திருத்தலங்கள்
குருப்பெயர்ச்சி பலன்கள்
Published:Updated:

`சுவாமி, அம்பாள், நான்... இதுதான் என் குடும்பம்!'

வேம்பு குருக்கள்
பிரீமியம் ஸ்டோரி
News
வேம்பு குருக்கள்

திருத்தொண்டர் - வேம்பு குருக்கள்

அது மிகச் சிறிய கிராமம். பெரம்பூர் என்று பெயர். நீடாமங்கலம் அருகில் உள்ளது. திருவாரூர் மாவட்டத்தில் இப்படியான கிராமங்கள் அதிகம். இந்தக் கிராமம் தன்னை பாகவத கிராமம் என்று பெருமையோடு அழைத்துக்கொள்கிறது. அந்த அளவுக்கு பக்தியும் சங்கீர்த்தனமும் நிறைந்து வழிகின்றன. காரணம், மகாபுருஷர்களின் பாதம் பட்ட பூமி இது. இந்தக் கிராமத்தின் மத்தியில்தான் அகிலாண்டேஸ்வரி சமேத ஜம்புநாத சுவாமி திருக்கோயில் உள்ளது.

`சுவாமி, அம்பாள், நான்... 
இதுதான் என் குடும்பம்!'

குலோத்துங்கச் சோழன் கட்டிய கோயில். கோயில் கட்டியதுதான் அவனே தவிர, கோயிலின் புராதனம் புராண காலம் வரையிலும் செல்கிறது. பூராட நட்சத்திரக்காரர்கள் வழிபட வேண்டிய திருக் கோயில் இது என்கிறார்கள். மாலை வேளை. கோயிலில் எழும் மணியின் ஓசை அந்தத் தெருவெங்கும் கேட்டது.

கோயிலின் உள்ளே ஓரிருவரே இருந்தனர். எனினும், ஈடுபாடு குறையாமல் ஆனந்தமாக ஜம்புநாத சுவாமியைப் பூஜித்துக் கொண்டிருந்தார் வேம்பு குருக்கள். அவரது பணிவிடைகளில் - வழிபாடுகளில் சுவாமி மனமகிழ்ந்து சிரிப்பதுபோல இருந்தது. பூஜை முடித்து வெளிய வந்தவரை நமக்கு அறிமுகப் படுத்திவைத்தார், நம்மை அழைத்துச் சென்ற அடியார்.

உற்சாகமாய் வரவேற்று தரிசனம் செய்யவைத்துப் பிரசாதம் வழங்கிய வேம்பு குருக்களிடம் `உங்களைப் பற்றிச் சொல்லுங்களேன்’ என்று கேட்டோம். சிறிது நேரம் பேசாமல் இருந்தார். பிறகு தயக்கத்தோடு பேச ஆரம்பித்தார்.

“இந்தப் பணி எனக்கு அந்த சுவாமி கொடுத்த வரம்; அம்பாள் கொடுத்த பரிசு; அவள் இட்ட கட்டளை. பலர் இந்த உலகத்தில் நிம்மதியையும் சந்தோஷத்தையும் தேடி அலைகிறார்கள். ஏன்... சிலர் அந்த ஆண்டவனையே தேடி அலைகிறார்கள். ஆனால், அந்த ஆண்டவன் யாரை நினைக்கிறாரோ, அவருக்கே நல்வழி காட்டி அருள்கிறார். மாணிக்கவாசகருக்கு அப்படித்தானே குருவாக வந்து கழல் அடி காட்டி உள்ளம் கவர்ந்தார். அப்படியான பாக்கியம் எல்லோருக்கும் கிடைத்துவிடுமா?

எனக்கு வேறுமாதிரியான பாக்கியம் கிடைத்தது. அதை விரிவாகச் சொல்ல வேண்டும்.

`சுவாமி, அம்பாள், நான்... 
இதுதான் என் குடும்பம்!'
`சுவாமி, அம்பாள், நான்... 
இதுதான் என் குடும்பம்!'

அப்பா பேரு ராம சுப்பிரமண்ய குருக்கள். அப்பா என்றால்... ஸ்வீகாரம் எடுத்துக்கொண்டவர். அவர்தான் இந்தக் கோயிலில் பூஜை செய்துகொண்டு இருந்தார். அவருக்கு ஐந்து பெண்கள். ஒரு பையன் கூட இல்லை. அதனால் உறவுக்காரப் பையனான என்னை ஸ்வீகாரம் எடுத்துக்கிட்டார். அதுக்குக் கொஞ்ச நாளுக்கு முன்னாடி ஓர் அதிசயம் நடந்தது.

எங்க ஊரு பக்கத்து கிராமம்தான். பத்தாவது படிச்சு முடிஞ்சு லீவுல இங்கே வந்தேன். அப்போ நாள்பூராவும் அப்பா கோயில்லதான் இருப்பார். நானும் இருப்பேன். என்னவோ எனக்குள்ள இந்தக் கோயில் அப்படி ஒட்டிக்கொண்டது. லீவு முடிஞ்சு ஊருக்குப் போனேன். ஒரு நாள் இரவு சொப்பனம்.

இந்த அகிலாண்டேஸ்வரி அம்மா கனவுல வர்றா. அம்மாவின் திருமுகத்தில் அப்படியொரு புன்னகை. ‘நீ என்கிட்டையே வந்துடு. நான் பார்த்துக்கிறேன்’ என்கிறாள். எனக்கு உடம்பெல்லாம் சிலிர்த்துப்போச்சு. ‘அம்மா’ன்னு அலறிட்டேன். விழிப்பு வந்து விட்டது. அதற்கு அப்புறம்தான் நான் ஸ்வீகாரமா இங்கே வந்தேன். சொல்லப்போனா, அந்த அம்பாள்தான் என்னை முதலில் ஸ்வீகாரம் எடுத்ததுன்னு அப்பா சொல்லுவார்.

அந்தக் காலத்தில் வீட்டில் சாப்பாட்டுக்குக் குறைவிருக்காது. காரணம்... சம்பளம் நெல்தான். பணம் எப்பவாவது வரும். ஆனால், அப்பா அதெல்லாம் யோசிக்க மாட்டார். ஐந்து பெண்கள். ஆனால் அவர் ஒருநாள்கூடக் கவலைப்பட்டது இல்லை. `எல்லாம் அந்த அகிலாண்டேஸ்வரி பார்த்துப்பாள்’ என்பார். அது எவ்வளவு சத்தியமான வார்த்தைன்னு எனக்குப் போகப் போகத் தெரிஞ்சது.

நான் ஸ்வீகாரம் வந்து இரண்டு வருஷத்திலேயே அப்பா காலமாயிட்டார். கோயில் பொறுப்புகள் என்கிட்டே வந்தது. எப்படிடா சமாளிக்கப்போறோம்னு ஒருபக்கம் மலைப்பா இருந்தாலும், மறுபக்கம் என்னை கூட்டிக்கொண்டு வந்ததே இந்த அம்பாள்தானே? அவள் வழிகாட்டமாட்டாளா என்று பணியைத் தொடங்கினேன். அது இன்றுவரை தொடர்கிறது.

`சுவாமி, அம்பாள், நான்... 
இதுதான் என் குடும்பம்!'

இந்தக் கிராமத்தை பாகவத கிராமம்னு சொல்லுவாங்க. அதுக்கு இப்போ இருக்கிறவங்க அந்த தர்மத்தைக் கடைப்பிடிக்கிறது மட்டும் காரணம் அல்ல. பாகவத உத்தமரான போதேந்திர சத்குரு சுவாமிகள் இந்த ஊருக்கு வந்து அற்புதம் செய்து, இந்த ஊருக்கு ஆசீர்வாதமா காசிவிஸ்வநாதரை இந்தக் கோயிலில் பிரதிஷ்டை செய்ததுதான்.

இந்தக் கிராமத்தில் அந்தக் காலத்தில் வாழ்ந்த அந்தணர் ஒருத்தர், போதேந்திராளை பிக்ஷைக்காக வேண்டிக்கொண்டார். அதன்படி சுவாமிகளும் வந்தார். அந்த அந்தணருக்கு ஒரு மகன் ஐந்து வயது. பிறவியிலேயே பேசவும் கேட்கவும் முடியாதவன். சத்குரு பிக்ஷைக்காக இலையில் அமர்ந்து இறைவனைத் துதித்து ஒரு வாய் உண்டார்.

அப்போது அவர் பார்வையில் இந்த சிறுவன் பட்டான். அவனை அழைத்தார். ஆனால் சிறுவனோ எந்த அசைவும் காட்டவில்லை. அப்போதுதான் ஊர்க்காரர்கள் அவன் நிலையை விளக்கினார்கள். சத்குரு மனம் உருகி இறைவனை வேண்டிக்கொண்டு அந்தச் சிறுவனுக்கு தன் இலையில் இருந்த பிரசாதத்தை ஊட்டிவிட்டார்.

சத்குருவின் உச்சிஷ்ட பிரசாதம் என்றால், அது வினைகளை விரட்டும் மருந்தல்லவா... அந்தச் சிறுவனுக்குப் பேச்சு வந்ததோடு, அவன் சத்குருவின் புகழைப் பாடவும் ஆரம்பித்தான். அந்த அற்புதம் நடந்தது இந்தப் பெரம்பூரில்தான். அப்படிப்பட்ட அற்புதங்கள் எப்போதும் இங்கு நடைபெற வேண்டும் என்றுதான் சுவாமிகள் இங்கே காசிவிஸ்வநாதரை பிரதிஷ்டை செய்தார். இன்றும் அந்த சந்நிதியில் வந்து வேண்டிக் கொள்கிறவர்களின் வேண்டுதல்கள் எல்லாம் நிறைவேறுகிறது” என்று பெருமை பொங்கக் கூறினார்.

`சுவாமி, அம்பாள், நான்... 
இதுதான் என் குடும்பம்!'

உங்கள் குடும்பம் பற்றிச் சொல்லுங்களேன் என்றோம். சிரித்தார்.

“என் குடும்பம்னா இப்போ நான், சுவாமி, அம்பாள். அப்புறம் இங்கே இருக்கிற பரிவார தெய்வங்கள்தான். என்ன இப்படிச் சொல்றேன்னு பாக்குறீங்களா, எனக்கு இன்னும் கல்யாணம் ஆகலை. ஏன் ஆகலைன்னு கேக்காதீங்கோ. எப்படிக் காலம் ஓடித்துன்னு எனக்கே தெரியலை. சுவாமி கைங்கர்யமே எனக்கு மிகப்பெரிய நிறைவா இருக்கு. அதனால் எனக்குத் தனியாகக் குடும்பம் வேணும்னு தோணவே இல்லை. அம்பாள் இப்படி அவளுக்குப் புள்ளையா அவள் கூடவே இருந்து, வேறு கவலையில்லாமல் பூஜை செய்து கொண் டிருக்க வேண்டும் என்று தீர்மானித்திருக்கிறாள் போலும். அதை நிறைவேத்துறதுதானே நம் வேலை’’ என்கிறார் வேம்பு குருக்கள்.

இங்கே டிரஸ்ட் மூலம் ஆயிரம் ரூபாய் சம்பளம் கொடுக்கிறார்கள். மேலும் அருகிலேயே வேறு சில கோயில்களிலும் பூஜைக்குச் செல்கிறார். எல்லாம் சேர்த்து நான்காயிரம் வருமானம்.

``வழக்கம்போல் நெல் மூட்டை கிடைப்பதால் சாப்பாட்டுக்குப் பஞ்சம் இல்லை’’ என்று புன்னகைக்கும் வேம்பு குருக்கள், ``என் ஆசை எல்லாம் இந்தக் கோயிலோட சிறப்பு வெளி உலகுக்குத் தெரியணும். பூராட நட்சத்திரக்காரர்கள் இங்கு வந்து வேண்டிக்கொண்டு நல்ல பலன்களை அடையணும்.

கோயில் நிர்வாகத்தைப் பொறுத்தவரை பரம்பரை ட்ரஸ்டி இருக்காங்க. இப்போ ஆ. சத்திய மூர்த்திங்கிறவர் பார்த்துக்கொள்கிறார். கோயிலை மட்டுமல்ல என்னையும் நன்கு கவனித்துக் கொள்கிறார். விசாரிக்க நாலு மனிதர்கள், வேளைக்கு உணவு. பெற்றவர்களைப் போல கூடவேயிருந்து ஆசிபுரிய அம்பாளும் ஈசனும். இதைவிட வாழ்க்கையில் வேறு என்ன வேண்டும் சொல்லுங்க...” என்று சொல்லி சிரிக்கிறார் வேம்பு குருக்கள்.

ஆச்சர்யமாக இருந்தது. புராண காலத்தில் சந்தனம் கிடைக்காத போது தன் கையையே அரைத்துப் பூசினாராம் ஒரு நாயன்மார். அப்படித்தான் வேம்புவும் தன் வாழ்க்கையையே இறைப்பணிக்குச் சமர்ப்பித்திருக்கிறார் என்று தோன்றியது. தன் வாழ்வை இறைவனின் சித்தத்துக்கு விட்டுவிட்ட வேம்புவுக்கு எப்போதும் அந்த ஜம்புநாத சுவாமி உடன் இருப்பார் என்பதில் நமக்கு எந்த சந்தேகமும் இல்லை.