Published:Updated:

செந்தூர் என் தாய் வீடு

வி.ஐ.பி. ஆன்மிகம்
பிரீமியம் ஸ்டோரி
வி.ஐ.பி. ஆன்மிகம்

வி.ஐ.பி. ஆன்மிகம்

செந்தூர் என் தாய் வீடு

வி.ஐ.பி. ஆன்மிகம்

Published:Updated:
வி.ஐ.பி. ஆன்மிகம்
பிரீமியம் ஸ்டோரி
வி.ஐ.பி. ஆன்மிகம்

பெண்களின் மனசுக்கு மிகவும் பிரியமான கதாசிரியராக, தலைமுறை தாண்டி இன்று வரை திகழும் மூத்த எழுத்தாளர் ரமணி சந்திரனின் எழுத்துக்கள்தான் பேசுமே தவிர, அவர் பேசுவது மிக மிகக் குறைவு. வெறும் புன்னகையாலே பதில் கூறிவிடும் இயல்புடையவர். ஆனால் பேசினால் நேரம் போவதே தெரியாமல் அம்மாவிடம் பேசிக்கொண்டிருக்கலாம்.

அண்மையில் ‘சக்தி விகடனு’க்காக அவரைச் சந்தித்தோம். திருச்செந்தூர் செந்திலாண்டவரை ஒரு முறை தரிசிப்பதற்கு எத்தனையோ மக்கள் தவமிருக்க, திருச்செந்தூரில் கோயில் அருகிலேயே குடியிருக்கும் பாக்கியத்தைப் பெற்றது ரமணி சந்திரனின் குடும்பம்.

ரமணி சந்திரன்
ரமணி சந்திரன்


‘`திருச்செந்தூர்... ஊருக்குள்ள எங்க வீடு. மாடியும் கீழுமான பெரிய வீடு. அப்பா கணேச நாடார், பஞ்சாயத்து போர்டு தலைவராகவும் கோயில் தர்மகர்த்தாவாகவும் இருந்தாங்க. திருச்செந்தூர் கோயில் கொடி மரத்துக்குப் பக்கத்தில் இப்போதும் அப்பாவின் பேர் இருக்கு. அவர் பதவிக் காலத்தில்தான் அங்கே கரன்ட் வந்தது. ஊருக்குள்ள இருந்து கோயிலுக்குப் போறது தூரமா இருக்குன்னு, கோயில் பக்கத்திலேயே நிலம் வாங்கி, வீடு கட்டினவர். அப்போவெல்லாம் காயல்பட்டினம் தாண்டி வர்றப்பவே, கோயில் தெரியும். இப்போ வெறும் கட்டடங்கள் தான் தெரியுது!’’ என்று ஏக்கப் பெருமூச்சு விட்டார் ரமணி சந்திரன்.

‘`திருச்செந்தூரிலேயே பிறந்து வளர்ந்திருக்கீங்க... சுமாரா எத்தனை முறை சூரசம்ஹாரம் பார்த்திருப்பீங்க?’’

‘`சொன்னால் நம்பமாட்டீங்க.. ஒரே ஒரு தடவைதான் நேரில் பார்த்திருக்கேன். லட்சக்கணக்கான பேர் வந்து நெருக்கியடிக்கும் அந்தக் கூட்டத்தில் போறதுக்கு அப்பா விட மாட்டாங்க. ஆனால் சின்ன வயதிலிருந்து, சமீப காலம் வரையில் சஷ்டி விரதம் அனுஷ்டிச்சு வந்திருக்கேன்; திருச்செந்தூர் கோயிலுக்கு எண்ணற்ற தடவைகள் போயிருக்கேன்.

அப்போ எனக்கு ஆறேழு வயசு இருக்கும். விடிகாலையில் எழுந்து குளிச்சிட்டு, அஞ்சு மணிக்கெல்லாம் அப்பாவின் கையைப் பிடிச்சிக்கிட்டு கோயிலுக்கு ஓடுவேன்... விஸ்வரூப தரிசனம் பார்க்கிறதுக்கு. சாமி பத்தியெல்லாம் அப்போ ரொம்பத் தெரியாது.. தெரிஞ்சதெல்லாம் ‘முருகா முருகா’தான். உள்ளே போய் சந்நிதியில் நின்னு ‘முருகா முருகா’ன்னு கன்னத்தில் போட்டுக்குவோம். காலையில் எழுந்ததும் ‘முருகா காப்பாத்து...’ ராத்திரி படுக்கிறப்போ ‘முருகா சரணம்...’ இதுதான் வழிபாடு.

கொஞ்சம் விவரம் தெரிஞ்ச பிறகு, சாமி கும்பிடறப்ப `சாமியைப் பார்த்துட்டு, கண்ணை மூடி அவரோட உருவத்தை ரெண்டு புருவ மத்தியில் கொண்டு வரணும். சாமி அங்கே வந்துட்டா, அதுவே போதும்; வேறெதுவும் வேணாம்’னு அப்பா சொல்றதை முயற்சி செய்து பார்த்து, வெற்றியும் கண்டிருக்கேன்.’’ என்றவர் தன் தாயாரைக் குறித்தும் பகிர்ந்துகொண்டார்.

``அம்மா கமலசுந்தரதேவி, ஒரு ‘பார்ன் ஜீனியஸ்’. நிறைய புராணங்கள் படிச்சவங்க. தியாகராஜர் கிருதிகள் எல்லாம் அவ்வளவு இனிமையாக பாடுவாங்க. வீணை வாசிப்பாங்க. காலையில் நாலரை மணிக்கெல்லாம் எந்திரிச்சு, சுப்ரபாதத்தை மனப்பாடமா பாடிக்கிட்டே வேலை செய்வாங்க. அதைக் கேட்டுத்தான் நாங்கல்லாம் எந்திரிப்போம்! தினமும் விளக்கேற்றி, தேவாரம், திருவாசகம் ராகத்தோடு பாடுவாங்க. நாங்களும் உட்கார்ந்து பாடணும். அப்படிப் பாடிப் பாடி திருவாசகத்தில் நிறையப் பாடல்கள் எனக்கு மனப்பாடம். எது பாடுறோமோ இல்லையோ, ‘தலையே நீ வணங்காய்’னு தொடங்கும் திருஅங்கமாலை கண்டிப்பாகப் பாடியாகணும்.

கடைசித் தங்கை பிறந்ததும் பாளையங் கோட்டை பெருமாள்புரம் வந்துட்டோம். அங்கே இருக்கும் பெண்கள் எல்லாம் சேர்ந்து ‘சாரதா சத் சங்கம்’னு ஆரம்பிச்சு, வெள்ளிக்கிழமைகளில் பஜனைப் பாடல்கள் பாடுவாங்க. எப்போ சாமி கும்பிட்டாலும், ‘எந்தெந்தப் பிறவியில் என்னென்ன பிழை செய்திருந்தாலும், பட்ட துன்பம் போதும் என்று இதோடு என்னை விட்டுவிடு முருகா’ன்னு சொல்லிக் கும்பிடச் சொல்வாங்க அம்மா.

அம்மா காலமாகி 10 நாட்கள் கழிச்சு, இந்தப் பழக்கத்தை விடக்கூடாதுன்னு நாங்க எல்லோரும் திரும்பப் பாட ஆரம்பிச்சோம். அங்க மாலையின் ‘உற்றார் யார் உளரோ - உயிர் கொண்டு போம்பொழுது குற்றாலத்துறை கூத்தனல்லால் நமக்குற்றார் ஆருளரோ’ என்ற வரிகளைப் பாடும்போது, அப்பா வாய் பொத்தி, தோள்கள் குலுங்கியபடி எந்திரிச்சி போயிட்டார். அதிலிருந்து விட்டாச்சு...’’ குதூகலமாய் தொடங்கிய அவர் அம்மாவின் நினைவுகளில் குரல் கம்மப் பேசி நிறுத்தினார்.

‘`அப்பா ஆன்மிக தத்துவங்கள் நிறைய சொன்னதாகச் சொல்லியிருக்கீங்க... மனதில் நிற்கும் சில விஷயங் களைப் பகிர்ந்துக்கலாமே!’’

‘`அப்பா எதிலுமே வித்தியாசமானவர். என்ன துன்பம் வந்தபோதும் ‘எனக்கு மட்டும் ஏன் இப்படி’ன்னு சொல்லவே மாட்டார். பகவான் ராமகிருஷ்ணரின் புத்தகங்கள் நிறையப் படிப்பார். அதிலிருந்து நிறைய விஷயங்கள் சொல்வார். எனக்கு கல்யாணம் ஆகி வந்தபிறகு, ஒரு முறை மனசு ரொம்பக் கஷ்டப்பட்டு திருச்செந்தூர் போனேன்.

‘கடவுளை எவ்வளவு கும்பிடுறோம்! அவர் இருப்பது உண்மைன்னா, ஏம்ப்பா நமக்கு இவ்வளவு கஷ்டம் கொடுக்கணும்?’னு அப்பாகிட்டே சொல்லி கண்கலங்கினேன். குழந்தைகள் எல்லாம் தூங்கியபிறகு என்னை பக்கத்தில் உக்கார வெச்சு நிதானமா பேசினாங்க. ‘அம்மா.. நாம இப்போ படற கஷ்டங்கள் எல்லாமே பூர்வஜன்ம வினைப்பயன்தான். ஒரு பிறவி முடிஞ்சு இன்னொரு பிறவி எடுத்ததால், அந்தப் பிறவியில் செய்த தீவினைகள் இல்லைன்னு ஆயிடாது. உதாரணமா பச்சை சட்டை போட்டுக்கிட்டு ஒரு தப்பு பண்ணிட்டு சிவப்பு கலர்ல வேறு சட்டையை மாத்திக்கிட்டா, போலீஸ் விட்டுடுமா? அதேபோலத்தானம்மா, போன ஜன்மத்தில் செய்த செயல்களுக்கு இப்போ அனுபவிக்கிறோம்’னு அப்பா சொன்னாங்க.

நான் உடனே ‘இதுக்கு என்னதான் தீர்வு? பட்டுக்கிட்டேதான் இருக்கணுமா?’ன்னு கேட்டேன்.. ‘இல்லம்மா.. போன ஜன்மப் பயனாக ஒருத்தனுக்குக் கால் போறதாக இருந் தால், அவன் பக்தியோடு கடவுளை விடாமல் கும்பிடும்போது, காலில் சின்னதா முள் குத்தின வலியோடு போயிடும். பல மடங்கு வரவேண்டிய துன்பம் குறைஞ்சு போய் சின்னதாயிடும். ஆனால் காலில் வலியை அனுபவிக்கணும் என்பதை மாற்ற முடியாது... நம்ம தீவினைப் பயனைக் குறைக்கத்தான் வழிபாடு!’ என்று அன்னை சாரதாதேவி சொல்லியிருப்பதை அப்பா விளக்கமாய் சொன்னபோது, ‘எனக்கு மட்டும் ஏன் கஷ்டம்’னு அப்பா எப்போதும் புலம்பாததன் காரணம் புரிஞ்சுது.’’

ரமணி சந்திரன்
ரமணி சந்திரன்


‘`உங்க குலதெய்வம் எது அம்மா? ’’

‘`மூலக்கரை அம்மன் கோயில். வருசா வருஷம் கொடைக்குப் போயிடுவோம். அங்கே பத்ரகாளி, முத்துமாரின்னு ரெண்டு அம்மன் கோயில்களுமே சிறப்பானது. ரெண்டு கோயில்லயும் ஒரு வருஷம் விட்டு ஒரு வருஷம் கொடை நடக்கும். அப்போ ‘மது பொங்குறது’ன்னு ஒரு நிகழ்ச்சி நடக்கும். அடுப்பில் தீயே இல்லாமல் புகையை ஊதி ஊதியே பொங்க வைக்கும் வினோதமான விசேஷம் அது!

மது பொங்கினதும், அதைப் பார்த்துட்டுத்தான் பூஜையே நடக்கும். பணியாரம் சுட்டுப் படைப்பாங்க.. பெண்கள் சுத்தபத்தமாக இருந்து, சட்டிக்கு ஒரு பணியாரம்னு 108 பணியாரம் ஊத்தி அம்மனுக்குப் படைப்பாங்க. ஒரு வாரம் ஆனாலும் அந்தப் பணியாரம் கெட்டுப் போகாது. கொடையின்போது முளைப்பாரிக்கு ராத்திரியெல்லாம் தூங்காம உட்கார்ந்து தண்ணி தெளிச்சு வளர்ப்பாங்க. சாமியாடிகள் கொதிக்கும் தண்ணியை முகத்தில் விசிறினபடியே வலம் வருவாங்க. பார்க்கும்போதே பரவசமாக இருக்கும். அது ஒரு தனி அனுபவம்...’’ - அந்தப் பரவசம் அவர் வார்த்தைகளிலும் பளிச்சிட்டது.

‘`மறக்க முடியாத நிகழ்வு ஏதேனும்..?”

‘`மலேசியாவிலிருக்கும் என் ஃப்ரெண்ட் வாசுகி, அவங்க கணவர் அறிவழகன், இன்னும் சில ஃப்ரெண்ட்ஸுடன் ஒரு முறை திருப்பதிக்குப் போயிருந்தோம். ராத்திரி பதினொரு மணிக்கு மேல போனா சாமியை நல்லா தரிசனம் பண்ணலாம்னு சொல்லிட்டு கோயிலுக்குக் கிளம்பினோம். கூட்டமே இல்லாமல் நல்ல திவ்யமான தரிசனம்!

சாமியைக் கும்பிட்டு வெளியில் வந்தால், மழை பிய்ச்சுக்கிட்டு கொட்டுது. கார் எங்கே நிக்குதுன்னு தெரியல. போன் கொண்டுபோகக் கூடாதுங்கிறதால், யார் கையிலும் போன் இல்லை. மழையில் நனைஞ்சபடியே காரைத் தேடினோம்.

‘நட்ட நடு ராத்திரியில், இப்படி கொட்டும் மழையில் நனையறோமே.. உடம்புக்கு ஏதாவது ஆகிடப் போகுது!’ என்று ஒரு ஃப்ரெண்ட் சொல்ல, இன்னொரு ஃப்ரெண்ட், ‘நாம வெறுங்காலோடு நடக்கிறது சாதாரண மலை மேல இல்லே.. சாளக்கிராமத்தின் மேல நடக்கிறோம்... அதனால ஒண்ணும் பண்ணாது!’ன்னு சொன்னப்போ எனக்கு சிலிர்த்திடுச்சு. திருப்பதி மலையே ஒரு பிரமாண்டமான சாளக்கிராமம்தானே! அதனாலதானே ராமாநுஜர் அதன் மேல தன் காலடி படக்கூடாதுன்னு முட்டி போட்டு ஏறினார்னு எனக்கு ஞாபகம் வந்தது. சொன்னது போலவே, லேசா நனைந்தால் கூட வீஸிங் வர்ற ஃப்ரெண்ட் ஒருத்திக்கு அன்னைக்கு அவ்வளவு நேரம் மழையில் நனைஞ்சும் ஒண்ணுமே பண்ணல... இது தெய்வ அருள் இல்லாமல் வேற என்ன?’’

‘`எழுத்தாளரான நீங்க விரும்பிப் படிக்கும் ஆன்மிக நூல்கள்..?’’

‘`இதிகாசங்களை வாசிக்க மிகவும் பிடிக்கும். கம்பராமாயணத்தையும் வில்லிபாரதத்தையும் பாடலோடு அம்மா சொல்வாங்க. இப்போதும் நான் கதை எழுதும்போது அம்மா சொன்ன கம்பராமாயண வரிகள் தானாக வரும். நான் விரும்பிப் படிக்கும் இன்னொரு நூல் ‘விதுர நீதி’. வாழ்க்கைக்குத் தேவையான பல விஷயங்கள் அதில் இருக்கு. எல்லோருமே படிக்கலாம்..’’ என்று கூறிய ரமணி சந்திரன், ஷீர்டி பாபா, பாண்டிச்சேரி அன்னை போன்ற குருமார்களையும் வணங்குகிறார்.

ஆன்மிகம் என்றாலே அப்பா காட்டிய வழி, அம்மா கூறிய மொழி என்று இந்த 80 வயதிலும் தீவிரமாகப் பின்பற்றும் அவரை ஆத்மார்த்தமாக வணங்கினோம்.

கிணற்றின் விளிம்பில்...

ஆழமுள்ள கிணற்றின் விளிம்பில் நிற்பவன், அதனுள் விழுந்து விடாமல் இருக்க எப்போதும் ஜாக்கிரதையாக விழிப்போடு இருப்பதைப்போல, உலக வாழ்க்கையில் குடும்பஸ்தனாக வாழ்பவன் கவனத்தோடு வாழவேண்டும். ஒரேடியாக சம்சார வெள்ளத்தில் மூழ்கி விடாமல் கவனத்தோடு வாழ வேண்டும். கட்டுக்கடங்காத யானை அங்குசத்தால் கட்டுப்படுவது போல குடும்பஸ்தனுக்கு ஆன்மிகம் நிலையாமையையும் அடக்கத்தையும் போதித்துக் கொண்டே இருக்க வேண்டும். அதுவே ஆன்மிகத்தின் பயன்பாடு!

- ராமகிருஷ்ண பரமஹம்சர்.