Published:Updated:

ஈசனே... ஈங்கோய்மலை நாதனே!

ஞானப் பொக்கிஷம்: திரு ஈங்கோய்மலை எழுபது

பிரீமியம் ஸ்டோரி

அயப்பாக்கம் ப.ஜெயக்குமார்; ஓவியங்கள்: பத்மவாசன்

நக்கீரர் சுவாமிகள் அருளிய ‘திருஈங்கோய் மலை எழுபது’ என்ற பாடல் தலைப்பே, ஈங்கோய் மலை பற்றிய 70 பாடல்கள் என்ற பதிவை தருகிறது. ஆன்மிகப் பெரியோர்கள் போற்றும் ஞானநூல்களில், இந்தத் தொகுப்புக்குத் தனிச் சிறப்பு உண்டு.

நக்கீரர், திரு ஈங்கோய் மலையின் செழிப்பில் மனத்தைப் பறிகொடுத்தார் போலும். அதனால்தான் அந்த மலையில் விளையும் பலா, தேன், பழங்கள் அதை வேட்டையாடும் குரங்குகள், மலையில் வசிக்கும் தேனீக்கள், மான்கள், மயில்கள், யானைகள் ஆகிய அனைத்தையும் தொடர்புபடுத்தி மிக அற்புதமாக அருளியிருக்கிறார், இந்த ஞானநூலை.

70 பாடல்களின் இறுதியிலும் `மலை' என்றே பொருள் வரும் விதம்... ஆனால் வேறு வேறு வார்த்தை களான சிலம்பு, வெற்பு, பொறுப்பு, குன்று, கடறு, வரை போன்றவற்றை உபயோகப்படுத்தியுள்ளது சிறப்பு.

தற்போது திருவிங்கநாத மலை என்று அழைக்கப்படும் இத்தலம், திருச்சி - நாமக்கல் சாலையில் குளித்தலை அருகே அமைந்துள்ளது. மூலவர் அருள்மிகு மரகதாசலேஸ் வரர், அம்பாள் - அருள்மிகு மரகதாம்பிகை. மலைக்குச் சிறப்புப் பெயர் மரகத மலை. `மரகதம்' இத்தலத்தோடு ஒட்டிக்கொள்ள அப்படியென்ன சிறப்புக் காரணம் இருக்கிறது?

காரணக் கதை சிலிர்ப்பானது.

ருமுறை ஆதிசேஷனும் வாயு பகவானும் தத்தமது வல்லமையை நிரூபிக்கும் போட்டியில் இறங்கினர். மேரு மலையை ஆதிசேஷன் சுற்றிவளைத்து இறுகப் பற்றிக்கொள்ள, அவரின் பிடியிலிருந்து மலையை வாயுபகவான் நகர்த்தவேண்டும் என்பது போட்டி. கடும் வேகத்தில் காற்று வீசச் செய்தார் வாயு. அப்போது, மேரு மலையிலிருந்து வைரம், சிவப்பு மணி, மரகதம், மாணிக்கம் மற்றும் நீலம் ஆகியவை சிதறி விழுந்தன.

ஈசனே... ஈங்கோய்மலை நாதனே!

அப்படி மரகதம் விழுந்த இடமே இந்த ஈங்கோய்மலை. வைரம் திருப்பாண்டிக்கொடுமுடியிலும் ; மாணிக்கம் திருவாட்போக்கியிலும்; நீலம் பொதிகை மலையிலும்; சிவப்புக்கல் திருவண்ணாமலையிலும் விழுந்ததாக ஐதிகம். ஆக, இத்தலத்துடன் மரகதம் ஒன்றிப்போய் விட்டது. சரி, ஈங்கோய்மலை எனும் திருப்பெயர் ஏன் வந்தது?

ஒருமுறை அகத்தியர் இக்கோயிலுக்கு வழிபட வந்தார். அப்போது நடை சாத்தப்பட்டு இருந்தது. ஆகவே, அவர் `ஈ' வடிவம் கொண்டு சாவித் துவாரம் வழியாக உள்ளே சென்று இறைவனை வழிபட்டதால், இத்தலத்துக்கு `ஈங்கோய் மலை' எனும் பெயர் ஏற்பட்டதாம்.

திருஞானசம்பந்தப் பெருமானால் பாடல் பாடப்பெற்ற திருத்தலம் இது. இப்பகுதியில் உள்ள மூன்று தலங்களை ஒரேநாளில் தரிசிப்பது விசேஷம் ஆகும். அதன்படி, காவிரியின் வட கரையிலுள்ள கடம்பந்துறையை காலையிலும், திருவாட்போக்கியை நண்பகலிலும், ஈங்கோய் மலையை மாலையிலும் நடந்தே சென்று வழிபடுகிறார்கள் பக்தர்கள். இதையொட்டி இத்தலங்களின் இறைவர்களை ‘காலைக் கடம்பர்’, ‘மத்தியான சொக்கர்’ ‘அந்தி ஈங்கோய் நாதர்’ என்று சிறப்பிக்கிறார்கள்.

மாசி சிவராத்திரியை ஒட்டி 3 நாள்கள் சூரியனின் ஒளி சுவாமி மீது படரும். அந்நேரம் லிங்கம் நிறம் மாறி மாறி காட்சி தருவது, கண்கொள்ளா காட்சியாகும்.

அற்புதமான இந்தத் தலத்தைப் போற்றி நக்கீரர் அருளிய ‘ஈங்கோய்மலை எழுபது’ நூலின் பாடல்களைப் பாடி வணங்குவதால், நம் எண்ணங்கள் மேன்மையாகும்; செய்யும் செயல்கள் சிறக்கும்; நினைத்தது நினைத்தபடி நிறைவேறும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

அந்தத் துதிப்பாடலில் சில இங்கே...

‘அடியும் முடியும் அரியும் அயனும்

படியும் விசும்பும் பாய்ந்தேறி நொடியுங்கால்

இன்ன தென அறியா ஈங்கோயே - ஓங்காரம்

மன்ன தென நின்றான் மலை

(அரி - திருமால், அயன் - பிரம்மன், படி - பூமி, விசும்பு - வானம்).

கருத்து: திருமாலும் பிரம்மனும் பரம் பொருளின் அடிமுடியைக் காண வேண்டி பூமியைப் பிளந்து சென்றும் வானத்தை கிழித்துச் சென்றும் தேடியும் காணமுடியாது நொடிந்தனர்.

ஈசனே... ஈங்கோய்மலை நாதனே!

என்னவென்று அறியாமல் அவர்கள் தவித்த போது, அதுவே ஓங்காரம் என்று உணர்த்தும் முகமாக நின்றிருந்தது இந்த மலையே. ஓங்காரத் தின் ரூபமாக இந்த மலை விளங்குவதாகச் சொல்கிறார் நக்கீரர்.

ஈன்ற குழவிக்கு மந்தி இறுவரை மேல்

நான்ற நறவத்தைத் தான் நணுகித் தோன்ற

விரலால் தேன் தோய்த்தூட்டும் ஈங்கோயே நம்மேல்

வரலாம் நோய் தீர்ப்பான் மலை.

(குழவி - குட்டி, மந்தி - பெண்குரங்கு, இறு - இறுதி, வரை - மலை, நறவம் - தேன்).

கருத்து: இம்மலையில் வாழும் பெண் குரங்கானது மலையின் உச்சியில் கிட்டும் பலவகைத் தேனை எடுத்து வந்து ஒன்றாகக் கலந்து, தன் விரல்களால் எடுத்துத் தன் குட்டிக்கு ஊட்டி மகிழ்கிறது. அந்த அளவுக்குத் தாராளமாக தேன் கிட்டும் மலை, ஈங்கோய்மலை என அதன் செழிப்பைக் கூறுகிறார் நக்கீரர்.

அத்தேனை நாமும் பருகி, அம்மலை ஈசனை மனமுருக வேண்டினால், நமக்கு வரக்கூடிய நோயைத் தீர்க்கும் சக்தி இம்மலைக்கு உண்டு என அறுதியிட்டுக் கூறுகிறார் அவர்.

கள்ள முதுமறவர் காட்டகத்து மாவேட்டை

கொள்ளென் றழைத்த குரல் கேட்டுத் - துள்ளி

இனக்கவலை பாய்ந்தோடும் ஈங்கோயே தத்தம்

மனக்கவலை தீர்ப்பான் மலை.

(முதுமறவர் - அனுபவமிக்க வேட்டைக்காரர், மாவேட்டை - விலங்கு வேட்டை).

கருத்து: வேடர்கள், வேட்டைக்குச் செல்லும் போது வேகமின்றி, நிதானமாக விலங்குகள் அறியாவண்ணம் அவற்றைச்சுற்றி வளைப்பார் கள். விலங்குகள் சிக்கியவுடன் ‘பிடியுங்கள்’ என கூக்குரலிட்டபடி பிடிக்க முனைவார்கள்.

‘பிடியுங்கள்’ என்ற குரல் கேட்டவுடன், அவ்விலங்குகள் இவர்களிடம் சிக்காது துள்ளி ஓடி, தன் இனத்துடன் சேர்ந்து கூட்டமாக தப்பித்து ஓடி விடும்.

விலங்கினங்கள் உயிர் பயத்துடன் ஓடி ஒளிவதுபோன்று, ஈங்கோய் மலை நாதனை தரிசித்த கணமே, நம் மனக்கவலைகளும் ஓடி ஒளியுமாம்!

சந்தனப்பூம் பைந்தழையைச்

செந்தேனில் தோய்த்தி யானை

மந்த மடப்பிடியின் வாய்க் கொடுப்ப - வந்ததன்

கண்களிக்கத் தான் களிக்கும் ஈங்கோயே தேங்காதே

விண் களிக்க நஞ்சுண்டான் மலை

(மடப்பிடி - மெல்லிய தலைகொண்ட பெண் யானை).

கருத்து: பசுமையாக... செழித்தோங்கி வளர்ந்து நிற்கும் சந்தன மரத்தின் குளிர்ச்சியான (பூம்) இலைகளைப் பறிக்கும் ஆண் யானை, அவற்றை இனிய சுவையுள்ள தேன்கூட்டில் மோதி, இலைகளில் இனிப்பைச் சேர்த்து பெண் யானைக்கு ஊட்டியதாம். அதைக் கண்டு பெண் யானைக்குக் கண் கலங்கி விட்டதாம். ஈங்கோய்மலை நாதனாம் ஈசனும் இந்தக் காட்சியைக் கண்டு ஆனந்தமுற்றாராம்.

ஈசனே... ஈங்கோய்மலை நாதனே!

இதை விளக்கி, `ஆலகால விஷத்தை சற்றும் மிச்சமின்றி தேவர்கள் எல்லாம் ஆனந்தம் அடையும்படி உண்டவர், கோயில் கொண்டிருக் கும் மலை இது' என விவரிக்கிறார் நக்கீரர்.

வான மதிதடவல் வற்ற இள மந்தி

கான முதுவேயின் கண்ணேறித் தானங்

கிருந்து உயர கை நீட்டும் ஈங்கோயே

நம் மேல் வருந் துயரம் தீர்ப்பான் மலை.

(இளமந்தி - சிறு பெண் குரங்கு முதுவேல் - முற்றிய மூங்கில்)

கருத்து: வானத்தில் சென்றுகொண்டிருந்த நிலவினை தடவிப் பார்க்க (வான்மதி தடவல்) இளம் பெண் குரங்கு ஆசைப்பட்டதாம். ஆகவே, முற்றிய மூங்கிலின் மீது ஏறி நின்று நிலவினைத் தொட முயன்றதாம். முடியுமா? அதன் ஆவலைப் பூர்த்தி செய்யும் விதமாக, அதற்குத் தன் திருக்கரத்தை நீட்டும் ஈங்கோய் மலை நாதனே என வியக்கிறார், நக்கீரர்.

நம் காரியங்களிலும் நமக்குக் கரம்கொடுத்து உற்றத் துணையாய் இருப்பார் ஈசன் என்று போற்றுகிறார்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு