ஜோதிடம்
திருக்கதைகள்
Published:Updated:

சிவமகுடம் - 93

சிவமகுடம்
பிரீமியம் ஸ்டோரி
News
சிவமகுடம்

சிவமகுடம்

அற்புதமாகப் பதிகம் பிறந்தது ஆலவாயன் சந்நிதியில். எடுத்துக்கொள்ளப் போகும் காரியம் எவ்விதத் தடையும் இன்றி வெற்றியுடன் முடியவேண்டும் என்று பிறைசூடிய பெருமானை வேண்டித் தொழுதார் திருஞான சம்பந்தர். உமையம்மையை தேகத்தில் ஒருபாகத்தில் கொண்ட இறைவனே, நீலமணி போன்ற வண்ணமுடைய நீலகண்டரே, மானும் மழுவும் ஏந்திய கரங்களோடு திகழும் இறைவா, குளிர் பிறையைத் திருமுடியில் சூடிய தந்தையே வேத-வேள்விகளைப் பழித்தும் சைவ அறன்களைத் தாழ்த்தியும் பேசும் கூட்டத்தை வெல்ல அருள்புரிவீராக' என்றெல்லாம் மதுரை சொக்கநாதரிடம் மனம் உருக வேண்டிக்கொண்டார் திருஞானசம்பந்தர்.

சிவமகுடம்
சிவமகுடம்


அவருடைய இந்த வேண்டுதல் ஏற்கப்பட்டது; சகல காரியங்களிலும் இனி வெற்றி கைகூடிட சிவம் அருள்புரிந்தது. தம்முடைய இந்த அருள்கடாட்சத்தைப் பிள்ளைக்கு உணர்த்தும் விதமாக சில மங்கல அடையாளங்களையும் காட்டிக்கொடுத்தது சிவப் பரம்பொருள். ஆம், ஓம்கார நாதம் எழுப்பியபடி ஆலய மணி பெரிதாக முழங்க, அடியார் எவரோ சங்க நாதமும் எழுப்பினார்.

மிகச் சரியாக ஆலய அர்ச்சகர் ஒருவர் சுவாமிக்கு சாத்தப்பட்ட வில்வ மாலையைப் பிரசாதமாகக் கொடுத்தார். பிள்ளைக்கும் பாண்டிமாதேவியாருக்கும் சிவனருளும் அனுமதியும் பரிபூரணமாகக் கிடைத்து விட்டன என்பதை அங்கிருந்த எல்லோரும் தெளிவுபட புரிந்துகொண்டார்கள்.

ஆலய தரிசனம்முடித்து பிள்ளையும் புறப்பட்டார். திருஞானசம்பந்தர் முத்துப் பல்லக்கில் ஏறிக்கொள்ள, அவரின் பரிவாரம் அரண்மனை நோக்கிப் புறப்பட்டது. குலச்சிறையார் தன் அணுக்கர்களுடன் முன்னே செல்ல, பாண்டிமாதேவியார் அழகிய மணிகள் கோக்கப்பட்ட தமது பல்லக்கில் பின்தொடர்ந்தார்.

அவர்கள் சென்ற வழியெங்கும் மக்கள் கூட்டம் திரண்டு ஞானச் சூரியன் போல் பல்லக்கில் ஆரோகணித்து வரும் சீர்காழிச் சிவக்கொழுந்தை மகிழ்வோடு தரிசித்தார்கள். வேற்று மார்க்கம் சார்ந்திருந்தோரும் பிள்ளையின் முகப்பொலிவால் ஈர்க்கப்பட்டு, தங்களையும் அறியாமல் அவரை வணங்க முற்பட்டார்கள். விண்ணில் தாரகைகள் சூழ ஒளிவீசியபடி வலம் வரும் பூரணச் சந்திரனைப் போன்று அணுக்கர்களோடு நகர்ந்தார் ஞானசம்பந்தப் பெருமான்.

குலச்சிறையாரின் ஏற்பாட்டின்படி அரண்மனை வாயில் ஞானசம்பந்தரின் வருகைக்காக ஆரவாரத்துடன் காத்திருந்தது. சற்று விரைவாக முன்னே பயணித்த பேரமைச்சர், வாயிலை எட்டியதும் சுற்றுமுற்றும் பார்வையைச் சுழலவிட்டு ஏற்பாடுகளைக் கவனித்தார். பின்னர் தமது புரவியிலிருந்து இறங்கி மாமன்னர் இருக்கும் இடத்துக்கு விரைந்தார்.

படுக்கையில் சயனித்திருந்த மாமன்னரை நெருங்கி சம்பந்தரின் வருகையைத் தெரிவித்தார். அவர் அந்தத் தகவலைச் சொன்னதுமே மன்னருக்குள் ஏதோ மலர்ச்சி. தம்முடைய உடல்-உள்ள வெம்மை சற்றே குளிர்ந்தது போன்ற உணர்வு. அதன் பலனாக புதுவித உற்சாகம் தொற்றிக்கொண்டது அவரை.

``யார் அங்கே... பொன் பீடம் ஒன்றை எடுத்து வந்து என் படுக்கை அருகே தலைப் பக்கத்தில் வையுங்கள்'' என்று உத்தரவிட்டார். ஏவலர்கள் கட்டளையை நிறைவேற்ற விரைந்தனர். பேரமைச்சருக்குள் ஆச்சர்யமும் மகிழ்வும் ஒருசேர எழுந்தன. மாமன்னரின் குரலில் ஏற்பட்டிருந்த தெளிவு கண்டு ஆனந்தம் அடைந்தார். `மன்னர் மீண்டு விடுவார்' என்று தமக்குள்ளாகச் சொல்லிக் கொண்டார்.

அதேநேரம் பேரமைச்சரைக் கவனித்த மாமன்னர் ``அமைச்சர் பெருமானே... தாமதம் வேண்டாம். விரைந்து சென்று சம்பந்தரை எதிர்கொண்டு அழைத்து வாருங்கள்'' என்றார் கனிவுடன்.

இதைவிட வேறு மகிழ்ச்சி என்ன இருக்கிறது. ஆனந்தத்தில் கண்களில் துளிர்த்த நீரைத் துடைத்துவிட்டபடி ஞானப் பிள்ளையை வரவேற்கக் கிளம்பினார். அந்த அவசரத்திலும் மாமன்னரின் அருகில் நின்றிருக்கும் அமணத் துறவிகளை அவர் கவனிக்கத் தவறவில்லை. எவ்வித பேதமும் இன்றி ஒருசேர அவர்கள் அனைவரின் திருமுகங்களும் வெறுப்பை உமிழ்ந்துகொண்டிருந்தன. அவர்களின் நிலையை உள்ளூர ரசித்தபடியே வெளியேறினார் குலச்சிறையார்.

ஆம்! ஏற்கெனவே தாங்கள் தீர்மானித்திருந்தபடி, தங்களின் திட்டத்தைச் செயல்படுத்தும் விதமாக சம்பந்தர் வருவதற்குள் அரண்மனைக்கு வந்து விட்டிருந்தார்கள் அந்த அமணர்கள். அவர்களின் ஒருவர், குலச்சிறையார் வந்து சென்றதும் மெள்ள மன்னரை நெருங்கினார்.

``மன்னர் பிரானே! சிறு கேள்வி...''

``என்ன?''

``ஒப்பற்ற நம் சமயத்தை நிலைநாட்டும் வழிமுறை இதுதானா... அந்தச் சிறுவனை அழைத்து வர அனுமதித்தது ஏன்?''

``அடிகளே! மருந்து எவரிடமிருந்தால் என்ன... பிணிக்கும் மருத்துவத்துக்கும் மதபேதம் கிடையாது''

மன்னரிடமிருந்து இப்படியான பதிலை அவர் எதிர்பார்க்கவில்லை. இருப்பினும் அதன் விளைவால் எழுந்த அதிருப்தியை வெளிக்காட்டிக்கொள்ளாமல், தங்களின் அடுத்த அஸ்திரத்தைப் பிரயோகிக்க முனைந்தார். வேண்டுதலாய் வெளிப்பட்டது அந்த அஸ்திரம்.

``உங்கள் சித்தப்படியே நடக்கட்டும். பிணி தீர்ப்பார் என்று நம்பி அவரை அழைத்துள்ளீர்கள். வரட்டும். ஆனால் அவர் வந்து உங்கள் நோயைத் தீர்க்க முற்படும்போது, நாங்களும் நம் சமயம் சார்ந்த மந்திரங்களை ஓதுவோம். எவர் சாதித்தாலும் அதில் எங்கள் பங்கும் உண்டு என்பதை நீங்கள் ஒப்புக்கொள்ள வேண்டும்.''

அளவுக்கதிகமாக அமணர்கள் தம்பேரில் உரிமை எடுத்துக்கொள்கிறார்கள் என்பது தெளிவாகப் புரிந்தது மாமன்னருக்கு. தானும் அவர்களின் வழியைச் சேர்ந்தவனே என்றாலும் மன்னன் என்ற அடிப்படையில் நடுநிலை தவறுவது நியாயம் ஆகாதே என்று சிந்தித்தவர், உறுதிபட தன் நிலையை அவர்களுக்குத் தெளிவுபடுத்தினார்.

``இரு தரப்பினரும் அவரவர் வழியில் முயற்சி செய்யுங்கள். வெல்பவர் வெல்லட்டும். நான் நடுநிலை தவறி வஞ்சகம் செய்யமாட்டேன்!''

மன்னரின் நிலைப்பாடு பேரிடியாக இருந்தது அந்தத் தரப்பினருக்கு. அவர்கள் மேற்கொண்டு பேச முற்பட்டவேளையில் பாலைவனத்தில் குளிர்தென்றலாகப் பிரவேசித்தார் திருஞானசம்பந்தர். சூரியனைக் கண்ட கமலத்தைப் போன்று அவரின் திருமுகத்தைக் கண்டதும் மலர்ந்தார் பாண்டியமான்னர். எழுந்து அவரை வணங்கத் தோன்றியது அவருக்கு. ஆனால் உடல்நிலை இடம்கொடுக்கவில்லை. ஆகவே வணங்கும் பாவனையில் கரங்களை உயர்த்தினார். அவர் அருகில் நெருங்கி, பார்வையாலேயே மன்னரை ஆசுவாசப்படுத்தியது பிள்ளை. மன்னர் பொன் பீடத்தைச் சுட்டிக்காட்டவும், அதில் அமரவும் செய்தது.

சீர்காழிப்பிள்ளை
சீர்காழிப்பிள்ளை


`எவ்வாறான பெரும்பேறு பாண்டியருக்கு? திருவருளைப் பொலிய தெய்வமே தேடி வந்தது போன்று பாண்டியர் அரண்மனையில் பத்மபாதம் பதித்துவிட்டது சீர்காழிப்பிள்ளை. இனி, அறமே மேலோங்கும் என்பதில் சிறிதும் ஐயம் இல்லை' என்று உள்ளுக்குள் சிந்தித்தபடி இருவரையும் அகமகிழ பார்த்துக்கொண்டிருந்தார் குலச்சிறையார். வேறெதுவும் செய்யத் தோன்றவில்லை அவருக்கு.

உள்ளத்தின் மலர்ச்சி வார்த்தையாகவும் வெளிப்பட்டது பாண்டியரிடத்தில். ``உங்களைப் பெற்றெடுக்கும் புண்ணியத்தைப் பெற்ற பதியின் பெயர் என்னவோ?'' என்று பிள்ளையிடம் கேட்டார். உடனே, சீர்காழியின் பெயரையும் அவ்வூரின் மகிமையையும் அழகுற விவரித்தார் திருஞானசம்பந்தர்.

இருவரும் இப்படி அளவளாவுவதைக் காணப் பொறுக்காத அமணர் தரப்பினரால் அதற்குமேலும் தங்களைக் கட்டுப்படுத்திக்கொள்ள இயலவில்லை. வெகுண்டெழுந்தனர். வாதத்துக்கு வரும்படி ஞானசம்பந்தரை அழைத்தனர். அவரும் அவர்களை எதிர்கொள்ள ஆயத்தமானார். அனைத்தையும் கவனித்த பாண்டிமாதேவியார் கலங்கினார். மன்னரிடம் ஒரு விண்ணப்பம் வைத்தார். ``அரசே! ஞானப்பிள்ளை தனியொருவராக இருக்கிறார். இவர்களோ எண்ணிக்கையில் அதிகம். மேலும், முதலில் உங்கள் பிணியை பிள்ளை அகற்றட்டும். அதன் பிறகு வாதம் குறித்து தீர்மானிக்கலாமே...'' என்றார்.

மங்கையர்க்கரசியாரின் பதற்றத்துக்கும் கவலைக்குமான காரணத்தைப் புரிந்துகொண்ட ஞானசம்பந்தப் பெருமான் அவரைப் பார்த்து மெள்ள புன்னகைத்தார். அவரின் கலக்கத்தைத் தீர்க்கும் வகையிலும் இறைவன் துணை நம் பக்கமே என்பதை உணர்த்தும் விதமாகவும் பதிகமும் பாடினார். அவரின் வாக்கும் செயலும் மாமன்னரை வியக்கவைத்தன. அவர் தனது தீர்மானத்தை அமணர் தரப்பினரிடம் தெரிவித்தார்: ``வேறு வாதம் எதற்கு. இவரும் நீங்களும் அவரவர் முறைப்படி தனித்தனியே முயன்று உங்கள் தெய்வங்களின் உண்மைத் தன்மையை உணர்த்தலாமே!''

`இது நல்லது பிணி தீர்ப்பவரே வெற்றி பெற்றவர் என்றாகிறது. ஆகவே நாம் முந்திக்கொள்வோம்' என்று கருதிய அமணர் தரப்பினர், மாமன்னரின் தேகத்தில் இடப்பக்கம் பிணி பாதிப்பை தாங்கள் தணிப்பதாகச் சொன்னார்கள். அவ்வண்ணமே மன்னரை நெருங்கி, மயிற்பீலியால் அவரின் மேனியில் நீவிவிட்டபடி மந்திரம் பிரயோகித்தார்கள்.

ஆனால், அவர்கள் மந்திரம் சொல்லச் சொல்ல மாமன்னரின் வேதனை அதிகரித்ததே தவிர குறைந்தபாடில்லை. அவர் திருஞானசம்பந்தரின் திருமுகத்தை நோக்கினார். அவரின் நோக்கத்தைப் புரிந்துகொண்ட ஞானசம்பந்தர், மாமருந்தான திருநீற்றைக் கையில் எடுத்தார் `மந்திரமாவது நீறு வானவர் மேலது நீறு' என்று பாடியபடியே அரசரின் வலப்பாகத்தில் தடவினார்.

அற்புதம் நிகழ்ந்தது. பிள்ளை தொட்ட வலப்பாகத்தில் வெம்மை தணிந்தது!

- மகுடம் சூடுவோம்...