திருநாள்ளாறிலும் தேனி மாவட்டம் குச்சானூரிலும் சனி பகவான் விசேஷமாக வணங்கப்படுகிறார். குச்சனூரில் சுயம்பு மூர்த்தியாக லிங்க வடிவில் அருள் பாலிக்கிறார் சனி பகவான். ஆடி மாதத்தில் வரும் சனிக்கிழமை விசேஷத் திருவிழாவாகக் கொண்டாடப்படுகிறது.

சனீஸ்வர பகவான் தலபுராணம் : சூரிய பகவானுக்கும், சாயா தேவிக்கும் மகனாகப் பிறந்தவர் கிருத வர்மா (சனீஸ்வர பகவான்). சிவபெருமான்மீது ஆழ்ந்த பக்தி கொண்டு ஈஸ்வர நிலையை அடைய வேண்டி தாயாரிடம் அனுமதி பெற்று காசிக்கு வந்து லிங்கம் ஒன்றைப் பிரதிஷ்டை செய்து நீண்ட காலம் தவம் இருந்தார். அவரது தவத்திற்கும், பக்திக்கும் பரவசமடைந்த சிவபெருமான் தம்பதி சமேதராக அவர் முன்பாக காட்சியளித்து வேண்டும் வரத்தை அளிப்பதாகக் கூறினார். அதற்கு கிருத வர்மா தனது தந்தையான சூரிய பகவானைவிட அதிகமான பலத்தையும், பார்வையையும் ஈஸ்வர பட்டமும் அளிப்பதுடன், நவ கிரகங்களில் தான் அதிகமாக பலம் பொருந்திய கிரகமாக இருக்கவும், தன் பார்வை பட்டால் அவர்கள் எல்லா பலமும் இழந்துவிட வேண்டும் என்றும் வரமளிக்க வேண்டினார். சிவபெருமான் அவர் கோரிய வரம் அனைத்தையும் அளித்தார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

அன்று முதல் இன்று வரை நவ கிரகங்களில் அதிக பலம் பெற்று சர்வ லோகத்தையும் ஆட்டிப்படைத்து வருபவராக விளங்குகிறார் சனீஸ்வர பகவான். நவக்கிரகங்களில் ஒன்பது கோள்களில் ஒன்றாக இருப்பவர் சனி பகவான். எட்டாம் எண்ணுக்குரியவர். மனிதனின் ஆயுட்காலத்தில் சனி திசை நடக்கும்போது அனைத்து விதமான சோதனைகளையும் அனுபவிக்கிறான் என்கிறது ஜோதிட சாஸ்திரம்.
ஜோதிட சாஸ்திரப்பபடி சனி திசை நடக்கும் அன்பர்கள் சனி பகவான் பார்வையிலிருந்து தப்பிக்க குச்சனூரில் சுயம்புவாய் எழுந்தருளிய சனி பகவான் ஆலயத்தை வந்து தரிசித்தால் சனி பகவான் பார்வையிலிருந்து விடுபடலாம் என்பது தலவரலாறு.

குச்சனூர் ஆலய தல வரலாறு : இக்கோயில் 2000 ஆண்டுகள் பழைமையானது என்கிறார்கள். தினகரன் என்ற மன்னன் கலிங்க நாட்டை ஆண்டு வந்தார். அந்த மன்னனுக்குக் குழந்தை பாக்கியம் இல்லாமல் இருந்தது. அதனால் மன்னன் தனக்குக் குழந்தை பாக்கியம் வேண்டும் என்று இறைவனிடம் வேண்டி வந்தார். ஒருமுறை இறைவனை வேண்டிக்கொண்டு இருக்கும்போது அசரீரி ஒன்று கேட்டது. அந்த அசரீரியில் 'உனது வீட்டிற்குப் பிராமணச் சிறுவன் ஒருவன் வருவான் என்றும் அவனை வளர்த்து வர வேண்டும்' என்றும் கூறியது.

மன்னரும் அந்த பிராமணக் குழந்தைக்கு சந்திரவதனன் என்ற பெயரை வைத்து வளர்த்தார். அந்த குழந்தை வந்தநேரம் அரசருக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்தது . மன்னனும் அரசியும் அந்தக் குழந்தைக்கு சதாகன் என்ற பெயர் சூட்டி வளர்த்தனர். சந்திரவதனன் மிகவும் அறிவுத் திறனுடன் இருந்தான் .மன்னன் அவனுடைய அறிவுத்திறனுக்கு அவனை மன்னன் ஆக்குவதே சரி என்கிற எண்ணத்துடன் சந்திரவதனன் வளர்ப்பு மகனாக இருந்தாலும் முடி சூட்டினார். அப்போது தினகர மன்னனை ஏழரை ஆண்டுகள் சனி பகவான் பற்றி வருத்தப் போவதாக அவரது மகன் சந்திரவதனன் சோதிடர் மூலமாக அறிந்தான். அருகிலுள்ள வனத்திற்குச் சென்று செண்பகம், கொங்கு முதலிய மரங்கள் அடர்ந்த சோலையில் சுரபி நதிக்கரையில் அமர்ந்து சனி பகவான் உருவத்தை இரும்பில் அமைத்து மன உறுதியோடு ஆழ்ந்த பக்தியுடன் வழிபட்டு வந்தான்.
தன்னை ஆழ்ந்த பக்தியோடு வழிபட்ட சந்திரவதனனுக்கு நேரில் காட்சியளித்த சனி பகவான் அவனை நோக்கி உனக்கு என்ன வரம் வேண்டும் எனக் கேட்டார். சந்திரவதனன் எனது தந்தையைப் பற்றாமல் அதற்கு ஈடாகத் தன்னைப் பற்றிக் கொள்ள வேண்டும் என வேண்டினான். சனிபகவானும் அதனை ஏற்று ஏழரை ஆண்டினை ஏழரை நாழிகையாக்குவதாகவும் அடுத்த வாரம் பற்றுவதாகவும் கூறி மறைந்துவிட்டார். அதன்படியே சந்திரவதனனை ஏழரை நாழிகை நேரம் பற்றி ஏழரை ஆண்டுகள் அனுபவிக்க வேண்டிய துன்ப நிலையை அனுபவிக்கச் செய்தார். சந்திரவதனனை கலிங்க நாட்டிற்கு அரசனாக முடிசூட்டி அரியணையில் அமர்த்தி அருள் பாலித்து மறைந்து விட்டார். சந்திரவதணனுக்கு சனி பகவான் அருள் பாலித்த இடம் தற்போதைய குச்சனூர் அருள்மிகு சனீஸ்வர பகவான் கோயில் ஆகும்.

சந்திரவதனனுக்கு முடி சூட்டிக்கொண்டதும் தனது தந்தையான தினகரன் மன்னனை அழைத்துக் கொண்டு சனிபகவானை இரும்பில் உருவம் அமைத்துப் பூஜித்த இடத்திற்கு அழைத்து வந்தான். அங்குக் கரிய மேகம் திரண்டு உருப்பெற்று சூரிய ஒளியோடு பிரகாசித்துக் கொண்டு பூமியைப் பிளந்து வெளிவந்ததை போன்று சனி பகவான் சுயம்புவாக தோன்றி பேரழகோடுக் காட்சியளித்தார். அனைவரும் பகவானின் திருஉருவத்தைக் கண்டு அதிசயத்துத் தரையில் விழுந்து துதித்து வணங்கினர்.

சனி தோஷம் பிடித்து அதனால் துன்பப்படும் பிறருக்கும் அருள் செய்து வழிகாட்டுதலாக இருக்க வேண்டும் என்று சந்திரவதனன் வேண்டினான். பிறகு அங்கு அமைந்துள்ள செண்பக மரங்கள் அடர்ந்த சோலையில் ஒரு விடத்தலை மரத்தின் நிழலில் சனி பகவான் எழுந்தருளியதைக் கண்டு அவ்விடத்திலேயே சிறிய கோயில் கட்டி குச்சுப்புல்லால் கூரை அமைத்து வழிபாட்டுத் தலமாக்கினான்.
ஆதியில் செண்பக நல்லூர் என அழைக்கப்பட்டு பின்னர் குச்சுப்புல்லால் உருவான குடிலில் சனி பகவான் எழுந்தருளியதால் அந்த ஊருக்கு குச்சனூர் என அழைக்கப்பட்டது. சனி பகவானை குச்சனூரான் என்றும் அழைப்பர்.
தல சிறப்பு : தமிழ்நாட்டில் திருநாள்ளாறிலும் தேனி மாவட்டம் குச்சானூரிலும் சனி பகவான் விசேஷமாக வணங்கப்படுகிறார். குச்சனூரில் சுயம்பு மூர்த்தியாக லிங்க வடிவில் அருள் பாலிக்கிறார். ஆடி மாதத்தில் வரும் சனிக்கிழமை விசேஷத் திருவிழாவாகக் கொண்டாடப்படுகிறது. வெளிமாநிலங்களில் இருந்து பக்தர்கள் அதிக அளவில் தரிசனம் செய்ய வருகின்றனர். சனி திசை நடப்பவர்கள் குச்சனூருக்கு வந்து மண்ணால் ஆன காகங்களை வாங்கி இறைவனுக்குக் காணிக்கை செலுத்துகின்றனர். பூலோகத்தில் பிறக்கும் மனிதப் பிறவிகளுக்கு அவர்கள் முற்பகுதியில் செய்த கர்ம வினைகளின்படி நீதி தேவதையாக இருந்து உரிய நல்வினை தீவினைகளை அளிப்பாராக விளங்குகிறார் சனி பகவான். இவரை இந்த ஆடி மாத சனிக்கிழமையில் வந்து தரிசித்து பேரருள் பெறுவோம்!