Published:Updated:

கண்டோம் களித்தோம் செந்திலானை; கந்தசஷ்டி விழாவின் அற்புதம் குறித்து சிலிர்ப்பூட்டும் வாசகர் அனுபவம்!

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில்

கந்தசஷ்டி (27-10-2022) 3-ம் நாள் அதிகாலை, கோயிலுக்குள் நுழைந்தோம். நீண்ட வரிசைகள். எங்கும் பெருங்கூட்டம். மலைத்துப் போனோம். 'முருகா...உன் திருவடிகளை நாங்கள் தரிசிக்க அருள் புரிவாய் ஐயனே!' என்று வேண்டிக் கொண்டோம்.

கண்டோம் களித்தோம் செந்திலானை; கந்தசஷ்டி விழாவின் அற்புதம் குறித்து சிலிர்ப்பூட்டும் வாசகர் அனுபவம்!

கந்தசஷ்டி (27-10-2022) 3-ம் நாள் அதிகாலை, கோயிலுக்குள் நுழைந்தோம். நீண்ட வரிசைகள். எங்கும் பெருங்கூட்டம். மலைத்துப் போனோம். 'முருகா...உன் திருவடிகளை நாங்கள் தரிசிக்க அருள் புரிவாய் ஐயனே!' என்று வேண்டிக் கொண்டோம்.

Published:Updated:
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில்
"தேவர் சிறைமீட்ட செல்வா என்று உன்திரு முகத்தைக் கண்டோம் களித்தோம் செந்திலானே..." என்று மனம் குழைந்து சுப்ரமண்யனை, செந்தில் குருபரனைக் கண்ணாரக் கண்டு பேறுபெற்றோம்.

அன்று திருச்செந்தூர் கோயிலுக்குக் கிளம்பியபோதே கருமேகங்கள் திரண்டு பயத்தை உண்டு பண்ணியது. மழை வெள்ளம் என்ன செய்யுமோ என்ற பயம் இருந்தபோதும் செந்திலாண்டவனை நம்பிக் கிளம்பினோம். வேலவனின் கருணை திருச்செந்தூரில் நுழையும்போதே கிட்டிவிட்டது. ஆம், வானிலை அறிக்கையும், திரண்டு வந்த மேகக்கூட்டமும் திருச்செந்தூரில் திரண்டு இருந்த முருக பக்தர்களின் கூட்டம் கண்டு பொய்த்துப் பின்வாங்கி விட்டன. மக்கள் கூட்டத்தைக் கண்டு உற்சாகமான கடல், தான் எழுந்து வந்து வரவேற்க முடியாது என்ற காரணத்தால் தனது அலைகளை அனுப்பி ஒவ்வொரு பக்தரின் கால்களையும் பணிந்து வரவேற்றது.

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி

கடந்த இரண்டு வருடங்களாக முடங்கியிருந்த பக்தர்கள் கூட்டம், இவ்வாண்டு சஷ்டிக்கு முதல் நாளே திருச்செந்தூர் கோயிலில் கூடிவிட்டனர். எங்கு பார்த்தாலும் பக்தர் வெள்ளம், நாளுக்கு நாள் இது பெருகிய வண்ணம் உள்ளது. ஆறு நாளும் சஷ்டி விரதம் இருக்க இங்கேயே தங்கி இருக்கும் பெரும் கூட்டம் கோயிலுக்கு வெளியே ஆங்காங்கே தங்கி முருகப்பெருமானை பஜனைகளாலும், புண்ணிய பாராயணங்களாலும் துதித்து வருகிறார்கள். எங்கும் முருகனைப் போற்றும் நாமாவளி கோஷங்கள் எங்களை மெய்சிலிர்க்க வைத்துக் கண்ணீர் பெருக வைத்து விட்டது. நாமாவளிப் பிரியன் ஆயிற்றே முருகப்பெருமான், நாங்களும் எங்கள் நிலை மறந்து முடிந்த மட்டும் குரல் எழுப்பி செந்தில் ஆண்டவனின் புகழ் பாடும் அரோகரா கோஷங்களை எழுப்பினோம்.

கந்தசஷ்டி (27-10-2022) 3-ம் நாள் அதிகாலை, கோயிலுக்குள் நுழைந்தோம். நீண்ட வரிசைகள். எங்கும் பெருங்கூட்டம். மலைத்துப் போனோம். 'முருகா...உன் திருவடிகளை நாங்கள் தரிசிக்க அருள் புரிவாய் ஐயனே!' என்று வேண்டிக் கொண்டோம். மூத்த குடிமக்கள் வரிசையில் இணைந்தோம். வரிசை நீண்டு கொண்டிருந்தது. எனினும் குகனின் திருநாமங்களைச் சொல்லிக் கொண்டே நகர்ந்தோம். நேரம் சென்றதே தெரியவில்லை. ஒன்றரை மணி நேரத்தில் அந்த ஒப்பிலா மணியை தரிசித்தோம்.

"பேராதரிக்கும் அடியவர் தம்

பிறப்பை ஒழித்து பெருவாழ்வும்

பேறும் கொடுக்க வரும் பிள்ளைப்

பெருமான் என்னும் பேராளா

சேரா நிருதர் குலகலகா

சேவற் கொடியாய் திருச்செந்தூர்த்

தேவா தேவர் சிறைமீட்ட

செல்வா என்று உன்திரு முகத்தைக்

கண்டோம் களித்தோம் செந்திலானே..."

என்று மனம் குழைந்து சுவாமிநாதனை, செந்தில் குருபரனை கண்ணாரக் கண்டு பேறுபெற்றோம். எல்லோரும் எல்லா நலமும் பெற்று, அமைதியும் வளமும் கொண்டு வாழவேண்டும் என்று பிரார்தித்துக்கொண்டு சந்நிதியை வலம் வந்து வணங்கினோம்.

கபாலீஸ்வரன் ஆறுமுகம் - தமிழரசி, சென்னை
கபாலீஸ்வரன் ஆறுமுகம் - தமிழரசி, சென்னை

திருச்செந்தூர் கோயில் எங்கும் பக்தர்கள் கூட்டம் என்றாலும் அங்காங்கே திருக்கோயில் நிர்வாகம் இலவசக் கூடாரம் அமைத்து சகல வசதியும் செய்துள்ளது. விரதமிருப்போர் வசதிக்காக அவர்களுக்கு தேவைப்படின் எந்நேரமும் பால் உள்ளிட்ட பிரசாதங்கள் அவரவர்களின் தேவைக்கேற்ப விநியோகிக்கப்படுகிறது. காலை 8 மணி முதல் இரவு 10 மணி வரை முருகப்பெருமானின் பெருமைகள் கூறும் சொற்பொழிவுகள் நடக்கின்றன. ஒரு மணி நேரத்திற்கு ஒரு தலைப்பு என சொற்பொழிவாளர்கள், ஆன்றோர்கள், அறிஞர்கள், தமிழ்ப் பேராசிரியர்கள் எனப் பலரும் பக்தர்களுக்கு ஞான விருந்து படைக்கிறார்கள். செந்தூருக்கு வந்து பாருங்கள் இதுவே கந்தலோகம், இதுவே சொர்க்க லோகம் என்று சொல்லத்தக்க வகையில் விழாக்கோலம் பூண்டுள்ளது இந்த ஊர். முருகப்பெருமானின் திருவருளால் நாங்கள் கண்ட முருகப்பெருமானின் தரிசனப் புண்ணியத்தை சகலருக்கும் சமர்ப்பிக்கிறோம். முருகா சரணம்!

சில தகவல்கள்:

1. யோகம், போகம், வேகம் என மூவகை வடிவங்களை கொண்டருள்பவர் திருச்செந்தூர் முருகன்.

2. இக்கோயிலில் மூன்று கொடி மரங்கள் உள்ளன. இரண்டு தங்கத்திலும் மற்றொன்று செப்பினால் ஆனது, திருவிழாவின் போது செப்பு கொடி மரத்தில்தான் கொடி ஏற்றப்படுகிறது.

3. இங்கு கந்த சஷ்டி விழா 12 நாள்கள் நடைபெறும் முதல் ஆறு நாள்கள் சஷ்டி விரதம் சூரசம்ஹாரம், ஏழாம் நாள் முருகன் தெய்வானை திருமணம், தொடர்ந்து ஐந்து நாள்கள் கல்யாண ஊஞ்சல் சேவை நடைபெறும்.

கந்த சஷ்டி விழா
கந்த சஷ்டி விழா

4. கந்த சஷ்டி என்றால் கந்தவேளுக்குரிய ஆறாவது நாள் என்று பொருள்.

5. ஷண்முகர், ஜயந்திநாதர், குமரவிடங்கர், அலைவாய்ப் பெருமாள் என்று 4 உற்சவர்கள் தனித் தனிச் சந்நிதிகளில் அருளுகின்றனர். குமரவிடங்கரை, "மாப்பிள்ளை சுவாமி" என்றழைக்கின்றனர். இங்கு மூலவர் கிழக்கே கடலைப் பார்த்தபடி அருளுகிறார்.

6. 17-ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட ராஜ கோபுரம் ஒன்பது அடுக்குகளுடன் 157 அடி உயரம் கொண்டது. ஒரு வருடத்தில் ஒரே நாள் முருகன்- தெய்வானை திருமணத்தன்று மட்டும் இது திறக்கப்படுகிறது.

7. இக்கோயில் ஓம் என்ற பிரணவ வடிவில் அமைந்துள்ளது.

8. செந்தூரில் முருகப் பெருமான் ஆதியில் தங்கிய இடம் சிங்கொழுந்தீசர் என்ற சிவன் கோயில்.

9. தூண்டுகை விநாயகரை தரிசித்த பின் செந்தில் ஆண்டவரை தரிசிப்பது முறையாகும்.

திருச்செந்தூர் கந்த சஷ்டி விழா
திருச்செந்தூர் கந்த சஷ்டி விழா

10. திருச்செந்தூர் கோயிலில் நவகிரகங்களுக்கு சிலைகள் இல்லை.

11. இந்தத் தலத்தை 'வீரபாகு' ஷேத்திரம் என்றும் கூறுவர், காவல் தெய்வமான அவருக்குப் பிட்டமுது படைத்த பின்பே செந்தில் ஆண்டவருக்கு ப்பூஜை செய்வது வழக்கமாக உள்ளது.

12. திருச்செந்தூர் கோயில் செந்தில் ஆண்டவனின் இலை விபூதி இங்கு தனித்தன்மை வாய்ந்த சிறப்புப் பிரசாதமாகும்.

13.பிராகாரத்தில் உள்ள மேதா தட்சிணாமூர்த்தி கூர்மம், அஷ்ட நாகங்கள், அஷ்ட யானைகள், மேதா மலை என நான்கு ஆசனங்களின் மீது அமர்ந்திருக்கிறார். இவருக்குப் பின்னே கல்லால மரத்தில் 4 வேதங்களும் கிளிகள் வடிவில் உள்ளன. இங்கு மான், மழுவுடன் காட்சி தருகிறார் தட்சிணாமூர்த்தி. இது குருவுக்கான தலமாகவும் போற்றப்படுகிறது.

- கபாலீஸ்வரன் ஆறுமுகம் - தமிழரசி, சென்னை

ஸ்ரீசுப்ரமண்ய மூலமந்திர மஹாஹோமம் வரும் ஐப்பசி திங்கள் கந்த சஷ்டி ஆறாம் நாளில் ஞாயிற்றுக்கிழமை அன்று (அக்டோபர் 30-ம் தேதி) காலை 10 மணி முதல் 12 மணி வரை நடைபெற உள்ளது. நீங்களும் சங்கல்பிக்கலாம்!

முன்பதிவு மற்றும் சங்கல்பம் விவரங்களுக்கு: 97909 90404

முன்பதிவு செய்ய இங்கே க்ளிக் செய்யவும்.