அலசல்
Published:Updated:

கோடி மடங்கு பலன் தரும் திருக்கழுக்குன்றம்!

வேதகிரீஸ்வரர் ஆலயம்
பிரீமியம் ஸ்டோரி
News
வேதகிரீஸ்வரர் ஆலயம்

நான்கு வேதங்களுமே சிவபெருமானை வழிபட்டு அருள்பெற்று, இங்கே மலை வடிவம் கொண்டனவாம்

தொண்டைநாட்டுத் திருத்தலங்களில் முக்கியமானது திருக்கழுக்குன்றம். செங்கல்பட்டிலிருந்து சுமார் 15 கி.மீ. தொலைவில் உள்ளது. சதுர்யுகங்களாக நிலைத்திருக்கும் தலம் என்கின்றன புராணங்கள். சைவக் குரவர்கள் நால்வர் பெருமக்களும் பாடிய அபூர்வ தலம் இது.

* வேதங்களே மலை வடிவம் கொண்டதால் வேதகிரி. வாழை மரம் நிறைந்த பகுதியானதால் கதலி வனம். நான்கு யுகங்களிலும் கழுகுகள் பூஜை செய்வதால் கழுக்குன்றம். கல்வெட்டுத் தகவல்களின்படி உலகளந்த சோழபுரம், இந்திரபுரி, நாராயணபுரி, பிரம்மபுரி, முனிக்கணபுரி, தினகரபுரி, ருத்திரகோடி என்று இன்னும் பல திருப்பெயர்களுடன் திகழும் திருத்தலம் திருக்கழுக்குன்றம்.

* திருக்கயிலையிலிருந்து மூன்று சிகரங்கள் பெயர்த்து எடுக்கப்பட்டு, நந்திதேவரால் தென் திசைக்குக் கொண்டுவரப்பட்டனவாம். திருப்பருப்பதம், திருக்காளஹஸ்தி மற்றும் திருக்கழுக்குன்றத்தில் முறையே அவை மூன்றும் சேர்க்கப்பட்டன. எனவே, இது தென் கயிலாயம் ஆகும். இங்கு தர்மம் செய்தால், அது கோடி மடங்கு பலன் தரும்.

கோடி மடங்கு பலன் தரும் திருக்கழுக்குன்றம்!

12 ஆண்டுகளுக்கு ஒருமுறை குரு பகவான் கன்னி ராசியில், பிரவேசிக்கும் திருநாளில், இங்குள்ள சங்கு தீர்த்தத்தில் கங்கை முதலான புண்ணிய நதிகளெல்லாம் சங்கமம் ஆவதாக ஐதீகம். இதையொட்டி சங்குபுஷ்கர மகாமேளா எனும் விழா நடைபெறும். திருவண்ணாமலையைப் போலவே இந்த திருக்கழுக்குன்ற மலையையும் கிரிவலம் வரும் வழக்கம் உள்ளது.

* நான்கு வேதங்களுமே சிவபெருமானை வழிபட்டு அருள்பெற்று, இங்கே மலை வடிவம் கொண்டனவாம். அதர்வண வேத பாறை உச்சியில் வேதகிரீஸ்வரர் கோயில் கொண்டு அருள்கிறார் என்று தலபுராணம் சொல்கிறது.

*  கிருத யுகத்தில் சண்டன், பிரசண்டன் என்ற கழுகுகளும், திரேதா யுகத்தில் சம்பாதி, ஜடாயு என்ற கழுகுகளும், துவாபர யுகத்தில் சம்புகுத்தன், மாகுத்தன் என்ற கழுகுகளும், கலியுகத்தில் சம்பு, ஆதி என்ற கழுகுகளும் நாள்தோறும் உச்சிப் பொழுதில் மலை உச்சியில் வழிபட்டு சாப விமோசனம் பெற்றன எனத் தல வரலாறு கூறுகிறது. 25 ஆண்டுகளுக்கு முன்பு வரையிலும் தினமும் கழுகுகள் வருவது உண்டு. இப்போது எப்போதேனும் அபூர்வமாக இரண்டு கழுகுகள் வந்து செல்வதாகப் பக்தர்கள் கூறுகிறார்கள்.

* சுமார் 500 அடி உயரத்துடன் திகழும் மலையின் மீது கோயில் கொண்டிருக்கும் வேதகிரீஸ்வரர், வாழைப் பூங்குருத்துப் போன்ற தோற்றத்தில் சுயம்புலிங்க மூர்த்தியாக அருள்கிறார். அம்பிகைக்கு ‘சொக்கநாயகி’ என்றும் ‘பெண்ணின் நல்லாளம்மை’ என்றும் திருப்பெயர்கள் விளங்குகின்றன. திருவண்ணாமலையைப் போன்றே இங்கும் மலை உச்சியில் ஏற்றப்படும் திருக்கார்த்திகை தீபம் சிறப்புடையதாகக் கருதப்படுகிறது.

*  மலைக் கோயிலில் இருந்து கீழே இறங்கும் மற்றொரு வழியில் பல்லவ மன்னன் மகேந்திரவர்மன் எழுப்பிய (கி. பி. 610 - 640) அழகிய குடைவரைக் கோயில் ஒன்று சிவலிங்கத் திருமேனியோடு அமைந்துள்ளது.

கோடி மடங்கு பலன் தரும் திருக்கழுக்குன்றம்!

* மலையின் கீழே ஊரின் மத்தியில் பிரமாண்டமான தாழக் கோயில் உள்ளது. இந்தக் கோயிலில் பக்தவசலேஸ்வரர் எனும் திருப்பெயருடன் அருள்கிறார் ஸ்வாமி. கருவறையின் விமானம் கஜப் பிரஷ்ட அமைப்பில் காணப்படுகிறது.

* தாழக்கோயிலில் அருளும் அம்பிகைக்கு திரிபுரசுந்தரி என்று திருப்பெயர். இங்கு அன்னைக்கு தினமும் பாதத்தில் மட்டுமே அபிஷேகம் நடைபெறும். ஆடிப்பூரம் 11-ம் நாள், நவராத்திரி 9-ம் நாள், பங்குனி உத்திரம் தினத்தில் இரவு பூஜைகளில் மட்டுமே முழுத் திருமேனிக்கும் அபிஷேகம் நடக்கும். அபூர்வ வகைக் கல்லால் செய்யப்பட்டது இந்த அன்னையின் திருமேனி என்பதால் இந்த ஏற்பாடாம்.

* இந்தலத்தில் 12 தீர்த்தங்கள் உண்டு. குறிப்பாக சங்கு தீர்த்தம் அற்புதம் நிறைந்தது. தாழக்கோயிலின் ராஜகோபுரத்திற்கு நேர் எதிரே உள்ளது சங்குத் தீர்த்தம். மார்க்கண்டேய ரிஷி இங்குள்ள ஈசனை அபிஷேகிக்கப் பாத்திரமின்றித் தவித்தபோது, ஈசன் இக்குளத்தில் சங்கு வரவைத்ததாகத் தலபுராணம் சொல்கிறது. அதனால் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை இத்தீர்த்தத்தில் சங்கு பிறக்கும் என்கிறார்கள். இதில் நீராடி, மலையை வலம் வந்து பக்தவத்சலரையும் வேதகிரீஸ்வரரையும் வணங்கினால் தீராத நோய்கள் நீங்கும், ஜன்ம வினைகள் யாவும் போகும் என்பது நம்பிக்கை.