மாபெரும் வீரட்டஹாசம் மயிலாடுதுறை மாவட்டம் திருக்கடையூரில் நிகழ்ந்து முடிந்தது. பெருமானுடைய காலசங்கார நிகழ்வில் தாமும் ஒரு கருவியாக முன்னிறுத்தப் பெற்றதை உணர்ந்த மார்க்கண்டேயர், காலம், காலாதீதம் ஆகிய இரண்டையும் கடந்து வியாபித்து நிற்கும் எல்லாம் வல்ல பரம்பொருளைப் பரவசத்துடன் துதித்து நின்றார். ஆயுளை அளித்திடும் அபிராம சுந்தரியையும், காலபயம் போக்கிய அமிர்தகடேஸ்வரரையும் பலவாறு ஸ்தோத்திரம் செய்து வணங்கி மகிழ்ந்தார். அத்துடன் விட்டுவிடவில்லை.
இதுவரை தான் தரிசித்து வந்த சிவத்தலங்களை மீண்டும் தரிசித்து வணங்கிட வேண்டும் என்றும், அத்தலங்களில் தாம் விரும்புகின்ற தோற்றங்களில் அம்மையும், அத்தனும் காட்சி தந்து அனுக்ரஹிக்க வேண்டும் என்றும் விண்ணப்பம் செய்து கொண்டார். அம்மையப்பரும் அவ்வாறே அருள்புரிவதாக மார்க்கண்டேயருக்கு அருளினர்.
மார்க்கண்டேயரின் முக்தி தலமான திருச்சேறையில் அவரால் பூஜிக்கப்பெற்ற ஸ்ரீ அமிர்தகடேசர் (லிங்கத் திருமேனி) மற்றும் ஸ்ரீ அபிராமி ஆகிய இருவரும் பின்திருச்சுற்றில் தனிச்சந்நிதியில் உறைந்தருளுகின்றார்கள் என்பது குறிப்பிடத்தக்க விஷயம்.
6 தலங்களில் அம்பிகையானவள் மார்க்கண்டேயரின் கோரிக்கையை ஏற்று கடவூர் அபிராமியாகவே காட்சியளித்ததாக ஐதிகம். இத்தலங்களில் உறைந்தருளும் மூலஸ்தானத்து அன்னையின் திருவடிவங்களுக்கும் 'அபிராமி' என்பதே திருநாமம்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
திருக்கடவூர், மருத்துவக்குடி, வாணாபுரம், இலந்துறை, திருமலைராயன்பட்டிணம், குழையூர் ஆகிய ஆறு தலங்களும் ஒன்றுக்கொன்று இவ்விதமாகத் தொடர்புடையன. இத்தலங்கள் ஆறுமே உடலின் ஆறு ஆதாரச் சக்கரங்களை உணர்த்துபவை. மூலாதாரம், சுவாதிஷ்டானம், மணிபூரகம், அநாஹதம், விஷுத்தி, ஆக்ஞா ஆகிய சூட்சமச் சக்கரங்களை இந்த ஆறு இடங்களிலும் தலத்திற்கு ஒன்றாக மார்க்கண்டேயர் பூஜித்ததாக ஐதிகம்.
இத்தலங்களின் அருமையை உணர்ந்த அப்போதைய சரபோஜி வம்ச அரசகுடிகள் இந்த ஆறு ஆதாரச் சக்கரங்களையும் உரிய தலங்களில் பிரதிஷ்டை செய்து வைத்ததாக வரலாறு. ஏனைய ஐந்தில் எத்தலத்தில் வழிபட்டாலும் திருக்கடவூர் அபிராமியை வழிபட்ட பலனே கிடைத்திடும் என்பதும் தொன்மையான நம்பிக்கை!