
தென்கச்சி சுவாமிநாதன், ஓவியம்: சேகர்
கோயிலுக்குச் சென்றான் ஒருவன். அங்கு, அர்ச்சனைத் தட்டு வாங்கி அர்ச்சகரிடம் கொடுத்தவன், தனது பெயர் மற்றும் நட்சத்திரத்தைச் சொல்லி, அர்ச்சனை செய்யுமாறு கேட்டுக் கொண்டான்.
தட்டை வாங்கிக் கொண்டு கருவறைக்குள் சென்ற அர்ச்சகர், மந்திரங்களைச் சொன்னார். இவன், `தனது பெயர் உச்சரிக்கப்படுகிறதா?' என்பதிலேயே கவனமாக இருந்தான். பெயர் உச்சரிக்கப்படவில்லை. அர்ச்சகர் மீது எரிச்சல் வந்தது. அவர் வெளியே வந்ததும், ``என்ன சுவாமி, இப்படி பண்ணிட்டீங்களே?'' என்று வருத்தத்துடன் கேட்டான்.
``என்ன செஞ்சுட்டேன்?''
``ஒரு தடவைகூட எனது பெயரையோ நட்சத்திரத்தையோ ஆண்டவன் காதுல விழாமல் பண்ணிட்டீங்களே!''
``மன்னிக்கணும். உங்களுக்கும் சேர்த்தே பிரார்த்தனை பண்ணினேன்!''
``என்ன சொல்றீங்க?''
``உலகத்துல இருக்கற எல்லோரும் நல்லா இருக்கணும்னு பிரார்த்தனை பண்றதுதான் எனது வழக்கம். நீங்களும் இந்த உலகத்துல ஒருத்தர்தானே?''

“இருந்தாலும், நான்தானே அர்ச்சனைத் தட்டு வாங்கிட்டு வந்தேன்!''
“உங்க அர்ச்சனைத் தட்டு, உலக நன்மைக்காக உபயோகப்படுதுனாஅது உங்களுக்குப் பெருமைதானே?''
``இருந்தாலும்...'' என்று இழுத்தான் நம்மாள்.
அவனை இடைமறித்தார் அர்ச்சகர்
``இதோ பாருங்க... ஒரு செடி இருக்குன்னு வெச்சிக்கோங்க. அதன் கிளைகளில் தண்ணீர் ஊற்றினால், அது வீணாகப் போகும். ஆனால், அதன் வேருக்குத் தண்ணீர் ஊற்றினால்... அதன் பலன் கிளை, இலைனு எல்லாத்துக்கும் கிடைக்கும். அதுபோல நான் அனைவருக்கும் சேர்த்துப் பிரார்த்திக்கிறபோது, அதன் நன்மை உங்களுக்கும் வந்து சேரும்!''
அர்ச்சகர் உதாரணத்துடன் விளக்கிக் கூற... எல்லாம் புரிந்த வனாகத் தலையாட்டிய நம்ம ஆசாமி, பிறகு இப்படிக் கேட்டான்.
``சரி, உங்க விருப்பப்படியே பிரார்த்தனை செய்யுங்க. ஆனால் ஒரு வேண்டுகோள்... பிரார்த்தனையின் பலன் என் பக்கத்து வீட்டுக்காரனுக்கு மட்டும் கிடைக்காம பார்த்துக்க முடியுமா?!''
இன்றைக்குக் கோயிலுக்குச் செல்லும் பக்தர்கள் மூன்று வகை. `தான் நன்றாக இருக்க வேண்டும்' என்று போகிறவர்கள் ஒரு வகை. `அடுத்தவன் நன்றாக இருக்கக்கூடாது!' என்று போகிறவர்கள் ஒரு வகை. `உலகம் நன்றாக இருக்க வேண்டும்!' என்பதற்காகப் போகிறவர்கள் ஒரு வகை.
ஒருவர், எப்போது பிறரை நேசிக்கத் தொடங்குகிறாரோ அப்போது அவர், ஆன்மிகத்தில் முதல் அடியை எடுத்து வைக்கிறார் என்று அர்த்தம்.
5.4.2008 இதழிலிருந்து...