்கும் சிரமம் ஏற்படும்போது, தங்களின் இஷ்டதெய்வக் கோயில்களிலிருந்து ‘பிடிமண்’ எடுத்து வந்து, தாங்கள் வசிக்கும் ஊரிலேயே ஆலயம் எழுப்பி வழிபடுவதை வழக்கமாக்கிக் கொண்ட னர் மக்கள். அவ்வாறான கோயில்களில் ஒன்றுதான், தாமரைக் குளத்தில் உள்ள அருள்மிகு அழகுமலையான் திருக்கோயில்.

அழகுமலையான்
அழகுமலையான்


இந்த ஊரில் பெரிய ‘தாமரைக்குளம்’ இருக் கிறது. தாமரைகள் நிறைந்து எழிலுற காட்சி யளிக்கும் இந்தக் குளத்தின் பெயரே ஊருக்கும் அமைந்துவிட்டது. அழகு பொலியத் திகழும் கோயிலில், கர்ப்பக்கிரகத்தில் தேவி பூதேவி யுடன் நின்ற திருக்கோலத்தில் அருள்பாலிக்கிறார் அழகுமலையான்.

அவருக்கு இடப்புறம் பதினெட்டாம்படி கருப்பண்ண சுவாமிக்கும் இடப்புறம் இருவாஞ்சி அம்மனுக்கும் தனித்தனியே சந்நிதி அமைந்துள்ளது. மேலும் ஆலய வளாகத்தில் விநாயகர், ஆஞ்சநேயர், கருடாழ்வார் ஆகியோரையும் தரிசிக்கலாம்.

இருவாஞ்சி அம்மன்
இருவாஞ்சி அம்மன்
கருப்பண்ண சுவாமி
கருப்பண்ண சுவாமி
கருடாழ்வார்
கருடாழ்வார்

‘சாமிப் பெட்டி’க்கு அபிஷேகம்!

சித்ரா பெளர்ணமித் திருவிழா இங்கு விசேஷம். அப்போது கள்ளழகர் வைகையில் எழுந்தருளும் வைபவம் போல் இங்கேயும் ஒரு வைபவம் நடக்கும். சுவாமிக்கான பூஜைப்பொருள்கள் வைக்கப்பட்டிருக்கும் பெட்டி, தாமரைக் குளத்துக்கு எடுத்துச் செல்லப்படும். அங்கே அந்த சாமிப்பெட்டிக்கு அபிஷேகம் செய்யப் பட்டு, கோயிலுக்கு ஊர்வலமாக எடுத்து வரப்படும். அப்போது கள்ளழகர் உலாவில் நடப்பதுபோலவே, பக்தர்கள் திரிஎடுத்து ஆடி வருவதும், அரிவாள் மீதேறி கருப்பண்ண சுவாமி குறிசொல்லும் வைபவமும் நடக்கும். மறுநாள் பக்தர்கள் சுவாமிக்குப் பொங்கல் வைப்பார்கள். முடிக்காணிக்கை செலுத்தியும் வழிபடுவார்கள்.

ஆடிமாதம் பதினெட்டாம் பெருக்கு அன்றும் சுவாமியின் பெட்டி, தாமரைக்குளத்துக்குச் சென்று வரும். அன்று சுவாமிக்கு விசேஷ அபிஷேக ஆராதனைகள் உண்டு.

மறுநாள் பக்தர்கள் பதினெட் டாம்படி கருப்பண்ணசாமிக்கு, ஆட்டுக்கிடா நேர்த்திக்கடன் செலுத்துவார்கள். இருவாஞ்சி அம்மனுக்கும் பட்சணம், பலகாரங்கள் படைக்கும் வைபவம், சந்தனக் குடம் எடுக்கும் வைபவம் ஆகியன விசேஷமாக நடைபெறும்.

இந்த இரண்டு விழாக்களின்போதும் இவ்வூர் மக்கள் தாங்கள் எந்த ஊரில் வசித்தாலும் தாமரைக்குளத்துக்கு வந்துவிடுவார்கள். அன்னதானம், விழாக் கொண்டாட்டம் என்று ஊரே களைகட்டும்.

மதுரை கள்ளழகர் கோயிலுக்கு நேர்ந்து கொண்டு, சூழல் காரண மாக அங்கு செல்ல முடியாத அன்பர்களும் அழகுமலையான் ஆலயத்தில் அந்தப் பிரார்த்தனைகளைச் செய்வது உண்டு.

சங்கடங்கள் நீக்கும் தாமரைத் தண்டு தீபம்!

புரட்டாசி சனிக்கிழமைகள், மார்கழி தனுர் மாத பூஜை மற்றும் பௌர்ணமி தினங்களில் விசேஷ அபிஷேக ஆராதனைகள் நடைபெறும். அப்போது அலங்காரப் பிரியனான அழகுமலையானுக்குப் பக்தர்கள் பாலாபிஷேகம் செய்து வழிபடுவது வழக்கம்.

சுவாமிக்குத் தாமரை மலர்கள் படைத்து, விளக்கு ஏற்றி, பாலபிஷேகம் செய்து வழிபட் டால் தங்களின் பிரார்த்தனைகள் விரைவில் நிறைவேறும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

அதேபோல், தாமரைத் தண்டில் திரி எடுத்து, அதைக்கொண்டு இந்தப் பெருமாளுக் குத் தீபம் ஏற்றி வழிபடுவதால் பித்ருதோஷம், முன்னோர் கோபம் ஆகியவை நீங்கும் என்கிறார்கள்.

மட்டுமன்றி மனச்சங்கடங்கள், குடும்பத்தில் பிரச்னை, பொருளா தாரத்தில் சிக்கல் - கடன் பிரச்னைகள் போன்றவை விலகவும், நீண்ட நாட்களாக தடைபட்டிக்கும் திருமணம் போன்ற சுபகாரியங்கள் விரைவில் நடக்கவும், குழந்தைப்பேறு வாய்க்கவும், ஆரோக்கியம் வேண்ட்யும், தொழில் சிறக்கவும் இந்தப் பிரார்த்தனையைச் செய்து அழகுமலையானை வழிபடுகிறார்கள்.

அழகுமலையானும் தன்னைநாடி வந்து வணங்கி வழிபடும் அவர்களின் இன்னல்களைக் களைந்து இன்பவாழ்வை வரமாக அருள்கிறார். இதற்கு, அனுதினமும் அவரின் சந்நிதிக்கு வரும் பக்தர்கள் கூட்டமே சாட்சி என்கிறார்கள் உள்ளூர் மக்கள். நீங்களும் ஒருமுறை குடும்பத்தோடு சென்று அழகுமலையானை வழிபட்டு வரம்பெற்று வாருங்களேன்.

எப்படிச் செல்வது?: பெரியகுளத்திலிருந்து தேனி செல்லும் சாலையில் சுமார் 2 கி.மீ. தொலைவில் உள்ளது தாமரைக்குளம். `காலேஜ்’ நிறுத்தத்தில் இறங்கி, அங்கிருந்து 2 கி.மீ. ஊருக்குள் சென்றால் கோயிலை அடையலாம். ஷேர் ஆட்டோ வசதி உண்டு. இந்தக் கோயில் காலை 8 முதல் 10 மணி வரையிலும்; மாலையில் 5 முதல் 7 மணி வரையிலும் திறந்திருக்கும். அழகுமலையானுக்குத் தாமரைகளைச் சமர்ப்பித்து பாலபிஷேகம் செய்து வழிபட்டால், பிரார்த்தனைகள் விரைவில் நிறைவேறும் என்பது நம்பிக்கை.